Saturday, June 3, 2017

நாங்கள் அரிஜனங்களாம் நாங்கள் அரிஜனங்களாம்

                    நாங்கள் அரி ஜனங்களாம்    கவிஞர் தணிகைச் செல்வன் 1977
கண்ணகியார் வீசிவிட்ட மதுரைத் தீயிலே –அன்று
கருகிப்போன மக்கள் எங்க சாதிமக்களே!
கண்ணகி போல் ஒசந்த சாதி ஜனங்களைமட்டும்- அவ
காப்பாத்துனா பிறகுயாரு நாங்கதான் மிச்சம்!

பெரிய சாதி கும்பிடுற சிதம்பர சாமி-அதை
பறையசாதி பாரத்ததாலே வந்தது தீமை!
எரியவச்சான் நந்தனாரை உசிரையே கொன்னு- பிறகு
எழுதிவச்சான் ஜோதியிலே கலந்துட்டாருன்னு!

முந்திக்காலம்போல இல்லே இந்தக் காலங்கள்- ரொம்ப
முன்னேறிட்டோம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள்!
இந்தியாவின் எந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும- அய்யோ
எங்கஜனம் அனுபவிக்கும் கொடுமை ஏராளம்.!

இந்திராவின் மாநிலத்து ஜாதி இந்துக்கள்- கண்ணில்
எப்போதுமே நாங்களெல்லாம் இழிந்த ஜந்துக்கள்!
கொஞ்சங்கூட இரக்கமில்லா ராட்சதனுங்க- எங்க
குழந்தைகளை மரத்தில் கட்டி உரிக்கிறானுங்க!

காசிநகர்ப் பண்டாக்கள் புண்ணியதானம்- செய்ய
காசிசேர்க்க நாங்கதாங்க பிணம் எரிக்கணும்!
கூசுகிற கழிவுகளின் சாக்கடைகளில் – மலக்
கூடைகளை சுமந்துவரோம் எங்க தோள்களில்!

மத்தியப் பிரதேசத்திலே சத்தார்பூரிலே- எங்க
மங்கையரைக் கற்பழித்தார் லாக்கப்புக்குள்ளே!
சித்ரவதை யானதங்கே எத்தனை பொண்ணு-அது
செய்தியாக வருவதுண்டா நூத்துக்கு ஒண்ணு!

ஜெய்ப்பூர்நகர் சேட்டுகளின் ஆப்பில்ரசத்தில்- எங்க
சிறுமிகளின் மார்பகங்கள் வடித்த ரத்தத்தில்!
மெயக்கொழுத்துத் திரிந்தலையும் மாடி ஜனங்களே- எங்க
வாழ்க்கையெல்லாம் ராஜஸ்தான் பாலைவனங்களே!

பீகாரிலே மோங்கீர்ஜில்லா காலார் கிராமத்தில்- எங்க
பெண்களினத் துயிலுரிந்து மர்ம ஸ்தானத்தில்!
தேகவெறி மீறிந்தின்ற போலீஸ் மிருகங்கள் –ஈட்டி
செருகிணர்கள் ஓ அவரகள் ஆளும் வர்க்கங்கள்!

மகாலஷ்மி கோயில்கொண்ட மராட்டியத்தில்- அங்கு
‘மலபார்ஹில்’ மாளிகையின் அந்தப்புரத்தில்!
மைசூரின் அரிஜனப்பெண் துரோபதையாவாள்-அவள்
மஞ்சத்தின் மேல்சுவரில் காந்தி புன்னகை செய்வார்!

கேரளத்தில் குட்டநாட்டின் சேரிமக்களை- உணவு
கேட்டதாலே கசக்கி விட்டான் எங்க பூக்களை!
ஊரளக்க வந்தோமுன்னு வாயளந்தாங்க- ஆனா
உயிரளந்து போடத்தானே ஆளவந்தாங்க!

மேற்குவங்கம் நாகலாந்து அசாம் நெடுகிலும்- காடு
மேடுகளில் உயிர்பிழைக்கும ஆதிக்குடிகளும்!
தேக்குகளில், தேயிலையின் தோட்டப்புதர்களில்-நாங்க
தேம்பத் தேம்பி அழுகிறோமே மலைக்குகைகளில்!

ஆந்திரத்து வயல்களில்தான் என்ன வாழுது- இதோ
‘அரிபகவான்’ ஜனங்களின் மேல் குண்டுபாயுது!
சூழ்ந்திருக்கும் சேரிகளே தீயில் பொசுங்கும்-ஆளும்
சீமான்களின் கோப்பையிலே எம்வேர்வையே பொங்கும்!

வெண்மணியில் அரியின்மக்கள் கருகியவாடை-வீசி
விலகுமுன்னே எழுந்து வந்தாள் நீதிதேவதை!
வெண்மணியின் தீயில் எங்க சாதி செத்தது- அதற்கு 
விடிவு காண முடிந்திடாமல் நீதி செத்தது,!

பெரியபண்ணை சுட்டதாலே தாழங்குடியிலே- செத்த
பக்கிரிக்கு நீதிஎங்கே இந்த அரசிலே!
திருக்குவளைத் தஞ்சை மண்ணில் குண்டையூரிலே-ஏழை
சிரிப்பதெங்கே குடிசைகளைப் பிய்த்தெறிகையிலே!

காருகுடி அரிசனங்கள் கேட்டதென்னங்க-எங்க
கட்டைகளை புதைக்க ஒரு துண்டுமண்ணுங்க!
ஊருகூடி ஒதைக்கிறானே காருக்கடியிலே-எங்க
உயிர்களெல்லாம் போலீசாரின் காலுக்கடியிலே!

ஆம்பூரின் அரிஜனங்கள் மனிதரில்லையா-அவங்க
அகில இந்தியாவில் வாழும் மன்னரில்லையா!
இல்லையென்றால் எதற்கு இந்த அரசியல் சட்டம்-அதை
எரித்துவிட்டால் எங்களுக்கு என்னஙள நஷ்டம்!

நொந்து நொந்து வெந்து வெந்து இன்றுவரையில்-நாங்க
நூறு நூறு ஆண்டுகளாய் இந்த பூமியில் !
சொந்தமென்று என்னகண்டோம் பசியைத் தவிர-எங்க
சொத்து என்று என்ன கண்டோம் உசிரைத் தவிர!

பறையடிச்சதாலே நாங்க பறையர் இன்னீங்க-கழனிப்
பயிரிட்டவன வெள்ளாளனு பேருவச்சீங்க!
பறையரெல்லாம் வெள்ளாமைதான் செய்யறோமுங்க-எங்க
பட்டமிப்போ வேளாளன்னு சொன்னா என்னங்க!

காந்தி எம்மை ஆண்டவனின் குழந்தைகள் என்றார்-அந்த
கடவுள் யார் என்பதைத்தான் காட்டமறந்தார்!
ஆண்டவர்கள் முன்னாளில் முடிமன்னர்கள்- பின்னர்
அந்நியர்கள் இந்நாளில யார் மன்னர்கள்?!

ஏகபோக பிர்லாக்கள் சிவசைலங்கள்-எங்க
‘இரிஞ்சலூரு’ வடபாதி நங்கவரங்கள்!
லோகமெல்லாம வட்டிக்கடை ராணுவப்படை-வச்சி
ரௌடித்தனம் பண்ணிவரும் ‘டாலர் கழிசடை’!

இத்தியாதி பயல்களெல்லாம் ஆண்டவனாக- எங்க
ஏழைஜாதி இவங்களோட அடிமைகளாகச்!
சத்தமின்றி நித்தம் நித்தம் ரத்தம் பிழியறோம்-எங்க
தாய்மாரின் இளமைகளை தத்தம் செய்கிறோம்.!

பொறுத்ததெல்லாம் பொறுத்தோம் ஒரு புண்ணியமில்லை-காந்தி
போதனைகளாலே எங்க புண்ணு ஆறலை    !
சரித்திரத்தில் இதுவரையில் ரத்தம் சிந்தினோம்-இனி
சிந்த ஏதும் ரத்தமில்லை நெருப்பைச் சிந்துவோம்!

வெள்ளைக்காரன் ஆண்டபோதும் அரிசனங்கள் நாம்-இப்போ
‘டில்லிக்காரி’ வந்தபோதும் அரிசனங்கள் நாம்!
கொள்ளைக்காரன் இருக்கும்வரை அரிசனங்கள் நாம்-இவுங்க
கூண்டோடு ஒழிஞ்சாத்தான் சரிஜனங்கள் நாம்!

அரிஜனமும் பிறஜனமும் ஒருஜனமானால் –
அன்றுதாங்க சுதந்திரமும் ஒரிஜனலாகும்!
ஒரிஜனல் சுதந்திரத்தை பார்த்திட வேண்டுமென்றால்
ஒன்றுபட்டு போர்க்கொடியை தூக்கிடவேண்டும்!

செங்கொடியைத் தவர போர்க்கொடியில்லை-அது
செல்லும் வழிதவிர மார்க்கமுமில்லை!
சங்கங்கள் தவிர வேறு ஸ்தாபனமில்லை-மார்க்ஸியக்
கொள்கையைத் தவிர வேறு கொள்கையேயில்லை.!