ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகன்
அய்யன்காளி
முனைவர் க கணேசன் கொட்டாரம்
அய்யங்காளி -பெயரல்ல. கேரளத்து ஓடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் குறியீடு. சமூகநீதி இயக்கம் ஒன்றின் அன்றாடத் தன்மையில் மனித அம்சங்களை காணக்கூடியவர்களுக்கு அய்யங்காளியின் வாழ்க்கை ஒரு பொக்கிஷமாகும். கேரளத்தில் நிலவிய பார்ப்பனியச் சமூக அமைப்பை சமூக அநீதியின் கொடூரக்களமாகக் கண்டு, சாதி ஆதிக்கச் சித்தாந்தத்தையும், செயல்பாட்டையும் அடித்து நொறுக்கியவர். தலித் மக்களின் ஏகோபித்த தலைவர் அம்பேத்கருக்கு முன்பே, தலித் விடுதலை வரலாற்றில், முன் உதாரணமாக கேரளத்தை சமூக நீதிக்கான போராட்டக்களமாக உருவாக்கி, அதில் முழு வெற்றியும் கண்ட உத்தமத் தலைவர்.அவரின் வீரமிக்க போராட்ட வரலாற்றை மனதில் அசை போடுவது மனதில் உரமேற்றும் என்பதில் ஐயமில்லை.இன்னும் நாடெங்கும் தீண்டாமையும், சாதி ஆணவப் படுகொலை கொடூரம் தொடர்வதாலும், சாதிய பாகுபாடு நிலவி வருவதாலும் சமூக சமத்துவப் போராளிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்கவேண்டியது மிக அவசியம். அவர்களின் வரலாற்று வழித்தடத்தில் ,இன்றைய அவலங்களை போக்குவதற்கு ஒரு சரியான இயக்கங்கட்டி புதிய வழிமுறைகளைக் கண்டறிய முடியும்..
அய்யங்காளிக்கு முன் திருவிதாங்கூர் சமூக நிலைமை
கேரளத்தில் நம்பூதிரிகள் பரசுராமனின் நிலங்களின் உரிமையாளர்கள் என கருதப்பட்டனர். எனவே நாடெங்கும் பெருமதிப்புடன் உயர்ந்த செல்வாக்குடன் நடத்தப்பட்டனர்.
சமூக அமைப்பில் இவர்களின சமூக, அரசியல், பொருளாதார அதிகாரங்கள் திருவிதாங்கூர் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது.
திருவிதாங்கூரிலிருந்த நம்பூதிரிகளின் எண்ணிக்கை 1854 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 10,238 தான். மிகச் சிறிய அளவில் இருந்தாலும், அரசர்கள் அவர்களின் அடிபணிந்து நடந்ததால் புரோகிதர்களாகவும், அரசியல் ஆலோசகர்களாகவும், நில உடைமையாளர்களாகவும் முழு செல்வாக்குடன் திகழ்ந்தனர். மனுவின் கட்டளைகளை அப்படியே நடைமுறைப்படுத்தி வர்ணாஸ்ரம அமைப்பை அச்சுப் பிசகாம கட்டிக்காத்து வந்தவர்கள் இவர்களே.
11 ஆம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உச்சகட்டத்தில் இருந்தது. இதில் பெரும்பாலான நிலப்பிரபுக்கள் நாயர்கள் ஆவார்கள். போர்முறையிலும் ஆட்சி முறையிலும் பயிற்சி பெற்ற நாயர்கள் ஆளும் வர்க்கத்தினராக அரசு அலுவலகங்களில் உயர்ந்த பதவிகளை வகித்தினர். படைவீரர்களாகவும் காவலர்களாகவும் இருந்தனர்.
நாயர்களைப் பற்றி அம்பேத்கர்
‘நாயர் சாதியினர் பிரபு குலத்தவராய் இருந்து போரில் பணியாற்றுவதைத் தவிர இவர்களில் சிலருக்கு வேறு எந்த கடமையுமில்லை. இவர்கள் எங்கு போனாலும் ஆயுதம் வைத்திருப்பவர்கள். சிலர் வாளும் கேடயமும் வைத்திருப்பர். இவர்கள் அனைவரும் மன்னருடனுன் ஏனைய பெரும் பிரபுக்களுடனும் வசிக்கின்றனர். ஆயினும் அனைவருக்கும் மன்னரிடமிருந்து அல்லது இவர்கள் சார்ந்து வசிக்கும் பெரும்பிரபுக்களிடம் உதவித் தொகை கிடைக்கிறது. இவர்கள் அப்பழுக்கற்ற உயர்குடியினர். கீழ்சாதியினர் எவரையும் இவர்கள் தீண்ட மாட்டார்கள். நாயர் வீட்டில் அல்லாமல் வேறு எங்கும் உண்ணவோ பருகவோ மாட்டார்கள்’
இவர்கள் மருமக்கள் வழி மான்யம் முறையை தங்களின் திருமண உறவில் கடைப்பிடித்தார்கள்.’
புலையர்களைப் பற்றி அம்பேத்கர்
மற்ற அனைவரையும் விடவும் சபிக்கப்பட்டவர்களாகவும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டவர்களாகவும்,இவர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வயல்களிலும் ரகசியமான மறைவிடங்களிலும் வசிக்கிறார்கள். மேற்சாதி மக்கள் இந்த இடங்களுக்குத் தற்செயலாகப் போனால்தான் உண்டு. இவர்கள் மிகவும் குறுகிச் சிறுத்த குடிசைகளில் வசிக்கிறார்கள். எருமைகளையும்,எருதுகளையும் பயன்படுத்தி நெல் வயல்களை உழவு செய்கிறார்கள். தொலைவிலிருந்து மட்டுமே நாயர்களிடம் பேசுவார்கள். அவர்களுக்குக் கேட்க வேண்டும என்பதற்காகக் கத்திப் பேசுவார்கள். இவர்கள் சாலையில் செல்லும்போது உரக்க ஒலியெழுப்பியபடி செல்வார்கள். யாரும் எதிர்பட்டு விடக்கூடாதாம். இவர்களைத் தீண்டிவிட்டால் தீண்டப்பட்ட உறவுக்காரர்கள் அவர்களைக் கொன்று விடுவார்கள். இப்படிக் கொலை செய்வதற்காக எத்தண்டனையும் அனுபவிக்க வேண்டியதில்லை.
பறையர்களைப் பற்றி அம்பேத்கர்
‘ ஏனைய எல்லா சாதிகளிடமிருந்தும் விலகி மிகவும் தனித்தொதுங்கிய இடங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் எவருடனும் எவ்விதத்திலும் உறவாடுவது கிடையாது. இவர்கள் சைத்தான்களை விட மோசமானவர்கள் என்றும் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கருதப்படுகிறவர்கள். இவர்களைப் பார்த்தாலே போதும், தீட்டு ஒட்டிக்கொள்ளும், சாதி கெட்டுப்போகும் என்று உயர்சாதியினர் என்று கருதப்பட்டவர்கள் நினைத்துவருகிறார்கள்.’
திருவிதாங்கூர் ராஜியத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்
சவர்ணர்கள் அவர்ணர்கள்
திருவிதாங்கூரில் சமூக அமைப்பானது மதத்தின் அடிப்படையில் இந்துக்கள் , இந்துக்கள் அல்லாதோர் என்ற இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நான்கு வர்ணங்களுக்குள்
இடம்பெற்றிருக்கும் சாதியினர் சவர்ணர்களாகவும், வர்ணங்களுக்குள் அடங்காதோர் அவர்ணர்கள் எனவும் அழைக்கப் பட்டனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் மனித அந்தஸ்தே மறுக்கப்பட்டு, வாழ்வியல் உரிமை பிடுங்கப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சாதியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
இந்துக்கள் சாதியின் அடிப்படையில் 1050 பிரிவுகளில் இருந்தாலும், பார்ப்பணர்,சத்திரியர், நாயர், வேளாளர் ஆகியோர் உயர்த்தப்பட்ட சாதியினராகவும், ஈழவர்,நாடார்,கம்மாளர்,மீனவர்,புலையர் பறையர் ஆகியோர் தாழ்த்தப்பட்ட சாதியினராகவும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டோரில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் ஈழவர், நாடார்களும் ஆவர்.
நெருங்காமை கொடுமைக்குள்
தாழ்த்தப்பட்ட சாதியினரான ஈழவரும் நாடாரும் பார்ப்பனர்களிடமிருந்து 36 அடி தூரமும், நாயர்களிடமிருந்து 12 அடி தூரமும் விலகி நிற்கவேண்டும் என்ற நெருங்காமை விதியை கடைப்பிடிக்கும் கொடுமை இருந்தது. தாழ்த்தப்பட்டோரில் பிற சாதியினர் இன்னும் அதிக தூரம் விலகி இருக்குமாறு சாதி இடைவெளி பின்பற்றப்பட்டுள்ளது.
தொழில்களில் தீட்டு
துணி துவைத்தல், முடி வெட்டுதல், இறைச்சி விற்பனை செய்தல், தோல் பொருட்களில் வேலை செய்தல்,மீன்பிடித்தல்,போன்றவை தீட்டுப்பட்ட தொழில்களாகக் கருதப்பட்டன.
விலக்கி வைக்கப்பட்டவர்களாக
தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் சாதி மக்கள் வாழுமிடங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதுமில்லால், பொதுக் குளங்கள் கிணறுகள் சந்தைகள் ஆகியவற்றையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அரசு அலுவலகங்களிலும் நெருங்காமை
அரண்மனைகள் , சத்திரங்கள், அரசு கட்டிடங்கள் இவற்றில் செல்ல அனுமதி கிடையாது. நீதிமன்ற்ங்களிலிருந்து 50 அடி அல்லது 60 அடி தூரம் விலகி இருப்பதோடு, அரசு அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்கு பல நாட்கள் வெளியே மழையிலும் வெயிலிலும் காத்திருக்கவேண்டிய அவலம். என்றாவது ஒருநாள் அரசு அதிகாரிகள் கண்ணில் தென்பட்டால் மனு வாங்கப்படும். நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோரை சாட்சியாக விசாரிக்க நேர்ந்தால், சாட்சிக்கும் வழக்கறிஞருக்கும் இடையே சற்று தொலைவில் ஒரு நபர் தாழ்த்தப்பட்டோரிடம் செய்தியைக் கேட்டு வழக்கறிஞரிடம் சொல்லுவார்.நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு இடையில் நிற்கும் நபர் மூலம் பதிலைக் கேட்டு சொல்லுவார். இதனால் சில நேரங்களில் வழக்கின் போக்கு பதில் தெளிவாக கேட்காததால், தலித்துக்கு எதிராக போய்விடும்.
நீதியில் ஓரவஞ்சனை
மிகக் கொடிய குற்றங்கள் செய்தாலும், பிராமணர்களுக்கு தண்டனையே இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறிய தவறு செய்தாலும், மரண தண்டனை வழங்கப்பட்டது.அடிமைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகக் கொடூரமானது.
திருவிதாங்கூரில் பொருளாதார கட்டமைப்பு
திருவிதாங்கூர் பகுதியில் நிலப்பிரபுக்களுக்கு ஜென்மி என்று பெயர். பெரும்பாலும் பார்ப்பன நாயர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களின் நிலங்களில் அடிமைகள் பயிரிட்டு வந்தனர். அரசியல் பொருளாதார சமூக அதிகாரங்கள் ஜென்மிகளின் கைகளில் குவிந்திருந்தன.
பிராயச்சித்தம்
கீழ்சாதியினராக கருதப்பட்டோர் மீது சுமத்தப்பட்ட அபராதங்களுக் மிகவும் கடுமையானது பிராயச்சித்தமாகும். பல வேளைகளில் குற்றவாளிகள் அல்லாதோரிடமும் கட்டாயமாக அபராதத் தொகை பிராயச்சித்தமாக வசூலிக்கப்பட்டது.
அடிமைகள் நிலை
ஜென்மிகள் எனப்பட்ட நிலப் பிரபுக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு சொந்தமான அடிமைகளை வைத்திருந்தனர். ஆடு மாடுகளை விற்பது போல அடிமைகளையுன் விற்பனை செய்தனர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் ஒரு அடிமையின் விலை ரூபாய் ஆறு முதல் ஒன்பது வரை.பெண்களின் விலை ஆண்களை விட குறைவாகவே இருந்தது.
மேற்குறிப்பிட்ட மோசமான சமூக பொருளாதார நிலைகள் திருவிதாங்கூர் ராஜியத்தில் அய்யங்காளி பிறந்த காலகட்டத்திலு நிலவியது.
விதி விலக்கான மனித நேய ஜென்மி
பனங்கோட்டு ஊற்றிறத்து கோவிந்தபிள்ளை என்ற ஜென்மியின் கீழ்தான் அய்யங்காளியின் பெற்றோரான அய்யனும், மாலாவும் பண்ணையடிமைகளாக முழுநேரமும் வேலைசெய்து வந்தனர்.இவர்களது உழைப்பால்தான் ஜென்மிக்கு பயிர்செய்யும் நிலங்கள் பெருகிக் கொண்டே போனது.ஏற்கனவே பெரிய நிலச்சுவான்தாராக ஆகியிருந்த அவர், பிற ஜென்மிகளைப் போல ஆதிக்க மனம் கொண்டவரில்லை. சக நிலப்பிரபுக்களின் ஆதிக்க ரகசியங்களை அறிந்த அவர் தனது நிலப் பெருக்கத்திற்கு காரணம் அய்யன் மாலா தம்பதியினரினு உழைபபே காரணம் என நினைத்து அண்ணன் தம்பி உறவையே வளர்த்து வந்தார். இவர்களை அடிமைகளைப் போலல்லாமல் மிக அன்பாக நடத்தி வந்தவர், அய்யன் மாலா தம்பதியருக்கு தனது மொத்த நிலத்தில் ஒரு சிறு பகுதியை அய்யனுக்குத் தந்து, பயிர் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து சொந்தமாக வைத்துக்கொள்ள சொன்னார். அவர்கள் அந்த நிலத்தில் பாடுபட்டு 5 ஏக்கர் நிலம் சேர்க்கும் அளவு விவசாயக் குடும்பமாக ஆகி விட்டது.பொருளாதார அடிமைத் தனத்திலிருந்து மீண்டெழுந்தனர். பண்ணையார் கோவிந்த பிள்ளை அப்போதும் இக்குடும்பத்தோடு பாசமாகவே இருந்தார். பிற நிலப்பிரபுக்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. கோவிந்த பிள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் மற்ற பண்ணையார்கள் இறங்கினார்கள். அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
சமத்துவ சூரியன் பிறப்பு;
1863 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அய்யன் காளி பிறந்தார். இவரின் பெயர் காளி என்பதுதான். தனது அப்பாவின் பெயரோடு காளியை இணைத்துக் கொண்டதால்தான் அய்யன்காளி என்று பெயராயிற்று. இவரோடு ஏழு பிள்ளைகள். நான்கு தம்பிகள்.மூன்று தங்கைகள்.அக்காலத்தில் இவர்களுக்கு படிப்பதற்கான வசதியிருந்தும்,சமூக மோசமான ஒதுக்கல்நிலையிருந்ததால் படிக்க வாய்ப்பில்லை. கூட்டுக்குடும்ப பாசத்தோடு அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அய்யன்காளிக்கு வீட்டில அனைவரும் மதிப்பு கொடுத்தனர்.
வலிமைபெற்ற அய்யங்காளியின் உடல், மனம்
நல்ல கம்பீரத்தோடு உரம்பெற்று வளர்ந்தார்.பொலிவான தோற்றம்.தான் நினைத்த காரியத்தை சாதிப்பதில் எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார்.துடிப்புள்ள மனோதிடத்துடன் விளையாட்டு வீரராகவும் வளர்ந்து, கிட்டிப்புல்,கால்பந்து விளையாட்டுகளில் நல்ல தேர்ச்சிபெற்றவராக விளங்கினார். கிராமியக் கலைகளும் அய்யன்காளிக்கு அத்துபடியானது. நல்ல ஆளுமைத் திறன் கொண்டவராதலால் ஆதிக்கச் சாதி இளைஞர்களும் இவரைச் சுற்றி வரலானார்கள் நண்பர்களாக பழகினர். சாதியின்பேரால் ஊர் கூறுபோட்டு நின்றாலும், விளையாட்டு, திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் ஊர் இளைஞர்கள் ஒன்றுபட்டு விளையாடினர்.
ஓணம் பண்டிகையில் தீண்டாமை அதிர்ச்சி
ஓணம் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்தாட்டத்தில் அய்யன்காளிம் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி அனைவரையும் வியக்கவைத்தார். விளையாட்டின் போக்கில் எதிர்பாராத விதமாக அய்யன்காளி தனது காலால் உதைத்த பந்து மிகவும் உயரத்தில் பறந்து சென்று பக்கத்திலிருந்த நாயர் வீட்டின் மேல் விழுந்தது. ஒரு புலையர் வகுப்பைச் சார்ந்த பையன் சாதி இந்துக்களின் இளைஞர்களோடு இணைந்து சரிசமமாக பழகுகிறானே என்று முன்பே வெறுப்பை மனதில் வைத்துக் கொண்டிருந்த அந்த வீட்டுக்காரர் ‘ புலையப் பொடியனுக்கு பந்தாட்டம் ஒரு கேடா? என்ன தைரியம் இருந்தால் நீ உயர்ந்த சாதிப் பிள்ளைகளோடு விளையாடி இருப்பாய்? நீ இனிமேல் எங்கள் சாதீப் பிள்ளைகளுடன் விளையாடக்கூடாது. மீறி நடந்தால் என்ன நடக்கும் என்பது எனக்கே தெரியாது’ என்ற கோபக் கனல் வார்த்தைகளை அள்ளி வீசினார். தன் வாழ்நாளில் இந்த வசைமொழிக்கும் இழிவுக்கும் ஆட்ப்பட்டது இதுவே முதல்முறை. அதிர்ந்து ஒன்றும் சொல்ல முடியாதவராய் திகைத்துப் போனார். அவமானத்திற்கு ஆட்பட்டு புண்பட்ட மனதோடு வீட்டுக்கு திரும்பினார். அவர் வீடு செல்லும் முன்பாகவே இச்செயதி வீட்டாருக்கு எட்டி விட்டது. பெற்றோர்களும் அய்யன்காளியை கடுமையாக கண்டித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள். அன்று இரவு முழுவதும் நாயர் சாதி குறித்து ஏசிய இழிவுச் சொல் அவரின் உறக்கத்தை அலைக்கழித்தது.
‘ காலங்காலமாக அடிமைப் புளு பாத்திரங்களை ஏற்றுக்கொள்பவர்களாக தம் இன மக்கள் இருந்ததால்தானே தனக்கு இந்த அவமானம் . அச்சம் அறியாமையும்,தம்மின மக்களை பணிவுள்ளவர்களாக விசுவாசத்துடன் அடங்கிப் போகிறவர்களாக ஆளாக்கி வைத்திருக்கிறார்கள்’என அவரின் மூளைக்குள் ஒரு தீப்பொறி பிறந்தது.
தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க நடைமுறை யுத்தியை யோசிக்கலானார். ஆதிக்க சமூகம் குறித்து மறு பரிசீலணை செய்தார். ஆதிக்க சாதிவெறியை சந்தித்த முன்னோடி எவரும் அய்யன்காளியிடம் ஏதுமில்லை என்றாலும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் உடைய அய்யனகாளி மரபு மரியாதைக்காக எவருக்குன் தலைவணங்காதவராக மாறினார்.
இளைஞர்களை திரட்டினார்.
மேல் சாதிக்காரர்கள் என்பதற்காகவும், அவர்கள் காட்டும் அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும், கருணைக்கும் தன் மக்கள் பணிவும் நன்றியும் காட்டி அடங்கிநின்று கும்பிடுவதை தடுத்து நிறுத்தினார்.
தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் மிக ஆழமாக பதிந்து தலைமுறை தலைமுறையாக வேர்விட்டு வளர்ந்த தாழ்வு மனப் பான்மையைப் போக்கிட மக்களை கேட்டுக்கொண்டார்.
ஆரியம் புகுத்திய அடிமைத்தனத்திற்குள் நாம் குற்றவாளிகளாக கொத்தடிமைகளாக்கப்பட்டு நாம் கல்வியை ,செல்வத்தை, ஆயுதத்தை இழந்ததால்தான் அடிமைகளாக ஆகிப்போனோம் என முழங்கினார்.
மக்களிடையே மகாபுருஷனாக மலர்ந்தார்
சவர்ணர்களான ஆதிக்க சாதியினருக்கு கண்ணில் விழுந்த துரும்பானார் அய்யன்காளி. சமூக எழுச்சிக்கான அய்யன்காளியின் செயல்பாடு அவர்களை உருத்திக் கொண்டிருந்தாலும், அய்யன்காளியின் தம்பிகள் அவருக்கு உற்ற தோழர்களாக துணை நின்றார்கள். தாழ்தத்தபட்டோர் மக்கள் அனைவரும் ஒரு மகா புருஷனாகவே நெஞ்சில் ஏற்றனர். வீரத்தை படிப்படியாக உள்ளத்தில் பாய்ச்சிக் கொண்டனர். ஒட்டு மொத்த புலையர் சமூகத்தால் ‘ஊர்ப்பிள்ளை’ என்றும் ‘ மூத்த பிள்ளை’ என்றும் அழைக்கப்பட்டார்.
வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா
அய்யன்காளி தனது 25 ஆவது வயதில் 1888ல் மார்ச் மாதம் மஞ்சாங்குழி குழித்தறவாட்டைச் சேர்ந்த செல்லம்மாளுடன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து கொண்டு வெங்கானூரின் மேற்கில் தெற்கு விளையில் பிலாவரத்தரத்தலை வீட்டிலு குடுபுகுந்து வாழ்க்கை மேற்கொண்டனர். பொன்னு,செல்லப்பன், கொச்சுகுஞ்சு,தங்கம்மா, சிவதானு ஆகிய ஐந்து குழந்தைச் செல்வங்களுக்கு பெற்றோராக ஆகி வெங்கானூரின் மேற்கில் தெற்குவிளை பிலாவறத்தலை வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.
சமூக அலுவலகமானது அய்யன் காளியின் வீடு
இவரின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கைக்கு உந்து சக்தியாகவே இருந்தது. சமூக மக்கள் இவர்களின் வீட்டிற்கு வருவதும் போவதுமாகவே இருந்தனர்.குடும்ப உறுப்பினர்களும் சமூக உறுப்பினர்களாக ஆனார்கள். அய்யன்காளியின் வீடும் ஒரு சமூக அலுவலகம் போலானது.
கலை இலக்கிய ஆயதம் கையிலேந்தினார்
தமிழும் மலையாளமும் கைகோர்த்து தெளிவாகவும், கம்பீரமாகவும் ஜொலிக்கும் ஆற்றல் அய்யன்காளியிடம்இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள்,அவர்களுக்கான வைபவங்களில் நிகழ்த்தும் கலையை அப்படியே அய்யன்காளிகையிலெடுத்து, சமூகத்தை நிமிரச்செய்யும் விழிப்புணர்வை விதைக்கும் உள்ளடக்கத்தை உருவாக்கி, கதைகள்,பாடல்கள் கூத்துகள் வடிவத்தில்வீதிகளில்இரவுநேரங்களில்மக்களைத்திரட்டி,தான்மட்டுமல்லால்
மக்களையும் நடிப்பில் பங்கேற்கச் செய்து வெளிப்படுத்ததினார். இந்நிகழ்ச்சிகளுக்கிடையே, அய்யன்காளியின்மக்களை விழித்தெழச் செய்யும் உரைவீச்சு இடம்பெற்றது. கலை இலக்கிய விழாக்கள் மூலம் மக்களை தங்களின்ஒடுக்குமுறைக்கெதிராக திரட்டுவதற்கு முறுக்கேற்றினார. அவர் நடத்திய நாடகங்களில் ‘அரிச்சந்திரா’ ’காக்காரிசி’
போன்றவை மிகவும் பிரபலமடைந்தவை
.மனு(அ)தர்மத்திற்கெதிரான உருவம் உடை
அடிமைச் சாதிகள் அன்று முட்டுக்கு மேலும் இடுப்புக்கு கீழும் ஒரு துண்டைத்தான் அணிந்து கொள்ளவேண்டும்என்ற தீண்டாமையின் பல வடிவங்களில் இதுவும் ஒன்று.அதனால்தான் குமரி மாவட்டத்தில் சாமித்தோப்பில்பிறந்த சீர்திருத்த மகான் அய்யா வைகுண்டர் துண்டை இடுப்பில் கட்டக்கூடாது தலையில் கட்டு,அதுதான்உனக்கு ராஜகிரீடம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உபதேசித்தார். உயர்சாதி வீதிகளில் அடிமைச்சாதிகள்நுழையக் கூடாது என்ற மனு அதர்மக் கொடுமை தொடர்ந்தசூழலில்,இவற்றிற்கெதிராகசிலிர்த்தெழுந்துவேட்டி,பனியன்,தலைப்பாகையோடு ஒரு அங்கியை அணிந்து கொண்டார். வில்லுவண்டியும் வெள்ளைநிறத்தில்பொலிவான இரண்டு காளைமாடுகளை வாங்கினார்.
தீண்டாமைத் தடை உடைக்கப் பொதுப்பாதையில்
1893 காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்ட்ட பொதுப் பாதையில் வில்லுவண்டியில் பவனிவரமுடிவு செய்து, வெள்ளைக் காளைகளின் கழுத்தில் நல்ல ஓசையை எழுப்பும் மணிகளைக் கட்டினார். ‘ஜல்ஜல்’மணியோசையுடன் இராஜகாளையுடன் வண்டியில் அமர்ந்து புறப்பட்டார். குழம்படிச்சத்தத்துடன் மணியோசை
மேலோங்கி ஒலிக்க புழுதிபரப்பி வில்லுவண்டி வலம்வரும் செய்தி ஆதிக்க சாதிக்காரர்களுக்கு புரியாத புதிராகஆனது. சாதி வழக்கத்தை மீறல்கண்டு பொறுக்க முடியாமல், ஆதிக்க சாதிக்காரர்கள் ஆயுதங்களோடு இடைமறிக்கஓடிவந்தனர். ‘எடுடா மேல்துண்டை’என்று கூச்சலிட்டனர். பாய்ந்தோடும் காளைகளை அடக்கி வண்டியை நிறுத்தி,
முதுகில் பணியனில் சொருகியிருந்த வீச்சறிவாளை ஓங்கிய நிலையில்’என் உடம்பில் உயிரியக்கம்இருக்கும்வரையில் எனது கைகளில் வீச்சரிவாள் ஏந்த முடியும் வரையில் உங்களது ஜம்பம் பலிக்காது, உயிருக்குப்பயந்தவர்கள் ஓடிவிடுங்கள். உயிரை துச்சமெனமதிப்பவர்கள்என்னைஎதிர்கொள்ளுங்கள்’ என சவால்விட்டார்.சாதிப்பித்தர்கள் விலகி நின்றவர்களாய் ‘நீ இப்போது தப்பித்துவிட்டாய்! ஆனால் உனக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம்’ என்றனர்.’ உங்களிடம் பாடம் படிக்க எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நிச்சயம் நீங்கள் எனக்குபாடம் புகட்டவேண்டும்’ என்று பதிலுரை கொடுத்து சிங்கத்தின் அதன் குகையிலேயே சந்தித்து அதன் பிடரியைப்பிடித்து உலுக்கத் தொடங்கினார். அய்யா வைகுண்டரின் தலைப்பாகை ஒடுக்கப்பட்டோருக்கு கிரீடம் அது என்றுகம்பீரத்தை வழங்கிய தைரியத் தத்துவம் எவ்வளவு மகத்தானது என்று அய்யன் காளி வீரத்தோடு நிரூபித்தார்.கபாலி திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தின் வசனமாகிய ‘நெருங்குடா! நெருப்புடா! வசனத்தின் உள்ளுணர்வின்
மகத்துவம் அய்யன்காளியிடமிருந்தே புறப்பட்டிருக்கிறது.
டீக்கடைகளில் தீண்டாமைக்கெதிராக
ஒடுக்கப்பட்ட மக்கள் குப்பை மேட்டில் கிடக்கும் ஒரு செரட்டையை எடுத்துக் கொண்டு, வெளியே ஏந்திநிற்கவேண்டும். அம்மக்களுக்கு வேண்டா வெறுப்பாக செரட்டையில் ஊற்றப்படும் டீ நிலத்திலும் விழும்படியாக
ஊற்றப்படும் செரட்டையில் மிஞ்சிய டீயை அவர்கள், டீ கடையைவிட்டு அகன்று குப்பைமேட்டில் காலை மடக்கிஅமர்ந்தே பருகவேண்டும். சிற்றுண்டிகளை வீசி எறிவார்கள். அதைப் பொறுக்கியே எடுத்துக் கொள்ள முடியும்என்ற நிலையைக் கண்டு கொதித்தெழுந்த அய்யன்காளி ,டீக் கடைகளுக்குச் சென்று செரட்டைகளைஉடைத்தெறிந்து, ஏவல் நாய்களுக்கு எச்சிப்பண்டம் போடுவதுபோல் நடந்துகொண்ட டீக் கடைகாரர்களை
எச்சரித்தார். இந்த டீக்கடைகளில் போகவேண்டாம் அவற்றைப் புறக்கணித்து தன் வீடுகளில் டீ போட்டு குடிக்கவேண்டுகோள் விடுத்தார்.
ஒடுக்கப்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு உருவாக்கம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களைத் துடைத்தெறிய அவ்வகுப்பில் அனைத்துப்பிரிவினைரையும் ஒன்றுசேர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு உருவாக்கி’ இனியும் பணிவதில்லை
இழிவைச் சகிப்பதில்லை’ கோஷத்தை முன்வைத்து மக்களைத் திரட்டினார். கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களில60சதவீதத்தினர் புலையர்களாவும் 10 சதவீதத்தினர்பறையர்களாவும்,மீதிப்பேர்குறவன்,சித்தனர்,தண்டான்,படந்தன் பரவன் என130 உட்பிரிவுகளாக இருந்தனர். இந்த அனைத்துப் பிரிவு
மக்களின் ஏக்கப்பெருமூச்சாக விளங்கி பரிணமித்தார். ஆளும் வர்க்கத்தின் கண்களில் ஒடுக்கப்பட்டோரின்விடுதலைக்கு களம் இறங்குவோரை இன்றுங்கூட சமூகவிரோதிகளாக, அராஜகவாதிகளாக சித்தரிக்கும் கொடுமைஅன்றைய ஆதிக்க சாதியினர் மத்தியில் அய்யன்காளியின் மீதும், அவரோடு சேர்ந்த தோழர்கள்மீதும்தீப்பார்வையைச் சிந்தினர்.
மக்கள் ராணுவம் அமைத்தார்
தாழ்த்தப்பட்டோரும், தங்களுக்குள் என்னதான் உயர்வு தாழ்வு பாராட்டிக் கொண்டாலும், ஆதிக்கச் சாதியினர்பார்வையில் தாழ்த்தப்பட்ட சாதிகள் அனைத்தும் ஒரே தரமுள்ளவைகள்தாம். இழிவானவர்கள்தான்,
கீழானவர்கள்தான். இந்த பொதுமை இழிவுகளுக்கெதிராக ஒன்று திரண்டால் ஒழிய, விடுதலை என்பதைபெற்றால்தான் உண்டு நாம் நமக்கான போராட்டத்தில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்
என்று எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றார் காட்டு விலங்குகளுக்கு காட்டில் சுதந்திரமாக நடமாட உரிமையுண்டு.ஆனால் நாம் நாட்டு விலங்குகளாக நடமாடக்கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் என நம் தற்காப்பிற்காக
நாமும் ஆயுதம் ஏந்தித்தான் தீரவேண்டும் மக்களிடம் எடுத்துக் கூறி சமூக அநீதிக்கெதிராக ஆங்காங்கே மக்கள்ராணுவப் படைகளை உருவாக்கினார். அப்படைகளுக்கு உடல்பயிற்சி, குத்துச்சண்டை, கத்திச் சண்டை,
சிலம்பாட்டம் வர்மக்கலை அனைத்தும் கற்றுக்கொடுக்க ,சிறந்தஆசான்களை அமர்த்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
’சாலியத் தெரு’ இரத்தம் சிந்திய உரிமைக் கலகம்.
1893 ஆம் ஆண்டில் ஆரலமூடு சந்தைக்கு வந்த தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் ஆதிக்கச் சாதியினரால்
அவமானப்படுத்தப்ட்டு இம்சிக்கப் பட்டனர். இதை அறிந்த அய்யன்காளி வில்லுவண்டியில் சென்று நிலைமையஅறியச் சென்றார். இவர் போகும் இடங்களிலெல்லாத் சாதி வெறியர்கள் ஈட்டி, அம்பு, அரிவாள், கடப்பாறை கத்திஆகியவற்றுடன் அய்யன் எதிர்கொசண்டு தாக்கினர். கடுமையான உழைப்பாலும் உடற்பயிற்சியினாலும்உடற்கட்டு பெற்று உரமுள்ளவராக இருந்ததால் தனியொருவராக எதிர்ப்பகளையெல்லாம் சமாளித்தார்.
1898 ல் வெங்கானூரிலிருந்து புறப்பட்டு பொது வழியில் நடந்து நடமாடும் உரிமையை நிலைநிறுத்தமுடிவெடுத்தது அய்யன்காளி படை .ஆராலுமூடு சந்தையை நோக்கி செல்லும்போது, பாலராமபுரம் சாலியத்தெருவைக் கடந்து செல்லும்போது அனைவரும் தடுத்துநிறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். இரு தரப்பினருக்கும்கலகம் மூண்டது. அய்யன்காளி படை தீரமுடன் போராடி ரத்தம் தோய்ந்த கரங்களை உயர்த்தி ,பொதுச்சாலைகளில் நடமாடும் உரிமைப் போராட்டம் தொடரும் என்று கர்ஜனை செய்தார். . இந்தியாவிலேயேதாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்காக முதல் முதலாக இரத்தம் சிந்திய புரட்சியாகும். இது ’சாலியத்தெருகலகம்’ என அழைக்கப்பட்டது. தென் கேரளம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் திரணெழுந்தாரகள். அரசுஅதிகாரிகள், காவலர்கள் உயர்சாதிக்காரர்கள் பக்கமே நின்று அய்யன்காளி படையை ஒடுக்க முனைந்தனர்.
இருப்பினும் அய்யனகாளியின் படையை ன்றும் செய்ய முடியவில்லை.நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட தலைவனாக
அய்யன்காளி முழுவதும் அறியப்பட்டார்.
கல்வி உரிமைக்கு களப்பலியும் கொடுத்த வரலாறு
ஒரு புதிய வாழ்க்கையில் தனது மக்களை அறிவுப் பாதையில் முன்னேற்ற ,அம்மக்களுக்கு கல்வி அவசியம்என்பதை நெஞ்சிலேற்றி ஈடுபடலானார். அரசோ, தனியார்களோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி தேவையில்லை
என்பதை இயல்பாக கொண்டிருந்த நிலையில் 1904 ல் வெங்கானூரில் முதன் முதலாக தொடக்கப்பள்ளியைத்தொடங்கினார். அதே ஆண்டு அப்பள்ளியை ஆதிக்க சாதியினர் தீயிட்டு கொளுத்தினர். மீண்டும் அதே இடத்தில்
பள்ளியை நிறுவினார். அடுத்த முறையுத் ஆதிக்க சாதி வெறியர்கள் மீண்டும் பள்ளிக்கு தீ வைத்து அழித்த.அய்யன்காளி படையினருக்கும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் யுத்தம் தொடர்ந்தது. அய்யன்காளி கால மடக்கிக்கொடுத்த அடியில் மேல்சாதியினர் வரமம் விழுந்து படுத்த படுக்கைக்கு ஆளாயினர். இருதரப்பாருக்கும் கடும் சேதம்ஏற்பட்டது. சமூக நீதி என்ற அடிப்படை இலக்கை விட்டு சற்றும் பிறழாமல் பீடு நடைபோடுவது என்பதிலும்அய்யன்காளி உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டுக்குலையாமல் அவரின்போராட்டப்பாதையில்சற்றும்தொய்வில்லாமல் அர்ப்பணித்தனர், அக்காலத்தில் பள்ளி ஆசிரியருக்கு6ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டநிலையில், 9 ரூபாய் சம்பளம் பேசி திருவனந்தபுரம் கைதமூக்கு பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் முதல் ஆசிரியராக
நியமிக்கப்பட்டார். அய்யன்காளியும் அவரது தொண்டர்களும் தேடிப்பிடித்து பிள்ளைகளைச் சேர்த்தனர்.பெரும்பாலும் விடலைப் பையன்களே மாணவர்களாக்கப்பட்டனர், சாதி வெறியர்கள் வழக்கம் போல பள்ளிக்கு தீ
வைத்தார்கள் வாத்தியார் பரமேஸ்வரன் பிள்ளைக்கும் அடி விழுந்தது. மறுநாளே பள்ளி கட்டப்பட்டது. வாத்தியார்பரமேஸ்வரன் பிள்ளையை பாதுகாப்பாக திருவனந்தபுரத்திலிருந்து அழைத்து வந்து திரும்பி வீட்டில் பாதுகாப்பாகவிடுவது அய்யன்காளியின் படையின் பொறுப்பாக இருந்தது. அய்யன்காளி வெள்ளைக்கார அதிகாரிகளிடம்தாழ்த்தப்பட்ட சாதி பிள்ளைகளுக்கும் படிக்க வாய்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்துஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானமும் உத்தரவு போட்டுவிட்டது. ஆனால் 1907ல்வெளியிட்ட உத்தரவு ஆதிக்க சாதி அதிகாரிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது தெரிய விந்தது..ஆதிக்கசாதியினரின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1910 ல்தான் ஈழவருக்கும் சேர்த்து கல்வி கிடைக்க உத்திரவானது.
மீண்டும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்போது பெரிய கலகம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த அய்யன் என்பவர் ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதலில் பலியானார். இப்போராட்டத்தில்
ஆதிக்கசாதியாரோடு ஈழவர் முதலான சாதியாரும் இணைந்து வந்த கொடுமையும் நடந்தது. இக்கலவரத்தில்ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குகள் போடப்பட்டன. கல்விக்காக மனித உயிர்களை பலிகொடுத்த
கொடுமையான வரலாறு நடந்த பூமியாகவும் இருந்திருக்கறது. ஆயினும் அம்மக்களும் அய்யன்காளியும் தளராதுபோராடினர்
ஒடுக்கப்பட்டோரின் விடுதலை நாயகன் அய்யன்காளி ஜூன் 2017ன்
தொடர்ச்சில்
சாதுஜன பரிபாலன சங்கமமைத்து உரிமை முழக்கமிட்டவர்
காலங்காலமாக ஒரங்கட்டப்பட்டு அவமதிக்கப்பட்ட மக்களுக்கு
சுதந்திரம்-சுயமரியாதை-சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால், தம் மக்களுக்கென ஒரு
அமைப்பு தேவையென உணர்ந்தார்.
கேரளாவின புதிய வரலாற்றில் புலையர், போன்ற
கீழ்த்தட்டு மக்களே இனி புதிய பண்பாட்டு வளர்ச்சியின் உயிர்நாடி என்பதையும்
அவர்களே வரலாற்றை இயக்கி இயக்கி முன்னெடுத்துச் செல்வார்கள்.அவர்களது விடுதலையை
அவர்களே நிச்சயிப்பார்கள். சாதி ஆதிக்கத்தின் செருக்குகள், சித்தாந்தங்கள்,
பிரமைகள் அனைத்துக்கும் மரண அடி கொடுப்பார்கள் என்ற கனவோடு புத்தர் பெருமான் போல
ஒரு் சங்கம் உருவாக்கினார்.’சாது ஜன பரிபாலன சங்கம்’ என்று பெயரிட்டு 1907ல்
நிறுவப்பட்டது.
கேரளத்து ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும், ஆண்களும்
பெண்களும் இயக்கமானார்கள்.
மனு அதர்மம் உருவாக்கிய சாதி அடுக்குமுறையும், அது
உருவாக்கிய தீண்டாமையையும், , மாண்பையும், மனித சமத்துவ உறவுகளையும்
சிதைவுபடுத்தி உரிமைகளையும் கடமைகளையும் மக்களிடையே பாகுபடுத்தி, சாதிய சமுதாயத்தை
உருவாக்கி விட்டது. இந்த சாதிய சமுதாய தர்மத்தை மனித சமுதாய தர்மமாக ஏற்றுக்கொள்ள
முடியாது என்பதே இச்சங்கத்தின் கொள்கை என பிரகடனப் படுத்தினார்.
சாது ஜன பரிபாலன சங்கம் தாழ்த்தப்பட்டோருக்கான
தன்னுரிமையையும்,சாதி மறுப்பையும் முக்கியமானவையாகக் கொண்டது
சமுதாயம் இயங்கும் முறையில் சமுதாய விளிம்பிலுள்ள மக்கள்
பங்கெடுக்கும் உரிமை முதலிடம் பெறவேண்டும் என்றும் இதை மறுக்கும் சமுதாய முறை
மாற்றப்பட வேண்டும் என்பதே சங்கத்தின் அறைகூவல்.
அய்யன்காளி காலத்துக்குமுன்பே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை
உயர்சாதி கிறிஸ்தவர்கள் தாழ்வாகத்தான் மதித்து சம அந்தஸ்து வழங்காததைக் கண்டு,
பிராமணிய சாதி ஒடுக்குமுறைக்கு பயந்து மதமாற்றம் நடைமுறைப் படுத்துவது ஒரு மாற்றாக
ஆகாது என்பதை உணர்ந்து, மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் மதம் மாறாத
தாழ்த்தப்பட்டோருக்கும் இணைப்பு பாலமாக சாது ஜன பரிபாலன சங்கம் விளங்கியது.
மனித அந்தஸ்தைப் பெறுதல், தீண்டாமை ஒழிப்பை மேற்கொள்ளுதல், உழைப்புச்
சுரண்டலிலிருந்து விடுபடுதல், கல்வி வேலை வாய்ப்பிற்காக போராடுதல், நிலத்திற்கான
உரிமை கோருதல், அரசியல் அதிகாரப் பகிர்வினை வேண்டுதல் ஆகிய முக்கிய நோக்கங்களைக்
கொண்டதாகவும் இச்சங்கம் பீடுநடை போட்டது.
இந்த சங்கத்தின் முயற்சியால் வாரத்திற்கு ஏழு நாட்கள் வேலை
செய்த நிலைமை ஆறு நாட்களாக ஆனது. ஞாயிறு அன்று ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நாளில்
மக்கள் ஒன்று திரண்டு தங்கள் பிரச்னைகள் குறித்து கலந்து பேசுதல்,முடிவு எடுத்தல்,
செயல்பாட்டில் இறங்குள்ளதல் அடங்கிய சமூகப் பணியில் இறங்கினர். கேரள அடித்தட்டு
மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் அரங்கினைத் தீர்மானிக்கும் அளவு முப்பத்தைந்து ஆண்டுகள்
உரம்பெற்றுத் திகழ்ந்தது.
சமூக மற்றும் வர்க்கப் போராட்டத்தின் முன்னோடி அய்யன்காளி
சமூகத் தீண்டாமை கொடூர் வடிவங்களுக்கெதிராக போராட்டம்
நடத்தியது போல பள்ளிக்கூடங்களில தாழ்த்தப்பட்ட வகுப்பு குழந்தைகளை
சேர்ப்பதற்கும், ஆதிக்க சாதி வெறியர்களோடு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
’கல்வி கற்றே தீருவோம் என்று சாதி ஜன பரிபாலன சங்கத்தினரும் ‘ஒருபோதும் உங்களை
கல்வி கற்க விட மாட்டோம்; என மேல்சாதியினரும் விடாப்பிடியாக நின்று மோதினார்கள்.
எங்கள் பிள்ளைகளை நீங்கள் படிக்கக் கூடாது என்றால், உங்கள்
வயல்களில் இனி நெல் விளையாது புல்தான் விளையும் என்று எதிர் சவால் விடுத்தார்
அய்யன்காளி. இதுவரை தொந்தி கனத்தவர்கள் வயலில் இறங்கி பாடுபட மாட்டார்கள் , எளிய
தாழ்த்தப்பட்டோர் வயிலில் இறங்காவிட்டால் அவர்கள் சோற்றில் கை வைக்க முடியாது
என்பதுதான் உண்மை நிலை. இதை உணர்ந்தவர் விவசாய வேலையில் முடக்கம் உருவாக்கினால்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் பக்கம் அவர்கள் நெருங்குவார்கள் என நினைத்தே வேலை
நிறுத்த சவால் விடுத்தார்.
- தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி நிலையங்களில் கல்வி
கற்க
தடையேற்படுத்தக்
கூடாது.
- கூலையை உயர்த்தி வழங்க வேண்டும்
- வேலை நேரத்தை குறைத்து நியாயமான முறையில்
நிர்ணயம்
செய்யவேண்டும்
- சிறு தவறுக்கும் கூட தென்னை மரத்தில்
கட்டிவைத்து அடிக்கும்
கொடுமைக்கு முற்றுப்
புள்ளி வைக்கவேண்டும்
- பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடுவதை
தடை செய்யக்
கூடாது
ஆகியவைகள்தான் இந்த விவசாய பாட்டாளிகளின்
வேலைநிறுத்தக்
கோரிக்கைகள்.
விவசாயத் தொழிலாளர்களை போலீஸ் வைத்து அடக்குமுறையினை ஏவிவிட்டார்கள் நாயர்
நிலப்பிரபுக்கள் ஜென்மிகளான நிலப்பிரபுக்கள் அணிக்கு சாதிவெறியும் உடைமை வெறியும்
கொண்ட பித்தலத்து கிருஷ்ணபிள்ளி என்பவன் தலைமை வகித்தான். கண்ணில் கண்ட விவசாயப்
பாட்டாளிகள் தாக்குதலுக்கு ஆளானார்கள், பயமுறுத்தப்பட்டனர். வேலைநிறுத்தத்தால்
வேளாண்மைப் பருவமும் தவறி விட்டது. நாடே புல்முளைக்கும் நிலைமைக்கு உள்ளானது.
விவசாயப் பாட்டாளிகளின் பசி பட்டினியைப் போக்க அய்யன்காளி விழிஞம் மீனவப் பாட்டாளி
மக்களுடன் கலந்துபேசி தன்னுடைய மக்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தினார்.
.ஜென்மிகளான நிலப்பிரபுக்கள் வெகுண்டெழுந்தனர். நேரடி யுத்தம்
ஏற்பட்டது. ஜென்மிகளின் உடைமைகள் அழித்தொழிக்கப்பட்டது.
தீக்கிரையாக்கப்பட்டது.
நிலப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டுமானால், ஜென்மிகள்
எங்களோடு வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அறிவிப்பு செய்தார்.
இக்காலகட்டத்தில் திவானாக இருந்த ராசகோபாலாச்சாரி நிலப்பிரபுக்களின் அத்துமீறல்களை
உண்ர்ந்திருந்த காரணத்தால், ஒரு கட்டத்தில் போலீஸ் தலையிடுவது நிறுத்தப்பட்டது.
அவர்களுக்குள்ளேயே முடித்துக்கொள்ளவேண்டும் என்று அரசு அறிக்கை விட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கண்டலா நீதிபதி
நாகம்பிள்ளை விசாரணைக் கமிஷன் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி விவசாயப்
பாட்டாளிகள் பக்கம் நியாயம் இருப்பதாக கருத்து தெரிவித்தார். இந்த சந்தர்பத்ததைப்
பயன்படுத்தி கல்வி கற்க அனுமதி, நடைபாதைச் சுதந்திரம் கோரிக்கைகளை சுட்டிக்
காட்டினார் அய்யன்காளி.
1913 ல் தொடங்கிய விவசாய வேலைநிறுத்தப் போராட்டம் 1914 ல்
முடிந்தது. அய்யன்காளி பாட்டாளி படையே வெற்றி பெற்றது. மரபு ரீதியாக ஜென்மிகளை
வணங்குதல் கைவிடப்பட்டது. பொதுப் பாதை நடமாட்டச் சுதந்திரம் அனுமதிக்கப் பட்டது.
கூலி உயர்வு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்த கோரிக்கைகளை ஜென்மிகள்
ஏற்றுக்கொண்டாலும்,மனதில் உள்ளே அவர்களுக்குள்ளே தாங்க முடியாத வேதனை கனன்று
கொண்டுதான் இருந்தது.
அய்யன் காளியின் தலைக்கு விலை பேசப்பட்டது;
தாழ்த்தப்பட்ட பாட்டாளிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்த
அய்யன்காளி மீது வஞ்சனை வைத்த நிலப்பிரபுக்கள் அவரை தீர்த்துக்கட்ட
கூலிப்படையினரிடம் பேரம் பேசினார்கள். அய்யன்காளியை உயிரோடு கொண்டுவந்தால் ரூ 2000
என்றும் , அவரை கண்ட துண்டமாக வெட்டினால் ரூ1000 சன்மானம் எனவும் அவரின்
தலைக்கு விலை பேசப்பட்டது.21
விவசாயப் பாட்டாளி போராட்டத்தில் முன்னணி வகித்த
தனுவச்சபுரம் யாக்கோபுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில்
நெய்யாற்றின்கரை 21 வது கம்பெனி கேப்டன் வேலைப்பிள்ளையை யாகோப் கையை
வெட்டிவிட்டார். யாகோப் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக் கோரி
சத்தியாகிரகம் அய்யன்காளி தலைமையில் இருந்தனர். உடனே விடுவிக்கப்பட்டார்.
இப்போராட்ட எழுச்சியின் தொடர்ச்சிகள் கேரள வரலாற்றில்
1941ல் துவங்கி 1943ல் முடிந்த கேரளாவில் விவசாயிகளின் புரட்சியின்
தொட்டில் என்று வருணிக்கக் கூடிய கைய்யூர் போராட்டத்தில் மாடத்தில் அப்பு,
சிறுகண்டன்நாயர், குஞ்ஞம்பு, அபுபக்கர் ஆகிய நான்கு இளைஞர்கள் தூக்குக்
கயிற்றுக்கு பலியாகியும் மாஸ்டர் கிருஷ்ணபிள்ளை ஆயுள் தண்டனை பெற்றும் தியாக
வரலாறு படைத்த அந்த போராட்டத்திற்கும்
இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்லாமல் கேரள வரலாறு மற்றும் இந்திய கம்யூனிச கட்சியின் வரலாற்றில்ஜென்மிகளுக்கு துணையாக இருந்த திவானின் கொடுங்கோலாட்சிக்கெதிராகவும், ஏகாதிபத்தயத்துக்கெதிராகவும் வீரஞ்செறிந்த புன்னப்புரா வயலார் போராட்டத்தில் 27 அக்டோபர் 1946ல் புன்னப்புரா என்ற இடத்தில் 470 பேரும்,28 அக்டோபர் 1946ல் வயலார் எனுமிடத்தில் 150பேரும் ஏகாதிபத்திய வெறியின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி தியாக வரலாறு படைத்த வர்க்கப் போராட்டத்திற்கும் முன்னோடியான வீர வரலாற்றில் தடம் பதித்த சாதிய கொடுமைகள் மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கு முன்னோடியான இயக்கம்தான் 1913-1914 ஆண்டுகளில் அய்யன்காளி நடத்திய போராட்டம்.
விழிப்புணர்வு மாத இதழ் தொடங்கினார்
அய்யன்காளி தோற்றுவித்த சாது ஜன பரிபாலன சங்கத்தின் சார்பாக
சங்கனாச்சேரியிலிருந்து ‘சாது ஜன பரிபாலினி’ என்ற ஒரு மாத இதழ் தொடங்கினார்.
படிப்பறிவில்லா அய்யன்காளி , தன் சமூகத்தில் உள்ள படித்த இளைஞர்களைத் திரட்டி,
அவர்களின் உதவியோடு பத்திரிக்கையை நடத்தினார். அக்காலத்தில் புலையர்களிடையே
படிப்பறிவு மிகக் குறைவு. இந்த பத்திரிக்கை அவர்களை கல்வி கற்கத் தூண்டியது.
மேல்சாதியிலுள்ள மனித நேயம் கொண்டோர் புலையர்களின் பிரச்னைகளை ப் புரிந்து கொள்ள
அது உதவியது. ஆனால் இந்த மாத இதழ் நீண்ட காலம் தொடர முடியவில்லை.
நீதிமன்றங்களின் தீண்டாமையை முறியடிக்க சமூகநீதிமன்றம் அமைத்தார்
நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நெருங்காமை கொடுமை நிலவியதால்,
வரலாற்றில் எந்தவொரு சீர்திருத்த தலைவரும் சிந்திக்காத விதத்தில் தன்னுடைய சாது ஜன
பரிபாலன சங்கத்தின் மூலம் சமூக நீதிமன்றங்களை தோற்றுவித்தார். இதற்கென கிளை
நீதிமன்றங்கள் நாடெங்கிலும் துவங்கினார். அரசின் சட்டதிட்டங்கள் மற்றும் நெறிமுறைக
ள் அனைத்தும் சமூக நீதிமன்றங்களில் பின்பற்றப்பட்டன.அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை
இந்நீதிமன்றத்தில் நியமனம் செய்தார். சகலவிதமான ஏற்பாடுகளையும் முறையாக உருவாக்கி
கவனமாக நிர்வாகம் செய்தார்.
அய்யன்காளி சமூக நீதியை தனது அனுபவத்தால் கற்றறிந்தவராதலால் அவரே சமூக
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இவரின் தனிச் செயலராக திரு கேசவன்
இருந்தார். அய்யன்காளியின் உறவினரான எல் எம் எஸ் பள்ளியில் வேலை செய்ததை ராஜினாமா
செய்துவிட்டு அய்யன்காளிக்கு துணையாக சமூகநீதிமன்றத்தில் செயல்படத் துணிந்தார்.
இவருக்கு ஆங்கிலம் மலையாளம் தமிழ் மூன்று மொழிகளும் தெரிந்திருந்ததால் , சட்ட
நுணுக்கங்களிலும் புலமை பெற்றிருந்தார்.உண்மை, நேர்மை, ஒற்றுமை, ஒழுங்கு,
கட்டுப்பாடு கொண்டவர்களாக ஆக்குவதே சமூக நீதிமன்றத்தின் நோக்கமாகும்.
பிற சமூகத்தவர்போல தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை
அறிவாற்றல் மிக்கவர்களாக ஆக்கவேண்டும் என்பதே இந்த நீதிமன்றத்தின் முக்கிய
நோக்குமும் ஆகும் இதற்காகவே இச்சமூக நீதிமன்றம் கல்விப் பணியையும்
மேற்கொண்டது. இந்நீதிமன்றத்தில் அய்யன்காளி சிறைத்தண்டனை தவிர வேறு அனைத்துவித
தண்டனைகளையும் வழங்கினார். உண்மையான குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டனர். வழக்கில்
தோற்றவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
அக்காலத்தில் நிலவிய போர்க்களச்சூழலும் எதிர்கொண்ட விதமும்
’மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா விடுவதில்லை’ என்ற சீன அறிஞர் மாவோ சொன்னதுபோல, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரங்கட்டப்பட்டு, மனிதனாகவே மதிக்கப்படாமல் மிருகங்களிலும் கேடாக நடத்தப்பட்ட காரணத்தால், சமத்துவத்தைத் தேடி ஜீவமரணப் போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது.
- 1910ல் அரசுப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை சேர்க்கலாம் என்ற அரசு ஆணையை எதிர்த்து ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். திருவிலா பகுதி புல்லாட்டு தீக்கிரையாக்கப்பட்டது.
- 1913ல் தாழ்த்தப்பட்ட மக்கள் கோழூவம் சேரியிருந்து திருவில்லா போக வேண்டுமென்றால் பல காட்டுப் பகுதி ஊர்களின் வழியாக நீண்டதூரம் சுற்றி கடவுநீந்தி கடந்து செல்லவேண்டும்
- .இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக அய்யன்காளி தலைமையில் மத்தேயி ஆசான், தலைக்கேறி கண்டன்காளி, கொம்பாடி அனிச்சன் ஆகியோர் திவான் இராசகோபாலாச்சாரியிடம் எடுத்துச் சொல்லி, பொதுப்பாதையில் சுருக்கமான தூரத்தில் நடந்து செல்லச் சுதந்திரம் வாங்கப்பட்டது.
- தமிழகத்து ஐம்பது அறுபது காலகட்டங்களில் தஞ்சைமாவடத்தில் கீழவெண்மணி விவசாய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்ப்பட்ட கொடூரங்கள்போலவே கூலிச் சுரண்டல் கடுமையாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றரை கிலோ நெல்தான் கூலியாகக் கொடுக்கப்பட்டது.
- காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை கடினமான வேலை வாங்கப் பட்டது.
- வேலைக்கு சற்றுத் தாமதமாக வந்தால் அடி உதைதான் தொழிலாளிக்கு
- வெளுத்த துணிகளை உடுத்தால் சித்ரவதைகள் செய்யப்பட்டனர்.
அதை மீறுபவர்களை மரத்தில் கட்டி வைத்து தோல்பட்டை உரிய கசையடி கொடுக்கப்பட்டது.
- ஜென்மிகளின்(நிலப்பிரபுக்களின்) அடியாட்களின் வீட்டில் ஜென்மிகளுக்கென தனிக் கட்டில், ஜென்மிகளின் இன்பங்களுக்கு மட்டுமே அடியாட்கள் பயன்பட்டனர்.
- கொல்லம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு கோபால்தாசன் தலைமை தாங்கினார்.இவரின் உத்வேகம் பெருநாட்டின் கலகத்திற்கு வித்தூன்றியது.
- ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் நடத்த இடம் இல்லாமல் எர்ணாகுளம் காயலில் கட்டுமரங்களைக் கட்டி மேடையமைத்து நீரிலேயே கூட்டம் நடத்தப்பட்டது.
- 24-10-2015ல் அய்யன்காளியோடு துணைநின்ற கோபால்தாஸைத் தீர்த்துக்கட்ட 10 மரக்காள் விதைப்பாடு நெல்விளையும் நிலத்தை கூறிநாயர் தன் குடும்பத்திற்காக எழுது வாங்கிக் கொண்டார். கூறி நாயரும் அவரின் கையாட்களும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்து நொறுக்கியதோடு, பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால் கொலை செய்ய விளைநிலம் வாங்கியவர் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினையாக அவர் கொல்லப்பட்டார்.
ஆதிக்கச் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாதிப்பு என்பது இருபகுதியினருக்கும நடந்தது என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே துயரம் அதிகமாக நிகழ்ந்து போர்க்களமாகவே இருந்தது.
ஆதிக்கச் சாதியினர் பகையுணர்வோடு செய்த கொடுமைகள்பற்றி திவான் கிருஷ்ண அய்யரிடம், ஜென்மிகளுக்காக பெருநாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் போலிஸ் படை வெறியேற வேண்டும். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்குவதில் முறையாக இருக்கவேண்டும். குற்றம் செய்யாதவர்களை துன்புறுத்தக்கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்குழவினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் கலவரம் ஓய்ந்துவிட்டது. அய்யன்காளி கோபால்தாஸ் இருவருக்கும் தலைக்கு விலை பேசப்பட்டாலும் அந்தச்செயல் அன்றே நடக்காமல் புஷ்வானமாகப் போய்விட்டது.
அக்காலத்தில் பத்திரிக்கைகளின் பங்கு;
அய்யன்காளி தொடங்கிய’ சாதுஜன பரிபாலினி’ இதழ் போராடும் மக்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்ததை ஊட்டியது. ‘மிதவாதி’ என்ற பத்திரிக்கை இரண்டு தரப்பினருக்கும் நடுநிலையாகவே செயல்ப்பட்டது.. தாழ்த்தப்போட்டோருக்கு பாதிப்பு அதிகம் என்பதை படம் பிடித்துக் காட்டியது. ‘ நஷ்ராணி தீபிகா’ என்ற கிறிஸ்தவ இதழ் பெருநாட்டு கலவரத்தை நாட்டில் நடந்த மிகப்பெரிய கலவரமாக மதிப்பட்டு ஒடுக்கப்பட்டோருக்கு அதிகம் பாதிப்பு என வெளியிட்டது. ஆனால் பத்திரிக்கைகள் இக்காலத்தில் இருப்பதுபோலவே அக்காலத்திலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் வலுத்தவர்களின் கைப்பிடிக்குள் சிக்குண்டு ஆதிக்கச்சாதியினருக்கு சாதகமாகவே செய்திகளை வெளியிட்டன.
ஒடுக்கப்பட்டோருக்கான அரசதிகாரத்தில் பங்கு
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன் 20. 11. 1932 ல் வட்டமேஜை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் ‘அரசியல் அதிகாரம் எங்களுக்கு வந்தால் தவிர, இந்திய அரசாங்கத்தை நடத்திவரும் அதிகார வர்க்கதினர் எவ்வளவுதான் நல்ல நோக்கம் உடையவர்களானாலும் எங்களுடைய குறைகளைப் போக்கி மாற்றத்தை உண்டாக்க முடியாது. பிரிட்டிஷ் அரசு இன்றிருக்கும் நிலையிலையே தொடர்ந்து இருக்குமானால் இத்தகைய அரசியல் அதிகாரத்தில் எங்களுக்குரிய பங்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதறகு இல்லை’ என்று முழக்கமிட்டார். அந்த எச்சரிக்கை இன்றைய சுதந்திர இந்தியாவிலும் கனவாகவே தொடர்கிறது.
அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே ‘எல்லாவகையான முன்னேற்றத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்கள் விடுதலையைப் பெற முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் அய்யன்காளி.
பிறப்பு, கல்வி, குடும்ப அந்தஸ்து ,பரம்பரை சொத்து, அரசு,அரசு தொடர்புகள் ஆகியவை சாதகமாக உள்ளவர்களே அதிகாரத்தில் அமர்ந்து விடுகிறார்கள். இந்த கட்டமைப்பானது திறமை உள்ளவர்களை அல்லது அவசியம் ஆக்கபூர்வமான முடிவெடுப்பதில் தேவையானவர்களை தேர்ந்தெடுக்கும் முறை இது இல்லை. அரசியலில் எல்லா மனிதர்களும் பங்கேற்கக் கூடிய எல்லா மனிதர்களையும் சமமாக நடத்துவதற்குரிய அரசியல் அணுகுமுறையை கையாள வேண்டும் என்ற சிந்தனைக் கருத்தை வெளிப்படுத்தினார் அய்யன்காளி.
ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜாவின் பிரஜா சபையில் ( சட்டசபை) சமூக பொருளாதார அந்தஸ்தில் மேலாதிக்கத்தில் இருந்தவரகளே, ஆதிக்க சாதிக்காரர்களே இடம்பெற்றிருந்தனர். ஈழவர் சார்பில் குமாரன் ஆசான் மட்டும் உறுப்பினராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக மேல்தட்டு சமூகத்தைச் சார்ந்த சுபாஷினி ஏட்டின் ஆசிரியர் கோவிந்தபிள்ளை என்பவரை அரசு நியமித்தது.
இந்தச் சூழலில் ஸ்ரீமுலம்திருநாள் மகாராஜா பிரஜா சபையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அய்யன்காளி முன்வைத்தார்.
அய்யன்காளி அன்றைய திவானை சந்திக்க முடியாத சாதிவெறி பிடித்த காவலர்கள் உருவாக்கிய தடையை மீறி சந்தித்தார். அந்த திவான் அய்யன்காளியின் அபாரமான ஆற்றலையும் வீரமிக்க பணிகளையும் தெரிந்து வைத்திருந்ததால் அய்யன்காளியை சந்திக்க வரச்செய்து, உள்ளே வரவிடாமல் செய்த காவலர்களை அய்யன்காளியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச்செய்து, கோரிக்கயை ஏற்று 1911 டிசம்பர் 5ல் ‘ சாதுஜன பரிபாலன சங்கத்தின் தலைவரான மான்யராஜ ராஜஸ்ரீ அய்யன்காளி அவர்களை திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் பிரஜாசபா மெம்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.’ என்ற அரசு உத்தரவிட்டது.
அய்யன்காளி பிரஜா சபை உறுப்பினர் ஆனதும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் மக்கள் உரிமைகளை சமூகநீதியை முன்னிலைப் படுத்தும் கருவியாக செயல்பட்டு தன்னைப் போலவே தன் சமுதாயத்தில் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற வேட்கையோடு பணி செய்தார்
ஒடுக்கப்பட்ட மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதிகள் கோரிக்கை ஏற்பு;
‘நாங்கள் ஆறு லட்சம்பேர் உள்ளோம் ஒரு லட்சம் பேருக்கு ஒரு பேருக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஐந்து பேரை பிரஜா சபை உறுப்பினராக நியமிக்கவேண்டும் என்று திவானிடம் வேண்டுகோள் விடுத்தார்.’அடுத்தடுத்து பிரஜா சபை உறுப்பினர்கள் நியமிக்கப் படும்போது நீங்கள் சிபாரிசு செய்கிற ஆட்களே நியமிக்கப்படுவார்கள் என்று கூறி திவான் அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
தொடக்கக் கூட்டத்திலேயே வசீகரிக்கும் உரையும் வைத்த கோரிக்கைகளும்
1912ல் அய்யன்காளியின் தொடக்க உரை பிரஜா சபையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தீண்டாமையால், சமூக ஏற்றத்தாழ்வால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டி,கம்பீரமான உரையாற்றினார்.
- நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, திருவனந்தபுரம் நெடுமங்காடு வட்டங்களில் பண்படுத்தப்பட்ட நிலங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கவேண்டும்.
- தாழ்த்தப்படோருக்கு முனபு இருந்த பூமியை ஆதிக்க சாதியினர் அபகரிப்பதை தடுக்கவேண்டும்.
- செங்கானூர் வட்டம் இராள்ளி , வல்லியகாவு , சங்கனாச்சேரி பெரும்பாத்து முறி, அலப்புறமுறி ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள பயன்படுத்தப்பட்ட நிலத்திலிருந்து விரட்டியடிப்பவர்கள்மீது நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு நிலம் நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- தென்திருவிதாங்கூரில் அரசு உத்தரவு வழங்கியும் ஏழு பள்ளிகள்தான் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை கல்வி கற்க அனுமதியளித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் கற்க அனுமதிக்கவேண்டும்.
- அரசின் உத்தரவு வழங்கப்பட்டும் பொதுச்சாலையை இன்னும் பயன்படுத்த முடியவில்லை. அதை பயன்படுத்த வலிமையான ஆணை வழங்கவேண்டும்.
- கல்வித் தகுதி உள்ளவர்கள் அச்சுப் பணியாளர்களாகவும், பொதுப்பணித்துறை மேலதிகாரிகளாக, வனத்துறை காவலராக நியமிக்கப்பட வேண்டும்.
- கோட்டயத்திலுள்ள பிரஜா சபையில் புலையர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும்.
- சாதித்துவேசங்கொண்டு தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை புறக்கணித்து தவறு செய்யும் ஆசிரியர்களை தண்டிக்கவேண்டும்.
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் கட்டாயமாக சேர்ப்பதற்கு கல்வி இலாகா இயக்குநர்கள் ஆய்வாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறிப்பிக்கவேண்டும்.
- வனப்பகுதியிலுள்ள 500 ஏக்கர் நிலம் எங்கள் மக்களுக்கு பதிவு செய்து தரவேண்டும்.
- விளப்பில் என்ற இடத்தில் 500ஏக்கர் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கியிருப்பினும் இன்னும் பதிவு செய்து ஒப்படைக்கவில்லை.உடனே பதிவு செய்து வழங்கவேண்டும்.
- தாழ்த்தப்பட்ட சாதி ஆசிரியர்களுக்கு அறிவியல் விவசாயம் தொழில் அபிவிருத்தி குறித்து பயிற்சி கொடுக்கவேண்டும்.
- மாணவர்களுக்கு கல்வி உபகாரச்சம்பளம் வழங்க வேண்டும்
- தாழ்த்தப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்ட தரிசு நிலங்களை அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொடுக்கவேண்டும். உள்ளிட்ட ஏராளமான சமூக பொருளாதார கோரிக்கைகளை முன் வைத்தார்.
இவருடைய பரந்த சூரியப் பார்வையின் வீர உரையின் கோரிக்கைகளை உற்றுநோக்கும்போது ,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 10. 8. 2011ல்
வெளியிட்ட பட்டியலின மக்களின் பங்கைக் கொடு என்ற கோரிக்கை சாசனம் சிறு பிரசுரம் அய்யன்காளியின் வழித் தோன்றல் என்ற பெருமைக்குரியதாகப் படுகிறது.
1912 முதல் 1940 வரை 28 வருடங்கள் பிரஜா சபையின் உறுப்பினராக செயலாற்றி சபையில் முன்வைத்த அத்தனை வேண்டுகோள்களையும் ஏற்கச் செய்து, நடைமுறைப் படுத்தச் செய்து வெற்றி பெற்றார்.;
தனக்குப் பின்னால் மக்களின் தலைவர்களை உருவாக்கினார்
மக்களுக்கான வாழ்க்கைக்கான திட்டங்களுக்கு முடிவெடுக்கும் இடமாகிய பிரஜா சபையில் உறுப்பினராக இருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். மக்கள் இயக்கங்களை கட்டமைத்தார்.தீண்டாமை ஒழிப்பில் தீவரமாக ஈடுபட்டார்.
நில உரிமைப் போரில் தீவிரம் காட்டினார்.இவற்றையெல்லாம் உண்மையான சமூக அக்கறையோடு மக்கள் தொண்டாற்றி சாதுஜன பரிபாலன சங்கத்தின் செயல்பாட்டினையும் அதன் கௌரவத்தையும் வளர்த்தெடுத்த படிக்காத மாமேதை. அய்யன்காளி
அரசியல் அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என அய்யன்காளி கேட்டதற்கிணங்க, புலையர், பறையர் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர் சேரமான், சித்தனார் ஆகிய சாதிகளிலிருந்து ஏராளமானோர்களை பிரஜா சபையில் சரியான அளவில் பிரதிநிதித்துவம் வழங்கச் செய்து இயக்கத் தலைமை ஆளுமைகளை விரிவாக்கினார்.
அய்யன்காளி 1940ல் புலையர் மகாசபை என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். அந்த இயக்கம் இன்றும் உள்ளது
தலைக்கு விலை பேசியவர்கள் அரபிக் கடலின் ஆழத்தில்;
கேரளத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பிரகடனப் படுத்திய மகான் அய்யன்காளி கேரளத்திற்கு மட்டும் உணர்ந்து கொள்ளக் கூடியவராக இல்லை. புத்தர், ஜோதிபாபூலே அயோத்தியதாசர் டாக்டர் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், பெரியார் வரிசையில் வலம்வரும் மக்களின் மகத்தான தலைவர் அவர். அன்று அய்யன்காளி, அய்யனகாளி படைத்தலைவர் கோபால்தாஸின் தலைக்கு விலை பேசியவர்கள், இன்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைக்கு விலை பேசினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை விலை பேசியவர்கள் அரபிக் கடலின் ஆழத்தில் காணாமல் போய்விட்டார்கள்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அய்யனகாளி 1941 ஜூன் 18 அன்று எழுச்சி வரலாற்றை இந்த மண்ணுக்கு விட்டுவிட்டு மறைந்தார். 1980 ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் இந்திரா காந்தி அய்யன்காளியின் சிலையை திறந்துவைத்து போராட்ட வரலாற்று நாயகனை பெருமைப் படுத்தினார்.
மகான் அய்யன்காளி கேரள மாநில அரசின் முன்மொழிவோடு மத்திய அரசுத் துறை தபால்தலையை 12 ஆகஸ்ட் 2002ல் வெளியிட்டதின் மூலம் இந்திய நாடெங்கும் உயிரோடு இன்னும் உலா வருகிறார்.
கேரளாவின் சமூகப் பண்பாட்டு அரசியலில் அம்மாநிலத்தில் தோன்றிய மகான் அய்யன்காளி உட்பட சமூகப் பண்பாட்டுப் போராளிகள் விதைத்த சமூக நீதி மற்றும் வாழ்வாதாரப் போராட்ட விதைகள் கைய்யூர் போராட்டமாக, புன்னப்புரா வயலார் போராட்டமாக வெடித்து கிளர்ந்து,தியாக பூமியாக சமதர்ம விருட்சங்களுக்கு சரியான கொள்கை நீரூற்றியதால் பற்றிப் படர்ந்து செந்தாரகை வீசும் மண்ணாக இ எம் எஸ் ஸிலுருந்து பினராய் விஜயன் வரை தலைமையேற்று ஜொலிக்கிறது.