Sunday, February 4, 2018


பாண்டிச்சேரி பயிற்கிப் பயணத்தின் நினைவலைகள்

                          பாண்டிச்சேரி   பயிற்சிப் பயணத்தின் நினைவைலைகள்
                                                                                  பேரா, முனைவர் க கணேசன்
      சில வருடங்களுக்குமுன் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு நிபந்தனையை பூர்த்தி செய்ய பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திற்கு ஒரு மாதம் வணிகவியல் பாட புத்தாக்கப் பயிற்சிக்காக சென்றிருந்தேன். கல்லூரி ஆசிரியர் அமைப்பான மூட்டா சங்கத்தில் கலைச் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததாலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1989 முதல் என்னை இணைத்துக்கொண்டு, பாடல் எழுதுவது, பாடல்களுக்கு மெட்டுப் போடுவது, சில கதைகள் எழுதியிருக்கிறேன்.மக்கள் கவிஞர்கள் நவகவி வையம்பட்டி முத்துச்சாமி, முத்துநிலவன் புதுகை வெற்றிநிலவன், தேவரம்பூர் மாணிக்கம் இன்னும் பல கவிஞர்களின் பாடல்களை நான் நிகழ்த்தும் உரைவீச்சு, பட்டிமன்றங்களில் பாடுவதும், மூட்டா வருடந்தோறும் தன் உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் நடத்தும் பயிற்சி முகாம்களில் ஆஸ்தான பாடகராக இருந்து உறுப்பினர்களை உத்வேகப் படுத்துவதும் வழக்கமாக இருந்த காரணத்தால், நான் கலந்து கொண்ட கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சிகளான, கோவை பல்கலைக் கழகம், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிர்களின் ஒப்புதலோடு மேற்குறிப்பிட்ட கவிஞர்களின் பாடல்களை இடைவெளி நேரங்களில் பாடி நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டு சமூக உரையாடல்களை தனியாக விவாதிக்க வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது
            இப்படித்தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்கு சென்றிருந்தபோது, அங்கு வகுப்புகளின் இடைவேளை நேரத்தில் ஆசிரியர்கள் மத்தியில் , வையம்பட்டி முத்துச்சாமி எழுதியிருந்த பெண்சிசுக்கொலை குறித்த த்தனை பாடலான பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா என்ற பாடலின் அனைத்து வரிகளுமே ரத்தன தேர்ந்தெடுப்புகள்தான். அறிவொளி இயக்க காலத்தில் தமிழகமெங்கும் மிதந்து மக்களை கவர்ந்து விழிப்புணர்வு கொடுத்த பாடல் அது. மெட்டும் அருமையாக இருக்கும். வைகறை கோவிந்தன் பாடும்போது கேட்போரின் கண்கள் குளமாகும் தன்மை கொண்டது. அதை இசையோடு அப்படியே உள்வாங்கி என் மூளையில் சேமித்து வைத்திருந்தை வகுப்பில் பாடும்போது அதில் இடம்பெற்றுள்ள கடைசி பத்தியான
 அரளிய அரைக்குறா உமியா நுணுக்குறா
 உமியா நுணுக்குறா
கண்களை மூடிகிட்டு பாலாக கொடுக்கிறா
உன் மனசும் என் மனசும் பதறிது துடிக்குது
பல ஊர்களில் சிசுக்கொலை இப்படித்தான் நடக்குது

குழந்தையக் கொன்னுபுட்டா கொடுமை தொலையுமா
கொடுமைக்கு கொள்ளி வைக்க கொதித்தெழ வேண்டாமா
எதிர்காலம் மாறுமா இப்படியே போகுமா
குழந்தைய வாழவிடு வாழ்வோடு போராடு!
   
 அனைவரின் இதயங்களும் கனத்திருந்தது பார்வைகளில் தென்பட்டது. மூன்று பெண் பேராசிரியர்களும் இரண்டு ஆண் பேராசிரியர்களின் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி கண்கள் நீரோடையானது. ஒரு பெண் பேராசிரியர் வெட்கி வெட்கி அழுது விட்டு என் கையைப் பிடித்துஇந்தப் பாடலில் வரும் சில சம்பவங்கள் என் குடும்பத்திலும் இருக்குது என்று தன் மனப் பாரத்தை இறக்கி வைத்தார். சீர்காழி நீலமேகம் எட்டாம் வகுப்பே படித்த தையல் கலைஞர் .அவர் எழுதிய அரசு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவி விதவை அம்மாவுக்கு பணமும் பண்ணையார் வீட்டில் பழைய துணிகளும் வாங்கி அனுப்புமாறு எழுதிய கடிதப் பாடல் அன்புள்ளங்க கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்ற பாடலும் ஆழமான வாழ்க்கை நிலையை விவரிக்கும். அவற்றையெல்லாம் பாண்டிச்சேரி பல்கலைக் கழக புத்தாக்க பயிற்சியிலும் பாடினேன்

    ஞாயிற்றுக் கிழமைகளில் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள வரலாற்றுபூர்வமான இடங்களை சுற்றிப்பார்க்க சென்றேன். பாரதி வாழ்ந்த வீடு நினைவில்லத்தைக் கண்டு அவரின் கடிதங்களை படித்துவிட்டு உணர்ச்சிவசபட்டு என்று அழுதுவிட்டேன்.காரணம் அந்தக் கடிதம், தான் எழுதிய புத்தகங்களை ஆங்கிலேயன் தடை செய்ததை திரும்ப பெற்றுக்கொண்டபிறகு அவற்றை அச்சிடுவதற்கு நாட்டின் பலருக்கு  மாதம் 2 சத வட்டிக்கு கடன் கேட்டு எழுதிய கடிதத்திற்கு யாருமே பணம் அனுப்பவில்லை என்ற செய்தி என் மனதை உலுக்கியது. உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். அன்று இரவில் அவரோடு பேசுவதுபோல ஒரு பாடல்
பாரதி வாழ்ந்த இல்லமும சென்று வந்தேன் –அந்த
மாகவிஞன் என் கனவில் வந்தான்
என்ன நலமா? என்று கேட்டான்
தேம்பித் தேம்பியே நானழுதேன்.   (பாரதி)

கோழைத்தனத்தை விட்டு ஒழி
மீசையை முருக்குஎன்று சொன்னான்
சுதந்திர தேசத்தில் சுகம் வருமென
சொல்லிச் சென்றதெல்லாம் பொய்யோஎன்றான்.
சேரிப்பையனாம் கனகலிங்கத்தை
பூணூலை மாட்டி கனவுகண்டாய்- சாதி
ஆணவக் கொலையும் தீண்டாமைக் கொடுமையும்
கேவலமாக்குது  என்று சொன்னேன்.         (பாரதி)

சாதி மதங்களை பாரோம் என்றாய்
சமத்துவத்தை நாடு என்றாய்-இங்கே
சாதி மதம் பேரில் சண்டைபோட்டு-தினம்
மண்டையுடையுது பாரதியே
துரோபதை அழுத கூத்தைப் பார்த்து
துள்ளி எழுந்தாய் பாரதியே-இப்போ
பட்டப்பகலிம் டீ வி சினிமா
துயிலை உரியுது என்று சொன்னேன்.    (பாரதி)

பாரத தேசம் கொள்ளை போவதை
பாஞ்சாலி சபதத்தில் நீ வடித்தாய்
இந்திய தேசத்தை கூறு போட்டு விற்க
தந்திர வேலை நடக்குதென்றேன்
அக்கினிக் குஞ்சு வெந்து தணியும
காலம் கனிகிறதென்று சொன்னான்’ –எனை
ஆரத்தழுவி கண்ணீர் துடைத்தான்
ஆவேசப் பட்டு விழித்துக்கொண்டேன்.
 எழுதியபின்புதான் எனக்கு உறக்கம் வந்தது..
   புரட்சிக் கவி பாரதி தாசன் வாழ்ந்த இல்லம் சென்று,அவர் பயன்படுத்திய பேனா வெத்திலைப் பெட்டிகண்ணாடிகட்டில் போன்ற பொருட்களைப் பார்த்தேன்செந்தமிழ்நாட்டில் அவன் புகழ் வானாளாவ உயர்ந்த அளவுக்கு அவனின் வீடு உயராத ஒட்டுவீடு மட்டும்தான்மிக எளிமையாகவே இருந்தது.  புரட்சிக் கவிசஞ்சீவிபர்வதத்தின் சாரல் காவியம்வீரத்தாய்காவியங்களை நான் படித்து உத்வேகம் கொண்டதை அவர் வீட்டில் நின்றுகொண்டு நினைத்துப் பார்த்தேன்.
நீலவான ஆடைக்குள் உடல்மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலமுழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ
சோலையிலே பூத்த தனிப் பூவோ-நீதான்
சொக்கவெள்ளி பாற்குடமோ அமுத ஊற்றோ
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிளம்போ! என்ற புரட்சிக்கவியில் வரும் அழகியல் சார்ந்த அற்புதப் பாடலும் ,அவரின் இன்னொரு கவிதையில்  உழைப்பாளரை சுரண்டும் நிலையை
 கந்தையணிந்தோம் இரு
 கையினை விரித்தெங்கள் மெய்யினை போர்த்தோம்-
மொந்தையில் கூழை மொய்த்துக் குடித்தோம்
சந்தையில் மாடாய் யாம் சந்ததம் தங்கிட
வீடுமில்லாமல் சிந்தை மெலிந்தோம்
எங்கள் சேவைக்கெல்லாம்- இது
செய்நன்றிதானோ?     இந்த வரிகளும் காவிய உள்ளடக்கமும்
மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.  சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோல் பாடல்களும் பிறந்த இடத்தில் என் கால்கள நிற்கின்றன என்ற பெருமிதம் என்னை கவ்வியது
    ’ஆரோவில் என்ற பல நாட்டுக்காரர்கள் சேர்ந்து வாழும் இடத்தில் ஒரு கண்கவரும் தங்கக் கூண்டு அமைதியோடு சென்று பார்த்து ரசித்து திரும்பும் இடம். ஒர் மைதானம் உண்டு அந்த மைதானத்தில் கூடக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களிடையே கருத்தை தெரிவிக்க பேசும்போது ஒலிபெருக்கி தேவையில்லை ஒரு மைய்யமான இடத்தில் நின்று பேசினால் கணீரென்று கேட்கும் என்று ஒருவர் சொன்னார்.ஆச்சரியமடைந்தேன்.  
     பாண்டிச்சேரி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேரா. இளங்கோவிடம் எழுத்தாளர ஜாம்பவான் ஜெயகாந்தனின் நண்பர், பட்டுக்கோட்டை வாழ்ந்த காலத்தில் கவி படைத்து ,புரட்சிக் கவி பாரதிதாசனின் சீடனாகி, கரந்தை தமிழ்க் கல்லூரியில் மாணவராக இருந்தபோது,பாரதிதாசனின் ஊக்கப்படுத்துதலில் ‘நிலைபெற்ற சிலை’ என்ற குறுங்காவியத்தை படைத்த கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த ஊரைக் கேட்டேன்.
    குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்றாலும், அவர் வாழ்ந்த இடமான புதுச்சேரியில் சாமிப்பிள்ளைத் தோட்டத்திற்கு சென்று பார்த்தேன். அந்த இடத்தில் அவர் 1947லேயே அருமையான காவியமாகிய தலித் பெண்ணாகிய வீராயி கவுண்டர் சாதி வாலிபன் ஆனந்தை திருமணம் முடித்ததால் ,வாலிபனின் பெற்றோரின் துணையோடு அடித்துக் கொல்லப்பட்ட  கதையை , சமூக பாகுபாடு வர்க்கப்பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை பின்னணியோடு சாதி ஆணவப் படுகொலை கதை கொண்ட   அற்புதமான படைப்பை படைத்த பெருமை மனதை சிறகடித்து பறக்க வைத்தது.  
     அந்சத காவியத்தில் ஒரு பகுதியாகிய வாலிபப் பெண்ணான வீராயி பண்ணையாரின் தோட்டத்தில் நாற்றுநடப் போகும்போது பண்ணையாரின் காமக்கண் அவள்மீது பட்டதால், வேலை முடித்து பண்ணையார் வீட்டுக்கு கூலி கேட்கப் போகும்போது, மழை பெய்ததால் வீட்டின் ஒரத்தில் நின்றவளை ,வீட்டின் உள்ளே நயவஞ்சகமாக அழைத்து, கெடுக்க முயற்சிக்கிறான். பண்ணையார் வீட்டுக்கு போனவள் இன்னும் காணவில்லையே என்று வளர்ப்பு அண்ணன் வீரண்ணன் வேலை செய்த கோடரிக் கையோடு பண்ணையார் வீட்டுக்குச் செல்கிறான். உள்ளே தங்கையின் அலறல்சத்தம் கேட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பண்ணையாரை கோடரியால் மண்டையை பிளக்கிறான்.பண்ணையார் இறந்து விடுகிறான். வீரண்ணனை காவலர்கள் பிடித்து மன்னனிடம் ஒப்படைத்து, நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரித்து மரணதண்டனை விதித்து விடுகிறான்.நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கும்போது வீரண்ணன் ஏற்றுக்கொள்கிறான்.அப்போது அவன் நீதிபதியிடம்
 எப்படி யாயினும் இன்னுயிர்க் கொன்றவன்
கொலைக் குற்றத்திற் காளா கின்றான்!
ஒப்புக் கொள்கிறேன்; ஒன்றே ஒன்று!
உம்முடன் பிறந்த தங்கையை ஒருவன்
கற்பழிக்க நீர் கண்ணால் கண்டால்
என்ன செய்குவீர்? எப்படிக் காபபீர்
நீதி மன்றம் தேடி நடந்து
சேவகர் தம்மை அழைத்து வந்து
காவல் செய்து காப்பீரோ கற்பை

சிரித்து் குமுறியே கொக்கரித்தான்’இங்கு
சீக்கிரம் தூக்கினில் என்னையிடும்!
விரித்துக் கரத்தினைச் சாவைத் தழுவுவேன்;
வீரமிலாதவன் நானலவே!
பிரித்துப் படித்திடும் ஏட்டினில் கற்றிடும்
எரித்து மகிழ்ந்திட என்றன் பின்னே வரும்
இளைஞர்க ளுண்டென ‘வீரன் சொன்னான்’ என்ற வீரமுடன் கர்ஜிக்கிறான். கதறித் துடித்து வீராயும் வளர்ப்புத் தந்தை மாரியும் நீதிமன்றத்திலேறி வீராயி கதறலோடு

இன்னுயிர் அண்ணனை விட்டிடுவீர்! எனை
ஏற்றிடுவீர் தூக்குமேடையிலே!
அன்னை யிருந்திடில் உங்களுக்கே அவள்
ஆணையாய்ச் சொல்கிறேன ஒப்பிடுவீர்!
என்னை ஜமீன்தாரன் கற்பழிக்கத் துணிந்
தெட்டிப் பிடித்திடு நேரத்திலே
வன்மை மிகுந்திடு கொடரியால் அவன்
வாழுயிர் நானே குடித்து விட்டேன்!

கொலையினைச் செய்தவள் நானிருக்க ஒரு
குற்றமிலா என்றன் அண்ணனையே
தலையினை வெட்டிடத் தூக்கிலிடச் சொன்ன
தப்பிலி மக்களே நீதியிதோ?
விலைக்குங்கள் நீதியை விற்றுப் பிழைக்கிறீர்
நிலையிலை உங்களின் நீணில வாழ்வடா
நீங்களும் சாவது நிச்சயமே! என்று வாதிடுகிறாள்
வளர்ப்புத் தந்தை மாரியும் நீதிபதியிடம்

என்னரும் மைந்தனைக் கொல்வதா?
ஏனடா உங்களின் வீட்டிலே – இளங்
கன்னியர் கற்பை அழிக்கவே-ஒரு
காரியம் செய்தது முண்டோடா-பணந்
தன்னை வணங்கிடும் புல்லரே- உயர்
சத்தியம் மாறிடும் எத்தரே- இனி
என்னையும் என்மகள் தன்னையும்-உடன்
ஏற்றிடுவீர் தூக்கு மேடையில்! என்று ஆதிக்கவர்க்க நீதியை கேள்விக்குள்ளாக்குறான். இன்னும் அற்புதமாக காட்சிகளடங்கிய கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் வந்து வந்து போனது அவர் வாழ்ந்த இடத்தை முத்தமிட்டு அடுத்து மாமல்லபுரம் சென்றேன்.
    நான் சிறிய வயதில் மாஸ்டர் பிரபாகர் நடித்த வா ராஜா வா என்ற திரைப்படத்தில் பார்த்து ரசித்த மாமல்லபுரத்திற்குச் சென்றேன்
 கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா-அந்த
கதை சொல்ல வந்தேனே சின்னராஜா
ஒட்டுக்கல்லில் செய்யாம ஒரே கல்லில் செஞ்சு வச்சான்
எப்படித்தான் செய்தானோ பல்லவராஜா-அந்த
அற்புதத்தை சொல்லவந்தேன் சின்னராஜா என்ற பாடலின் காட்சி நினைப்போடு..அங்கே அமைந்திருக்கும் சிற்பங்களோடு என்னையும் புகைப்பட சிற்பமாக ஆக்கிக் கொண்டேன். கடலலையையும் ரசித்தேன்.
    ஒரு நாள் சிதம்பரம் தில்லை நடராஜரை பார்க்கச் சென்றேன்.திருநாளைப் போவார் என்று அழைக்கும் பறையர் சாதியில் பிறந்த நந்தன் கோயிலுக்குள் நுழைந்த இடம் சுவரெழுப்பி அடைக்கப் பட்டிருந்தது. அப்போது எனக்கு காரணம் விளங்கவில்லை .எல்லோரையும்போலவே அங்கு எழுதி வைத்திருக்கும் திருநாளைப் போவார் சென்ற வாசல் என்பதை பார்த்துத் திரும்பினேன். எனது நினைவலை, நான் படித்த காலமான 1977க்கு ரெக்கை அடித்துச் சென்றது. நான் இரண்டாம் ஆண்டு பி காம் அரசு கலைக் கல்லூரி மேலூரில் படிக்கும்போது, பரமக்குடியில் சாதிவெறிக்கு பலியான ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று தீண்டாமை ஒழிக்க, மக்கள்சேவை ஆற்றிக் கொண்டிருந்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அனுஷ்டிக்க, ஒரு லாரியில் நிறைய மாணவர்களோடு கோஷங்களை எழுப்பிக்கொண்டு  நானும் சென்றேன். அந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தில். 22 பாராக்கள் அடங்கிய பிரசுரம்  இலவசமாக வழங்கப்பட்டது.  
அரிசனங்களாம் நாங்கள் அரிசனங்களாம்என்று தலைப்பிட்டு நாடு போற்றும் கவிஞர் தணிகைச் செல்வன் எழுதியிருந்தார்.
கண்ணகியார் வீசிவிட்ட மதுரை தீயிலே-அன்று
கருகிப் போன மக்கள் எங்க ஜாதி மக்களே
கண்ணகி போய் ஒசந்தகுல ஜனங்கள மட்டும்-அவ
காப்பாத்தினா பிறகு யாரு நாங்கதான் மிச்சம்என்று துவங்கும்

வெந்து வெந்து நொந்து நொந்து இன்றுவரையில்நாங்க
நூறு நூறு ஆண்டுகளாய் இந்த பூமியில்
சொந்தமென்று என்ன கண்டோம் பசியைத் தவிர-எங்கள்
சொத்து என்று என்ன கண்டோம் உசிரைத் தவிர இப்படியெல்லாம் உணர்ச்சுபொங்க எழுதியிருக்கும் அக்கவிதை பிரசுரத்தில்
பெரியசாதி கும்பிடுற சிதம்பர சாமி-அதை
பறைய சாதி பாத்ததாலே வந்தது தீமை
எரிய வச்சான் நந்தனாரின் உயிரையே கொன்னு-பிறகு
எழுதி வச்சான் சோதியிலை கலந்திட்டாருன்னு என்ற கவிதைப் பத்திகள் எனது நினைவுக்கு வந்த போது சிதம்பர நடராஜரை நந்தனைப் போல ஆசையோடு பார்க்கப் போன நான் உள்ளே அமைந்திருக்கும் தரிசனப் பகுதிக்கு செல்ல மனம் இடம் கொடுக்க வில்லை.
     சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில், நந்தன் பாடிய உடன் நந்தி விலகிக்கொண்டது என்றும், அதிபயங்கர பக்தி காரணமாக கோயிலின் உள்பகுதிக்கு சென்றவர் ஜோதியில் கலந்துவிட்டார் என்றல்லவா படித்தோம் .தணிகைச் செல்வன் இப்படியொரு மாறுபட்ட உண்மையை சொல்லியிருக்கிறாரே என்று தேடல் அதிகமானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தோழர் அருணன் எழுதிய கொலைக்கலங்களின் வாக்குமூலம் படிக்கும்போதுதான் அதில் நந்தனார் குறித்த விரிவான பகுதியில் வைதீக சனாதன சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் எந்த அளவு தாண்டவமாடி சேரியில் பிறந்த ஒரு பக்தனை எப்படி வஞ்சகமாக தீயினுக்கு இரையாக்கி இருக்கிறது.. என்ற விபரத்தை புரிந்து கொண்டேன்.
  இந்த சிதம்பரம் தில்லை நடராஜன் கோயில் குமரியில் நடந்த வரலாற்று நிகழ்வுக்கு என் சிந்தனை ராக்கெட் வேகத்தில் சென்றது. இன்னொரு நந்தனை கொலை செய்யாமல் விரட்டி விட்டனர் என்பதே அது.1799 ல் கன்னியாகுமரிக்கு அருகிலிருக்கும் மயிலாடி என்ற ஊரிலிருந்து இந்து மதத்தில் சாம்பவர் சாதியில் பிறந்த மகாராசன் என்பவரும் அவரின் அண்ணன் மகன் சிவகுருநாதனும் முருக பக்தர்கள், விரதமிருந்து மாலையிட்டு நடைபயணமாகவே சிதம்பரம் கோயிலுக்கு சென்றார்கள். அங்கு கோயில் நுழைவு வாசலில் இவர்களின் சாதியை கேட்டார்கள் பூசாரிகள். மகாராசன் தான் (பறையர் ) சாம்பவர் என்ற உண்மையை மறைக்காமல் சொல்லிவிடவே, அவர்களை கோயிலில் அனுமதிக்காமல் வெளியேற்றுவிட்டனர் .நந்தனார் போல பக்தி பரவசத்தோடு போனவர்களுக்கு பெருத்த ஏமாற்றம், மனக் கலக்கம். தங்களின் சொந்தக்காரர்கள் வசிக்கும் இடமான தரங்கம்பாடிக்கு சென்று நடந்த நிகழ்ச்சிகளை சொல்லி வருத்தப்பட்டனர் இருவரும். அந்த ஊர் மக்கள் ஆறுதல் படுத்தி உபசரித்து தங்க வைத்தனர். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தனது உறவினரோடு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். வழிபாட்டு முறையையும்,யாரையும் ஒதுக்கி வைக்கும் தன்மை இல்லாமையையும் பேச்சும் பாட்டும் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்த ஆச்சரியம் பார்த்து, அங்கேயே இந்துக்களாக சென்றவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டு மகாராசன் வேதமாணிக்கமாகவும், சிவகுருநாதன் மாசிலாமணியாகவும்   
பெயர் மாற்றத்தோடு கன்னியாகுமரி வந்தடைந்தடைந்தனர்.  ,தென் திருவிதாங்கூரில் முதன் முதலாக புராட்டஸ்டண்டு  மதம் மாறியவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இவ்விருவர்தான். அதன்பிறகுதான் ரிங்கிள் தௌபே என்ற மேலைநாட்டு பாதிரியார் வந்து மதம் பரப்பும் வேலையைச் செய்து, அய்யா வைகுண்டர் பிறந்த 1809ம் ஆண்டு வரை திருவிதாங்கூரில் நிலவிய சமூக ஒடுக்குமுறை தன்மைகளை பெரும்பாலான அளவு தீர்ப்பதற்கு கிறிஸ்தவம் துணை நின்றது. அதன்பின்பு அய்யா வைகுண்டர் தொட்டெடுத்து பல சீர்திருத்த வேலைகளை நிறைவேற்றினார்..சிதம்பரம் கோயிலுக்குள் விடாத காரணத்தால்தான் அவர்கள் மதம் மாற நிர்பந்திக்கப்பட்டது அவர்களின் மனம். இப்படி சிதம்பரம் தில்லை நடராசரின் ஆலய நந்தனை எரித்த ஜாதி நெருப்பின் மிச்சம் இந்த இருவரை ஓட ஓட விரட்டிய திருவிளையாடல்கள் நடந்துள்ளன என்று என் நினைவலையில் மோதின.
   இன்னொரு ஞாயிற்றுக் கிழமையில் சமூக சீர்திருத்த செம்மல் வடலூர் வள்ளலார் கட்டி வைத்துள்ள சத்திய தரும சாலைக்கு சென்றேன். அங்கே பார்த்த காட்சிகள் கண்டு பிரமித்துப் போனேன். தீண்டாமையால் அடித்து விரட்டப் பட்டு இந்து கோயில் என்றாலே மன எரிச்சல் வந்து கொண்டிருந்த எனக்கு அன்று வித்தியாசமான சிந்தனையும், சந்தோசங்கள் எனக்குள்ளே குதித்தாடின. எல்லோரும் அங்கேயே மதிய உணவு சாப்பிடலாம் என்று சொன்னார்கள். நல்ல பசியோடு இருந்த எனக்கு கூடுதலாக புரட்சிக் கவி காவியத்துல் பாரதிதாசன் தினைத்துணையும் பலனின்றி பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு கானும் இன்பம் எனச்சொன்னதைப் போல உணர்வு எழுந்தது. சாப்பாடு போடும் இடத்திற்கு போவதற்கு முன்பு 1867ல் தொடங்கப்பட்ட பசிப்பிணி போக்கும் அணையா அடுப்பு உள்ள சமையல் இடத்திற்கு சென்றுவிட்டு சாப்பிட செல்ல நினைத்து, அங்கு சென்று பார்வையிட்டபோது , அந்த அறையின் மத்தியில் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த விளக்கிற்கு மேல் எழுதிப் போட்டிருக்கும் வள்ளலாரின் தத்துவமாகிய’ ஜீவ ஒழுக்கமாவது ஆண்மக்கள் பெண்மக்கள் முதலியானவர்களிடத்தில் சாதி, சமயம், மதம்,ஆசிரமம்,சூத்திரம்,கோத்திர குலம், சாஸ்திர சம்பந்தம் தேச மார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பேதம் நீக்கி எல்லோரும் தம்மவர்களாய் சமத்தில் கொள்வதே என்பதை படித்துவிட்டு மனதில் இப்படியொரு சமத்துவ சீர்திருத்தவாதி அரும்பாடு பட்டிருக்கிறாரே என்ற  மகிமையை உணர்ந்து, சாப்பாடு வழங்கும் இடத்திற்கு சென்று வழக்கமாக சாப்பிடும் விட அதிகமாகவே ஆனந்தத்தோடு சாப்பிட்டேன். பல விபரங்களைக் கற்றேன்.இந்த மகிழ்ச்சிக்கு ஊடாக இப்படியொரு சீர்திருத்த மகான் கோயிலுக்குள் சென்றவர் திரும்பி வராமல் காணாமல் போன மர்மம்தான் என்ன? என்ற கேள்வி அலையடித்துக்கொண்டிருந்தது.
  பேராசிரியர் பணியில் தகுதியை மேம்படுத்திக்கொள்ள பாட சம்பந்தமாக புத்தாக்க பயிற்சியில் கிடைத்த அனுபவத்தை விட புத்தாக்கப் பயிற்சி ஞாயிற்றுக் கிழமைகள் உண்மையான சமூகப் புத்தாக்க பயிற்சி நான் தேடியலைந்து பெற்ற சமூக இலக்கியங்கள் பிறந்த வரலாற்று இடங்களின் நினைவுகள் இன்னும் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கின்றன.