தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியிலும்,தெலுங்கிலும் ஊடகங்களின் புண்ணியத்தால் தொடர்ந்து திரையரங்குகளில் பயணித்து மக்களின் மூளையில் ஒரளவு புதிரான விஷயங்களை பதிக்க முடியுமா என முயற்சித்து, ரெட்ஜெயின் கம்பெனி தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவின் அசாத்திய நடிப்பிலும், கமலஹாசனின் புதல்வியான ஸ்ருதிஹாசனின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது ஏழாம் அறிவு திரைப்படம்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் கி பி ஆறாம் நூற்றாண்டில் பல்லவ வம்சாவழி வந்த போதிவர்மன் தற்காப்புக் கலை,வர்மக்கலை ஆகியவற்றில் வல்லவராகத் திகழ்கிறார். இக்கலைகளை இந்தியாவிலிருப்போருக்கு கற்றுக்கொடுக்கிறார்.
அக்காலத்தில் சீனாவில் இனந்தெரியாத கொடியநோய் பரவி ஏராளமான மக்களை
கொன்று குவிக்கிறது. போதிவர்மனின் குரு சீனாவுக்கு போதிவர்மனை அனுப்பி அவதிப்படும் சீனமக்களுக்கு உதவும்படி கட்டளையிடுகிறார். அவரும் தனது இரு
குழந்தைகளை மனைவியோடு விட்டுவிட்டு தன்னுடைய சுவடியை ஒப்படைத்துவிட்டு செல்கிறார். ஆரம்பத்தில் அவரை வரவேற்க சீன மக்கள் வெறுக்கிறார்கள்,பின்பு ஒரு சிறுமிக்கு ஆபத்தான நிலையிலும் தோல்நோய் இருந்ததை குணமாக்கி குழந்தையை பழைய அழகான நிலையில் ஒப்படைக்கும்போது, சீன மக்கள் அனைவரும் காலில் விழுந்து புத்தருக்கு அடுத்த படியாக போதிவர்மனை துதிக்கிறார்கள். அவரிடம் இருக்கும் அத்தனை கலைகளையும் அம்மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். பல காலமாக அங்கிருந்துவிட்டு இந்தியா திரும்ப நினைக்கிறார். ஆனால் சீன கிராம மக்களின் திட்டமாகிய அவரை அங்கேயே கொலைசெய்து அந்நாட்டில் புதைத்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அந்த நாட்டிலேயே தங்கி நோயைத் தடுத்திவிடும் நம்பிக்கையில் கொன்று புதைக்கிறார்கள் .அதற்குத் தானும் சாவதற்கு சம்மதிக்கிறார். சீனமக்கள் புத்தருக்கு அடுத்த படியாக கோயில்கட்டி துதிக்கிறார்கள். வரலாற்றில் பிரபலமடைகிறார்.
படம் நவீன காலத்திற்கு நகர்கிறது. சீனாவில் போற்றப்படுகிற போதிவர்மன், காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஓர் அரசகுமாரன் என்று ஜெனிடிக் இஞ்சினியரிங் மாணவி (ஸ்ருதி ஹாசன்) சுபா ஸ்ரீனிவாசன் கண்டுபிடித்து அவருடைய டி என் ஏ 80% ஒத்திருக்கக் கூடிய அவருடைய வம்சாவழியினரில் உள்ள நபரைக் கண்டுபிடித்து அவரிடம் அந்த டி என் ஏ வை தூண்டிவிட்டால் அந்த போதிவர்மனின் குணாதிசியங்களையும்,திறமைகளையும் மீட்டெடுக்க முடியும் என்ற ஆராய்ச்சியின் மூலம், ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சாகசக் கலைஞராக வேலை செய்யும் (சூர்யா) அரவிந்த் என்ற வாலிபரிடம் 80 சதமான போதிவர்மனின் டி என் ஏ வோடு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டறிந்து அவரிடம் தூண்டிவிடும் முயற்சியில் இறங்குவது இம்மாணவியின் வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர் மூலம் சீனா இண்டலிஜெண்ட் துறைக்கு ரகசியம் தெரியவருகிறது.
சீனாவில் இண்டலிஜெண்ட் துறை ‘ஆபரேசன் ரெட்’ என்ற பெயரில் இந்தியாவில் நோயைப் பரப்பும் என்கிற ‘பயோ வார்’ அதாவது இந்த நவீன காலத்தில் ஒரு நாட்டை சண்டை போட்டெல்லாம் அடிமைப் படுத்த முடியாது.இப்படிப் பட்ட நுண்ணிய வழிமுறையில்தான் அடிமைப் படுத்த முடியும் என்ற திட்டத்தின்படி, இந்த நோய்கிருமி பரப்பும் பணிக்கு ,அந்த துறையில் பல அடிமுறைக கலைகளோடு,நோக்குவர்மம் என்கிற கலையில் வல்லமை பெற்ற டாங லீ என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி. ஒன்று இந்தியாவில் இனந்தெரியாத நோயைப் பரப்புவது,இன்னொன்று ஆராய்ச்சி மாணவியின் திட்டத்தை முறியடிக்க அவளைக் கொலை செய்வது ஆகிய இரு பணிகளை கொடுத்து அனுப்புகிறது. அவன் இங்கு வந்து ஒரு தெரு நாய் மூலம் நோய்கிருமியைச் செலுத்தி நோய் பரப்பிவிடுகிறான். அதை பார்த்து இவனை பிடிக்கவரும் காவல்துறையினருக்குள் நோக்கு வர்மத்தால் அவர்களுக்குள்ளே பகைமை உருவாக்கி ஒருவருக்கொருவர் சுட்டுக் கொலை செய்ய வைக்கிறான். மாணவி சுதா ஸ்ரீனிவாசனையும் அவருடன் இருக்கும் அரவந்த்தையும் கண்டறிந்து கொலை செய்ய முயற்கிக்கிறான் டாங்லீ. ஆராய்ச்சிக்குழு தப்பித்து வனப்பகுதியில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்து, உடனடியாக போதி தர்மனின் டி என ஏ வை இயங்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கும்போது ,அவ்விடத்திற்கே டாங்லீ வந்து சண்டை போடுகிறான். ஏராளம் பேரை நோக்கு வர்மத்தால் கொன்று குவித்த டாங்லீ வித்தை அரவிந்த் திடம் எடு பட வில்லை. காரணம், போதி தர்மனின் டி என் ஏ கொஞ்சம் இருப்பதால். இருந்தாலும் அவனின் அடிமுறைக் கலையின் சக்தியைப் பயன் படுத்தி அரவிந்த் தை மயங்குமளவு அடித்து துவைக்கிறான். பின்பு சோதனைக் கூடத்தில் முயற்சித்த போதிவர்மனின் டி என் ஏ வேலை செய்ய அரம்பித்து, டாங்கலீயின் நோக்குவர்மம் உட்பட அனைத்து சக்தியும் வேலை செய்ய மறுத்து வீழ்கிறான்.அரவிந்த்திடம் அபார சக்தி வந்து மக்களிடம நோயைப் போக்குகிறான். மக்களால் பாராட்டப் படுகிறான். அவனின் பேட்டியோடு படம் முடிகிறது. இதுவரை சர்க்கஸூம் சாகசமும்,டாங்லீயின் மந்திரக் கலையும் சண்டைக் காட்கிகளும் திரில்லை உருவாக்குவதோடு பழைய கால விட்டலாச்சாரியா படங்களுக்கு நினைவை இழுத்துச் செல்கிறது.நவீன அறிவியலைப் பயன்படுத்தி பல வித்தைகளை காட்டுவது குழந்தைகளை உற்சாகப் படுத்தும். ஆனால் இடையில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனமும்,இறுதியில் அரவிந்த் பேசும் வசனமும் படத்தின்மீது கடுமையான விவாதத்தைக் கிளப்புகிறது,
தேசப் பற்று முகமூடியில் ஒரு இந்துத்துவ சிந்தனையை உதிர்ப்பதாக உள்ளது. இனமாற்றம்,மதமாற்றம்,மொழிமாற்றம் ஆகியவைதான் இந்திய முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்றும். தமிழன் உலகத்திலேயே சிறந்தவன் என்ற உணர்வு மேலோங்கும்படியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.’ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனைக் கொள்வதற்குப் பெயர் வீரமல்ல,துரோகம்’ என்ற
வசனம் மனச் சாட்சியுள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
இது தமிழ் இன உணர்வை அழுத்தமாக பதிக்கிறது. ‘ரிசர்வேஷன்,கரப்ஷன், அட்மினிஷ்ட்ரேஷன் இவைகளால்தான் இந்திய முன்னேறாததற்கு காரணம் ‘என்ற வசனத்தில் கரப்ஷன்,இதுவரை ஆண்டவர்களின் அட்மினிஸ்ட்ரேஷன் காரணம் சரிதான்.ஆனால் ரிசர்வேஷன் எப்படி காரணமாக இருக்கும் ?,இது மேல்தட்டு வர்க்கச் சிந்தனையான இட ஒதுக்கீடு மறுப்பை பிரதிபலிக்கிறது., மதமாற்றம் குறித்து இந்துத்துவ வாதிகளின் குரலை எதிரொலிக்கிறது. மேலும் போதிதர்மன் தமிழன் என்பதில் ஐயத்தைக் கிளப்புகிறது.
இன்னும் ஒருபடி மேலே சென்று சீன தேசத்தை எதிரி நாடு போல சிந்தனைக் கட்டமைப்பை அழுத்தமாக உருவாக்குகிறது.இப்படி பலவிதமான சர்ச்சைகளை உருவாக்கும் படத்திற்குத்தான் ஊடகங்கள் பில்ட் அப் செய்கின்றன..
காரணம், இந்திய திருநாட்டில் தத்துவமும் நடைமுறையும் அரசியல் ,பொருளாதார,பண்பாட்டு தளங்களில் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால் ‘அடிப்படையில் பயணப் பட்டுக் கொண்டிருப்பதால்தான். ஒரு நாட்டின் இளைஞர்கள் அந்த நாட்டின் வரலாற்றைப் படிக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவது நல்லதுதான்.ஆனால் எந்த வரலாற்றைப் படிப்பது என்பதுதான் கேள்வி.
காலங்காலமாக உள்ளூர் தமிழன் ஒதுக்கப் பட்ட சேரித் தமிழனை தீண்டாமைக்கு உட்படுத்தி, தெருவில் செருப்பு அணிவதற்குத் தடை , இந்து கோயில்களில் நுழையத் தடைவிதிப்பதும், பஞ்சாயத்துகளில் தலித்துகள் தலைவர்களாக வந்தாலும் நாற்காலியில் உட்கார தடைவிதிப்பதும், இவர்களை மனிதனாகவே மதிப்பதற்கு அஞ்சுவது ஆகியவை இந்த இருபத்தோராவது நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை சமீபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழுப்பு முன்னணி நடத்திய தமிழக ஆய்வில் 22 மாவட்டங்களில்1848 கிராமங்களில் 48 வடிவங்களின் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவது தொடர்கிறது எனக் குறிப்பிடுகிறது. இக்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள 25 சதமான தா.ப, பழங்குடி மக்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மனிதன் என்ற ஸ்தானத்தில் வைப்பதற்கு முருகதாஸ் போன்றோர் இந்த வரலாற்றையும் படிக்க வேண்டியது அவசியமாகிறது..’சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்புக் குடிமக்களுக்கும் பட்டியல் குலத்தினர்க்கும் பழங்குடியினர்க்கும் இவ்வகுப்புகளின் முன்னேற்றஙகருதி அரசு எந்த சிறப்பு ஏற்பாடு செயவதையும் இந்த விதியிலுள்ள எந்த பகுதியும் அல்லது விதி 29(2)ல் உள்ள எதுவும் தடுக்காது.’ எனத் தந்தை பெரியாரின் போராட்டத்தால் 2-06-1951 அன்று அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம் ஆகும். 1990 ல் வி.பி.சிங் தலைமையிலான தேசியமுன்னணி அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒரு பகுதியை அமலாக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதம் இட ஒதுக்கீடு செய்த்தது. இதை 1992 ல் உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் அங்கீகரித்துள்ளது. இப்பிரச்னை போகிற போக்கில் விமர்சனம் செய்யக் கூடியது அல்ல. மிகப்பெரிய போராட்ட வரலாறும்,சமூக நீதி வரலாறும் ,நீண்ட காலம் சிலர் பலரை ஒடுக்கிய வரலாறும் பின்னணியாகக் கொண்ட சமூக அரசியல் ,கலாச்சாரப் பிரச்னையாகும்.இவற்றையும் சேர்த்துப் படிக்கவேண்டியுள்ளளது.
அது போல மதமாற்றம் குறித்து வெறும் உணர்வுரீதியில்,ஓரிரு வாக்கியங்களில் சொல்லிப் போகிற விசயம் இல்லை.மதம் மாறுவது பெரும்பாலும் அடித் தட்டு மக்கள்தான். இவர்கள் மதம் மாறியதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று;
சமூக அடக்குமுறை. தீண்டாமைக் கொடுமை, இரண்டு; பொருளியல் நலன்களுக்காக. இந்திய அளவிலும்,தமிழக அளவிலும் பௌத்த சமண சமயங்களின் வீழ்ச்சிக்குப் பின் ஒரு நெடிய காலம் சனாதனிகளின் கர்ண கொடூர தாக்குதலுக்கு இலக்காகி இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்திற்கும், மேலாடை அணியக்கூட உரிமை மறுக்கப்பட்ட சாணார் இன மக்களுக்கும் , கடற்கரைப் பகுதியில் அரேபியர்களாலும், உள்நாட்டு சாதி வெறியர்களாலும் ஒருங்கே தாக்கப்பட்ட பரதவர்களுக்கும் ‘கிறிஸ்துவின் முன் அனைவரும் சமம்’என்ற குரல் புதிய வாழ்வின் நம்பிக்கையின் குரலாகவும் அமைந்ததால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். ஆக இந்து மதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிற சாதீய அடுக்குமுறையும் ,சனாதன ஒடுக்குமுறையும் ,தீண்டாமையும்தான் பிரதான காரணமாகிறது. குமரி மண்ணில் தோன்றிய அய்யா வைகுண்டர் கூட இந்து சனாதன பிராமனியப் பண்பாட்டுக்கு எதிராகத்தான் வழிபாட்டை உருவாக்கி, ,சாதிய மேலாதிக்கம் உருவாக்கிய மார்புச் சேலை உடுத்தக் கூடாது என்பதற்கு எதிராக கலகம் செய்து அன்புக்குடி மதம் உருவாக்கி தனி வழிபாட்டு முறையை உருவாக்கயதும் இந்தப் பின்னணிதான் வர்ணாஸ்ரம அடுக்குமுறைக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் குரலோடு இந்தியாவில் தோன்றிய புத்தமும், சமணமும் ஏன் வெளிநாடுகளுக்குப் போயின? தமிழகத்தில் சைவத்துக்கும் சமணத்துக்கும் மிகப் பெரிய சண்டை நடந்தது ஏன்? என்ற வரலாற்றையும் சேர்த்தே படிக்கவேண்டி உள்ளது.
இந்திய வெளியுறவு அரசியலையும் இப்படம் விவாதத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தியாவில் உண்மையிலே உலகம் முழுதும் தீங்கு செய்யும் நாட்டை விட்டு விட்டு, சீனாவை எதிரி நாடுபோல சித்தரிப்பதும் பொருந்துவதாக இல்லை.பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகளின் அரசியலில் நுழைந்து எண்ணெய் வளத்தின் மீது கண்வைத்து பொம்மை அரசுகளை உருவாக்கும் நாட்டைப் பற்றி எக்கருத்தும் இல்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962 ல் நடந்த யுத்த அனுபவம் துரதிஷ்டமானது, கசப்பான அனுபவமே. தற்போது கூட இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் இரு அரசுகளும் பேச்சுவார்த்தையைத் துவக்கவேண்டும். அதன்மூலம் தெற்காசிய நாடுகளில் இணக்கமான பொருளாதார முன்னேற்றம் உருவாக்கவேண்டும் என்பது உண்மையான தேசப்பற்றுள்ளோரின் ஏக்கம்.
இப்படத்தைப் பார்த்தோருக்கு போதிதர்மன் குறித்து பல சந்தேகங்கள் உருவானது. இப்படியெல்லாம் புயற்காற்றை உருவாக்குமளவு இருந்திருப்பாரா?
கொலை செய்வதற்கு சீனாவில் சம்மதித்திருப்பாரா? என்பதெல்லாம் ஏற்பட்டன.
நவம்பர் 15 தேதியீட்ட இந்து நாளேட்டில்( ஹைதராபாத் எடிசன்) பெங்களூர் சைலம் புத்த துறவிகள் மடத்தின் ஸ்தாபகர் திரு பாபு.டி.ரகு இப்படம் பற்றி விமர்சித்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.’ புகழ்பெற்ற புத்த சமூகத் தலைவர் போதிதர்மனை சினிமாவுக்கென்று சிதைத்திருக்கிறார். ஒரு துறவியின் குணாதிசயங்கள் பரந்த அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறது. படத்தில் காட்டியிருக்கக் கூடிய வரலாற்றுக் கூறுகள் ஏதும் உண்மையில்லை. ஏழு வயதில்
புத்த மதத்தை ஏற்றெடுத்து 150 வது வயதில் சீனாவுக்கு சென்று மஹாயான புத்த மதத்தின் தியானப் பண்பை பரப்புவதற்கு செல்கிறார்.படத்தில் போதிதர்மன் மணமாகி இரு குழந்தைகளைவிட்டுச் சென்று நோயைக் குணப்படுத்தவும.கிராம மக்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுப்பதற்கும் சென்றார் எனக் குறிப்பிட்டிருப்பது தவறு. ஆனால் அவர் குகையிலேயே ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்தவர் மக்களிடம்
பேசவும் இல்லை,யாருக்கும் சண்டைப் பயிற்சி வழங்கவும் இல்லை. ஆந்திரப்பரதேசத்துல் நாகர்ஜூன ஹோண்டாவில் ஸ்ரீபர்வதா என்ற பகுதியில் விஷத்திலிருந்தும்,நோயிலிருந்தும் எதிர்ப்பு சக்தி பெறுவதற்குப் பயிற்சி எடுத்தாரேயொழிய காஞ்சிபுரத்தில் வர்மக் கலையை பயிற்சி எடுக்கவில்லை என்பதோடு,படத்தில் போதிவர்மனின் சடலத்தை கல்லறையிலிருந்து எடுப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.ஆனால் வரலாற்றில் குறிப்பிடுவது அவரின் சடலம் கண்டுபிடிக்கப் படவேயில்லை. மறக்கப்படும் அல்லது மறைக்கப்படும் வரலாற்றை அழிப்பதற்கு ஒப்பாகும். எனவே படத்தின்மூலம் வெளியே அறிவிப்பதற்குமுன் இயக்குநர் மிகுந்த எச்சரிக்கையோடு ஆழ்ந்து யோசித்து செயல்பட்டிருக்கவேண்டும்.’என்று மிக கடுமையாக விமர்சித்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.படத்தை வெளிப்படுத்தும் முறையில் அறிவியல் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்திய இளம் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்
அதன் உள்ளடக்கத்தில் பரந்த அளவு சிந்தனையை செலுத்தி,சமூகம் பொதுநோக்கில் விழிப்புணர்வு அடையும்படி கதை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.