Saturday, November 26, 2011

ஏழாம் அறிவு- ஒரு மனந்திறந்த விவாதம்.


தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியிலும்,தெலுங்கிலும்  ஊடகங்களின் புண்ணியத்தால்  தொடர்ந்து திரையரங்குகளில் பயணித்து மக்களின் மூளையில் ஒரளவு புதிரான விஷயங்களை பதிக்க முடியுமா என முயற்சித்து, ரெட்ஜெயின் கம்பெனி தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவின் அசாத்திய நடிப்பிலும், கமலஹாசனின் புதல்வியான ஸ்ருதிஹாசனின்  நடிப்பில் வெளிவந்திருக்கிறது ஏழாம் அறிவு திரைப்படம்.
         தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில்  கி பி ஆறாம் நூற்றாண்டில் பல்லவ வம்சாவழி வந்த போதிவர்மன் தற்காப்புக் கலை,வர்மக்கலை ஆகியவற்றில் வல்லவராகத் திகழ்கிறார். இக்கலைகளை இந்தியாவிலிருப்போருக்கு கற்றுக்கொடுக்கிறார்.
அக்காலத்தில் சீனாவில் இனந்தெரியாத கொடியநோய் பரவி ஏராளமான மக்களை
கொன்று குவிக்கிறது. போதிவர்மனின் குரு சீனாவுக்கு போதிவர்மனை அனுப்பி அவதிப்படும் சீனமக்களுக்கு உதவும்படி கட்டளையிடுகிறார். அவரும் தனது இரு
குழந்தைகளை மனைவியோடு விட்டுவிட்டு தன்னுடைய சுவடியை ஒப்படைத்துவிட்டு செல்கிறார். ஆரம்பத்தில் அவரை வரவேற்க சீன மக்கள் வெறுக்கிறார்கள்,பின்பு ஒரு சிறுமிக்கு ஆபத்தான நிலையிலும் தோல்நோய் இருந்ததை குணமாக்கி குழந்தையை பழைய அழகான நிலையில் ஒப்படைக்கும்போது, சீன மக்கள் அனைவரும் காலில் விழுந்து புத்தருக்கு அடுத்த படியாக போதிவர்மனை துதிக்கிறார்கள். அவரிடம் இருக்கும் அத்தனை கலைகளையும் அம்மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். பல காலமாக அங்கிருந்துவிட்டு இந்தியா திரும்ப நினைக்கிறார். ஆனால் சீன கிராம மக்களின் திட்டமாகிய அவரை அங்கேயே கொலைசெய்து அந்நாட்டில் புதைத்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அந்த நாட்டிலேயே தங்கி நோயைத் தடுத்திவிடும் நம்பிக்கையில் கொன்று புதைக்கிறார்கள் .அதற்குத் தானும் சாவதற்கு சம்மதிக்கிறார். சீனமக்கள் புத்தருக்கு அடுத்த படியாக கோயில்கட்டி துதிக்கிறார்கள். வரலாற்றில் பிரபலமடைகிறார்.
             படம் நவீன காலத்திற்கு நகர்கிறது. சீனாவில் போற்றப்படுகிற போதிவர்மன், காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஓர் அரசகுமாரன் என்று ஜெனிடிக் இஞ்சினியரிங் மாணவி (ஸ்ருதி ஹாசன்) சுபா ஸ்ரீனிவாசன் கண்டுபிடித்து அவருடைய டி என் ஏ 80% ஒத்திருக்கக் கூடிய அவருடைய வம்சாவழியினரில் உள்ள நபரைக் கண்டுபிடித்து அவரிடம் அந்த டி என் ஏ வை தூண்டிவிட்டால் அந்த போதிவர்மனின் குணாதிசியங்களையும்,திறமைகளையும் மீட்டெடுக்க முடியும் என்ற ஆராய்ச்சியின் மூலம், ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சாகசக் கலைஞராக வேலை செய்யும் (சூர்யா) அரவிந்த் என்ற வாலிபரிடம்  80 சதமான போதிவர்மனின் டி என் ஏ வோடு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டறிந்து அவரிடம் தூண்டிவிடும் முயற்சியில் இறங்குவது இம்மாணவியின்  வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர் மூலம் சீனா இண்டலிஜெண்ட் துறைக்கு ரகசியம் தெரியவருகிறது.
          சீனாவில் இண்டலிஜெண்ட் துறை ஆபரேசன் ரெட் என்ற பெயரில் இந்தியாவில் நோயைப் பரப்பும் என்கிற பயோ வார் அதாவது இந்த நவீன காலத்தில் ஒரு நாட்டை சண்டை போட்டெல்லாம் அடிமைப் படுத்த முடியாது.இப்படிப் பட்ட நுண்ணிய வழிமுறையில்தான் அடிமைப் படுத்த முடியும் என்ற திட்டத்தின்படி, இந்த நோய்கிருமி பரப்பும் பணிக்கு ,அந்த துறையில் பல அடிமுறைக கலைகளோடு,நோக்குவர்மம் என்கிற கலையில் வல்லமை பெற்ற டாங லீ என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி. ஒன்று இந்தியாவில் இனந்தெரியாத நோயைப் பரப்புவது,இன்னொன்று ஆராய்ச்சி மாணவியின் திட்டத்தை முறியடிக்க அவளைக் கொலை செய்வது ஆகிய இரு பணிகளை கொடுத்து அனுப்புகிறது. அவன் இங்கு வந்து ஒரு தெரு நாய் மூலம் நோய்கிருமியைச் செலுத்தி நோய் பரப்பிவிடுகிறான். அதை பார்த்து இவனை பிடிக்கவரும் காவல்துறையினருக்குள் நோக்கு வர்மத்தால் அவர்களுக்குள்ளே பகைமை உருவாக்கி ஒருவருக்கொருவர் சுட்டுக் கொலை செய்ய வைக்கிறான். மாணவி சுதா ஸ்ரீனிவாசனையும் அவருடன் இருக்கும் அரவந்த்தையும் கண்டறிந்து கொலை செய்ய முயற்கிக்கிறான் டாங்லீ. ஆராய்ச்சிக்குழு  தப்பித்து வனப்பகுதியில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்து, உடனடியாக போதி தர்மனின் டி என ஏ வை இயங்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கும்போது ,அவ்விடத்திற்கே டாங்லீ வந்து சண்டை போடுகிறான். ஏராளம் பேரை நோக்கு வர்மத்தால் கொன்று குவித்த டாங்லீ வித்தை அரவிந்த் திடம் எடு பட வில்லை. காரணம், போதி தர்மனின் டி என் ஏ கொஞ்சம் இருப்பதால். இருந்தாலும் அவனின் அடிமுறைக் கலையின் சக்தியைப் பயன் படுத்தி அரவிந்த் தை மயங்குமளவு அடித்து துவைக்கிறான். பின்பு சோதனைக் கூடத்தில் முயற்சித்த போதிவர்மனின் டி என் ஏ வேலை செய்ய அரம்பித்து, டாங்கலீயின் நோக்குவர்மம் உட்பட அனைத்து சக்தியும் வேலை செய்ய மறுத்து வீழ்கிறான்.அரவிந்த்திடம் அபார சக்தி வந்து மக்களிடம நோயைப் போக்குகிறான். மக்களால் பாராட்டப் படுகிறான். அவனின் பேட்டியோடு படம் முடிகிறது. இதுவரை சர்க்கஸூம் சாகசமும்,டாங்லீயின் மந்திரக் கலையும் சண்டைக் காட்கிகளும் திரில்லை உருவாக்குவதோடு பழைய கால விட்டலாச்சாரியா படங்களுக்கு நினைவை இழுத்துச் செல்கிறது.நவீன அறிவியலைப் பயன்படுத்தி பல வித்தைகளை காட்டுவது குழந்தைகளை உற்சாகப் படுத்தும்.  ஆனால் இடையில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனமும்,இறுதியில் அரவிந்த் பேசும் வசனமும் படத்தின்மீது கடுமையான விவாதத்தைக் கிளப்புகிறது,
          தேசப் பற்று முகமூடியில் ஒரு இந்துத்துவ சிந்தனையை உதிர்ப்பதாக உள்ளது. இனமாற்றம்,மதமாற்றம்,மொழிமாற்றம் ஆகியவைதான் இந்திய முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்றும்.  தமிழன்  உலகத்திலேயே சிறந்தவன் என்ற உணர்வு மேலோங்கும்படியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனைக் கொள்வதற்குப் பெயர் வீரமல்ல,துரோகம் என்ற
வசனம் மனச் சாட்சியுள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
         இது  தமிழ் இன உணர்வை அழுத்தமாக  பதிக்கிறது. ரிசர்வேஷன்,கரப்ஷன், அட்மினிஷ்ட்ரேஷன் இவைகளால்தான் இந்திய முன்னேறாததற்கு காரணம் என்ற வசனத்தில் கரப்ஷன்,இதுவரை ஆண்டவர்களின் அட்மினிஸ்ட்ரேஷன் காரணம் சரிதான்.ஆனால் ரிசர்வேஷன் எப்படி காரணமாக இருக்கும் ?,இது மேல்தட்டு வர்க்கச்  சிந்தனையான இட ஒதுக்கீடு மறுப்பை பிரதிபலிக்கிறது.,  மதமாற்றம் குறித்து இந்துத்துவ வாதிகளின் குரலை எதிரொலிக்கிறது. மேலும் போதிதர்மன் தமிழன் என்பதில் ஐயத்தைக் கிளப்புகிறது.
           இன்னும் ஒருபடி மேலே சென்று சீன தேசத்தை எதிரி நாடு போல சிந்தனைக் கட்டமைப்பை அழுத்தமாக உருவாக்குகிறது.இப்படி பலவிதமான சர்ச்சைகளை உருவாக்கும் படத்திற்குத்தான் ஊடகங்கள் பில்ட் அப் செய்கின்றன..
காரணம், இந்திய திருநாட்டில் தத்துவமும் நடைமுறையும் அரசியல் ,பொருளாதார,பண்பாட்டு தளங்களில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் அடிப்படையில் பயணப் பட்டுக் கொண்டிருப்பதால்தான். ஒரு நாட்டின் இளைஞர்கள் அந்த நாட்டின் வரலாற்றைப் படிக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவது நல்லதுதான்.ஆனால் எந்த வரலாற்றைப் படிப்பது என்பதுதான் கேள்வி.
காலங்காலமாக உள்ளூர் தமிழன் ஒதுக்கப் பட்ட சேரித் தமிழனை தீண்டாமைக்கு உட்படுத்தி, தெருவில் செருப்பு அணிவதற்குத் தடை ,  இந்து கோயில்களில் நுழையத் தடைவிதிப்பதும், பஞ்சாயத்துகளில் தலித்துகள் தலைவர்களாக வந்தாலும் நாற்காலியில் உட்கார தடைவிதிப்பதும், இவர்களை மனிதனாகவே மதிப்பதற்கு அஞ்சுவது ஆகியவை இந்த இருபத்தோராவது நூற்றாண்டிலும் தொடர்கிறது  என்பதை சமீபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழுப்பு முன்னணி நடத்திய தமிழக ஆய்வில்  22 மாவட்டங்களில்1848 கிராமங்களில் 48 வடிவங்களின் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவது தொடர்கிறது எனக் குறிப்பிடுகிறது. இக்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள 25 சதமான தா.ப, பழங்குடி மக்கள்  சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மனிதன் என்ற ஸ்தானத்தில் வைப்பதற்கு முருகதாஸ் போன்றோர் இந்த வரலாற்றையும் படிக்க வேண்டியது அவசியமாகிறது..சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்புக் குடிமக்களுக்கும் பட்டியல் குலத்தினர்க்கும் பழங்குடியினர்க்கும் இவ்வகுப்புகளின் முன்னேற்றஙகருதி அரசு எந்த சிறப்பு ஏற்பாடு செயவதையும் இந்த விதியிலுள்ள எந்த பகுதியும் அல்லது விதி 29(2)ல் உள்ள எதுவும் தடுக்காது. எனத் தந்தை பெரியாரின் போராட்டத்தால் 2-06-1951 அன்று அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் ஆகும். 1990 ல் வி.பி.சிங் தலைமையிலான தேசியமுன்னணி அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒரு பகுதியை அமலாக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதம் இட ஒதுக்கீடு செய்த்தது. இதை 1992 ல் உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் அங்கீகரித்துள்ளது. இப்பிரச்னை போகிற போக்கில் விமர்சனம் செய்யக் கூடியது அல்ல. மிகப்பெரிய போராட்ட வரலாறும்,சமூக நீதி வரலாறும் ,நீண்ட காலம் சிலர் பலரை ஒடுக்கிய வரலாறும் பின்னணியாகக் கொண்ட சமூக அரசியல் ,கலாச்சாரப் பிரச்னையாகும்.இவற்றையும் சேர்த்துப் படிக்கவேண்டியுள்ளளது.
           அது போல மதமாற்றம் குறித்து வெறும் உணர்வுரீதியில்,ஓரிரு வாக்கியங்களில் சொல்லிப் போகிற விசயம் இல்லை.மதம் மாறுவது பெரும்பாலும் அடித் தட்டு மக்கள்தான். இவர்கள் மதம் மாறியதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று;
சமூக அடக்குமுறை. தீண்டாமைக் கொடுமை, இரண்டு; பொருளியல் நலன்களுக்காக. இந்திய அளவிலும்,தமிழக அளவிலும்  பௌத்த சமண சமயங்களின் வீழ்ச்சிக்குப் பின் ஒரு நெடிய காலம் சனாதனிகளின் கர்ண கொடூர தாக்குதலுக்கு இலக்காகி இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்திற்கும், மேலாடை அணியக்கூட உரிமை மறுக்கப்பட்ட சாணார் இன மக்களுக்கும் , கடற்கரைப் பகுதியில் அரேபியர்களாலும், உள்நாட்டு சாதி வெறியர்களாலும் ஒருங்கே தாக்கப்பட்ட பரதவர்களுக்கும் கிறிஸ்துவின் முன் அனைவரும் சமம்என்ற குரல் புதிய வாழ்வின் நம்பிக்கையின் குரலாகவும் அமைந்ததால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். ஆக இந்து மதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிற சாதீய அடுக்குமுறையும் ,சனாதன ஒடுக்குமுறையும் ,தீண்டாமையும்தான் பிரதான காரணமாகிறது. குமரி மண்ணில் தோன்றிய அய்யா வைகுண்டர் கூட இந்து சனாதன பிராமனியப் பண்பாட்டுக்கு எதிராகத்தான் வழிபாட்டை உருவாக்கி, ,சாதிய மேலாதிக்கம் உருவாக்கிய மார்புச் சேலை உடுத்தக் கூடாது என்பதற்கு எதிராக கலகம் செய்து அன்புக்குடி மதம் உருவாக்கி தனி வழிபாட்டு முறையை உருவாக்கயதும் இந்தப் பின்னணிதான் வர்ணாஸ்ரம அடுக்குமுறைக்கு எதிராக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் குரலோடு இந்தியாவில் தோன்றிய புத்தமும், சமணமும் ஏன் வெளிநாடுகளுக்குப் போயின? தமிழகத்தில் சைவத்துக்கும் சமணத்துக்கும் மிகப் பெரிய சண்டை நடந்தது ஏன்? என்ற வரலாற்றையும் சேர்த்தே படிக்கவேண்டி உள்ளது.
         இந்திய வெளியுறவு அரசியலையும் இப்படம் விவாதத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தியாவில்  உண்மையிலே உலகம் முழுதும் தீங்கு செய்யும் நாட்டை விட்டு விட்டு, சீனாவை எதிரி நாடுபோல சித்தரிப்பதும் பொருந்துவதாக இல்லை.பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகளின் அரசியலில் நுழைந்து எண்ணெய் வளத்தின் மீது கண்வைத்து பொம்மை அரசுகளை உருவாக்கும் நாட்டைப் பற்றி எக்கருத்தும் இல்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  1962 ல் நடந்த யுத்த அனுபவம் துரதிஷ்டமானது, கசப்பான அனுபவமே. தற்போது கூட இந்திய-சீன எல்லைப் பிரச்னையில்  இரு அரசுகளும் பேச்சுவார்த்தையைத் துவக்கவேண்டும். அதன்மூலம் தெற்காசிய நாடுகளில் இணக்கமான பொருளாதார முன்னேற்றம் உருவாக்கவேண்டும் என்பது உண்மையான தேசப்பற்றுள்ளோரின் ஏக்கம்.
         இப்படத்தைப் பார்த்தோருக்கு போதிதர்மன் குறித்து பல சந்தேகங்கள் உருவானது. இப்படியெல்லாம் புயற்காற்றை உருவாக்குமளவு இருந்திருப்பாரா?
கொலை செய்வதற்கு சீனாவில் சம்மதித்திருப்பாரா? என்பதெல்லாம் ஏற்பட்டன.

நவம்பர் 15 தேதியீட்ட இந்து நாளேட்டில்( ஹைதராபாத் எடிசன்)  பெங்களூர் சைலம் புத்த துறவிகள் மடத்தின் ஸ்தாபகர் திரு பாபு.டி.ரகு இப்படம் பற்றி விமர்சித்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. புகழ்பெற்ற புத்த சமூகத் தலைவர் போதிதர்மனை சினிமாவுக்கென்று சிதைத்திருக்கிறார். ஒரு துறவியின் குணாதிசயங்கள் பரந்த அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறது. படத்தில் காட்டியிருக்கக் கூடிய வரலாற்றுக் கூறுகள் ஏதும் உண்மையில்லை. ஏழு வயதில்
புத்த மதத்தை ஏற்றெடுத்து 150 வது வயதில் சீனாவுக்கு சென்று மஹாயான புத்த மதத்தின் தியானப் பண்பை பரப்புவதற்கு செல்கிறார்.படத்தில் போதிதர்மன் மணமாகி இரு குழந்தைகளைவிட்டுச் சென்று நோயைக் குணப்படுத்தவும.கிராம மக்களுக்கு  சண்டைப் பயிற்சி கொடுப்பதற்கும் சென்றார் எனக் குறிப்பிட்டிருப்பது தவறு. ஆனால் அவர் குகையிலேயே ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்தவர் மக்களிடம்
பேசவும் இல்லை,யாருக்கும் சண்டைப் பயிற்சி வழங்கவும் இல்லை. ஆந்திரப்பரதேசத்துல் நாகர்ஜூன ஹோண்டாவில் ஸ்ரீபர்வதா என்ற பகுதியில் விஷத்திலிருந்தும்,நோயிலிருந்தும் எதிர்ப்பு சக்தி பெறுவதற்குப் பயிற்சி எடுத்தாரேயொழிய காஞ்சிபுரத்தில் வர்மக் கலையை பயிற்சி எடுக்கவில்லை என்பதோடு,படத்தில் போதிவர்மனின் சடலத்தை கல்லறையிலிருந்து எடுப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.ஆனால் வரலாற்றில் குறிப்பிடுவது அவரின் சடலம் கண்டுபிடிக்கப் படவேயில்லை. மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் வரலாற்றை அழிப்பதற்கு ஒப்பாகும். எனவே படத்தின்மூலம் வெளியே அறிவிப்பதற்குமுன் இயக்குநர் மிகுந்த எச்சரிக்கையோடு ஆழ்ந்து யோசித்து செயல்பட்டிருக்கவேண்டும்.என்று மிக கடுமையாக விமர்சித்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.படத்தை வெளிப்படுத்தும் முறையில் அறிவியல் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்திய இளம் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்
அதன் உள்ளடக்கத்தில் பரந்த அளவு சிந்தனையை செலுத்தி,சமூகம் பொதுநோக்கில் விழிப்புணர்வு அடையும்படி கதை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
          

Friday, November 25, 2011

உயிர் குடிக்கும் ராஜநாகம்.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு
அரைகுறையாக அடிபட்டு
மயங்கிக் கிடந்த ராஜநாகப்
பாம்பொன்று-
அனுதாபக் காற்றைக் குடித்து
கோட்டைப் புத்துக்குள் குடியேறியது!
பாதிப்பின் பலமிருக்குமென
அறியாமை மக்களின்
பரிதாபப் பாலூட்டல்!
பூசாரிகளின் உச்சாடனம்
வேள்வி மந்திரம்-கூடவே
டாஸ்மாக் ருசியும் கண்டு
தெனாவெட்டு ருத்திரதாண்டவத்தோடு
பள்ளிக்கூடம் பக்கம் பதுங்கியது!
மாணவர்களின் அணிசேர்க்கை
விரட்டியபோது
பக்கத்துப் புதருக்குள் மறைந்தது!
பூச்சிகள் கிடைக்காமல்
பால் பண்ணை பக்கம் ஊர்ந்து
பாலை நக்கியபோது
விஷத்தைக் கக்கியது!
ஊரெங்கும் குழந்தைகள்
கொத்தக் கொத்தாய் செத்தன!
தப்பயோடிய பாம்பு
டிப்போவில் நின்ற பஸ்ஸில்
டிரைவர் சீட்டின்கீழ் பதுங்கி
நெரிசல்வேகப் பயணத்தில்
டிரைவர் காலில் பதம்பார்த்தது!
அலறித்தடித்து ஹேண்ட்பார் கை
தடுமாறி
ரோட்டோரம் இருந்த கிணற்றில் பாய்ந்து
பயணிகள் அனைவரும் ஸ்பாட் அவுட்!
ஏராளம்பேரின் உயிர்குடித்த ராஜநாகம்
மின் அலுவலகத்தில் பில் கவுண்டரில பதுங்கியது!
பணம் கட்ட வந்தோரை சீண்டியது
அலுவலர்களும் பயணாளிக கூட்டமும்
பட படத்து பயந்தோடினர்!
நொடிப் பொழுதில் மறைந்து
கோட்டைப் புத்தில் ஒழிந்துவிட்டது!
மரண ஓலக் கதறல் கேட்ட
மனச் சாட்சி கொண்டோர்
கடப்பாரை மம்பட்டியோடும்
பாம்பைப் பிடிக்க
கோட்டைப் புத்தைச் சுற்றி
கோபாவேஷத்தோடு!

The Hindu : Cities / Hyderabad : 'Bodhidharma portrayal wrong in film'

The Hindu : Cities / Hyderabad : 'Bodhidharma portrayal wrong in film'

Sunday, November 20, 2011


                                     கண்ணீரும் கதை  சொல்லும் வாச்சாத்தீ
வீடுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட பெண்களை மந்தையிலே நிறுத்தி  பதினெட்டுப்பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உள்ள ஏரிக்கு கூட்டிச்சென்று வன்புணர்ச்சி செய்ததை இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.எங்களை விட்டுவிடுங்கள் என்று காலில் விழுந்து கதறியதைக்
கூட கண்டு மனமிறங்காத மிருகமாக நடந்து கொண்டார்கள்
   எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துகிட்டுப் போய் விசாரிக்கும் போது
குழந்தைக்கு தண்ணீர் கொடுங்கன்னு கேட்டேன் மூத்திரத்தைக் கொடு ன்னு அதிகாரி சொன்னாரு என பாதிக்கப்பட்ட பழனியம்மாள் நீதிமன்றத்தில் நீதியரசர்
அசோக்குமாரிடம் சொன்னார்.அந்நீதிபதி சற்றுநேரம் உறைந்துபோய் யார் அவன்  உன்னால் இங்கு அடையாளம் காட்டமுடியுமா? எனக் கேட்க பழனியம்மாள் 269 பேரில் அப்படிச் சொன்னவனை சரியாக அடையாளம் காட்டினார்.
        இப்படி எத்தனையோ வாக்குமூலங்கள் நம் நெஞ்சைப் பதறவைத்து இது நாடுதானா? இல்லை சுடுகாடுதானா? என்று பதைக்கவைக்கும்
அளவில் விசித்திரங்கள்  நிறைந்ததுதான் வாச்சாத்தி வழக்கு.
        ஒரு கிரிமினல் வழக்கில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 215 அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள தண்டனை என்பது முன்னெப்போதுமில்லாத ஒன்றாகும். அதேபோல் 1992 ஜூன் மாதம் 20 ஆம் தேதியன்று தர்ம்புரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் நடைபெற்ற சம்பவங்களும் அதற்குமுன் வேறெங்கும் நடைபெறாதவைகளாகும்
என 1-10-2011ல் தி நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது.
          அப்படி என்னதான் நடந்தது வாச்சாத்தியில் ? என வகுப்பறை ஆசான்கள்
நாமும் மனதில் அசைபோட்டுப் பார்ப்பது அவசியம். காரணம், தேசத்தில் எங்கோவொரு மூலையில் பிடிக்கும் பண்பாட்டு நெருப்பு நம்மையும் வாட்டும்.
            தர்ம்புரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஜூன் 20 ந்தேதி மலைவாழ் பழங்குடி மக்கள்மீது கொடூரமான முறையில்
காவல்துறை,வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய மூன்றும் அகோரத் தாண்டவமாடின. 18 பெண்களை பாலியல் வன்புணர்ச்சி இழிசெயல்களையும் புரிந்தனர். வீடுகளை ,உடைமைகளை துவம்சம் செய்தனர். ஆடுகளைப்பிடித்து வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆட்டுத் தோல், எலும்புகளை குடிதண்ணீர் கிணற்றில் போட்டு மக்களின் தாகத்திற்குக் கூட கொள்ளிவைத்தனர். இச்சம்பவம் வெளியே தெரிந்து விடாதபடி கிராமமே வெறிச்சோடி கிடக்குமளவு 28 குழந்தைகள்,90 பெண்கள், 28ஆண்கள் உட்பட 133
பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். அக்கிராமத்திலிந்து தப்பியோடிய சிலர்
மலைவாழ்மக்கள் சங்கத் தலைவர்களுக்கும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.அண்ணாமலைக்கும் தெரிவித்தனர். உடனே
மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் பெ.சன்முகம், பாஷாகான்,கிருஷ்ணமூர்த்தி,
சித்தேரி பொன்னுச்சாமி உட்பட பலர் சேலம் சிறையில் மக்களைச் சந்தித்து நடந்தவற்றைக் கேட்டு புகார்களை காவல்துறைக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்தனர். அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் ஏ.நல்லசிவன் நேரில் சென்று நடந்த துயரங்களை, வேதனைகளை ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தினார். அன்றைய அ தி மு க அரசு இவையெல்லாம் பொய் என்று
அலறித்துடித்தது. நம்பர் போர்டு இல்லாத லாரியில் சாதாரண உடையில் சந்தனக்
கட்டைகளைக் கடத்திச் சென்ற வன ஊழியரை மடக்கிப் பிடித்து அரசின் சொத்தைப் பாதுகாக்க முயற்சித்தவர்கள் மீதே வழக்குப்போட்டு , ஊழல் வெளியே
கொண்டுவர சாட்சிகளாக இருக்கக் கூடாது என்பற்காகவே இந்த மூன்று துறையினரும் அந்த அப்பாவி மக்கள்மீது அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டனர்.
   மலைவாழ்மக்கள்தான் சந்தனக் கட்டை கடத்துபவர்கள், இதைத் தடுக்கப் போன
அதிகாரிகளை ஊர்மக்கள்தான் தாக்கினார்கள், கம்யூனிஸ்டுகள்  சொல்லக்கூடிய
எந்தக் குற்றச்சாட்டுமே அங்கு நடக்கவில்லை என்று அன்றைய அரசு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தது.
    1995ல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் ஆர்.வைகை,என்.ஜி ஆர் .பிரசாத் , இளங்கோ, சம்கிராஜ் ஆகியோர் வாதாடினர். உச்சநீதிமன்றம் வழக்கை சி பி ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.
     நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிரசனைக்கு தீர்வு கண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி மு க அரசு இம்மக்களின் வழக்குமீது எவ்வித அக்கரையும் செலுத்தவில்லை.
   2002ல் வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கும், பின்பு தர்மபுரி நீதிமன்றத்திற்கும் வழக்கு தாவித் தாவி ஒடி, இழுத்தடிக்கப் பட்டதோடு குற்றவாளிகளை அடையாளங்காட்ட  பலமுறை அடையாள அணிவகுப்புகள் நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் ஒவ்வொரு நீதிபதியிடமும் சாட்சியமளிக்க வைத்து அலைக்கழிவு செய்தனர். இந்த விசாரணை நடைபெறும் காலத்திலேயே 54 பேர் மரணமடைந்துவிட்டனர். இதில் 215 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வரலாற்றில் முதன்மை முத்திரையைப் பதித்தனர் நீதிமான்கள்.
    19 ஆண்டு காலம்  போராடிய அந்த மக்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின  முன்னாள் எம் எல் ஏ தோழர்
அண்ணாமலை, இந்நாள் எம் எல் ஏ தோழர் டில்லிபாபு, அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன், வழக்கில் வாதாடிய தோழர்
பி.ராமமூர்த்தியின் புதல்வியான வைகை உட்பட வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு
மட்டுமல்ல இந்த வரலாற்றில் பதிக்கவேண்டிய தீர்ப்பின் வெற்றி. தேசத்தை நேசிக்கிற, சமூக மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.
     இவ்வெற்றியை பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளும், பறிதவித்த குழந்தைகளும் இனிப்பை இன்முகத்தோடு கொடுக்கவில்லை. மாறாக ஆறாக
பெருக்கெடுத்தோடும் கண்ணீரையே நன்றியின் அடையாளமாக சிந்தினர். 
        கி மு முதல்  நூற்றாண்டிலேயே மன்னர்களாக,போர்வீரர்களாக, வில்லாளிகளாக , வேட்டைக்காரர்களாக விளங்கிய பரம்பரையின் பதினெட்டுப் பெண்கள் ,காவல்துறையினர்களால் கற்பைச் சூரையாடியபோது சித்தேரி மலையில் மோதி எதிரொலித்த ரணவலியின் மிச்சம்தான் அந்தக் கண்ணீர்.
              இந்தக் கண்ணீர் நமக்கு, அவர்களின் கரடு முரடான வாழ்க்கைப் பயணத்தில் ஒட்டு மொத்த சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேதனை வரலாறை உணர்த்துகிறது.
                   கம்பராமாயணத்தில் காவிய நாயகன் ராமன்
'குகனொடு ஐவரானோம்-முன்பின்
குன்றுசூழ்வான் மகனொடு அறுவரானோம் 
எம்முழை அன்பின் வந்த அகனமர் காதலய்ய
நின்னொடு எழுவரானோம்' என்று வனத்தில் உதவியோரை தனது சகோதரர்களாக ஏற்றெடுத்துப் பாடியது காவியத்துக்கு மட்டுமல்ல, நிஜவாழ்க்கையில் நாம் மனிதநேயத்தோடு
பின்பற்றவும்தான்.
                   ஆண்டவர்களின்,ஆள்வோர்களின் குறுகிய சுயநலப்போக்கால் வாக்குறுதி வீசுபவர்கள் வாழ்க்கையில் அடித்தளத்தில் இருப்போரை கண்டு கொள்வதேயில்லை என்பதுதான் இம்மக்களின் அவலங்களுக்கு காரணம்.
     சந்தனக்கடத்தல் வீரப்பனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு,கோடிக்கணக்கான
   ரூபாய் என்ன ஆனது என்பதையும் மறைத்துவிட்ட படலத்தில் , காவல்துறையின் வேட்டையில் வாழ்வை பறிகொடுத்தது இவ்வினம்தான்.
                  பல இடங்களில் இம்மக்களின் வாழிடங்களில் நகரவாசிகளின் உல்லாச மாளிகைகள் கட்டி வாழ்விடங்கூட இல்லாமல் விரட்டியடிக்கப்படும் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிறது இவர்களின் கண்ணீர்.
                              இத்தனை துயரங்களை காலங்காலமாக மென்று விழுங்கியவர்களின் இந்தக் கண்ணீர் அவர்களுக்காகவும், நாடுமுழுக்க அல்லோகலப்படும் இவ்வினத்திற்காகவும் வேண்டுவது; உயர்நீதி மன்றத்திற்கு போயிருக்கும் வரலாற்றுபூர்வ தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டியதும், வாழ்க்கை நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகமாக்கி வழங்கவேண்டுவதோடு, அவர்களின் நிரந்தர நிம்மதியான வாழ்க்கைக்கு , நாடாளுமன்றத்தில்  சமீபத்தில் நிறைவேற்றிய வன இலாகா சட்டத்தை அமுல்படுத்த வைப்பதும் ஆகும். ஆம் தோழர்களே இவைகள் அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல ஆதரவு தர வேண்டிய கருத்தால் கரத்தால் உழைப்போராகிய நமது ஆசையுங்கூட.
     பாதிக்கப்பட்ட அபலைகளின் போர் மட்டுமல்ல, உ.ழைக்கும் மக்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்ற  தொழிலாளி வர்க்கத்திற்கும் 
  திங்கள் ஒளியில் துயிலவோர்க்கும் தினம் 
  சூரியத் தீயினில் குளிப்போர்க்கும் ‘-நம்
 போர் இன்னும் முடியவில்லை-இந்த
   பூமி முழவதும் விடியும் வரை.
                                                                                முனைவர். க.கணேசன்
                                                                                விவேகானந்தா கல்லூரி
                                                                                 அகஸ்தீஸ்வரம்
 
          

Tuesday, November 8, 2011

பாட்டாளி வர்க்க வெற்றி சர்வநிச்சயம் - கவிஞர் ஈகிள் விடெப்ஸ்.

தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்,எழும்.
வடுபடும்,மறுபடியும் எழும்.
அதன் குரல்வளை நெறிக்கப்படும்
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்.
நீதிமன்றம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்.
பத்தரிக்கைகளால் வசை பாடப்படும்
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்.
கோழைகளால் நடுவீதியில் வீசப்படும.
பொதுமக்களின் புருவ நெறிப்பும்கூட
 போர்தொடுக்கும் அரசியல் வாதிகளால் ஏய்க்கப்படும்.
ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்

சூதாடிகளால் தோற்கடிக்கப்படும்.
அட்டைகளால் உறிஞ்சப்படும்.
ஏன்....தலைவர்களால் விற்றுவிடப்படும்
ஓ...இத்தனை சோதனைகள்
இருந்த போதிலும்
இவ்வுலகம் இதுவரை காணாத
உன்னதமான இயக்கம்
தொழிலாளர் இயக்கம் ஒன்றுதான்
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளி மக்களை விடுதலை செய்வதே
அதன் வரலாற்றுக் கடமையாகும்
அதன் வெற்றி சர்வ நிச்சயமே!

                                                   'தி மெட்டல் ஒர்க்கர்ஸ்' இதழ் 1904
                                                           கவிஞர் ஈகிள் விடெப்ஸ் ஆங்கிலக் கவிதை.

Thursday, September 15, 2011

தீராநதி செப்டம்பர் 2011 இதழுக்கு பதில் லட்சுமி மணிவண்ணன் புரிவாரா?


வைகுண்டசாமியும் பத்மனாபசாமி புதையல் ரகசியமும் என்ற தலைப்பில் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் எழுதிவரும் தொடரை தீராநதி செப்.-2011 இதழில் படிக்க நேர்ந்தது. தொடரின் துவக்கத்திலே கட்டுரைகளின் அறியாமையும் அவர் சார்ந்துள்ள அரசியலும் துல்லியமாகவே புலப்படுகிறது. உத்தராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா தற்போது திருவாங்கூர் அரசராக இருப்பவர் என்ற துவக்க வரிகளே, கட்டுரையாளரின் கற்பனை வளத்தை அல்லது அறிவின்மையை தெளிவாக நமக்கு புலப்படுத்தி வருகிறது. இந்திய வரைபடத்தில் 1950 ஆம் ஆண்டுக்குப்பிறகு திருவாங்கூர் என்ற சமஸ்தானம் இல்லை என்ற அடிப்படை அறிவோ அல்லது இங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற புரிதலோ இல்லாமல் தனது தொடர்மூலம்,தன்னை ஒரு
வரலாற்று விற்பன்னராக நிறுவிக்கொள்ளும் முனைப்பையே காணமுடிகிறது.
         வைகுண்ட சாமியின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
என்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரி மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியதை சற்றே கிண்டலடித்துள்ளார் கட்டுரையாளர்.பாடத்திட்டத்தில் வைகுண்டசாமியின் வரலாறு இடம் பெறுவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தனது முடிவையும் பதிவு செய்து உள்ளார். அத்வானி ஜெயலலிதா போன்றோரையும் தனது வாதத்திற்கு வலுசேர்க்க இழுத்து உள்ளார். தேசத்தந்தை அவர்களால், நீங்கள்தான் இந்திய நாட்டின் சொத்து என்று வர்ணிக்கப்பட்ட ஜீவா அவர்களை, முற்போக்கு அடையாளத்தை சூடியவர் என்ற வம்பிழுக்கும் கட்டுரையாளர்,நேசமணி அவர்களை ராஜா என அழுத்தி வலியுறுத்திச் சொல்கிறார். இதன்மூலம் இவரது அரசியல், மொட்டையான இடதுசாரி எதிர்ப்பு அரசியல் என்பதை நமக்கு தெளிவாக்கியுள்ளார். நேசமணி அவர்களை புனிதராக்கும்  காலாவதியாகிப்போன
உத்தியை கையாண்டுள்ளார் கட்டுரையாளர்.
            மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்பும் பழைய அந்தப்புர நினைப்பிலேயே திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாள திகழ்ந்த குமரி மாவட்டத்தையும்
சேர்த்து ஆண்டுவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கெதிராக குமரிமண்ணின்
மைந்தர்கள் அணிதிரண்ட காலம் அது. மக கொடுமையான அடக்குமுரை ஆட்சியை நடத்திவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கு எதிராக மூண்ட கலகம் காலப்போக்கில் பட்டம் தாணுபிள்ளையின் சாதிக்கெதிராகவும் மலயாள மொழி பேசுபவர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடும் அபாயத்தை புரிந்துகொண்ட
கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் ஒற்றுமையை காக்க, ஜீவா  அவர்களது தலைமையில்  ஜீ எஸ் மணி, டி.மணி உட்பட தோழர்களை களமிறக்கியது. மக்களை ஒன்றிணைத்து மொழிவழி மாகாணம் என்ற கோஷத்தை முன்வைத்து அதன் காரணமாக சொல்லமுடியாத கொடுமையினை சந்தித்த வீரவரலாறு கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
              பட்டம் தாணுபிள்ளையின் பேயாட்சிக்கு டெல்லியிலிருந்து ஆதரித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருவாங்கூர் காங்கிரஸ் என்ற அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டு பின்பு திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர்மாற்றம்
செய்யப்பட்டு நேசமணி உட்பட களத்தில் நின்றனர். தாய்த்தமிழகத்தோடு இணையும் போராட்டத்தின் உச்சகட்டமாக 1954 ஆகஸ்ட் 11ஆம் தேதி
நடைபெற்ற நரவேட்டையும் ,பட்டம் தாணுபிள்ளைநின் காவல்துறையின் துப்பாக்கிச்  சூடும் உயிர்பலிகளும் குமரி மாவட்டத்தின் கறைபடிந்த வரலாறு. ஒரு காலம் வரையிலும் இந்த இயக்கங்களோடு இணைந்து காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் செயல்பட்ட நேசமணி அவர்கள், மக்கள் எதிர்ப்பு காரணமாக பட்டம் தாணுபிள்ளை பதவியிறக்கம் செய்ய மத்திய காங்கிரஸ் ஆட்சி முடிவு செய்து, பனம்பள்ளி கோவிந்த மேனன் எனபவரை 1954ஆம் ஆண்டு முதல்வர் ஆக்கியது. அதுவரை களத்தில் நின்றிருந்த திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அதிகார சபலம் ஏற்பட்டது. பட்டம் தாணுபிள்ளையின் நரவேட்டைக்கு துணை போன காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க நேசமணி அவர்கள் முடிவு எடுத்து
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 சட்டமன்ற உறுப்பினர்களும் பனம்பள்ளி கோவிந்த மேனனின் ஆட்சிக்கு ஆதரவளித்தனர். நேசமணி அவர்கள் மேற்கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் சிதம்பரநாதன் அவர்களுக்கு மந்திரி பதவியை பெற்றுத் தந்தது. ஆனால் களத்தில் நின்ற மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனார் நேசமணி அவர்கள். நேசமணி அவர்களை ராசா என்றுதான் அழைக்க வேண்டும் என்ற கட்டுரையாளரின் நோக்கம் அவரது சொந்த ஆசையாகவே இருக்கட்டும் விக்ரமாதித்தன் அவர்களையும் கிருஷ்ணகோபால் அவர்களையும் பெயர் சொல்லியே குறிப்பிட்ட கட்டுரையாளர், நீங்களெல்லாம் கூலிவேலை செய்தால்தானே நாங்களெல்லாம் படைப்பாளிகளாக இருக்கமுடியும் என்று கூறிய நாடறிந்த எழுத்தாளர் பெயரை மிகவும் வசதியாக மறைத்துவிட்டார். சில பத்திரிக்கைகளில் தங்களது சொந்த கருத்தை பதிவு செய்ய, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் கூறினார், என்ற சில செய்தியாளர்களின் அரதப் பழசான உத்தியை கையாண்டு உள்ளார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியை நேசமணி அவர்கள் உருவாக்கினார் என்பதே ஒரு வரலாற்று புரட்டு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

Tuesday, September 13, 2011

அய்யா வைகுண்டரும் பத்மநாபசாமியும் புதையல் ரகசியம்.

 
திரு.லட்சுமி மணிவண்ணன் பேசுவதிலும் எழுதுவதிலும் கட்டுடைப்பு அதிகமாக இருப்பதால் புரிந்து கொள்ள முடிவதில்லை.அவ்வளவு தரமானது. சமூகத்திற்கு என்ன சொல்கிறார் என்பதை பூதக் கண்ணாடி போட்டுத்தான் பார்க்கவேண்டும்.
அவரின் எழுத்தில் கற்பனைக் குதிரை கனவுலகில் அற்புதமாக பறந்தபடியே இருக்கும்  நிஜவுலகில் கால்பதிக்காமல் தாவித் தாவிப் பறக்கும். குமுதம் தீராநதியில் எழுதிவரும் தொடரில்  புரிந்து கொள்வதில் மிகச் சிரமம். செப்டம்பர் தீராநதியில் வைகுண்ட சாமியும் பத்மநாபசாமியும் புதையல் ரகசியம் எனும் கட்டுரையில் அய்யா வைகுண்டரின் சமூக நீதி வரலாற்றை பள்ளி கல்லூரிகளில் பாட்டத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்ற தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து தீர்மானம்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிறைவேற்றியதை நையாண்டி செய்வதோடு,சம்பந்தமில்லாமல் இடதுசாரிகள்மீது
அவருக்கே உரித்தான கற்பனையில் கருத்துகளை எடுத்துரைத்துரைத்திருக்கிறார்.
எந்தக் கட்டுரை எழுதினாலும் சில கட்டுரையாளர்களுக்கு இடையிடையே இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்ட்கள் பற்றி எதிர்மறை வாக்கியம் அல்லது வார்த்தைகளை சொருகிவிட்டால் நவீனத்துவம் என்ற அந்தஸ்தைப் பெற்று மகத்துவமாகிவிடுகிறது.  குழப்பங்களின் நன்மை என்றே இதற்கு முன்வந்த தீராநதி இதழில் கட்டுரை எழுதியிருக்கிறாரென்றால் குழப்புவது அவர் வேலையோ என்று சந்தேகங்கொள்ளச் செய்கிறது..
அய்யா வைகுண்டர்பற்றி சரியான மதிப்பீடு கொண்டு இளைய தலைமுறை க்கு
குமரிமுனையில் சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றை நீண்ட காலமாக இடதுசாரி சிந்தனை கொண்டோர் பரப்பி வருகிறார்கள். 1998 ல் கேரளாவில்
இ எம் எஸ் நம்பூதிரிபாட்டுக்கு அடுத்தபடியாக இருக்கின்ற மார்க்ஸிய அறிஞர்
அப்போதைய கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பி.கோவிந்தபிள்ளை சுவாமித்தோப்புக்கு வந்து தலைமைப் பதியைப் பார்த்துவிட்டு
தவத்திரு பால பிரஜாபதி அடிகளார் அவர்களிடம் உரையாடும்போது ஆத்தியத்து
கம்யூனிஸ்ட் இவடேயாக்கும் என்று புளகாங்கிதம் அடைந்து கேரளாவில் தனது சகாக்களோடு பல நேரங்களில் விவாதித்திருக்கிறார். 1995ல்மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் கலைப்பிரியன் தென்முனையில் ஒரு கலகக் குரல் என்று தீக்கதிர் நாளேட்டில் கட்டுரை எழுதினார். 1999ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அன்றைய மாநிலப் பொதுச் செயலாளர் கதிரேசன் (அருணன்) தமிழகத்தில் சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு என்ற நூலில் இரண்டாவது அத்தியாயமே அய்யா வைகுண்டர் பற்றித்தான். நாவலாசிரியர் பொன்னீலன் தான் எழுதிய தெற்கிலிருந்து என்ற நூலில் அய்யா வைகுண்டர் வரலாறை  முதல் பகுதியில் விளக்கமாக எழுதி சமூக்கத்திற்க அறிமுகம் செய்துள்ளர். கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வி தங்கையா அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை
மலையாளத்தில் எழுதியுள்ளார். ஆற்றிங்கல் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் ஏ. சம்பத் பாராளுமன்றத்தில் அய்யாபற்றி பேசி தபால் தலையில் பதிக்க
முயற்சியும் மேற்கொண்டார். மார்க்ஸிஸ்ட் கட்சியில் கேரள மாநிலச் செயலாளர் தோழர் பினராய் விஜயன் பங்கேற்ற அய்யா வைகுண்டர் பற்றி  பாரசாலையில் கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். கேரளாவில் ஒரு தன்னார்வ மையம்  அய்யா வைகுண்டர் பெயரில் இணையத் தளம் உருவாக்கி ஆராய்ச்சிப் பணி துவங்கியுள்ளது.அதன் துவக்கவிழாவில் கடந்த இடது முன்னணி ஆட்சியின் சட்டசபைத் தலைவர் தோழர் கே.ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்து பேசும்போது அய்யா வைகுண்டர் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியும் புரட்சியாளரும் ஆவார்.அவர் காரல் மார்க்ஸூம் பிரெடரிக்  எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு  12 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சமுதாயம் உருவாக்க சமத்துவ சமாஜம் இயக்கம்  கட்டியவர் என்று புகழாரம் சூட்டியது வெறும் சொல்லில் மட்டுமல்லாது,தோழர் வி எஸ் அச்சுதானந்தன் தலைமையில் நடைபெற்ற இடது முன்னணி அரசில் கல்வி அமைச்சராக தோழர் எம் ஏ பேபி ,கேரளாவில் 7 ஆம் வகுப்பு மற்றும் எம் ஏ பாடவகுப்பிலும் பாடத்திட்டத்தில் இணைத்து தங்களின் வரலாற்றுக் கடமையை ஆற்றியுள்ளார்கள்.  இது நிறைவேற நல்லெண்ணங் கொண்ட அனைவரின் ஆதரவோடு அய்யாவின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டத்தில் இணைந்தால்  தமிழகத்தின் தென்முனையில் குறைந்திருக்கும் ஜாதிவெறி, வடமாவட்டங்களில் வரலாற்று ஒளி வீசி சாதிவெறிக்கு சமாதி கட்டமுடியும். இந்தியாவில் சமூக சீர்திருத்த வாதிகளுக்கெல்லாம் முன்னோடி இணையத்தளத்தில் கேரளாவைச் சார்ந்த திரு.அஹிமோகனன் எழுதியது மிகச் சரியானது. முற்படுத்தப் பட்ட சாதியோரில் மனிதநேயங்க கொண்டோர் மற்றும் அனைத்துச் சாதிகளிலும் மனித
நேயங்கொண்ட பலர் அய்யாவை அடிக்கடி வந்து ஆசி பெற்று உரையாடி பூரித்த
ஐக்கிய முன்னணி 1840 கால கட்டத்தில் இருந்த வரலாறும் பொதிந்திருக்கிறது.
சுவாமித்தோப்புக்கு அம்மையார் ஜெயலலிதாவும் ,திரு அத்வானி அவர்களும் வருகை தந்த பின்புதான் இவர்களுக்கு யோசனை வந்ததாகக் கூறுவது சரியல்ல.
அம்மையார் அவர்கள் வருவதற்கு முன்பே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நாகர்கோவிலில் கேரளாவில் பாடத்திட்டத்தில் சேர்த்ததுபோல தமிழகத்திலும்
சேர்க்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஜெபமாலை கல்யாண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தியது.அதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில தலைவர்களில் ஒருவரும் நாவலாசிரியருமான தோழர் பொன்னீலன், தற்போதைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.இதுவரை வேறு எந்த அமைப்பினரும் இவர்பற்றி சிந்திக்காதபோது
இடதுசாரிகளும் சில பண்பாட்டு அமைப்புகளும் ,நல்ல சமூக சிந்தனைகொண்ட
அறிவுஜீவிகளும் முன்னெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்த சிந்தனையாளர்களெல்லாம்  தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்ற அகிலத் திரட்டின் அடிநாத வரிகள் மட்டுமல்ல, தத்துவமும் நடைமுறையும் ஒருங்கே அமையப் பெற்ற இந்தியாவுக்கே வெளிச்சம் காட்டுபவர் அய்யா என்பதாலும், அய்யாவின் இறுதி அறிவுரையான ஒன்னு சொன்னதை ஒன்னு கேட்டு ஒருவருக்கொருவர் நிரப்பாயிருந்திடுங்கோ என்ற சமதர்மக் கனவும்,
பெண்பாவம் பாராதே என்றும் ஆணும் பெண்ணுங்கூடி ஆசாரஞ்செய்திடுங்கோ என்ற சமநோக்கு சிந்தனையும்,பெட்டைக் கோழி தட்டிக்கூவும் என்ற உயரிய கனவும் , கொத்தைக் குறையாதே குறைமரக்கால் வையாதே என்ற கூலிச்சுரண்டலுக்கு எதிரான கருத்தும், பாரதிக்கு மூன்பே
சமூக மோசமான நிலையை பார்த்தே தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற ஆவேசத்திற்கு முன்பே அய்யாவின் சாட்டு
நீட்டோலையில் ஊமையா இருப்பவன் வாயைத் திறந்தாலே உலகமே அழியுமே சிவனே அய்யா தன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆவேசப்ட்டதன் அடையாளமே இது. இன்னும் அய்யாவின் அகிலத்திரட்டிலும், அருள்நூலிலும், தோண்டத் தோண்ட  சமூக அறிவுப் புதையல் வந்து கொண்டே இருக்குமென்று தெளிவாக சிந்தனையாளர்கள் தெரிந்திருக்கிறார்கள். திரு லட்சுமி மணிவண்ணன் கூட தன்
பெயர் பிரபலமாகவேண்டும் என்பதற்காகவோ என்னவோ தெரியாது அவர் மிக
அருமையான அய்யாவின் கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு முத்திரிப்பதம்
என்ற இசைக் குறுந்தகடு வெளியிட்டுள்ளார். அவர் மட்டும் பாடல்கள் முலம் பிரச்சாரம் செய்யலாம்  ஆனால் காலங்காலமாக பல்வேறு சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளை சிந்தித்தும் நேரடி இயக்கமும் நடத்திவரும் அமைப்புகள்
உயரிய கோரிக்கையை தமிழக அரசிடம் வைக்கக் கூடாதா? இதை  எதிர்ப்பதில்
இவருக்கு என்ன லாபம்? அய்யாவின் மகோன்னதமான சமூக இயக்கங்கள் நடந்துள்ளதென்று தெற்கிலிருந்து கருத்து பரவட்டுமே. நீண்ட காலமாக பரவி வரும் கருத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரும்போதுதான் கனியும். கேரளாவில் கனிந்திருக்கிறது.தமிழகத்திலும் கனியும் .இதை வாழ்த்தி வரவேற்பதே மனித மாண்பு. இகழ்வதும் கண்ணில் பல நிறக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதற்கு
இது நேரமல்ல என்பதை நண்பர் லட்சுமி மணிவண்ணன் அவர்களை நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                   
                                                                                                இப்படிக்கு,
                                                                                    க. கணேசன், கொட்டாரம்






Monday, August 1, 2011

' செருப்பாபிஷேகம்' சிறுகதை

                                    
                                                                               
        சிலு சிலுன்னு அடிச்சுகிட்டு இருந்த சித்திரமாச ராத்திரி ஒன்பது மணி சுகமான காத்துல பஸஸூ கன்னியாகுமரி நோக்கி பறந்துகிட்டு வந்துச்சு.வி.கே.புரத்துல சங்கத் தலைவரோட மகளோட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில கலந்துகிட்டு திருநெல்வேலியில வந்து எறங்கினவுடன இந்தப் பஸஸூ கெடச்சது.
        எப்பவும் போராட்டத்தில பாத்த முகங்களை அங்கேயும் பாத்ததுனால உரிமைக்கான ஆர்ப்பாட்டத்துக்கு போயிவந்த நெனப்புலயே மிதந்துகிட்டு,உட்கார சீட்டு இல்லாம நின்னுகிட்டே, சீட்டுல உட்கார்ந்திருந்த மூனு எளவட்ட போலீஸ்காரங்க பேசியதைக் கவனிச்சுகிட்டே வந்தேன்.
 பஸஸில டி வி இல்லாத துனால அவுங்கவுங்க பாடுபேசிகிட்டே வந்தாங்க. பஸஸூ மூன்றடைப்பு பக்கத்தில வரும்போது டிரைவருக்கு ரெண்டு சீட்டுக்கு பொறத்தால நடந்த சம்பவம் பஸஸூல இருந்தவங்க அத்தன பேரையும் சுண்டி இழுத்துச்சு
        .ஆம்பள பொம்பள அத்தன பேரும்ம்..ம்..அடி..அடி..அப்படிப் போடு ன்னு ஆனந்தமா தலையாட்ட, போலீஸ்காரங்களும் சபாஷ்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணுமுன்னு சம்மதிச்சாங்க.
இருபத்திமூனு வயசிருக்கும் சன்னலோரத்துல உட்காந்துகிட்டு வந்த
பொண்ணுகிட்டே பின்னாடி சீட்டுல இருந்த சுமார் முப்பது வயசிருக்கும் பையன், அவன் கையி சும்மா இருக்காம சைடோட இடவெளியில நொழச்சு சேட்டைய காட்டிகிட்டே வந்திருக்கான்.
         ரொம்ப நேரம் அந்தப் பொண்ணும் தள்ளி தள்ளி முன்னே போயிருக்கா.பையன் சேட்டைய விடுற மாதிரி தெரியல.அந்தப் பொண்ணோட காலுல இருந்த செருப்பை கையில எடுத்து சீட்டுமேல ஏறி பின்புறம் திரும்பி பையனோட முகத்துல தலையில செருப்பாபிஷேகம் நடத்திருச்சு.அவன் கைய வச்சு மறச்சுப்பாத்தான் விளாசல் நிக்கல.ஏலே நீ அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கியாலே, ஒன் தங்கச்சிகிட்டே போயி நோண்டுல நாயே ன்னு புதியவேத த்தை ஓதிகிட்டு அந்தப் பொண்ணு மொகம் பத்ரகாளியா
மாறிப்போச்சு.
          இந்தக் காட்சியப் பாத்துத்தான் பஸஸூல சனங்க சந்தோசத்துல சபாஸ் போட்டாங்க.அந்த நேரத்துல சம்பவத்தப் பாத்த பொம்பளைங்க மொகத்துல பரவசத்தப் பாக்கணுமே! இதுக்குமுன்னால பல நேரங்களுல இப்படிச்
செஞ்சிருப்பான் பொண்ணுங்கெல்லாம் வெட்கப்பட்டும்,பயந்துகிட்டும் இருந்திருக்குங்க.
இப்படி நடக்குமுன்னு அவன் நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டான்.அடிவாங்குனவன் கூனிக் குறுகி வெட்கத்துல படபடத்துப் போயி எதுத்துப் பேச வாய் வரல.
       காலங்கெட்டுப்போச்சுப்பா இப்படியே கொஞ்ச நாயிங்க எவடா கெடைப்பான்னு நாக்கை தொங்கப்போட்டு அலையுதுங்க ன்னு
வயசான ஒருத்தரு வருத்தப்பட்டாரு. அட நீங்க ஒன்னு, போனவருசம் ஒரு அம்பத்தாறு வயசு இருக்கும் வாத்தியாராம்  நல்ல நெரிசலா இருந்த பஸஸூல நின்னுகிட்டே வந்தவரு பக்கத்தில நின்ன ஒரு பொம்பளையோட இப்படித்தான் சேட்டையக் காட்டியிருக்காரு.
 அந்தப் பொம்பளைஎச்சக்கள நாயே பாக்க நீ படிச்சவனைப்போல இருக்கே ஒமக்கு இந்த வயசில கேக்குதாக்கும் நாயிக்குப்பொறந்தவனே ன்னு செருப்பைத் தூக்கிட்டா.இவரோட வகுப்பில
        மாணவிக கிட்டே பண்ணுற சேட்டைய தெரிஞ்ச பஸஸூல இருந்த மாணவன்,இதுதான் சான்ஸின்னு அட என்னம்மா வாத்தியாரை கன்னா பின்னான்னு பேசுறீங்கன்னு சத்தம் வேற கொடுத்துப்புட்டான்.இஞ்சி தின்ன குரங்குபோல வாத்தியாரு மொகம். அந்தப் பொம்பளை அடச் சீ நீயெல்லாம் ஒரு வாத்தியாரு
ஒங்கள நம்பியும் பிள்ளைங்கன்னு அத்தனபேரு முன்னால மானத்த வாங்கிப்புட்டா.அப்புறம் என்ன ஆசாமி எந்த எடத்துல எறங்குனாறுன்னு தெரியல. பள்ளிக்கூடத்துக்கு ஒரு மணிநேரம் லேட்டு நடந்தே போயிருக்காரு.
       வாத்தியார்களே இப்படீன்னா இதெல்லாம் நடக்ககத்தான் செய்யும்முன்னு இன்னொரு பெரியவரு மன பாரத்தை எறக்கிவச்சாரு.இந்த மாதிரி எளவெடுப்பானுகனாலதான் நல்ல வாத்தியாருங்களுக்கு மதிப்பே இல்லாம போகுதுன்னு பக்கத்துல இருந்தவரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினாரு
        .பஸஸூ நாங்குநேரி வர்றதுக்கு முன்னால அடிவாங்குன சில்மிச பையன் இறங்கலாமுன்னு நெனச்சு எந்திரிச்சான்.மூனு போலீஸ்காரங்கள்ல ஒருத்தர் எழும்பி முன்னே வந்து அவனைப்பாத்துஏலே என்னா? கறித் திமிறா?ன்னு அதட்டல் போட,அடிச்ச பொண்ணும் போலீஸைப் பாக்க ஸ்டாப்புல எறங்குனவுடன கம்பிளைண்ட் கொடுப்பியாம்மா?ன்னு அவரு கேட்க, அந்தப் பொண்ணும் கொடுக்கிறேன் சார்ன்னு தைரியமா சொல்லுச்சு
        .எப்படியாவது தப்பிச்சு எறங்கிப்போக நெனச்சவனுக்கு எறங்க முடியல.உள்ளே போலேன்னு சட்டையப்பிடிச்சு இழுத்து கீழே உட்கார வச்சாரு.அவன்கிட்டே டாஸ்மாக் வாடை வேற ஏலே தண்ணிபோட்டா எதையும் செய்வியாலேன்னு பல்லைக் கடிச்சாரு இல்ல சார் நான் ஒன்னும் செய்யல சார்ன்னு படபடப்போட சொன்னான் பையன்.இல்ல சார் நொல்ல சார் ஒண்ணுஞ் செய்யாமலா செருப்படியெல்லாம் வாங்கிகிட்டு சும்மா இருந்தே? ஒனக்கு எந்த ஊர்ல ன்னு கேட்க பறவக்கோயில் ன்னு ஏதோ ஊரைச் சொன்னான்.
        உள்ளே உட்காந்திருந்த இன்னொரு போலீஸ் அவரு பங்குக்கு ஒரு அடி கொடுத்து இழுத்து அவருக்குப் பக்கத்துல ஒட்கார வச்சு தொடையில ஒரு கிள்ளு கிள்ளி என்னலே செஞ்சேன்னு இறுகினாரு.
         அவனும் உள்ளதைச் சொல்லி  தண்ணி போட்டதால தெரியாமத் தப்பு செஞ்சுட்டேன் இந்த ஒருமுறை காப்பாத்துங்க சாருன்னு கையத் தொட்டு கும்பிட்டபோது அவன் கண்ணீரு அவரோட கையில சொட்டுன்னு விழுந்துச்சு. தண்ணியடிச்சா   நரகல எடுத்து யாரும் திங்கக் கொடுத்தா நீ திம்பியாலே? இதெல்லாம் செய்யுறதுக்கு முன்னால புத்து வேணுமிலேன்னு ஒத்த இடி கொடுத்தாரு. திடீருன்னு பஸஸில டயரு லொட லொட ன்னு சத்தம் போட ஆரம்பிச்ச கொஞ்ச தூரத்துல பஸஸில உட்காந்திருக்கிறவங்களுக்கு பயம் வர்ற மாதிரி டப.. டப.. ன்னு சத்தம் பெரிசாக வர,டிரைவரு ஓரமா எந்த வீடும் கடையும் இல்லாத காட்டுப் பக்கம் நிறுத்திட்டாரு.போச்சா இதுவரைக்கும் பஸஸூ நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு இப்ப அது வேலையக் காட்டிருச்சின்னு ஒருத்தர் பேச மேல மினுக்கடி உள்ளே புளுக்கடின்னு சும்மமாவா பெரியவக சொன்னாங்க.
      .புது டயரு வாங்கினதா கணக்கைக் காட்டிப்புட்டு கண்டமான பஸஸுலயிருந்து டயரைப் புடுங்கி மாட்டிகிட்டு கமிஷன் அதிகாரிகளுக்கும் மந்திரிகளுக்கும் கைமாறுச்சின்னா பஸஸூ மயிரா ஒழுங்கா ஓடும்முன்னு இன்னொரு பெரிசு நாட்டு நடப்பைச் சொன்னாரு.பஸஸூ டிரைவருக்கு ஒண்ணும் ஓடல.
         சில்மிச பையன பிடிச்சுவச்ச போலீஸூ தன்னோட செல்போனுல ஒரு கி.மீ தூரத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேசன்ல இருக்கிற நண்பருகிட்டே நல்ல கத்திய எடுத்துவரச் சொல்ல அவரும் உடனே பைக்கில கத்தியக் கொண்டுவந்து டயரை அறுத்த துமே பழைய வேகத்துல பணகுடிக்குப் பக்கத்துல வரும்போது சில்மிசப் பையன்என்னோட இடம் வந்திருச்சு எறங்கனும் சார் இந்த ஒருமுற காப்பாத்துங்க சார்
      .இனிமே தப்பு செய்யமாட்டேன் சார்ன்னு கெஞ்சி அழுதான்.போலீஸூம் அந்த அடிச்ச பொண்ணை கூப்பிட்டு இவன விட்டுறலாமா ? இல்ல,நீ எறங்குற எடத்துக்குப் பக்கத்துல ஸ்டேசனுக்கு கூட்டிப் போகலாமா? என்ன செய்யலாம் சொல்லும்மான்னு கேட்டாரு.
     ‘எல்லாரும் பாக்கும்படியா அவன்பட்ட அவமானத்துக்கு இந்த நாயி திருந்துமுன்னு நெனக்கேன் , விட்டுத் தொலைங்க சார்ன்னு அந்தப் பொண்ணு தன்னொட பெருந்தன்மையக் காட்டிடுச்சு. பணகுடி ஸ்டாப்பு நின்னதும் அடிபட்ட நாயி வீலுன்னு கத்திகிட்டு போறமாதிரி தலையத் தொங்கப் போட்டுகிட்டே நடயக்கட்டினான்.
        ஆரல்வாய்மொழி ஸ்டாப்பு வந்ததும் அந்தப் பெண்ணும் பஸஸைவிட்டு இறங்கி கம்பீரமா போயிகிட்டு இருந்தப்போஇந்தப் பொண்ணுக்கு இருக்கிற தைரியம் எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருந்திட்டா காலிகெல்லாம் வாலைச் சுருக்கிக்கிடுவாங்கன்னு பஸஸுக்குள்ளயிருந்து பேச்சுவர,பஸஸூல இருந்தவங்க
வச்சகண்ணை வாங்காம பஸஸூ கிளம்பும் வரை அந்தப் பொண்ணை பாத்திகிட்டே யிருந்தாங்க.
                                           __________________
பேரா.க.கணேசன்.கொட்டாரம்.
தீக்கதிர் வண்ணக்கதிர்

Wednesday, July 13, 2011

தென்றலின் தேசம்! ஈ.விஜய்,கொட்டாரம்

இந்தியா தூங்கினால்
தூங்கட்டும்...யுத்தங்களே!
இங்கே விழிப்பதற்கு வேண்டாம்
வெடிகுண்டுச் சத்தங்களே!

திருவுடைய பாரத த்தைத்
துண்டுத் துண்டாய்த் துணிப்பதென்றால்
அதுவன்றோ அதுவன்றோ
அபத்தம்!

துண்டு துண்டாய்
பெட்டிகளைத் துணித்தால்
அது தொடர்வண்டி அல்ல
தொலைந்த வண்டி என்றே அர்த்தம்!

தெலுங்கு தென்றல்
தேவையென்ன?
தேசம் முழுக்க
ஒரே தென்றல்!
சீர்கொண்ட தமிழ்நாடு

நெஞ்சறியப் புரியவில்லை துரோகம்..!
சிறுபிழை பொறுத்துவந்து
சிரித்தாலென்ன முல்லைந தி!

கன்னட நாட்டினிலே
கால்விலங்கு பூட்டாதே
தென்னகன் குலமகளே
காவிரியே வந்தாடு!

அழகின் உச்சகட்டமாய்
உயர்ந்து நிற்க
குளிர்கால கவிதைபாடி வரவேண்டும்
காஷ்மீரக் குன்றுகள்!
ஆப்பிள் சிவப்பே
அதிகமங்கே!
இரத்தச் சிவப்பு
இன்னும் எதற்கு!

காயம்பட்டுத் தவிக்கும் அந்த
காஷ்மீரத்துப் பள்ளத்தாக்கை
இனி
இரத்தத்தால் அல்ல!
குயில்களின் இன்னிசையால்
மட்டுமே நரப்பவைப்போம்!
துகிலுறியும் துச்சாதனக்
கூட்டத்துக்கு எதிராய் மகாபாரதம்
உடனே தொடுப்போம்!

ரத்தத்தில் பால்பொழியும்
நம்பிக்கைகளோடு பால்பொழியும்
நம்பிக்கைகளோடு நாளைய பாரதம்
நமக்கெனப் படைப்போம்!,



















!

Friday, July 8, 2011

தமிழ் சிற்றிதழ்கள்-ஒரு பார்வை.

1.புதிய ஆசிரியன்.
1985ல் பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அவல நிலைகளை போக்கிட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஜாக்டீ பேரமைப்பாக உருவாக்க கருத்துப் போர்வாளாக மலர்ந்ததுதான் 'புதிய ஆசிரியன்' மாத இதழ்.தொடர்ந்து தமிழகமெங்கும் கல்விச் சூழல் குறித்தும் அரசியல் பொருளாதாரம் அறிவியல் சார்ந்த சிந்தனைப் பொறிகள் இலக்கிய வாகனத்தைப் பயன்படுத்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.அதில் த மு எ க ச எழுத்தாளர்கள் பலர் படைப்பு பங்காற்றி வருகிறார்கள்.பட்டுக்கோட்டையாரின் பாடல் போல பாமரனுக்கும் எளிதில் புரியும்படியான கதைகளும் கட்டுரைகளும் உள்ளடக்கி வரும் முற்போக்கு இதழாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வண்ணக்கதிர்.
 தீக்கதிரின் இலவச இணைப்பான வாராந்திர இதழ் வண்ணக்கதிர் சிறுகதைகளும் கட்டுரைகளும், ஹைக்கூகளும் தாங்கி வருகிறது.மூடநம்பிக்கை எதிர்ப்பு சகல துறைகளிலும் கால்பதிக்கும் கள ஆய்வு கூறுகள், கூடவே குழந்தைகள் பூங்கா என்ற பகுதியில் குட்டிக்கதைகளும்,சிந்தனைக்குறிய சிறு பாடல்களும் இதழை அலங்கரிக்கின்றன. 15 பக்கங்கள் கொண்ட இவ்வண்ணக்கதிர் குறுகத் தரித்த வீரியமுள்ள குறளாக பவணிவருகிறது
2.சிறுவர்மணி
 குழந்தை இலக்கிய வரட்சியை தினமணி நாளேடு தனது வாராந்திர இலவச இணைப்பாக வெளியிடும் 'சிறுவர் மணி' போக்குகிறது. அழகிய பாடல்களும் அறிவியல் அறிஞர்களைப் படக்காட்சிகளாக விளக்கி குழந்தைகளோடு நெருங்கி நிற்கிறது. டி வி யின் ஆதிக்கத்தில் குடும்பங்களில் இப்புத்தகத்தை புரட்டிப் பார்ப்பவர் அருகிப் போயிருக்கிறார்கள்.
3.தினமணிக்கதிர்.
தினமணியின் இலவச வாராந்திர இதழான 'தினமணிக்கதிர்'இதழ் பெரும்பாலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் தாங்கி வருகிறது. அமெரிக்காவிற்கு அடிபணிய மறுக்கும் இந்திய விஞ்ஞானியை கடைசியில் தன் வலையில் சிக்கவைக்கும் ஏகாதிபத்திய நரித் தந்திரத்தை சுட்டுவதாக அமைந்தது 'சக்கரவியூகம்' கதை.மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் சேரத்துடிக்கும் ஏழைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தும். 'கட்டணம்' கதை த மு எ க ச குமரி மாவட்டக் குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் எழுதியது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கயை மூலதனமாக் கொண்டு பிழைப்பு நடத்தும் குருக்கள்,குடிகாரனைத் திருத்துவதற்காக அதைப் பயன்படுத்தும் மனோ ரீதியே 'மந்திரம் கால் மதி முக்கால்' என்ற பழமொழியை உண்மையாக்கிய 'விதைபுதிது' சிறுகதைகள் பேசப்படக் கூடியவை.நடிகர் ராஜேஸ் 'முரண்சுவை' சிறுகட்டுரைத் தொடர் ரசிக்க சிந்திக்க வைத்தவைகளாக அமைந்துள்ளன.
4..'குமுதம் தீராந்தி'
குமுதம் ஏடு வர்த்தகரீதியாக பல பெயர்களின் துணை ஏடுகள் வெளிட்டாலும் அழுத்தமான இலக்கிய சர்ச்சை முகத்தோடு 'குமுதம் தீரா ந்தி' யை ஓடச்செய்கிறது. இவ்விதழில் வெளிவரும் கவிதை ஜாம்பவான்களின் கவிதைகள் குறைந்தபட்சம் ஐந்துமுறை படித்தால்தான் உள் அர்த்ததை புரியமுடியும். இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறிமுகமாகியுள்ள 'கலை கலைக்காகவே' கலை மக்களுக்காகவே ' சித்தாந்தங்கள் அடங்கிய படைப்பாளர்களின் படைப்புகளையும் நேர்காணலையும் வெளிப்படுத்தி வருகிறது.விவாதங்கள் கூர்மையாக வைக்கப்படுகிறது.
5.திசைஎட்டும்
  இலக்கியப் படைப்புகளை பல மொழி வாகனங்களில் ஏற்றி மிகப் பரபலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் இடம் பெற்றிருக்கூடிய எழுத்தாளர்களின் சிந்தனைகளை பந்திவைக்கிற தன்மையைக் கொண்டு மொழியாக்கக் காலாண்டிதழாக  மொழிபெயர்ப்பு இலக்கியவிமர்சகர் குறிஞ்சிவேலனின் வெளியீட்டில் 'திசை எட்டும்' இதழ் படிப்பாளிகளை உயர்த்தும் ஏடாக வந்து கொண்டிருக்கிறது.ஆங்கிலம், வங்காளி,மலையாளம்,கன்னடம் தெலுங்கு இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்களை ஆசிரியர் குழுவில் சேர்த்து'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செலவங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் அறைகூவலை நனவாக்கிவருகிறது.
6.புது எழுத்து
நவீட படைப்பிலக்கியத்திற்கான சிறு பத்திரிக்கை என்ற அடையாளத்தோடு காலாண்டிதழாக 'புது எழுத்து' மனோன்மணியை ஆசிரியராக கொண்டு,இரா.சுகவனம் பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவருகிறது இப்பத்திரிக்கை.2011ல் வெளிவந்த 19வது இதழில் லாவண்யாவின் 'வணிக கலாச்சாரமும் மக்கள் நலமும்' கட்டுரை இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவலை விவரிக்கிறது. கார்பரேட் கிரிமினல்களின் வாழ்க்கைத் த்ததுவமே பெரும்பான்மை மக்களை சுரண்டுவதுதான். அதற்கு தகுந்தாற்போல இந்தியர்களின் வாழ்முறையை, சட்டங்களை அணுகுமுறைகளை,பொருளாதாரத்தை பலங்களை, கலாச்சாரங்களை ஊடகங்கள்,சினிமா,நீதித்துறை அரசு எந்திரம் மூலம் மாற்றுவற்காகச் செய்யும் முயற்சிகள் உள்ளடக்கிய கோஷம்தான் தாராளமயமாதலும்,உலகமயமாதலும் பன்னாட்டு வணிக படையெடுப்பும்' என்று சரியாக சித்தரிக்கிறது. சல்மான் ருஷ்டியின் 'மகத்தான திரும்புதல் குறித்து ஓர் கனவு என்ற நாட்குறிப்பு கட்டுரை, 'ஒரு நூற்றாண்டு காலத் தனிமை' (காப்ரியேல் கார்சியா மார்க் வெஸின் கதை),'நாடுவிட்டு நாடு ' தன் வரலாற்று புனைகதை, 'பாபாசாகேப்  படம் எடுத்தேன்'  ஜப்பார் பட்டேலின் பேட்டி ஆகியவை  குறிப்பிடத் தக்கவை
7.செம்மலர்..
   இடதுசாரி அரசியல் பின்புலத்தோடு மக்களின் வாழ்க்கையோடு நெருங்கி, சோசலிச எதார்த்தவாத இலக்கிய கொள்கையை அடித்தளமாக வைத்துக்கொண்டு,கலை இலக்கியம்,அரசியல்,விஞ்ஞானம் ஆகிய தளங்களில் கால்பரப்பிக்கொண்டு படைப்புகள் வாசகர்களை எவ்வித குழப்பத்திலும் ,மயக்கத்திலும் ஆழ்த்தாமல் சிந்தனைப் படைப்புகளில் பவணிவருகிறது செம்மலர் மாத இதழ். இளம் படைப்பாளர் முதல் முதுபெரும் படைப்பாளர்களின மேடையாகத் திகழ்கிறது.
8.தாமரை.
   மக்கள் கவிஞர் ஜீவானந்தம் ஆரம்பித்து இன்னும் இடதுசாரி அரசியல் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிற 'தாமரை' மாத இதழ் புதுப் படைப்புகளின் ஆய்வு, நூல் அறிமுகம் இலக்கியக் கட்டுரைகள்
9.






'

Monday, May 30, 2011

'விடை தேடிப் புறப்படுவோம்' கவிதைத் தொகுப்பின் விமர்சனம்.

         கவிதையானாலும், வேறு எந்த கலை இலக்கியப் படைப்பானாலும்சரி, அறிவையும்,வயிற்றையும், உடலையும் ஒதுக்கிவிட்டு தோன்றுவதில்லை. கவிதை-புலனுணர்வுகளின் உயர்ந்த, திறம்வாய்ந்த வெளிப்பாடுதான.கலை இலக்கியம் சாதாரண மக்களின் அருகே அமர்ந்து வாழக்கையின் சுக துக்கங்களை விசாரிக்க வேண்டும்.இந்த அடிப்படையில் கவிதையும் மனித வாழ்க்கையின் சகல நடவடிக்கைகளையும் கூர்மையாக உற்று நோக்கி, அவற்றை லாவகமாக வெளிப்படுத்தி வாசகனின் சிந்தனைத் தளத்தில் அதிர்வை உருவாக்க வேண்டும்.
         எல்லாவகையான இலக்கியத்தைப் போல கவிதை இலக்கியமும் அந்தந்த காலத்தின் மனித சமூகத்தின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கக் கூடியதுதான்.எனவேதான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றார்கள்.கவிதையும் அப்படித்தான்.அந்தந்த காலகட்டத்தில் இருக்கும் வாழ்நிலையை பிரதிபலிப்பது மட்டுமல்ல,மாறுபாடோ,குறைகளோ இருக்குமாயின் அவற்றை திருத்தக் கூடியி ஆற்றல் படைத்ததுதான் கவிதைக்கண்ணாடியும்.
        உலகம் முழுக்க படைப்புணர்வு ஒன்றுதான் வயிற்றுப்பசி,உடற்பசி உலகமெங்கும் ஒன்றுதான்.கி மு 427-348 ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்கத் த த்துவ ஞானி பிளேட்டோ கவிதையைப்பற்றி இழித்துத் தூற்றினார்.ஆனால் அவரின் மாணவர் அரஸ்டாட்டில் (கி மு 384-322) காலத்தில் வாழ்ந்தவர் கவிதை பற்றி மிகவும் போற்றுகிறார். இப்படி விமர்சனத்தின் அடிப்படையில் வளர்ந்ததுதான் கவிதை உலகம்.
         கி மு சில நூறு நூற்றாண்டுகளின் தொடங்கிவிட்ட கவிதை வரலாறு சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ்க்கவிதை கனிந்த நிலையை எட்டிவிட்டது.  கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகம் அரசர்களைச் சுற்றியும்,அன்பளிப்புத் தந்தவரைச் சுற்றியும் அமைந்து கிடந்தது.ஆனால் நாட்டுப்புற இலக்கியம் தொடங்கி சித்தர்கள் முதல்,பாரதி முதல் ஆரம்பித்த கவிதை உலகம்,இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் பரவலாக்கப்பட்டு,ஜனநாயகப்படுத்தப் பட்டு உலகம் முழுக்க விரிந்து பரந்து பறவைகளாக உலாவருகிறது.
           ஒருவரின் அனுபவத்தை,கண்ட காட்சிகளின் தாக்கத்தை,சமூக நிகழ்வுகளை மக்களிடம், வாசகனிடம் எடுத்துச் செல்லும் வாகனமாகவே கலை இலக்கியத்தை பார்க்கவேண்டும்.கவிதையையும் அப்படியே கருதவேண்டும்.
          ஏடறியா எழுத்தறியா காலத்தில் மக்கள் தங்களது சுக துக்கங்களை பாடல் வாயிலாக வெளிப்படுத்தியபோது,கவித்துவமாக சிந்தித்து விடைதேடும்படியாக அமைந்தது சிறப்பு.கேட்போரை கிறங்கச் செய்யும்,.ஆவலைத் தூண்டிவிடும.
                          ' சின்னச் சின்ன ஆளுங்கிட்ட
                            சினேகிதங்கள் செய்யப் போயி
                            தங்கமான தாய்தந்தையர் கட்டா கட்டழகா-இப்போ
                           தலைகுனய லாச்சுதய்யா குங்கும பொட்டழகா'  என்ற கிராமியப் பாடலில் எதுகை உண்டு,இசையுண்டு,கூடவே மிக ஆழமான சாதீய சமூகத்தின் இறுக்கத்தை சிந்திக்க வழிகாட்டுவதாகவும் அமைகிறது. 'சின்ன சின்ன' என்பது சிறிய வயது இல்லை.சாதியில் தாழ்ந்தவன் என்பதே பொருள். இதே பாடலில்
                             'அச்சுக்கருப்பட்டியாம்
                              அரும்பரும்பா வெத்தலையாம்
                             சில்லுக் கருப்பட்டியாம் கட்டா கட்டழகா-நான்
                            திங்காம பேருமானேன் குங்கும பொட்டழகா.'  உன்னைக் காதலிப்பதால் ஊர் சனம் மோசமாக ஆபாசமாக பேசித் திரிகிறது என்பதை இவ்வளவு பூடகமாகச் சொல்கிறாள் காதலி.படைப்பிலக்கியத்துக்கும் கவிதைக்கும் வேர் இதுதான்.
             கவிதை உலகில் மிகப்பெரிய விவாதமான புதுக்கவிதை சிறந்ததா,மரபுக்கவிதை சிறந்ததா என்பது தொடர்ந்து வந்தாலும்,முன்னைவிட அது மிக சன்னமாகவே ஒலிக்கிறது.                
      அடுத்து சித்தர்கள் காலத்தில்  சமூகத்தில் நிலவிய கசடுகள் வைதீக மூடத்தனம் ஆகிவற்றை மிக கடுமையாக புரியும்படியாக வார்த்தைகளை   சந்தத்தோடுஅடுக்கிறார்கள்.இதுவும் காலத்தால் முந்தியவையே.   
                   'சாத்திரம் என்பது சண்டைச் சரக்கு-அட
                   சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
                  தோத்திரக் குப்பைகள் மூடர்கள் கூச்சல்-எண்ணத்
                  தொலையாத தர்க்கங்கள் பொய்ஞானக் காய்ச்சல்'என்று உலோகாயுதச் சித்தர் பாடுவதில் எதுகை,மோனை கூடவே எளிமையோடு மிகப் பெரிய சமூக மூடநம்பிக்கையை சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல வார்த்தைகள் தெறிக்கின்றன.இது மரபுக்கவிதைதான்.ஆனால் புரிகிறது.
           மரபோ புதுமையோ, எதுவானாலும் மக்களிடம் கொண்டு செல்லும்போது அது எளிமையோடு சிந்திக்கத் தூண்டுவதாக அமையவேண்டும். 1977ல் கவிஞர் தணிகைச் செல்வன் 'நாங்கள் அரிசனங்கலாம்'என்ற தலைப்பில் சிறு கவிதைப் பிரசுரம் வெளியிட்டார்.அதில் 22 பாராக்களில் ஒரு பாரா இப்படி அமைந்தது.
                  'பெரியசாதி கும்பிடுற சிதம்பரசாமி-அதை
                  பறையசாதி பார்த்ததாலே வந்தது தீமை
                  எரியவச்சான் ந ந்தனாரின் உயிரையே கொன்னு-பிறகு
                  எழுதிவச்சான் சோதியிலே கலந்திட்டாருன்னு' சந்தம் கொடுக்கும் வித த்தில் மரபுக்கவிதையை தீண்டாமை வரலாற்றை உள்ளடக்கி எழுதினார்.இலக்கண மரபுகளை நிகண்டுகளைப் பார்த்து புரிந்துகொள்ளும் வித த்தில்தான் அன்றைய மரபுக்கவிதைகள் அமைந்திருந்ததால் பண்டிதர்கள் மட்டுமே எழுதினர்,மன்னர்களின் சபைகளில் மட்டுமே மகுடம் சூடின என்பது குறையே.அது பாரதி காலத்தில் உடைக்கப் பட்டு ஏகாதிபத்தியத்தை,சமூக நிலையை மரபிலும்,வசன கவிதையிலும் வழங்கி புதுமை படைத்தான்.வானம்பாடி கவிஞர்கள் படையெடுப்பிற்குப் பின் இலக்கண வரையறைகளை மீறி ரசிக்கும் விதமாக நம்பிக்கைதரும் நெம்புகோல் பறவைகளாக நாடெங்கும் பயணிக்கின்றன. மரபின் அருமையை விடமுடியாது.எனவே மரபின் தோளில் ஏறிநின்று புதுமையை தரிசிக்கவேண்டும் என்பதும் நிஜமாகி வருகிறது.
         முற்போக்கு முகாமின் மூத்த கவிஞர் கந்தர்வன் கவிதைகளின் புதுக்கவிதையாகவே வடிக்கும் போது உள்ளம் துள்ளும் உத்வேகமூட்டும்.
              'மண் பொய் சொல்வதில்லை மிதிக்கிறோம்
                மரம் பொய் சொல்வதில்லை வெட்டுகிறோம்
              மந்திரி பொய் சொல்கிறான் மாலை சூட்டுகிறோம்' என்றும்
               'பொதுக்கிளாஸில் டீ கேட்க
               தனிக்கிளாஸில் டீ கொடுக்க
               ஒரு கப் டீ யின் விலை
               ஒன்பது உயிர்கள்' என்று இன்றும் கிராமங்களில் தீண்டாமை தாண்டவமாடுகிறது என்பதை சுட்டும் விதமாக படைக்கிறார்'.கவிதை சமூகத்திலிருந்து படைக்கப் படுகிறது. சமூகத்திற்காகப் படைக்கப் படைக்கப்படுகிறது.அதனால் சமூகத்திற்கு அது பயன் அளிக்க வேண்டும்' அறிஞர்கள விடுக்கும் அறைகூவல்.இந்தப் பின்னணியில் முப்பது கவிதைகளை உள்ளடக்கி இளம் கவிஞர் துடிப்போடு வெளியிட்டுள்ள 'விடைதேடிப் புறப்படுவோம்' கவிதைப் புத்தக விமர்சன களத்தில் இறங்குவோம். கவிஞனை இன்னும் வளர்த்தெடுப்பதற்காக.
'கவிதை'தலைப்பில் நீண்ட கவிதை வடித்திருக்கிறார்.அதில் நாம் ஏற்கனவே நம் மனதில் நிற்கிற "pen is mightier than sword".என்ற ஆங்கில பழமொழியை இவர் கவிதையில சுட்டுகறார் 'வாள் முனையில் கூர்மை
பேனா முனையில் சீர்மை' என்று' கவிதை தானே விழிகள்' என்றும்,
பேனா மை கரைய கரைய
துன்பங்களும் கரைவதாய்
கவியெழுதும்போது
பொய்களுக்கு வேலையில்லை'என்றும் கவிஞன் கவி எழுதும் தன்மையை எழுதும்போது
'கவிதைகள்
தருணமேதும் பார்பதில்லை
மழை பொழியும்போது
நில்லென்று சொல்ல முடியாது' என்று அருவிபோல சிந்தனை வந்துகொண்டே இருக்கும் என்கிறார்.கவிதை உலகம் இன்று ஜனநாயகப் பட்டு வியாபித்து இருப்பதை கவிஞர்
                         'கண்டம்வட்டு கண்டம்தாவும்
                         கவிதைப் பறவைகள்!
                         பறவை சுதந்திரமானது
                        கவிதை நிரந்தரமானது' என கவிதைபற்றி நம்பிக்கை அலையைப் பாய்ச்சுகிறார் கவிஞர்.
உண்மையே என்றும் அழகுதான் என்பதை கவிஞர் _
                     'உணர்ச்சிகளை மறந்துவிட்டு
                    வெற்றுவாழ்க்கை வாழும்
                   மனங்களின் தருணங்களை
                   கவிதைகள் நேசிப்பதில்லை!
                        துளி மையும் தன் குருதியெனக்
                        கருதும்போது நம்பிக்கைகள்
                        கவிதைகளில்  நட்டுவைக்கப் படுகிறது' என்று உண்மை அனுபவத்தை உயர்த்திப் பிடிப்பதையே கவிதைகள் அரவணைக்கும் என்ற கவிதையை பதித்துவிட்டு,கவிதையை பல கோணங்களில் சித்தரிக்கிறார். நம்பிக்கை நெம்புகோலை இளைஞனுக்கு கொடுக்கும் விதமாக
                     'அலைபாயும் மணத்தையும்
                      நிலைமாறும் குணத்தையும்
                    வலைவீசும் கணத்தையும்
                    இனம் கண்டிடு!
                       பாதைகள் பலவிதம்
                    போதைகள் பலரகம்
                   பாதங்களஐ சரியாகப்பதி
                   வாதங்களை நெறிப்படுத்து
                  மேதைகளின் வழி ஏறு!'போன்ற வரிகள் அமைகின்றன. இன்னும் நம்பிக்கை அறைகூவல் விடுக்க 'போற்றலும் தூற்றலும்
                                     மனிதர்களின் சடங்கு
                                    ஆற்றலும் மாற்றலும்
                                    வெற்றிகளின் கிடங்கு!' என்ற த த்துவ விசாரணை செயவதாகப் பேசுகிறது.
மொதுவாக ஓரு கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையை கவிஞர் குறிப்பிடும்போது
              ' சமுதாயத்தின் நாடிபிடித்து
               விடைகள் நவிலும் வைத்தியன்' என்பதோடு சமூக பாசமில்லாத,மாற்றத்தை விரும்பாத கவிஞன் மீது வினா தொடுக்கிறார்.
               ' சொல்லொன்று செயலொன்று நல்குபவனல்ல கவிஞன்
                தாமும் வாழ்ந்து
                யாவும் வளர்ப்பவனே-கவிஞன்
                கலை வளர்க்கிறோமென்று
                கரை கற்பிப்போரா கவிஞர்கள்?' என்ற கேள்வியோடு இன்றைய ஊடகங்கள் பக்கமும் கவிஞரின் பார்வை விழுகிறது
            . 'பாடலெனும் பெயரிலே
              ஊடகங்கள் துணையோடு
              கேடுவிளைவித்தால்
              நாடு செழிக்குமா?'என்று கேட்கிறார்.வாணிபக்கவிஞர்கள் மீது கேள்வி தொடுக்கிறார்.தாய்மொழியாம் தமழ்மீதும் கவிஞர் அமீனின் பார்வை விழுகிறது.தமிழகத்தில் தாய்மொழிக்கல்வி பறிபோவதை கவலையோடு
              தமிழ்வழிக்கற்றல் போதியஅறிவு
              பெறலரிதென்றும் வாழ்வின் ஊதியச் செறிவு
              குறைந்திடுமென்றெண்ணி தாய்மொழியை
              மறந்திட்டோமே! ' என்றும் பதிவு செய்கிறார். நாடெங்கும் பரவி வரும் கல்யாண வியாபாரம் குறித்தும் கவிதை கோபாவேசத்தை
                வரதட்சணை பிச்சைகேட்கும்
                கூட்டங்கள் அநேகம்!
                உயிரணுக்களுக்கு விலைபேசும்
                ஈன ஜென்மங்கள்!'
                சில லகரங்களின் தொடங்கி
                கோடிகளின் சிகரம் தொடும்
                சமூகத்தில் படிந்த கரைகள்'  என்று வீசுகிறது.. இந்த நாட்டில் காலங்காலமாக ஆணிவேர் சல்லிவேர்களோடு படர்ந்திருக்கிற சாதி வெறியை கவிஞர் உற்றுநோக்க தவறவில்லை. 'கண்டங்களும் கடல்களும்
                          கடந்தாயிற்று,அண்டங்களுக்கும்
                          மடல்கள் வரைந்தாயிற்று-பிண்டங்களின்
                          மூடல்களிலும் சாதி!' என்று சாதிவெறியை சல்லடையாய் துளைக்கிறார்.
அழகு தேவதை என்னும் காதல் கவிதையில் கவிஞர் வைரமுத்துவின் 'கவிதைக்கு பொய்யழகு' என்பதை நிஜமாக்குகிறார்.'அன்ன நடைபோட்டு
                                                 அழகு தேவதை வருகிறாள்
                                                ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
                                                 அடங்கிப் போகும்!' என்றும்
                                   முகத்தின் வசீகரத்தில்
                                   முழுமதியும் நாணத்தில்
                                   மங்கிப்போகும்!' என்றும்
;'நீயும்'  எனும் தலைப்பில் 'மேக கூட்டத்தினிடையே
                                               வெட்கப்பட்டு பதுங்கும்
                                               வெண்மதி போன்றுதானடி-நீயும்
                                               வெட்கும் போது!' என்று பட்டுக்கோட்டையார் உட்பட ஏராளமான கவிஞர்களோடு நிலவுக்கு ஒப்பிடுவதில் இவரும் இணைகிறார்.
                                              கண்களால் எனைக்
                                              கைது செய்யும்போது
                                              மழைச் சாரல்கள்-நினைவில்' அழகு தரும் ரசனைகள் கொட்டுகின்றன.இப்படியெல்லாம் கவிஞர் மணவை அமீன் தனது முதல் கவிதைத் தொகுப்பில் மூலம் இலக்கிய பூங்காவில் தடம் பதிக்க முயற்சிக்கிறார். கவிதை உலகில் கவிதையின் உருவம் உள்ளடக்கம் விவகாரத்தின் விவாதம் இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. அந்த அடிப்படையில்,இளங்கவி அமீனின் உள்ளத்தில் சமூக நேசம் அதிகம் உள்ளதால் கவிதைகளின் உள்ளடக்கம்  த்ததுவத் தளத்திலும்,பொதுவான அறிவுத்தளத்திலும் மையங்கொள்கின்றன.எந்தவொரு இலக்கியப் படைப்பும் சுவைமிகுந்த சுண்டக்காய்ச்சிய திருவில்லிப்புத்தூர் பால்கோவா போல அமைவதே வாசகனை சுண்டியிழுக்கும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இன்னும் சுண்டக்காய்ச்சி சுவையான இனிப்பும் சேர்த்திருக்க வேண்டும். முதல் தொகுப்பானதால் ஏதோ சில சூழல்களால் சில இடங்களின் கவிதை தெளிவின்றி தடுமாறுகிறது. 'கடந்த காலம் நிழல்
                                                                                       நிகழ்காலம்  நிஜம்
                                                                                        எதிர்காலம் நிர்மூலம்
                                                                                        இங்கேதான் கேள்வி!' என்பதிலும்,
         நாத்திகமா? ஆத்திகமா?
         விஞ்ஞானமா? மெய்ஞானமா?
         விடையில்லாத வினாவுமுண்டு
         வினாவில்லா விடையுமுண்டு'  என்பதிலும்,
தமிழ்மொழி பற்றி கவிதையில் குறிப்பிடும் போது 'குமரித் தமிழ், மதுரைத தமிழ்
                                                                                        சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ்
                                                                                         எனப் பிரிந்து நிற்கிறதே!' என்பதிலும்
காலம் பற்றியும், நாத்திகம்,ஆத்திகம் பற்றியும், வட்டார வழக்குபற்றியும் சரியான புரிதல் இல்லாமல் கவிதைகள் தடுமாறுகின்றன. வார்த்தைகளை வலிந்து வரவழைப்பதால் அதன் பொருள் முன்வரிக்கும் அடுத்த வரிக்கும் மாறுபட்டதாக வந்துவிடுகிறது.இக்குறைபாடு எழுத எழுத நீங்கிவிடும்.'நானொன்றும் பைத்தியமல்ல' தலைப்பிட்ட கவிதையில் இக்குறைபாட்டைக் காணலாம். கவிதைகள் சிறு பருவத்திலிரிந்தே எழுதியவைகள் தொகுக்கப் பட்டிருப்பதால் கவிநயம் சற்று குறைவாக அமைந்துள்ளன. பின் நவீனத்துவ வட்டத்துக்குள் சிக்காமல் தனது சிந்தனையை தன் சமூக ஆர்வப்போக்கில் வடித்துள்ளார்.இந்த இளம் படைப்பாளி பல சமூக நோக்கு கவிஞர்களின் கவிதைகளையும் வாசிப்புக்குள்ளாக்கும்போது வடிவ நேர்த்தி வந்து வந்து விழும் அப்போது கவிஞரின் பேனா கவிதை உலகில்  நாட்டியமாடும் கவிதைத் தேரை முன்னோக்கி நகர்த்த இவரின் கரங்கள் சேரும் .இலக்கிய பூங்கா இவரைப் பாடி மகிழும் .இலக்கிய உலகத்துக்கே இவர் பெருமை சேர்ப்பார்.
                                                                  வாழத்துகளுடன்.முனைவர்.க.கணேசன். 
நூல் பதிப்பகத்தார்; "மணிமேகலைப் பிரசுரம்
                              தபால் பெட்டி எண் 1447,
                                 7.(ப.எண்;4) தணிகாசலம் சாலை,
                                     தியாகராய நகர்,சென்னை 600017
                                         விலை ரூ 45