Wednesday, November 27, 2013

தேவைதான் இரண்டாவது பகுத்தறிவியக்கம் ஏன் எப்படி?



                தேவைதான் இரண்டாவது பகுத்தறிவியக்கம் எப்படி? ஏன்?                    
தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்; என்ற தலைப்பிட்ட எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களின் கட்டுரை நவம்பர் 25, 2013 தேதியிட்ட தி இந்து தமிழ் நாளேட்டில் படித்தேன்..எதையும் நிரூபணவாதக் கண்கொண்டு பார்க்கின்ற இயக்கத்தை ஆரம்பிப்பதே இரண்டாவது பகுத்தறிவியக்கம் என்பதை வலியுறுத்துவதாக புரிந்துகொள்கிறன்.  மக்களை நோக்கி ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இக்கருத்து வரவேற்கத் தகுந்ததே.இந்நாட்டின் மருத்துவ முறை அலோபதி மருத்துவ முறையால் கபளீகரம் செய்யப்பட்டது குறித்து கவலை கொள்வது நியாயமானது..மேம்போக்காக சில விஷயங்களை தொட்டுக்காட்டி மொத்தத்தில் பகுத்தறிவியக்கம் தேவை என்பதை வலியுறுத்துகிறார். இவரது கட்டுரை இன்னும் வரலாற்று ரீதியாக பகுத்தறிவியக்கம் தாக்குதலுக்கு உள்ளான விதம்,இப்போதும் அது சந்திக்கும் சவால்களையும், குறிப்பிட்டிருக்கலாம். நமக்கு கிடைத்த கல்வியும் அந்த கல்வியில் என்ன உள்ளடக்கம் வழங்கப்பட்டது? யாருக்கு கல்வி வழங்கப்பட்டது?யாருக்கு கலவி வழங்கப்படவில்லை.காலந்தோறும் யாருடைய கையில் கல்வி இருந்தது? பகுத்தறிவுக கலவி கொடுக்கவேண்டியது யாருடைய பொறுப்பு? காலங்காலமாக கல்வி யாருடைய கையில் இருந்தது. என்பதையும் ,மூடநம்பிக்கை இந்த கணிணியுக காலத்திலும் அதிகம் தாண்டவமாடக் காரணம் என்ன?என்பதையும் சேர்த்து பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
அறிவியல் சிந்தனை வளராத காலத்தில் மனித சமூகத்தை ஒழுங்குபடுத்த தோன்றியவைதான் மதங்கள் என்று சொல்லப்பட்டது. மதங்கள் நிறுவனப்படுத்தப்பட்ட பின்பு அவைகள் மக்களின் இயல்பான பழக்கவழக்கங்களை
அந்நிறுவனங்களின் நிலைப்புத்தன்மைக்காக வேதச் சடங்குகளாக ஆக்கப்பட்டு,மக்களை மேலாதிக்கம் செய்தன.இதனால் மத எண்ணங்கள் கொண்டோரிடமிருந்தே கலகக்குரல் எழுந்தன. சித்தர்களும் புத்தமும் சமணமும்
மதப் பழைமைகளையும் மூடநம்பிக்கைகளை சாடி மக்களை கூர்மையான திசையில் சிந்திக்க வைத்தன. இந்து மதத்திற்கு அடித்தளமாக அமைந்த ஆரியத்தனம் இந்து மதத்தை மிக அழுத்தமான நிறுவனப்படுத்தியதிலும், மூடநம்பிக்கையில் முதலெடுத்ததிலும், மக்களை சனாதன முறைகளை உருவாக்கி மனு (அ)தர்ம போதனைளகளை மண்ணில் பாய்ச்சி மக்களை பிளவு படுத்தி வெற்றிகண்டது மட்டுமல்ல,இதற்கு எதிராக கலகக்குரல் கொடுத்து நிரூபணவாதத்தை நோக்கி புறப்பட்டவர்களை நாடு கடத்தியும் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றி கொலை செய்தும்ஆட்சியதிகாரத்தில் இருந்தோரின் கருவியாக மாறிய வரலாற்றுப் பின்னணி மக்களை தங்களின் சுயநலத்திற்கு மடையர்களாக ஆக்கியதில் சில மதங்களுக்கு பங்கு உண்டு என்றாலும் இந்து மதத்திற்கு பெரும்பங்கு உண்டு. இந்தியாவிலிருந்து  சீனா போன்ற நாடுகளுக்கு விரட்டப்பட்டது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவம கொண்ட பௌத்தம் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு மருத்துவத்தில் எளிமையாக மக்களை காக்கக்கூடிய அக்குபஞசர் வைத்தியமுறையும் கூடத்தான் அப்படி விரட்டப்பட்ட பின்னணியை இந்நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதா?
       இந்த நிலைமையை மாற்றி விழிப்புணரவு கொடுத்து மனிதனை மனிதனாக பண்புள்ளவனாக மாற்றவேண்டிய கல்வியும் மக்களை சுரண்டுவதற்கு
துணைநின்ற நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்கும் அம்மதத்தின் துணையோடுஅதிகாரத்திலிருப்பவர்களின் கருவியாக ஆக்கப்பட்டு  ஆதிக்கவர்க்கம் தன்னுடைய அதிகாரப்பசியை கல்விமூலம் போக்கிக்கொண்டது. சமூக சிந்தனையாளர்கள் இடைவிடாத கருத்துப்போராட்டத்தால் கல்வியில் சற்று நெகிழ்ச்சியை உருவாக்கி மாற்றுச் சிந்தனைக்கு சன்னமாகவே கதவு திறந்தது இந்த சன்னமான நுழைவாயிலில் கல்விபெற்ற அறஞர்கள் அறிவியல் சிந்தனை மேலோங்க முயற்சி செய்தனர்.
   சுதந்திரம் கிடைத்தபின்பும் ஜனநாயகத் தன்மை ஓரளவு உருவானபின்பும் ஆரியத்தனமும்,எஞ்சியிருக்கிற பண்ணையார்த்தனமும் உள்நாட்டி,வெளியாட்டு வியாபாரத்தனமும் கைகோர்த்துக் கொண்டு தங்களுடைய பழைமையான மூடநம்பிக்கைகளும் அறிவியல் முலாம்பூசி மக்களிடம் ஆடம்பரமாக ஜகஜாலக் கில்லாடித்தனம் செய்வதோடு, உண்மையான அறிவியல் சிந்தனைகொண்ட இயக்கத்தாரை, எளிய மருத்துவத்தை,ஆக்க பூர்வமான பொருளாதார வளர்ச்சிக்கு உருவாக்கம் திட்டத்தை அடையாளமில்லாமல் அழித்தொழிக்கும் நுட்பமான மதவெறி அரசியலாக மாறிப்போன கொடுமையின் பின்னணியே பகுத்தறிவுக் கல்வியை வளரவிடாமல் செய்துவிட்டது.
    அவனன்றி ஒரு அணுவும் அசையாது எனபதற்கிணங்க அரசியலின்றி ஒரு நடவடிக்கையும் இல்லை என்றாகிவிட்டது. எந்தக் கருத்தையும் பரப்புவதற்கும்  அக்கருத்தை செயலாக்கத்திற்கும் கொண்டுவருவதற்கும் ஒரு அரசியல் உண்டு.
 இந்திய மண்ணிலிருந்தே எளிய மருத்துவமுறைகளும் தற்காப்புக் கலை முறைகளும் சீனாவில் குடியேறியதாக ஒரு கருத்தும் உண்டு.தொடுவர்மம்,படுவர்மம் போன்ற வர்ம  வைத்திய முறைகளும் சீனாவில் குடியேறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. அங்கு குடியேறிய அக்குபஞ்சர் வைத்திய முறையை புரட்சியாளர் மாசேதுங் மக்களிடம் அவசியம் எடுத்துச்சென்று சிகிச்சையளிக்க கட்டளையிட்டிருக்கிறார். இன்றுங்கூட இச்சிகிச்சைமுறையில் வைத்தியம் செய்யும் படிப்பிற்கு ஆறரை ஆண்டுகள் என்று கணக்கிட்டு அதன்பின்புதான் மருத்துவப்படிப்பு சான்றிதழ் வழங்குவதோடு பயிற்சி பெற்றோர் கிராமங்களுக்குச் சென்று வீடுகளுக்கும் சென்று நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி நோயை குணப்படுத்துகிறார்களாம். இதுபோன்ற மக்களுக்கு எளிமையான செலவுகுறைந்த சிகிச்சைமுறையை அமுல்படுத்த மக்களை விழிப்புணர்வுபடுத்த தேவை மக்கள்நலம் சார்ந்த அரசியல்தான்
   

  ஆனால் இந்தியாவில், நல்ல போதனைகளை இலக்கியநயம்பட சொல்லிய இதிகாசங்களை உண்மையான வரலாறு என்று மக்களை நம்ப
வைத்து அதன்மூலம் அரசுக்கட்டிலைப் பிடித்தும்,இன்னும் அந்த அரசுக் கட்டிலை பிடிப்பதற்கு துடிக்கின்ற சக்தி எது?
வடமாநிலங்களில் ஃமுந்தைய ஆட்சிகாலத்தில் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் சோதிடத்திற்கென்றே தனித் துறை ஏற்படுத்தி பின்பு எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது.ம், வடமாநிலங்களிலு பள்ளிப்பாடத்திட்டத்தில்    மதவெறியைத் திணித்தது எந்த சக்தி? இந்தியாவுக்கே பொருளாதார வர்த்தகத்தை மேம்படுத்த பயன்படும் திட்டமாகிய சேது சமுத்திரத் திட்டத்தை பாழடிப்பதற்கு
ராமர்பாலம் என்ற வஜ்ராயுதத்தை ஏவி தடைப்படுத்திய சக்தி எது? புராணங்களின் கதாபாத்திரங்களுக்கும்  கடவுள் உருவகத்திற்கும் ஜெயந்திவிழா பெயரில் நாடுமுழுவதும் விடுமுறை கொடுத்து கொண்டாடி பரப்புவது எது? முன்பெல்லாம்
இந்து கோவில்களில் விழாக்களில் பக்திமட்டுமே மையங்ககொண்டிருக்கும்ஃ.ஆனால் சமீப காலமாக இவ்வாலயங்களில் காவிக் கொடிகளே தோரணங்களாக பறக்கவிடுவது எந்த சக்தி?
    காலங்காலமாக குமரி மாவட்டத்தில் நாட்டுப்புறத் தெய்வமாகிய சுடலைமாடனுக்கு நடுகல மாத்திரமே வழிபாட்டு அடையாளமாக இருந்தது. இப்போது மதுரை ,திண்டுக்கல் மாவட்டங்களில் மக்கள் மருதைவீரன் நாட்டுப்புறக் கடவுளுக்கு பயன்படுத்திய உருவத்தில் வெள்ளையம்மாளையும்,பொம்மியம்மாளையும் எடுத்துவிட்டு மருதைவீரன் உருவப்படத்தை மட்டும் எடுத்துவந்து கோயில்களில் பயன்படுத்துவதோடு ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி என்ற பெயராக்கி, இசக்கியம்மனுக்கு அருள்மிகு இசக்கியம்மன் என்றும் பெயர் வைப்பதோடு நாட்டுப்புற வழிபாட்டுமுறையை மாற்றி பிராமணர்களை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி மேல்நிலையாக்கி வைத்த தன்மை ஏன்? பஜனைகளும் சமயமாநாடும் குமரிமாவட்ட கோயில்களில் மட்டுமல்லாமல் மெல்ல மெல்ல அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் நுழைவது ஏன்? போன்ற வினாக்கள் எழும்புகின்றன. இவையெல்லாம் பகுத்தறிவை முடமாக்குமா இல்லையா? இவற்றிற்கெல்லாம் மக்களின் இயல்பான பக்தி வழிமுறைகளுக்கு எதிராக மதவெறி அரசியலும், உள்நாட்டு,வெளிநாட்டு வர்த்தகமும் மக்களின் இயல்பான பண்பாட்டுச் சூழலை திசைமாற்றி தங்களின் ஆட்சி அரசியல் மோகத்திற்கும், வியாபார கோரத்தனமான லாபவெறிக்கும் பயன்படுத்துவதே ஆகும். தமிழகத்தில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தார் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின்பு இவைகளையெல்லான் கண்டும் மௌனம் சாதிப்பது எதனால்? எல்லாம் எல்லாம் எங்கெங்கு சாத்தியமோ
அனைத்து இடங்களிலும் மக்களின் அறியாமை மீது ஏறி அரசுக்கட்டிலில் அமரவேண்டும் என்பதே. இந்த நுட்பமான அரசியலை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டாதவரை மூடநம்பிக்கை காலம் தொடரும்இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகநீதி சமத்துவத்திற்கும் மிகப்பெரிய தடையாக இருப்பது மூடநம்பிக்கையும் மதவெறி அரசியலும்,தற்போது மக்களிடையே நுகரவுவெறியை கிளரிவிட்டு மக்களை சுரண்டக்கூடிய முதலாளியமும்,பன்னாட்டு பகாசூரக்கம்பெனிகளின் ஏகாதிபத்தியவெறிய்ம்தான் என்பதை இனியாவது மக்களிடம் இயக்கமாக்கவேண்டியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் . பாதியை விழுங்கி பாதியை மட்டும் தங்கள் எழுத்துமூலம் சொல்வதென்பது நல்ல மாற்றத்திற்கு உதவாது. வரலாற்றுப் பின்னணியோடு நிகழ்காலத்தை ஒப்பிட்டு எதிர்காலத்துக்கு பகுத்தறிவு வித்துக்களை நமது பேனாக்கள் விதைக்கவேண்டும் என்பதை நமக்கு வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகிறார் ‘நோய்நாடி நோய்முதல்நாடி-அது தணிக்கும்
               வாய்நாடி வாய்ப்பச் செயல்’

                                          இப்படிக்கு
                    முனைவர் க. கணேசன், வணிகவியல் இணைப்பேராசிரியர்
                                   கொட்டாரம். குமரி மாவட்டம்.
                                 9486864990

Friday, November 22, 2013

                                             என்றும் என் நினைவில் ஓம் முத்துமாரி
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு மேடைகளில் 70 வயது கிழவியாகவும், வெள்ளைக்காரத் துரையாகவும்  திறந்த மேடையிலேயே உடனுக்குடன் மேக்கப் செய்து தோன்றி  ஆயிரக்கணக்கான மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ஆடிப்பாடி தெருக்கூத்துவடிவத்தை மேடையில் நவீனக் கூத்தாக வழங்கிய பாவலர் ஓம் முத்துமாரி என்ற கலைமாமணி விருது மட்டுமல்ல தமிழக முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரின் உள்ளங்களிலும் இதயவிருது பெற்ற சமூகக் கலைஞன் 14 நவம்பர் அவரது ஊரான திருவேங்கடத்தில் காலமானார்.வயது 70க்கு மேலாக இருக்கும் ,வயதின் காரணமாக இருந்தாலும் சமூகத்தின் பிற்போக்கு அழுக்கு சிந்தனைகளை கலை இலக்கியத்தின் கருவி கொண்டு அடித்துவிரட்டிய மகாகலைஞன் இன்னும் தேசத்தின் தெருவெங்கும் பவணி வந்திருக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம்.அது நமக்கு கொடுத்துவைக்கவில்லை. உளப்பூர்வமான அந்த சமூகக் கலைஞன் அவரின் வாரிசையும் இக்கலைக்கு அர்ப்பணித்துச் சென்றிருக்கிறார். சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் காக்கி உடை ஓநாய்களால் மோசப்படுத்தப்பட்டு கணவன் நந்தகோபால் காவல் நிலையத்திலேயே இறந்தபோதும் ,வாச்சாத்தியில் மலைவாழ் சகோதரிகள் 17 பேரை வீரப்பனை தேடும் வேட்டையில் ஈடுபட்ட காக்கி ஓநாய்கள் சூரையாடியபோதும் அவைகளுக்கெதிராக அக்கினி வரி பாடல்கள் எழுதி தமிழகத்து வீதிகளில் ஆதிக்கவெறியர்களை அம்பல்படுத்திய மனிதநேயக் கலைஞன் ஓம் முத்துமாரி.
      மேடையில் நிகழ்த்தும் தெருக்கூத்தில் காலங்காலமாக பெண்களின் மீது வாரி வீசுகின்ற விதவை என்னும் கொடிய நோயை சாடும் விதத்தில் விதவைத் திருமணத்தை அனைவரும் ஏற்கும்படி அழகு பாடல்களும் வசனங்களும் கலந்து  மாந்தோப்பில் சந்திக்கும் இளம் விதவையோடு  உரையாடி அவளைப் பற்றி  தெரிந்துகொண்டு  வாதாடி இறுதியில் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். வெற்றிகரமாக திருமணம் முடிகிறது.
    அந்த காலத்தில் பெரிய தாய்மார்கள் ஊர்களில் எப்படியெல்லாம் பண்பாட்டு
நடவடிக்கைகளில் பங்கு கொண்டனர்  என்றும் குழந்தைகளை தூங்க வைக்க தாலாட்டுப் பாடிய விதத்தையும் எடுத்துரைக்கும்போது :
அழுகிற குழந்தையை தூங்க வைக்க முதலில் மனைவி தாலாட்டுறார்
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அடிச்சாரைச் சொல்லி அழு -என் கண்ணே
ஆக்கினைகள் செய்திடுவேன் ' என்று பாடி தூங்க வைக்க முயற்சிக்கும்போது
உலையில் கொதிக்கும் அரிசி பொங்கி வருவது கண்டு அடுப்புக்கு சென்றுவிட
அருகிலிருக்கும் கணவன் குழந்தையை தூங்க வைக்க முயற்சிக்கும்போது அவன் பாடுகிறான்
'அத்தை அடிக்கவில்லை அரளிப்பூ செண்டாலே
மாமன் அடிக்கவில்லை மல்லிகைப்பூ செண்டாலே
ஆரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை--அவன்
   தானா அழுகிறாண்டி ஒரு தம்பி துணை வேணுமின்னு 'என்று நையாண்டி ததும்ப  ஒரு கையில் தொட்டில் போல ஒரு டவலை வைத்து ஆட்டிப் பாடும்பொது ஜனங்கள் குலுங்க குலுங்க சிரிப்பார்கள்.
    ,இன்றெல்லாம் மந்திரி ஊர்களுக்கு வந்துவிட்டால் காத்திருக்கும் தனிநபர் துதிபாடும் பண்பாட்டை கிண்டல் செய்யும் விதமாக அந்த காலத்து பொம்பள  மந்திரியும் ராசாவும் வருவாரென காத்துக்கொண்டிருந்து அவர் வருவதற்கு காலதாமதமாக ஆன பிறகு இப்படிப் பாடுவாளாம்
 'மந்திரி வருவாருன்னு மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் -நான்
 மந்திரி வரவுங்காணேன் -ஞானத் தங்கமே
மல்லிகைப்பூ வாடிப்போச்சே!
ராசா வருவாருன்னு ரோசாப்பூ வாங்கி வச்சேன்
ராசா வரவுங்காணேன் -ஞானத்தங்கமே
ரோசாப்பூ வாடிப்போச்சே! என்று அந்தக காலத்து கிழவி புலம்பிவிட்டுகத்தோடு மனங்கவரும் விதத்தில் பாடுவார்.
கிராமப் புறங்களில் பெண்களுக்கு பேய் பிடிப்பதை 'பேயோட்டுவது ' என்ற நிகழ்ச்சியை நடத்தும்போது உடன் இருக்கும் வேலுவும் பெண்வேடமிட்டு இருப்பார் அவரிடம் கேட்பார்
எங்காவது பிராமணத் தெருவில பேய் பிடித்ததுண்டா?
வேலு ;  இல்லை.
எங்காவது படிக்கும் பெண்களுக்கு பேய் பிடித்த:துண்டா?
வேலு ;இல்லை
உழைக்கிறவங்கன்னா பேயிக்கு கூட இளக்காரம் என்று சொல்லி விட்டு
வேலு பேயாட  ஓம்முத்துமாரி உடிக்கடித்து பேயோட்ட அந்த கிராமத்தில் விடிய விடிய பேயோட்டும் நிகழ்ச்சியை அப்படியே மேடைக்கு கொண்டுவந்து
பேயோட்டுபவர் பாட பேய் பிடித்த பெண் பின்பாட்டு பாடவேண்டும். பாட்டு இதுவே;
மதுரைக் கடை பொன்னையா சந்தனமாம் கண்ணையா சந்தனமாம் 
மாருக்கட்டு மச்சானுக்கு மரிக்கொளுந்தாம்  என்றும்  பேயாடுபவர் உண்மையிலேயே கழுத்து ஒடிந்துவிட்டது என்றுதான் பார்ப்போருக்கு தோன்றும். அந்த அளவு கழுத்து சுழலும் இப்படியே பாட பின்பாட்டு பேயாடுபவர் பாட  இறுதியில் மனோதத்துவ முறையில் பேய் பிடித்தவரிடமிருந்து பேய் ஒடிவிட்டது
 என்ற எண்ணத்தை உருவாக்க 
இந்தப்பாட்டையும் நாட்டுப்புற பூசாரி உடுக்கடித்து பாட  பேய் பிடித்தவர் பாடவேண்டும்.   பாட்டு இதுதான்;
அத்தி மரம் ஆலமரம் சோலை  சோலை-நான் 
அண்டிருந்த பெண்ணை விட்டு போரேன் போரேன்
புங்க மரம் புளியமரம் சோலை சோலை -நான் 
புடிச்சிருந்த பொண்ணை விட்டு போரேன் போரேன்' என்று பாடி பேயை ஓட்டிவிடுவார். இப்படித்தானடி நம்ம கிராமியக்கலையே பேயையே விரட்டி இருக்கிறது.என்று கூறியவுடன் பின்பாட்டு பாடும் வேலு அட ஆமா.என்று முடிப்பார்.மூடநம்பிக்கையை சாடுவதற்கு ஏராளமான விஷயங்களை கோர்த்துசொல்வார் அதில்பக்திப்பாடலில் முருகனையே கிண்டல் செய்வார்
'திருப்பரங்குன்றத்திலு நீ சிரித்தால் முருகா
 திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்' என்பதையும்
'கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்' என்று பாடிவிட்டு
ஒரு மூடை திருநீரை வாங்கி ஒரு அண்டாவில போட்டு தண்ணியில் கலக்கி
நோய் வந்தவுங்ககிட்ட கோரி கோரி குடிங்கண்ணு கொடுத்தா நோய் போயிருமில்ல அப்புறம் எதுக்கு ஆஸ்பத்திரியெல்லாம் ஆஸ்பத்திரியெல்லாம் தேவையில்லையே' என விழிப்புணர்வை
 கொடுக்கும் விதமே தனி சுவையாக இருக்கும்.ட்ட
  சுதந்திரப் போராட்ட வரலாற்றை பாட்டு நாட்டியத்தோடு வழங்கி அந்த போரா ட்டத்தையே கண்முண் கொண்டு வருவார். .
மதவெறிகொண்டு மக்களை பிரிவுபடுத்தும் கூட்டத்தின் கொடுமையைக் கண்டும்,
எவ்வளவு சொன்னாலும் மக்கள் சிந்திக்க மறுக்கிறார்களே என்ற வருத்தத்திலும். சமூகத்திலு நடக்கும் அக்கிரமங்களை அநீதிகளைக் கண்டு கோபங்கொள்ள மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் ஒரு பாடல்

தத்துவம் சொன்னாலும் புரயல-இதை
தாரிட்டு இடிச்சாலும்  சொனையில்ல
மொத்தமா மேயவும் வழியில்ல-இதுக்கு
மெத்தனம் என்னாவோ தெரியலே -அண்ணே தத்துவம்

குணமாறி என்னவோ நடக்குது -ஒரு
இனத்துக்குள்ளே முட்டி மொறைக்குது
மனம்போன போக்கெல்லாம் போகுது -பின்னே
மண்டியிட்டுத்தானே சாயுது (-அண்ணே தத்துவம்)

பாரத அர்ச்சுணன் மேய்ச்சுட்டான் -அந்த
பரந்தாமனும் மேய்ச்சுப் பாத்துட்டான்
நம்ம பாட்டன் பூட்டனெல்லாம்
மேய்ச்சப்பாத்துப்போட்டு பாதி வழியில செத்துட்டான்(-இதுக்கு தத்துவம்)

என்று கலை இரவு மேடையில் பார்ப்போரை பரவசப் படுத்தியிம் அப்படியே கட்டிப்போட்டும் அவர்களின் காதுகளை கூர்மையாக்குவதோடு சிந்தனையையும் மக்களை நோக்கியே சிந்திக்க வைத்து நாட்டில் பிற்போக்கு தனமான சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு  முறைகளை அம்பலப் படுத்தி மக்களுக்கான மாற்று மார்க்ஸீய  சமூக அரசியல் பண்பாட்டு பொருளாதார சிந்தனைகளை தனது கிராமிய தெருக்கூத்து மூலமாக அள்ளித் தெளித்து பறந்துவிட்ட அந்த அற்புதமான கலைமாமணி  ஓம்முத்துமாரி இன்றும் என்றும் நம் நெஞ்சில் வீற்றிருப்பார். கலைன் கவிஞன் சமூகப் படைப்பாளி ஒருபோதும் மரணமடைவதில்லை. அவருக்கும் என்றும் மரணமில்லை.






 
 
:



Sunday, October 27, 2013

        மாணவ மாணவியர் சீருடையும் கண்ணியக் கட்டுப்பாடும்.
    நீண்ட காலமாகவே பள்ளிகளில் மாணவ மாணவிருக்கு சீருடை அணியும் ஏற்பாட்டை இதுவரை ஆண்ட அரசாங்கங்கள் உருவாக்கி வருகின்றன. நாம் படிக்கும்போதும் இதை அணியும்போது ஒருவித மகிழ்ச்சியே.இன்னும் அரசாங்கமே ஏழை மாணவர்களுக்கு கைத்தறி துணியில் தைத்த வெள்ளை, காக்கி உடைகளை 1968 ஆண்டுகளில் வழங்கின வீடுகளில் உடை எடுக்க வசதியற்றோருக்கு இது பலமடங்கு மகிழ்ச்சிதான். இப்படி சீருடை உடைகள் அரசாங்கம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவோ, பிற மாணவ மாணவிகளை உடுத்திவரும் கட்டாயப் படுத்தியோ அணியச் செய்வதில் இதுவரை எந்த மாற்றுச் சிந்தனையும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை.காரணம் பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஏழைக் குழந்தைகளும், பணக்காரக் குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் விதவிதமாள ஆடைகளை உடுத்தும்போது மாணவர்கள் மத்தியில் வித்தியாசமான ஏக்கமான எண்ணங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது. மனநிலையும் உயர்வு தாழ்வு அடிப்படையை உருவாக்கும்.சமத்துவ சிந்தனை உருவாக்கவேண்டும் என்பதே அதன் அடிப்படையாக இருக்கவேண்டும்.      ‘
         சுதந்திர தினம்
மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியருக்கு,
நேற்று நடந்த ஜாதிக் கலவரத்துல
என் அப்பாவை யாரோ அடிச்சி
எரிச்சு கொன்னுட்டாங்க.
அம்மாவோ அரசு ஆஸ்பத்திரியில் ஆறுமாசமாக.
படிச்சு முடிச்சு வேல தேடிப்போன
என் அண்ணன் இன்னும் வீடு திரும்பல
வயசுக்கு வந்த அக்கா வீட்டைவிட்டு
ஓடிப்போயி ஒருமாசமாச்சு
என்  டவுசரின் பின்பக்கமும் கிழிஞ்சு போச்சு
எனவே ஐயா.
மந்திரி வந்து சுதந்திரக் கொடி ஏற்றி
மிட்டாய் கொடுக்கும் இந்த
சுதந்திரதின விழாவில் நான்
பங்கெடுக்க முடியாது என்பதை
வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
               இப்படிக்கு
தங்கள் கீழ்ப்படிதலுள்ள மாணவன் குப்புச்சாமி
என்று ஒரு கவிஞன் மாணவனின் வறுமையோடு மாற்று உடை இல்லாத கொடுமையோடு பல பிரச்னைகளை முன்வைத்து விடுப்பு கடிதம் எழுதுவதுபோல வடித்திருக்கிறார்.குப்புச்சாமிகளுக்கு ஒரு காலத்தில் அவசியமான தேவையை அரசு பூர்த்தி செய்த்தை மறக்க முடியாது.
இன்னொன்று பள்ளி வளாகம் முழுதவதும் ஒரே நிறத்தில் இருந்தால் அதன் அழகுத் தன்மை வித்தியாசம்தான்..ஆனால் நீண்ட காலமாக கல்லூரிகளில் இவ்வித சீருடை முறையை அமுல்படுத்தவில்லை., 1984க்குப்பின் சுயநிதிக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முளைக்க ஆரம்பித்து மக்கள்மத்தியில் ஆங்கில மோகம் படர்ந்தபின்பு அரசாங்கம் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் உருவாக்கிய மாநிலமெங்கும் ஒரே விதமான கலரில் அணிய கட்டளையிட்டதற்கு மாறாக அந்த அந்த தனியார் பள்ளிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் சீருடை அணியும் பண்பாடு உருவாக்கப்பட்டது. இதுவும் மக்கள் மத்தியில் ஒருவிதமான கவர்ச்சி ஏற்புத்தன்மை கவர்ந்துவட்டது.. இந்த இரண்டு போக்குகளை உற்றுநோக்கும்போது மாநிலமெங்கும் ஒரே வண்ணத்தில் சீருடை அணியச்ச்சொன்ன முதல காலகட்டப்போக்கில்,  வியாபாரத்தன்மை குறைந்து விவசாய விளைபொருளான பருத்தியும் நம் தேசத்து ஆலைகளின் உற்பத்தியும்.தொழிலாளர்களுக்கான வேலையும் எவ்வித பாதிப்புக்கு உள்ளாகவில்லை.இது ஒரு சுமையாக மக்களுக்கு இல்லை. விவசாயமும் ஆலைகளும் கைகோர்த்த பொன்னான காலம் என்றுகூட சொல்ல்லாம். ஆனால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டபின்பு இது அரசாங்கத்தின் பிடியிலிருந்து நழுவி தனியார் பள்ளி நிர்வாகங்களின் கையில் சீருடைக் கலாச்சாரம் விழுந்தபின்பு வண்ணங்களை தீர்மானிப்பது மட்டுமல்ல, அதை மக்கள் கொள்முதல் செய்யும் இடத்தையும் தீர்மானித்து நிர்வாகங்களுக்கு ஆடைகளுக்கான விலையை கடையில் விற்பதைவிட அதிக விலை நிர்ணயித்து மாணவ மாணவிகளிடையே லாபத்தை எடுக்கும் வர்த்தக குணமும் வந்துவிட்டது. தங்களின் பிள்ளைகளின் ஆசைக் கனவு படிப்பிலேயே மூழ்கிவிட்ட பெற்றோருக்கு இது ஒரு சுமை என்ற எண்ணம் ஏறபடவில்லை.இந்த வர்த்தகம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தொடர்கிறது. மக்களின் ஆங்கில மோகத்தை தக்கலை ஹலீமா என்ற கவிஞர்  

     காட் பிளஸ் ம்ம்மி
‘விடாது பெய்த அடைமழை
வீதியில் சேறும் சகதியுமாய்
வண்ணக் குடை பிடித்து
செல்லமாய் நடக்கும் சின்னத் தேர்கள்
ஆட்டோவரை சென்று டாட்டா காட்டும்
என் பத்தினி முகத்தில் பரவசம்!
அவள் காலிக்கழுத்தும் கனராவங்கியும்
மாறி மாறி என் மனசுகளில்
வெளியே விட்டிருந்த மழை
இப்போது என் கண்களில்!என்று தாலியை அடகு வைத்தாவது ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கும் கட்டாய நிலையை கணவனின்கண்ணீர் முலமாக உணர்த்துகிறார்.

  கல்லூரிகளில் சீருடை அணிவகுப்பு       
   கல்லூரிகளில் 1984க்குப் பின்பு சுயநிதிக் கல்லூரிகள் முளைத்தபின்பு அக்கல்லூரிகளில் சீருடை எட்டிப்பார்த்து கல்லூரிகளில் புத்தகங்கள் விற்பனை செய்யும் இடத்தில் துணிகளும் விற்கப்பட்டன.
கல்லூரிக்கு கல்லூரி விதவிதமான கலரில் சீருடை பவணி வருகிறது.பெரும்பாலும் அரசு கலைக் கல்லூரிகளில் சீருடைக் கலாச்சாரம் இல்லை. அங்கெல்லாம் எவ்வித சீரழிவும் கண்ணியமும் குறைந்த மாதிரி தெரியவில்லை.சமீப காலமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் இக்கலாச்சாரம் எட்டிப்பார்த்து அக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற அமைப்பு தொடங்கி அதன்மூலம் இந்த வியாபாரம் செய்யும் நடைமுறை உருவாகி உள்ளது. தனியாருக்கு சாமரம் வீசும் உலகமயமாதல் போக்கு ஆழிப்பேரலை நாடெங்கும் அரசின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு தேசத்தின் தெருவெங்கும் வீசி வியாபாரிகள் தீர்மானித்த பண்பாடாக மக்கள்மத்தியில் திணிக்கப்பட்டது என்றே கூறலாம்.
          இப்படிப்பட்ட சூழலில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டீ ஷர்ட், ட்ராக் ஷூட், ஜீப்பா போன்றவற்றை அணிந்து வருவதால் கல்லூரிகள் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படுகறிது. ஆகவே டீ ஷர்ட், ஸ்லீவ்லெஸ் மற்றும் ஜீன்ஸூக்கு தடைவிதிக்கப்டுகிறது. மாணவிகள் சேலை அல்லது சல்வார் கமீஸில்தான் வரவேண்டும். மாணவர்கள் முழுக்கைச் சட்டை, பேண்ட் அணிந்துதான் வரவேண்டும் என்று தமிழக கல்லூரி இயக்க்கம் உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவு பல விதமான சிந்தனைகளை கிளறுகிறது.
கல்விச் சாலைகளில் சீருடை ஒரே மாதிரி சிந்தனையை வளர்க்குமா?
சமநிலைச் சிந்தனை வளர்க்கும்.சரியா?
    உடை அணிவதில் பாகுபாடின்மை மனப்பக்குவம் இருப்பது என்பது தற்காலிகமானதுதான். மேம்போக்காகப் பார்த்தால் இது சரியாகத் தெரியும்.சீருடை அணிந்திருக்கும் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்துகொண்டு வந்திருக்கும் உணவு வகைகளில் ஒரே மாதிரி தரமானதாக இருக்குமா?மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டுவரவில்லையென்றால் இப்போது நான் உட்பட 50 வயதுக்கு மேறப்பட்ட ஏராளமானபேர் கல்விச்சாலை பக்கமே காலெடுத்து வைக்கமுடியாது என்ற நிலையை எண்ணிப்பார்ப்பது இந்த இடத்தில் பிரமிக்கவைக்கிறது. பெருமைப் படக்கூடியதுதான் என்றாலும் இப்போதெல்லாம் நிச்சயமாக குழந்தைகளின் குடும்ப நிலைக்கேற்றாற்போல அவர்கள் கொண்டுவரும் உணவு வகைகள் மாறி இருக்கும்.இது ஒருவருக்கொருவர் தாழ்வு எண்ணத்தை உருவாக்காதா? குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவந்துவிடுகின்ற முறைகளில் மலையும் மடுவும போல, அப்பா அம்மாவின் காரிலும் பல குழந்தைகளும், பல குழந்தைகள் தங்களது பெற்றோரின் சைக்கிளிலும் அம்மாவின் கைபிடித்து நடந்துவருவதும், சில குழந்தைகள் தாங்களாகவே நடந்து வரும் குழந்தைகள் மத்தியில் இருப்பது ஏற்ற தாழவு எண்ணத்தை உருவாக்காதா? குழந்தைகள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களின் வீடுகளின் அமைப்பு, தரம் ஆகியவற்றால் பாகுபாடு எண்ணம் வருமா? வராதா? இந்தியாவின் ஏராளமான கிராமங்களில் ஜாதி இந்துக்களின் தெருக்களில் பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து செல்ல முடியாது பெற்றோர்களின் இந்த நிலையை உற்றுநோக்கும் குழந்தைகளுக்கு உயர்வான எண்ணம் வருமா? சமநிலை மன சிந்தனையை உருவாக்குவது போலியான தற்காலிகமான சம மனப்பக்குவ ஏற்பாடுதான்.
கண்ணியம் கெடுவது உடையால்தானா?
    ஆண் பெண் இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் உடையால்தான் படிப்பு வீணாகிப்போவதும் படிப்பு சிந்தனை சிதறுவதும் கலாச்சார சீரழிவு நடைபெறுகிறது என்பதற்கு ஏதாவது ஆய்வு உண்டா? அரசு புள்ளிவிவரங்கள் உண்டா? எல்லா இடங்களிலும் நடைபெறும் கலாச்சார சீரழிவு பாலியல் அசம்பாவிதங்கள் எங்கோ சில கல்வி நிறுவனங்களிலும் நடந்திருக்கலாம். அதை பொதுவான அளவுகோலாக எடுத்துக கொள்ள முடியாது. அரசின் உத்தரவுங்கூட ஆண்களுக்கு வரையறை சொல்வது போல இருந்தாலும் அதிக மையங்கொண்டிருப்பது பெண்களைச்சார்ந்தே பார்க்கப்டுவதாகத்தான் இருக்கிறது. காலங்காலமாக தங்கள் உடம்பில் உடை கவனமாகவே இருந்த பெண்கள் இப்போதுதான் சுதந்திரமாக தன் கூச்சத்திலிருந்து விடுபட்டு வருகிறார்கள்.அப்படி வந்தபின்புதான் கிரென்பேடிகளும் சானியாமிர்சாக்களும், திலகவதிகளும்,இன்னும் பல துறைகளில் சாதனைப் பெண்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் உடை அணியும் பழக்கத்தில் மாற்றம் வேண்டும் என்றுதான் தந்தை பெரியார் கனவு கண்டார்.இப்போது அது மலர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
‘டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட்,கூலிங்கிளாஸ் இளைஞர்கள் போட்டுக்கொண்டு நாடக்க்க் காதல் புரிகிறார்கள் ‘ என்று ஒரு அரசியல் கட்சி தலைவர் தனது  மேலாதிக்கப்புத்தியோடு வெளிப்படுத்தியிருப்பது இதோடு பொருந்துகிறது. இந்தியாவெங்கும் ஒரு மனநோய் பரப்ப்ப் படுகிறது. இளைஞர்கள் உடுத்தும் ஆடைதான் ஒழுக்க்க் கேடுகளும் பாலியல் குற்றங்களுமு பெருக காரணம் என்பதே அந்த மனநோய். ‘கல்லூரிகளில் ஆடைகட்டுப்பாட்டை வலியுறுத்தி சொல்லப்படும் காரணங்கள் அவை ஒழுக்க் கேடானது அல்லது ஒழுக்க கேட்டைத் தூண்டுவது பாலியல் வன்முறைக்கு காரணமாக அது அமைகிறது.
படிப்பில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. நமது கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத்து,போதுமான அடிப்படை கட்டுமானங்கள் இல்லாத து ,பாடத்திட்டம் சம்பத்தமான குளறுபடிகள்,கொடூரமான கல்விக் கட்டாய கட்டணம் என எதைப்பற்றியும் எந்தக் கவலையும் இவர்களுக்கு கிடையாது.இந்தக் கல்லூரிகளில் படித்துவிட்டு போகிறவர்ளில் முக்கால்வாசிப் பேருக்கு எந்த எதிர்காலமும் கிடையாது என்பதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கறை கிடையாது என்று நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் மனுஷயபுத்திரன் வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய சமூக அக்கறைப் பதிவாகும். சில மத அடிப்படைவாதிகள் பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு தேவைதான் என கூக்குறலிடுவது ஆச்சரியம் இல்லை.காரணம் நுட்பமான முறையில் உள்ளே பொதிந்திருப்பது மதங்களும் பெண்ண்டிமைத்தனமும் ஒட்டிப்பிறந்தவைதானே?
  பெண்களை ஓயாமல் துரத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது.இந்த நாட்டின் ‘கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடைமீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள்.கொடூரமான பாலியல் வக்கிரங்களுக்குச் சாக்கடையாக மாறிப்போன ஆண் மனத்தின் வக்கிரங்களை காரணம் காட்டாமல், காவுகொள்ளப்பட்ட பெண்ணின் நடை உடை, பானைகளை மீதே கேள்விகள் எழுப்புகின்றனர்.......மாணவிகள் ஜீன்ஸ, டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்பதான கட்டுப்பாடுகளைப் பல கல்வி நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளால் ‘சமத்துவமாக மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் சில கல்வி நிறுவனங்களால் விதிக்கப்படுகின்றன......பெண்கள் தன் உடலை முழுவதுமாக மறத்துக்கொண்டு வீதியில் சென்றால்மட்டும், அவளுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருந்துவிடுமா? பாதிப்புக்குள்ளான பெண்கள் உடை விஷயத்தில்தான் அந்தபாதிப்புக்கு உள்ளானார்களா? என்று அக்டோப்ர் 20, 2013 தேதியிட்ட தமிழ் ‘தி இந்து நாளிதழில் சிறப்புப்பக்கம் 2ல் எம் ஆர் ஷோபனாவின் ‘கட்டுப்பாடா ஆணாதிக்கமா?தலைப்பிட்ட கட்டுரை மிக அழுத்தமாக கருத்துகளை முன்வைப்பதை சிந்திக்கவேண்டியுள்ளது.
சீருடைக் கலாச்சாரம் ஒரு விளம்பர அடையாளம்தான்.
   பொதுவாகவே சீருடை என்பது ஒருவிதமான விளம்பர அடையாளம்தான். இப்போது பல சுய உதவி குழுக்களில், அரசியல் கட்சிகளில், மத அமைப்புகளில் தங்களின் விளம்பரக் குறியீடாகவே கையாண்டு வருகிறார்கள். சில கல்வியியல் கல்லூரிகளில் காவிக் கலரைக்கூட சீருடையாக பயன்படுத்திவருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பர யுத்தியாகவும் பள்ளி கல்லூரிகளில் பயன்படுத்தும்போது கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு சீருடை பற்றி உத்தரவென்பதெல்லாம் காலத்திற்கு ஒத்துவராத கட்டுப்பெட்டித்தனமாக தன்மையை வளர்க்க உதவுமேயல்லாமல்
கண்ணியத்திற்கும, கட்டுப்பாட்டிற்கும் இது ஒத்துவராத ஒன்றே.
வக்கிரமும் வன்முறைகளும் நடந்த இடங்களில் ஆடைகள் காரணமா?
   கற்பழிப்புகளும் கலாச்சார ஆபாசங்களும் நடைபெற்ற இடங்களிலெல்லாம் ஆடைஉடுத்தும் தன்மை காரணமே அல்ல.ஆதிக்க எண்ணங்க கொண்டோரின், ஆண்களின் ஆபாச உளவிய்ல் சிந்தனையே காரணம்.சிதம்பரம்  காவல்நிலயத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது ஆடையாலா? வாச்சாத்தியில் 17 மலைவாழ் பெண்களை சூரையாடிய கொடூரம் அப்பெண்களின் ஆடை உடுத்தலினாலா? சல்வார் கமீஸ் அணிந்த பெண்தானே ஷரிகாஷா என்ற மாணவி கயவர்கள் ஆட்டோவிலிருந்தி இழுத்து கீழே இழுத்துப்போட்டது உடைக்கவர்ச்சியாலா? இப்படி ஏராளம் வினாக்கள் எழுகின்றன..
 பாலின சமத்துவக் கல்வி போதிக்கப் படுகின்றனவா?
     பாலின சமத்துவ சிந்தனை பாடத்திட்டம் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்டுகிறதா? கல்விக் கூடங்களில் திருவள்ளுவர் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ள பொருட்பால் காமத்துப்பால் குறள்களில் எத்தனை குறள்கள் பாடத்திட்டத்தில் உள்ளன? சங்க இலக்கியங்களில் வருகின்ற வாழ்வைச் சுவைக்கின்ற சிந்தனைகளை விதைத்துள்ளோமா? எந்த வகுப்பிலிருந்து ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் பிரித்து உட்கார வைத்து பாடம் நடத்தும் முறை தொடங்கினோம் இப்போதும் அதை தொடர்கிறோம். ஏன் இவையெல்லாம்? இவையெல்லாம் ஆய்வு செயது நம் உளவியல் வக்கிரங்களை விரட்டியடிக்க முன் வரவேண்டாமா? அப்போதுதானே வாழ்க்கையை நேசிக்கும் பாலின சமத்துவ சிந்தனை பரவி கலாச்சார சீரழிவுக்கு விடை கொடுக்க முடியும். கல்வி வியாபாரிகள்(கலாச்சாரக் காவலர்கள்) கட்டணக்கொள்ளையை நிறுத்திவிட்டு கல்வியை கண்ணியமாக நடத்த முற்பட்டு, நிர்வாகங்கள் முதல்வருக்கும் தலைமையாசிரியருக்கும் சுதந்திர உரிமை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வியில் ஆரோக்கியமாக பங்கெடுக்கும் ஜனநாயக நெறிமுறைகளை உருவாக்கினாலே உடை கட்டுப்பாடும் வக்கிரப்புத்தியும் தேவையில்லாமல் போகும்
                                                முனைவர் க.கணேசன்.
                                               விவேகானந்தா கல்லூரி
                                                அகஸ்தீஸ்வரம் .


Monday, June 17, 2013

'ஆடு நனைகிறதே ' தினமணி தலையங்கம் யாருக்கு உபதேசம்?

                                                 யாருக்கு உபதேசம்?                                                 
   ‘ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது’ தலைப்பிட்ட 13-6-2013 தேதியிட்ட தினமணியில் தலையங்கம்’ தகுதி ‘ ‘திறமை’ என்ற துருப்பிடித்த ஆயுதமதை கூர்தீட்டிக்கொண்டிருக்கும் மேட்டுக்குடி சிந்தனைத் தளத்திலேயே அமைந்திருக்கிறது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைபவர்கள்தான் திறமையான ஆசிரியர்கள் என்று கருதுவது மாயைதான். வேலைச் சந்தையில் உழைப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது வாய்ப்பிடங்களில் எண்ணிக்கை குறைவாக தேவையுள்ளதால் தெரிந்தெடுக்கும் ஒரு யுத்தியாகவே இதைக் கருதலாம்.இது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்றுதான்.
      போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் பயிற்று முறைக்கும் சம்பந்தமேயில்லை என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத்தருகிறது. .பயிற்றுமுறை என்பது ஒருவர் பெறும் அனுபவங்களோடு வகுப்பறையை உயிரூட்டும் களப்பணியாகும்.இது ஒற்றையடிப் பாதையல்ல,மாணவர்களும் ஆசிரியரும் கலந்துரையாடி அறிவைப் பகிர்ந்துகொள்ளும் இருவழிப்பாதையாகும். மதிப்பெண் என்பது வெறும் மனப்பாடம் சார்ந்த்து. மனப்பாடத்தில் கில்லாடிகளெல்லாம் அடித்தட்டு மாணவர்கள் நிலைக்கு இறங்கி வந்து தெளிவான அனுபவ உதாரணங்களோடு உற்சாகமாக உத்வேகமுடன் பாடம் நடத்துவார்கள் என மதிப்பிடுவது தவறானது.
     சமூகநீதிப்பார்வையில் இட ஒதுக்கீடு  அடிப்படையில் ஆந்திராவில்,அசாமில் , ஒடிசாவில் பீகாரில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதுபோல் தமிழகத்திலும் மிக அவசியமாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கோருவதும் குரல்கொடுப்பதும்  கல்வியாளர்கள் கடமை மட்டுமல்ல,சமூக நீதியை ஆத்மார்த்த ரீதியாக விரும்புகிற அரசியல் கட்சிகளுக்கும்.மனிதநேயப் பார்வைகொண்ட  உழைப்பாளரின் கடமையுங்கூட.
   ஆசிரியர் பணியிடங்களின் தேர்விற்கு தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி ஆந்திராவில் மதிப்பெண்களில் பொதுப்போட்டிக்கு 60 சதவீதமும்,பிற பிற்படுத்தப்பட்டோருக்கு50 சதவீதமும்,தாழ்த்தப்பட்டோர் ஊனமுற்றோருக்கு 40 சதவீதமும் என்றும், அசாமில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பிரிவினருக்கு 55 சதவீதமும்,ஒடிசாவில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பிரிவினருக்கு 50 சதவீதமும், பீகாரில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பகுதியினருக்கு 55 சதவீதமும் என நிர்ணயித்து தேர்வு செய்யப்படும்போது சமூகநீதிப் போராட்டங்கள் நிகழ்ந்தும் இன்னும் சமூகபாகுபாடு மற்றும் தீண்டாமைக் கொடுமை தாண்டவமாடும் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் பணியிட விழுதுகளைக் கைப்பற்றி மேலேறுவதற்கு அம்மாநிலங்கள்போல நடைமுறைப்படுத்தவேண்டும் என கேட்காமல் கொச்சைப்படுத்துவதுதான் மிகப்பெரிய சமூக அநீதி. 
         மேற்குறிப்பிட்ட பிற மாநிலங்களில் 60 சதவீத்த்திற்குக்கீழ் மதிப்பெண பெற்று ஆசிரியர் பணியிடங்களில் நியமனம்பெற்றோர் திறமையில்லாதவர்கள் என்பதற்கு ஏதேனும் ஆய்வுகள் உண்டா?

   ‘ பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் கணிதம்,விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர் பொதுப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதுபோல் 130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பலரும் இட ஒதுக்கீடு இடங்களுக்கு தள்ளப்ப்ட்டிருக்க,வெறும் 90மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர் இதே போன்ற மோசடி பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திலும் நடைபெற்றிருக்கிறது 13.11.2002ல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும்,15.2.2010ல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டியலிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.’ என்ற விபரங்களை ஏப்ரல் 10-30 தேதியிட்ட உண்மை இதழில் அதன் ஆசிரியர் கி.வீரமணி தலையங்க்த்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தகுதி திறமைதான் அளவுகோல் என்று பல்லவி பாடுவது எப்படிப் பொருந்தும்? திருத்தவேண்டியது யாரை? உரிமைகளுக்கு குரல் கொடுப்போரையா அல்லது ஒட்டுமொத்த கொள்கையின்மூலமாக பொதுஜனங்களை மூளைச் சலவை செயது தரமான கல்வி வேலைவாய்ப்பிலிருந்து கைகழுவும் அரசையா?  பழங்குடியின மக்களின் வாழ்நிலையும் ,வாழ்விடமும் பள்ளிகள் அமைந்துள்ள இடமும் மலையும் மடுவுமான சூழலில் உள்ளபோது ,அவர்களிலிருந்து படித்து மேலேறிவருபவர்களுக்கு பொதுப்போட்டியாளர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நியாமாகுமா? இந்தச்சூழலில் மலைவாழ் மக்கள் சங்கம் அரசாணை எண் 252 ஐ நீக்க்க் கோருவது  நியாயம்தானே?
       பட்டங்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வெறும் சென்சஸ் கணக்கிற்கு புள்ளிவிபரங்கள் திரட்டுவதற்காவா? அப்படியென்றால் பொது மக்கள் கணக்கெடுப்பிலேயே புள்ளிவிபரங்கள் கிடைத்து விடுமே, வேலை வாய்ப்பகங்கள் எதற்கு? பதிவு செய்து காத்திருப்போரில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து பணியமர்த்தினால் வகுப்பறை நுட்பத்தோடு திறமையை பெருக்க முடியாதா?
    தனியார் பள்ளிகளில் கற்பித்தல் திறமையைப் பார்த்து நியமனம் செய்வது மிக குறைந்த அளவு பள்ளிகளில்தான். சாதிகள் மதங்கள் அடிப்படையில் கல்விக் கடை திறந்திருக்கிற இடங்களில் செயல்படுத்தப்படும் நியமன அரசியலே மிகப் பெரிய ஆய்வுக்குரியது.அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் பொதுப்போட்டி காலியிடங்களில் எத்தனை தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்,அருந்த்தியர் ,மிகவும் பிற்படுத்தப்ட்டோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு மனந்திறந்த ஆயவை அரசோ அல்லது சமூக விரும்பிகளோ ஆய்வு விசாரணை மேற்கொண்டால் அப்போது தெரியும் (சில நிறுவனங்களைத் தவிர)தனியார் கல்வி நிறுவனங்களின் உண்மையான நியமன அரசியல். இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும் அதன்  நியாயத் தன்மையையும் மக்கள் மத்தியில் அரசாங்கங்களோ அல்லது ஊடகங்களோ(சில இதழ்களைத் தவிர) அறிவு ஜீவிகளோ  விளக்குவதில்லை.
      எங்கெங்கு காணிணும் மனப்பாட முறையும், 9 ஆம் வகுப்பு பாடங்களை விரைவாக முடித்துவிட்டு அதே வகுப்பில் 10 ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதும், 11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களை முடித்துவிட்டு திரும்பத்திரும்ப தேர்வு பயிற்சி(உருப்போடும் பயிற்சி) கொடுப்பது அதிக மதிப்பெண் எடுக்கவும்,பள்ளியில் அதிக தேர்வு சதவீதம் எடுக்க உதவுமேயொழிய சமூகநேய மனிதனை உருவாக்கும் கல்வியாகுமா? சொல்லப்போனால் ஆசிரியர்களுக்கு பி எட், எம் எட் போன்ற பயிற்சி முறைகளை வலிமையுள்ளதாக மாற்றி. அரசு உதவி பெறும்  தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி .  சமூக நீதியை நிலைநாட்டுவதும்,அரசு  கல்வி நிறுவனங்களிலும் தற்போது தமிழகத்தில் விரிவடைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பட்டியலின அருந்த்தியர்) உள் இட ஒதுக்கீட்டு பகுதியினரையும் உள்ளடக்கி அமுல்படுத்துவதை கண்காணித்து அரசிடம் வலியுறுத்தவேண்டுமேயல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதி உரிமைக்கு ஆப்பு வைக்கிற சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்தோரை பாதுகாக்க  உதவாது. உள் இட ஒதுக்கீடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பலகட்ட போராட்டங்களுக்குப்பின் ஏற்படுத்தப்பட்டதால்தான் அருந்த்தியர் சகோதர சகோதரிகள் இட ஒதுக்கீட்டு ஏணியை எட்டிப்பிடிக்கிறார்கள். அதிலும் உலை வைக்க்க் கூடாது.
        
     மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றிருக்கிற பத்திரிக்கைகளும் ஊடகங்களும் திருத்தவேண்டியது யாரை? உரிமைகளுக்கு குரல் கொடுப்போரையா அல்லது ஒட்டுமொத்த கொள்கையின்மூலமாக பொதுஜனங்களை மூளைச் சலவை செயது தரமான கல்வி வேலைவாய்ப்பிலிருந்து கைகழுவும் அரசையா?


Thursday, May 23, 2013

பிரசவம்- சிறுகதை

                                   .
                                              

‘பிளோமினாள் ரெக்ஸ் கூட வந்தவங்க யாருங்க?
‘நாங்கதாங்க சிஸ்டர்
‘பெண்குழந்தை பிறந்திருக்குங்க
‘கதிர்வடிவு பெற்றோர்கள்?
என்னங்க சிஸ்டர்?
‘ஆண்குழந்தை பிறந்திருக்கு’’
‘யாஸ்மின் பானு கூட வந்தவங்க?
‘பெண்குழந்தை பிறந்திருக்கு
நாகர்கோவில் நகரத்தின் பரபரப்பான பகுதியான கோட்டாரில் கடைகள் அதிகமாக இருக்கும் சாலையோரம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிட பிரசவ ஆஸ்பத்திரியொன்றில் முதல் மாடியில் பிரசவ வார்டின் முன்பாக காலை எட்டுமணி முதலாகவே ஒட்டு எண்ணுமிடத்தில் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டத்தைப் போலவே பிறக்கப்போவது ஆணா பெண்ணா?.சுகப்பிரசவமா சிசரியனா? என்பதை அறிய பெண்களை பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு காத்திருக்கும் உறவினர்களிடம் ஒருமணி ஒன்றரை மணிக்கொரு முறை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் உரக்க அறிவித்துக கொண்டிருந்தார் ஒரு நர்ஸ்..காத்திருப்போர் பெரும்பாலும் முகமலர்ச்சியோடும்  பரவசத்தோடும் காணப்பட்டார்கள்.
                மாவட்டத்திலேயே மக்களிடையே நல்ல டாக்டரம்மா என பெயர்வாங்கியவர்.அங்கே போனா சுகப்பிரசவமாகத்தான் இருக்கும் என்ற பேச்சும் பரவியாதால் அவ்வளவு நம்பிக்கை. இந்த புகழாரப் பேச்சினால்தான்  பேராசிரியர் முத்துநாதனும் அவர் மனைவி சுந்தரவதனியும் தனது மகள் ஜெகப்பிரியாவுக்கு நான்கு மாதங்களாக இந்த ஆஸ்பத்திரியில் முன் சிகிச்சை பெற்று அன்று காலையிலேயே பிரசவ அறிகுறி இருக்கிறதென்று வீட்டுக்கு வந்த தாயம்மாபாட்டி சொன்னதும் காலை எட்டு மணிக்கே பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு காத்திருந்தனர்.
            அன்று மாலை 4 மணநேர நிலவரப்படி பிறந்த 9 குழந்தைகளில் ஒரு குழந்தைமட்டுமே சிசரியன் மூலம் பிறந்ததென கொஞ்சம் கலகலப்பு குறைவான தன்மையில் அமர்ந்திருந்த நாகர்கோவிலிலிருந்து  வந்த ஒரு பெற்றோர் பேச்சிலிருந்து தெரிந்தது. அவரிடம் அறிமுகமாகி பேச்சுக் கொடுத்தபோது ‘நாங்க எங்க மருமகளுக்கு இரண்டாவது பிரசவத்துக்கு கொண்டுவந்தோம. குழந்தை சரியான முறையில் திரும்பாம குறுக்கே இருந்திருக்கு.டாகடரம்மா நல்ல முயற்சி செய்து பாத்திருக்காங்க பிறகு எங்ககிட்டேதான் கேட்டாங்க நாங்கதான் சொல்லிட்டோம் சிசரியன் செய்திருங்க என்று. சரி தாயும் குழந்தையும் நல்லா இருக்காங்களே அதுவே போதும்.வேற ஆஸ்பத்திரிமாதிரி போய் சேர்த்தவுடன் அது இதைச் சொல்லி பயமுறுத்தி வயித்துல கத்திய வச்சு பணம்பறிக்கும் ஆசையில்லாத டாக்டர் என்று மனதை தைரியப்படுத்திகிட்டுத்தான் சொன்னார்.
                  பேராசிரியர் முத்துநாதன்கூட தனது மனைவி சுந்தரவதனிக்கு இந்த ஜெகப்பிரியா பிறக்கும்போது கொஞ்சமும் கவலைப்படாதவராகத்தான் இருந்தார்,காரணம் குடும்ப உள்நாட்டுப் பிரச்னையும் சமூகப் பக்குவமடையாத வயசுங்கூட.ஆனால் தனது குழந்தை பெற்றெடுக்கவரும்போதுதான் நிலைமை என்னவெல்லாமென்று இவ்வளவுகால அனுபவம் கத்துக்கொடுத்திருக்கு.
        ‘என்னங்க மணி அஞ்சாச்சுது இன்னும் ஜெகப்பிரியா பத்தி டாக்டரோ,நர்ஸோ எதுவும் சொல்லக் காணோம் என கேட்டபோது டாக்டர் கூப்பிட்டு உங்க மகளுக்கு இன்னும் அதிக நேரம் ஆகும். காரணம் குழந்தை வெயிட் கொஞ்சம் அதிகம் அதுனாலதான் தாமதமாகுதுஎன சொல்லிச்சென்றார்.
    முத்துநாதன் சிந்தனையெல்லாம் தான் பத்துவயதாக இருக்கும்போது தன்னுடைய அப்பா இறந்தபிறகு அம்மாவையும்,தம்பி தங்கை ஆகியோரை அப்பாவின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் மணியகாரன்பட்டியிலுருந்து சிங்கராஜபுரத்திற்கு அழைத்துவந்து பாதுகாத்துவந்த சின்னம்மா பாட்டி செய்த மருத்துவச்சி வேலைக்கும் அந்த ஊரின் தன்மைக்கும் சிறகடித்து பறந்து சென்றது.
     சிங்கராஜபுரத்திலிருந்து ஆஸ்பத்திரி போகணுமின்னா  அஞ்சாறு மைலு வேடசந்தூருக்கு நடந்தோ,வசதி இருக்கிறவங்க மாட்டுவண்டியிலோதான் போகமுடியும். அரசு ஆஸ்பத்திரி தவிர ஒன்னு ரெண்டு தனியார் ஆஸ்பத்திரிதான் அக்காலத்துல வேடசந்தூரில். தமிழ்நாட்டில பல கிராமங்கள் இன்னும் எப்படி ஜாதியால் பிரிந்துள்ளதோ அதுபோலத்தான் சிங்கராஜபுரத்திலும்.தோட்டங்கள் அதிகமாக வைத்திருக்கும் கவுண்டர் சாதிக்காரங்க அதிக வீடுகள்,அடுத்து பிள்ளைமார் வீடுகள் கொஞ்சம். பெரும்பாலான ஊர்களில் ஊரும் சேரியும் எப்படி பிரிந்துகிடக்கிறதோ அதுபோல ஊரின் கிழக்கு ஒதுக்குப்புறமாக பறையர் ,சக்கிலியர் வீடுகள் அமைந்திருந்தன.
     கையளவு நிலுமுமில்லாத பறையர் சக்கிலியர் சாதி மக்கள் கவுண்டர் வீட்டுத் தோட்டங்களில் கூலிவேலை செய்தும், சக்கிலியர் விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்கப் பறியும் பொதுவான தொழிலாகிய செறுப்பு தைத்தும் ,இருசாதிக்கார்ரகளும் மேலத்தெரு மக்களின் விஷேஷங்களுக்கும் ,கோவில் விழாவுக்கும் பறையடித்து சேவித்து வருவதுதான்அவர்கள் தொழில்.ஊரின் வடக்குப் பக்கம் மேலத்தெரு மக்களுக்கு மட்டும் சேவைசெய்ய்யும்வண்ணார்,நாவிதர் சாதி மக்களும் இருப்பார்கள்.
      வேடசந்தூர் தாலுகாவிலேயே இந்த ஊரிலேதான் பறையரும்,சக்கிலியரும் உறவுமுறையைச் சொல்லியும, ஒரே கிணற்றில் நீரெடுத்தும்,ரெண்டு தெரு ஆண்களும் பெண்களும் எகளாசமா கள்ளங்கபடமில்லாமல் பேசிவாங்கியும் இருப்பார்கள். சின்னம்மா பாட்டியின் ஆதரவில் இருக்கும் .முத்துநாதன் இரண்டு தெரு மக்களுக்கும் செல்லப்பிள்ளை மாதிரி..
      பக்கத்து கிராம்மான மறுங்காபட்டியிலிருந்து முத்துநாதன் மாமா வீட்டுக்கு வந்தாரென்றால் சின்னம்மா பாட்டி சாப்பிட கூப்பிடும்.
      அந்த மாமா ‘ஊருல ஒலகத்துல இல்லாதபடிக்கு சக்கிலியரோடு சேந்து தண்ணியெடுக்கிறீங்க இந்த லட்சணத்தில நான் சாப்பிடணுமாக்கும்என சொல்வார்
         ‘ஆமாமா நீ ஒங்க ஊருல மேலத்தெரு காரங்க்கிட்டே சேவுகம் செய்யப்போகும்போது அந்த பொம்பளைங்க கையில் தண்ணி ஊத்துனா வாங்கிக் குடிக்கிறது மட்டும் ஒழுங்கோ? மேலத் தெருக்காரங்க பறையன் சக்கிலியன் ரெண்டுபேரையும் கழுதவிட்டைன்னுதான் நெனக்கிறான் இதுல முன்விட்டையென்ன பினவிட்டையென்ன? ரெண்டும் ஒன்னுதான அவுங்க புத்தியில நமக்குள்ள எதுக்கு மாமா பேதம்.?என முத்துநாதன் வெடு வெடுன்னு பேசுவான்.
     நீயெல்லாம் படிக்கப் போற பாரு அந்த நெனப்புல பேசுவேடா அவர் பேசிவிட்டு தண்ணிகூட குடிக்காம்ப போய்விடுவார் .சின்னம்மா பாட்டி அட விடுடா அவன் தண்ணி குடிக்காட்டி நம்ம வீட்டுல சோறு வேகாதாயென்ன?என அனுப்பிவிடும.
      சிங்கராஜபுரத்தில் நகரங்களுக்கு போக வர, படித்திருக்கும் சில வாலிபர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். ஆனால் படிக்காத பாமர மேல்சாதி மக்கள் கடைப்பிடிக்கிறதீண்டாமை காரியங்களை தடுத்து நிறுத்தமுன்வரமாட்டார்கள். இப்படியான ஊரில் சின்னம்மா பாட்டியும,நாவிதர் தெருவில வள்ளியம்மா இருவரும்தான் ஊரில் பிரசவம் பார்க்கும் கிராமத்து டாக்டர்கள். இன்னொரு அம்மா மூன்றுமைல் தூரத்திலிருக்கும் பூத்தாம்பட்டியில் இருந்த்து. இவர்களில் சின்னம்மா பாட்டிதான் கைதேர்ந்த பிரசவ கலையைக் கையில் வைத்திருந்த்து.
      மேல்த்தெரு பெண்களுக்கு பிரசவம் பார்க்கவேண்டுமென்றால் சின்னம்மா பாட்டிக்கு ஆளனுப்புவார்கள். உடனே சின்னம்மா பாட்டி வேகு வேகுன்னு புறப்பட்டிரும்.மேலத்தெரு மந்தை ஆரம்பத்தில காலில் இருக்கும் செறுப்பு கைச்செறுப்பாக மாறிவிடும். சாதாரணமாக இவர்கள் வீட்டுக்குள் போக முடியாது வாசலின் தூரத்தில் நின்று பேசிவிட்டோ தண்ணீர் கையில் ஊற்றுவார்கள் வாயினருகே கையை வைத்து குடிக்கவேண்டும்.ஆனால் பிரசவம் பார்க்கச்செல்லும்போது.வா சின்னம்மா என வாஞ்சையோடு அவர்கள் வாய் அழைக்கும்.காரணம் ஆஸ்பத்திரியில்லாத ஊரில் இரண்டு உயிர்களை காப்பாத்த வேண்டுமல்லவா? சின்னம்மா பாட்டியும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு தட தடவென வீட்டுக்குள் நுழைந்து  வலியின் வேதனையில் புரளும் பிரசவப் பெண்ணை அழைத்து வெந்தயம் வறுத்து பொடியாக்கி அதை வெண்ணீரில் கலக்கி வெள்ளைப்பூடு தட்டி அதில் போட்டு குடிக்கச் சொல்லும்..உடம்பு இளகுவதற்காக கொடுக்கும் கைமருந்து.பின்பு நல்ல தைரியப்படுத்தி செய்யவேண்டிய முறைகளையெல்லாம் செய்து அப்படியே குழந்தையை லாவகமாக பிடித்து கையில் ஏந்தி வெளியே எடுத்து கழுவி பெண்ணின் பெற்றோர்களிடம் காடடிவிட்டு  ஒருமாதிரி மயக்கநிலைமையில இருக்கும் பிள்ளையைப் பெற்ற தாயிக்கு வேப்ப எண்ணெயில் கொஞ்சம் இஞ்சிச் சாற்றை விட்டு  கொடுக்கும் சின்னம்மா பாட்டி.ஏதாவது ஜன்னி மாதிரி வந்திரக்கூடாதே என்பதற்கு கொடுக்கும் தடுப்பு மருந்தாம்..அப்போது பெற்றோருக்கும் மாமியார் மாமனார் ஆகியோருக்கு சின்னம்மா மேல வரற பாசத்திற்கு அளவே இல்லை.
     ‘சின்னம்மான்னா சின்னம்மாதான் ஒன்னோட கைராசியே தனி சின்னம்மாஎன புகழ்ந்து தள்ளுவார்கள். இந்த நேரம்பார்த்து பேறுகாலம் பார்த்தவீட்டில் தண்ணிவாங்கிக் குடிக்கணுமின்னு ‘ஒரு சொம்புத தண்ணி கொடும்மா என கேட்கும் அப்போது தீட்டுப்பார்க்காமல் இந்தா சின்னம்மா என சொம்பு நீரை கையில் கொடுத்து பாட்டி குடித்தபின்பு சொம்பை வாங்கி கொள்வார்கள். அப்போது   தன் பிள்ளையின் உயிரு சக்கரைன்னு  நினைக்கும்போது தீண்டாமையெல்லாம் போய்விடும்.மற்ற நேரத்துலதான் நாங்க தொட்ட ஒட்டிக்கும்என மனதில் கருவிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிவிடும்
      .இப்படிப்பட்ட ஊரிலிருந்து கரடு முரடான பாதைகளைக் கடந்து முத்துநாதன் பேராசிரியர் இடத்தைப் பிடித்து நாகர்கோவிலுக்கு வந்த வாழ்க்கைப் பயணம் தனிக்கதை.
    இப்படியெல்லாம் அனுபவத்தில் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தும் மக்கள் இன்னும் உயிரைக் காப்பாற்றிய மக்களை ஒதுக்கிவைத்திருக்கிறார்களே. ஆஸ்பத்திரியே இல்லாத காலங்களில் எத்தனை பாட்டிமார்கள் சின்னம்மா பாட்டிபோல ஊருக்கு நாலைந்துபேர் இலவச மருத்துவச்சிகளாக இருந்தார்கள் .ஆனால் இந்த விஞ்ஞான காலத்துல நாம் இப்படியெல்லாம் பயப்படவேண்டியுள்ளதே என சிந்தனையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தார் முத்துநாதன்.
     தனது மகளின் பிரசவத்திற்கு நேரம் போயிக்கொண்டே இருந்த்து. இரவு எட்டுமணி ஆனபோது.டாக்டரம்மா அழைத்து ‘நான் ரொம்ப முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன்.குழந்தை எடை அதிகமானதாலதான இவ்வளவு நேரமாகுது.இன்னும் ஒருமணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம் அதுக்குப்பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிப்போம் என சொன்னவுடன். பேராசிரியர் முத்துநாதனுக்கு முப்பத்திரெண்டு வருடங்களுக்குமுன்னால் பி காம் படித்துமுடித்தவுடன், தனது பெரியப்பா மகளை பிரசவத்துக்கு திண்டுக்கல்லில் பிரபலமான ஆஸ்பத்திரியில் சேர்த்து இன்று காத்திருப்பதுபோல அன்று வெகு நேரம் காத்திருந்தபின்பு குழந்தை எடை அதிகமானதால் சிறிய ஆபரேசன் செய்யவேண்டுமென செய்து இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தையை எடுத்தபின்பு தாயைக் காப்பாற்ற முடியாத சோகம் உருவானது அப்படியே ரத்தம் சட்டையில் சிந்தச்சிந்த தூக்கி காரில் வைத்து ஊருக்கு கொண்டு சென்ற சம்பவம்வேறு வந்து வந்து போனது.இருந்தாலும் அந்த காலத்தல மருந்து மாத்திரைகள் ஊசி மருந்து அதிகம் கண்டுபிடிக்காத்தால் அப்படி ஆனது.இப்போது அப்படியெல்லாம் வராது என ஆறுதல் படுத்திக்கொண்டு  பேராசிரியர் முத்துநாதன் டாக்டரம்மாவிடம் மகள் ஜெகத்பிரியா ரொம்ப நேரம் வலியைத் தாங்கமாட்டாள் வேணுமின்னா சிசரியன் செய்துடுங்கோ டாக்டர் என சொன்னவுடன். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க சார் இன்னும் அரைமணிநேரத்துல குழந்தை வெளியே வர வாய்ப்பி இருக்கு.கர்ப்ப்ப் பை நல்ல திறந்து கொடுக்குது.முயற்சி செய்கிறோம் .சிசரியனெல்லாம் தேவைப்படாது ‘ எனத் தைரியம் சொல்லிச் சென்றுவிட்டார். பிரசவ வார்டு உள்ளே இருந்த நர்ஸ் நல்ல முயற்சி செய்து டாக்டருக்கு உரியமுறையில் உதவி செய்தார். டாக்டருக்கு இணையாக அனுபவமுள்ள நர்ஸின் பணி தொடர்ந்து கொண்டிருந்த்து,உள்ளே மகள் ஜெகத்பிரியாவின் ரணவேதனை கதறல் சத்தம் வெளியே கேட்டது. கூடவே மழலையின் வீரென்ற அழுகைச்சத்தமும் கேட்டது. நர்ஸ் வெளியே வந்து

     ‘ஜெகத்பிரியா கூட வந்திருப்பவங்க யாருங்க? பேராசிரியர் முத்துநாதனும் சுந்தரவதனியும் சென்றார்கள் . ‘பழைய வேட்டி எண்ணெய கொடுங்க பெண்குழந்தை பிறந்துள்ளது.என்று  செய்தியை சொன்னவுடன் தேர்தலில்வெற்றிபெற்ற செய்தி கேட்டு பட்டாசு கொளுத்திக் கொண்டாடும தொண்டர்களைப்போல் ஏற்கனவே சுகப்பிரசவ ஆனந்த்த்தில் கலகலப்பாக இருக்கும் மக்களிடையே  முத்துநாதனின் மகன் எழில்சிகரம் தான் வாங்கிவந்த இனிப்புகளை பரிமாறி மகிழ்ந்தனர்.