விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி.உலகமே கைக்குள் வந்துவிட்ட அதிசயம்.காரும் சாலையும்
அதிசயிக்கத்தக்கவிதம்.கம்பியூட்டரில் அபரிமித வளர்ச்சி.ஆனால் மனிதனுக்கு மனிதன்
சாதியால் பேதம் பிரிக்கும் கொடுமையும், ஒதுக்கிவைத்து ஒடுக்கும் அவலமும் இந்தியசமூகத்தில்
ஆணிவேரை அழுத்தமாகவே பாய்ச்சி பக்கவேர்,சல்லிவேர்களோடு கிளைபரப்பி படர்ந்து
புற்றுநோய்போல இருப்பது மனித சமூகம் வெட்கப் படவேண்டியது. கல்விக்கும்,அறிவியலுக்கும்
விழிப்புணர்வுக்கும் தொடர்பு இல்லாமல் போனால் கல்விக்கு எவ்வித அர்த்தமும் இல்லை.தந்தை
பெரியார் பிறந்த தமிழகத்தில் தலித்துகளை ஒதுக்கிவைக்க 19ஆண்டுகளாக இருந்த உத்தபுரம்
சுவர், பல ஆண்டுகளாக நீடித்திருந்த கோவை பெரியார் நகர் ஜீவா தெருவில் அருந்ததியர்
மக்களை ஒதுக்கிவைத்த தீண்டாமைச்சுவர், 25 வருடங்களாக நீடித்திருந்த திருச்சி அருகில்
தீண்டாமைச் சுவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில்தெருவில் நவம்பர்
18-2010ல் இடிக்கப்பட்டுள்ளது.அரசின் கண்களுக்கு கொண்டு போன தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல கட்ட இயக்கங்கள் நடத்தியபின்பே இடிக்கப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் சமூகம் வெட்கித் தலைகுனியவைக்கும் அவலத்தின் அடையாளங்கள். மூன்றரையாண்டு குழந்தையாகிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்வமுள்ள தலித் அமைப்புகள் முற்போக்கு சிந்தனைகொண்ட நல்லோர்கள் ஆகியோரை இணைத்துக்கொண்டு நடைபோடும்போதே இவ்வளவு செய்ய
முடிகிறதென்றால் இன்னும் தேசத்தின் அழுக்கைக் கண்டு போக்க நினைக்கும் வீறுகொண்ட
தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் நாடெங்கும் வஞ்சிக்கப்படுகிற இட ஒதுக்கீட்டு
பணியிடங்கள் போன்ற தீண்டாமைச் சுவரையும் இடித்து தலித்துகளின் வாழ்வில் நம்பிக்கை
ஒளியைப் பாய்ச்சலாம். எங்கெங்கு காணிணும் தீண்டாமைச் சுவரடா என்று சொல்லக்
கொதிக்குதடா நெஞ்சம் .