Thursday, May 23, 2013

பிரசவம்- சிறுகதை

                                   .
                                              

‘பிளோமினாள் ரெக்ஸ் கூட வந்தவங்க யாருங்க?
‘நாங்கதாங்க சிஸ்டர்
‘பெண்குழந்தை பிறந்திருக்குங்க
‘கதிர்வடிவு பெற்றோர்கள்?
என்னங்க சிஸ்டர்?
‘ஆண்குழந்தை பிறந்திருக்கு’’
‘யாஸ்மின் பானு கூட வந்தவங்க?
‘பெண்குழந்தை பிறந்திருக்கு
நாகர்கோவில் நகரத்தின் பரபரப்பான பகுதியான கோட்டாரில் கடைகள் அதிகமாக இருக்கும் சாலையோரம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிட பிரசவ ஆஸ்பத்திரியொன்றில் முதல் மாடியில் பிரசவ வார்டின் முன்பாக காலை எட்டுமணி முதலாகவே ஒட்டு எண்ணுமிடத்தில் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டத்தைப் போலவே பிறக்கப்போவது ஆணா பெண்ணா?.சுகப்பிரசவமா சிசரியனா? என்பதை அறிய பெண்களை பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு காத்திருக்கும் உறவினர்களிடம் ஒருமணி ஒன்றரை மணிக்கொரு முறை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் உரக்க அறிவித்துக கொண்டிருந்தார் ஒரு நர்ஸ்..காத்திருப்போர் பெரும்பாலும் முகமலர்ச்சியோடும்  பரவசத்தோடும் காணப்பட்டார்கள்.
                மாவட்டத்திலேயே மக்களிடையே நல்ல டாக்டரம்மா என பெயர்வாங்கியவர்.அங்கே போனா சுகப்பிரசவமாகத்தான் இருக்கும் என்ற பேச்சும் பரவியாதால் அவ்வளவு நம்பிக்கை. இந்த புகழாரப் பேச்சினால்தான்  பேராசிரியர் முத்துநாதனும் அவர் மனைவி சுந்தரவதனியும் தனது மகள் ஜெகப்பிரியாவுக்கு நான்கு மாதங்களாக இந்த ஆஸ்பத்திரியில் முன் சிகிச்சை பெற்று அன்று காலையிலேயே பிரசவ அறிகுறி இருக்கிறதென்று வீட்டுக்கு வந்த தாயம்மாபாட்டி சொன்னதும் காலை எட்டு மணிக்கே பிரசவ வார்டில் சேர்த்துவிட்டு காத்திருந்தனர்.
            அன்று மாலை 4 மணநேர நிலவரப்படி பிறந்த 9 குழந்தைகளில் ஒரு குழந்தைமட்டுமே சிசரியன் மூலம் பிறந்ததென கொஞ்சம் கலகலப்பு குறைவான தன்மையில் அமர்ந்திருந்த நாகர்கோவிலிலிருந்து  வந்த ஒரு பெற்றோர் பேச்சிலிருந்து தெரிந்தது. அவரிடம் அறிமுகமாகி பேச்சுக் கொடுத்தபோது ‘நாங்க எங்க மருமகளுக்கு இரண்டாவது பிரசவத்துக்கு கொண்டுவந்தோம. குழந்தை சரியான முறையில் திரும்பாம குறுக்கே இருந்திருக்கு.டாகடரம்மா நல்ல முயற்சி செய்து பாத்திருக்காங்க பிறகு எங்ககிட்டேதான் கேட்டாங்க நாங்கதான் சொல்லிட்டோம் சிசரியன் செய்திருங்க என்று. சரி தாயும் குழந்தையும் நல்லா இருக்காங்களே அதுவே போதும்.வேற ஆஸ்பத்திரிமாதிரி போய் சேர்த்தவுடன் அது இதைச் சொல்லி பயமுறுத்தி வயித்துல கத்திய வச்சு பணம்பறிக்கும் ஆசையில்லாத டாக்டர் என்று மனதை தைரியப்படுத்திகிட்டுத்தான் சொன்னார்.
                  பேராசிரியர் முத்துநாதன்கூட தனது மனைவி சுந்தரவதனிக்கு இந்த ஜெகப்பிரியா பிறக்கும்போது கொஞ்சமும் கவலைப்படாதவராகத்தான் இருந்தார்,காரணம் குடும்ப உள்நாட்டுப் பிரச்னையும் சமூகப் பக்குவமடையாத வயசுங்கூட.ஆனால் தனது குழந்தை பெற்றெடுக்கவரும்போதுதான் நிலைமை என்னவெல்லாமென்று இவ்வளவுகால அனுபவம் கத்துக்கொடுத்திருக்கு.
        ‘என்னங்க மணி அஞ்சாச்சுது இன்னும் ஜெகப்பிரியா பத்தி டாக்டரோ,நர்ஸோ எதுவும் சொல்லக் காணோம் என கேட்டபோது டாக்டர் கூப்பிட்டு உங்க மகளுக்கு இன்னும் அதிக நேரம் ஆகும். காரணம் குழந்தை வெயிட் கொஞ்சம் அதிகம் அதுனாலதான் தாமதமாகுதுஎன சொல்லிச்சென்றார்.
    முத்துநாதன் சிந்தனையெல்லாம் தான் பத்துவயதாக இருக்கும்போது தன்னுடைய அப்பா இறந்தபிறகு அம்மாவையும்,தம்பி தங்கை ஆகியோரை அப்பாவின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் மணியகாரன்பட்டியிலுருந்து சிங்கராஜபுரத்திற்கு அழைத்துவந்து பாதுகாத்துவந்த சின்னம்மா பாட்டி செய்த மருத்துவச்சி வேலைக்கும் அந்த ஊரின் தன்மைக்கும் சிறகடித்து பறந்து சென்றது.
     சிங்கராஜபுரத்திலிருந்து ஆஸ்பத்திரி போகணுமின்னா  அஞ்சாறு மைலு வேடசந்தூருக்கு நடந்தோ,வசதி இருக்கிறவங்க மாட்டுவண்டியிலோதான் போகமுடியும். அரசு ஆஸ்பத்திரி தவிர ஒன்னு ரெண்டு தனியார் ஆஸ்பத்திரிதான் அக்காலத்துல வேடசந்தூரில். தமிழ்நாட்டில பல கிராமங்கள் இன்னும் எப்படி ஜாதியால் பிரிந்துள்ளதோ அதுபோலத்தான் சிங்கராஜபுரத்திலும்.தோட்டங்கள் அதிகமாக வைத்திருக்கும் கவுண்டர் சாதிக்காரங்க அதிக வீடுகள்,அடுத்து பிள்ளைமார் வீடுகள் கொஞ்சம். பெரும்பாலான ஊர்களில் ஊரும் சேரியும் எப்படி பிரிந்துகிடக்கிறதோ அதுபோல ஊரின் கிழக்கு ஒதுக்குப்புறமாக பறையர் ,சக்கிலியர் வீடுகள் அமைந்திருந்தன.
     கையளவு நிலுமுமில்லாத பறையர் சக்கிலியர் சாதி மக்கள் கவுண்டர் வீட்டுத் தோட்டங்களில் கூலிவேலை செய்தும், சக்கிலியர் விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்கப் பறியும் பொதுவான தொழிலாகிய செறுப்பு தைத்தும் ,இருசாதிக்கார்ரகளும் மேலத்தெரு மக்களின் விஷேஷங்களுக்கும் ,கோவில் விழாவுக்கும் பறையடித்து சேவித்து வருவதுதான்அவர்கள் தொழில்.ஊரின் வடக்குப் பக்கம் மேலத்தெரு மக்களுக்கு மட்டும் சேவைசெய்ய்யும்வண்ணார்,நாவிதர் சாதி மக்களும் இருப்பார்கள்.
      வேடசந்தூர் தாலுகாவிலேயே இந்த ஊரிலேதான் பறையரும்,சக்கிலியரும் உறவுமுறையைச் சொல்லியும, ஒரே கிணற்றில் நீரெடுத்தும்,ரெண்டு தெரு ஆண்களும் பெண்களும் எகளாசமா கள்ளங்கபடமில்லாமல் பேசிவாங்கியும் இருப்பார்கள். சின்னம்மா பாட்டியின் ஆதரவில் இருக்கும் .முத்துநாதன் இரண்டு தெரு மக்களுக்கும் செல்லப்பிள்ளை மாதிரி..
      பக்கத்து கிராம்மான மறுங்காபட்டியிலிருந்து முத்துநாதன் மாமா வீட்டுக்கு வந்தாரென்றால் சின்னம்மா பாட்டி சாப்பிட கூப்பிடும்.
      அந்த மாமா ‘ஊருல ஒலகத்துல இல்லாதபடிக்கு சக்கிலியரோடு சேந்து தண்ணியெடுக்கிறீங்க இந்த லட்சணத்தில நான் சாப்பிடணுமாக்கும்என சொல்வார்
         ‘ஆமாமா நீ ஒங்க ஊருல மேலத்தெரு காரங்க்கிட்டே சேவுகம் செய்யப்போகும்போது அந்த பொம்பளைங்க கையில் தண்ணி ஊத்துனா வாங்கிக் குடிக்கிறது மட்டும் ஒழுங்கோ? மேலத் தெருக்காரங்க பறையன் சக்கிலியன் ரெண்டுபேரையும் கழுதவிட்டைன்னுதான் நெனக்கிறான் இதுல முன்விட்டையென்ன பினவிட்டையென்ன? ரெண்டும் ஒன்னுதான அவுங்க புத்தியில நமக்குள்ள எதுக்கு மாமா பேதம்.?என முத்துநாதன் வெடு வெடுன்னு பேசுவான்.
     நீயெல்லாம் படிக்கப் போற பாரு அந்த நெனப்புல பேசுவேடா அவர் பேசிவிட்டு தண்ணிகூட குடிக்காம்ப போய்விடுவார் .சின்னம்மா பாட்டி அட விடுடா அவன் தண்ணி குடிக்காட்டி நம்ம வீட்டுல சோறு வேகாதாயென்ன?என அனுப்பிவிடும.
      சிங்கராஜபுரத்தில் நகரங்களுக்கு போக வர, படித்திருக்கும் சில வாலிபர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். ஆனால் படிக்காத பாமர மேல்சாதி மக்கள் கடைப்பிடிக்கிறதீண்டாமை காரியங்களை தடுத்து நிறுத்தமுன்வரமாட்டார்கள். இப்படியான ஊரில் சின்னம்மா பாட்டியும,நாவிதர் தெருவில வள்ளியம்மா இருவரும்தான் ஊரில் பிரசவம் பார்க்கும் கிராமத்து டாக்டர்கள். இன்னொரு அம்மா மூன்றுமைல் தூரத்திலிருக்கும் பூத்தாம்பட்டியில் இருந்த்து. இவர்களில் சின்னம்மா பாட்டிதான் கைதேர்ந்த பிரசவ கலையைக் கையில் வைத்திருந்த்து.
      மேல்த்தெரு பெண்களுக்கு பிரசவம் பார்க்கவேண்டுமென்றால் சின்னம்மா பாட்டிக்கு ஆளனுப்புவார்கள். உடனே சின்னம்மா பாட்டி வேகு வேகுன்னு புறப்பட்டிரும்.மேலத்தெரு மந்தை ஆரம்பத்தில காலில் இருக்கும் செறுப்பு கைச்செறுப்பாக மாறிவிடும். சாதாரணமாக இவர்கள் வீட்டுக்குள் போக முடியாது வாசலின் தூரத்தில் நின்று பேசிவிட்டோ தண்ணீர் கையில் ஊற்றுவார்கள் வாயினருகே கையை வைத்து குடிக்கவேண்டும்.ஆனால் பிரசவம் பார்க்கச்செல்லும்போது.வா சின்னம்மா என வாஞ்சையோடு அவர்கள் வாய் அழைக்கும்.காரணம் ஆஸ்பத்திரியில்லாத ஊரில் இரண்டு உயிர்களை காப்பாத்த வேண்டுமல்லவா? சின்னம்மா பாட்டியும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு தட தடவென வீட்டுக்குள் நுழைந்து  வலியின் வேதனையில் புரளும் பிரசவப் பெண்ணை அழைத்து வெந்தயம் வறுத்து பொடியாக்கி அதை வெண்ணீரில் கலக்கி வெள்ளைப்பூடு தட்டி அதில் போட்டு குடிக்கச் சொல்லும்..உடம்பு இளகுவதற்காக கொடுக்கும் கைமருந்து.பின்பு நல்ல தைரியப்படுத்தி செய்யவேண்டிய முறைகளையெல்லாம் செய்து அப்படியே குழந்தையை லாவகமாக பிடித்து கையில் ஏந்தி வெளியே எடுத்து கழுவி பெண்ணின் பெற்றோர்களிடம் காடடிவிட்டு  ஒருமாதிரி மயக்கநிலைமையில இருக்கும் பிள்ளையைப் பெற்ற தாயிக்கு வேப்ப எண்ணெயில் கொஞ்சம் இஞ்சிச் சாற்றை விட்டு  கொடுக்கும் சின்னம்மா பாட்டி.ஏதாவது ஜன்னி மாதிரி வந்திரக்கூடாதே என்பதற்கு கொடுக்கும் தடுப்பு மருந்தாம்..அப்போது பெற்றோருக்கும் மாமியார் மாமனார் ஆகியோருக்கு சின்னம்மா மேல வரற பாசத்திற்கு அளவே இல்லை.
     ‘சின்னம்மான்னா சின்னம்மாதான் ஒன்னோட கைராசியே தனி சின்னம்மாஎன புகழ்ந்து தள்ளுவார்கள். இந்த நேரம்பார்த்து பேறுகாலம் பார்த்தவீட்டில் தண்ணிவாங்கிக் குடிக்கணுமின்னு ‘ஒரு சொம்புத தண்ணி கொடும்மா என கேட்கும் அப்போது தீட்டுப்பார்க்காமல் இந்தா சின்னம்மா என சொம்பு நீரை கையில் கொடுத்து பாட்டி குடித்தபின்பு சொம்பை வாங்கி கொள்வார்கள். அப்போது   தன் பிள்ளையின் உயிரு சக்கரைன்னு  நினைக்கும்போது தீண்டாமையெல்லாம் போய்விடும்.மற்ற நேரத்துலதான் நாங்க தொட்ட ஒட்டிக்கும்என மனதில் கருவிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிவிடும்
      .இப்படிப்பட்ட ஊரிலிருந்து கரடு முரடான பாதைகளைக் கடந்து முத்துநாதன் பேராசிரியர் இடத்தைப் பிடித்து நாகர்கோவிலுக்கு வந்த வாழ்க்கைப் பயணம் தனிக்கதை.
    இப்படியெல்லாம் அனுபவத்தில் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தும் மக்கள் இன்னும் உயிரைக் காப்பாற்றிய மக்களை ஒதுக்கிவைத்திருக்கிறார்களே. ஆஸ்பத்திரியே இல்லாத காலங்களில் எத்தனை பாட்டிமார்கள் சின்னம்மா பாட்டிபோல ஊருக்கு நாலைந்துபேர் இலவச மருத்துவச்சிகளாக இருந்தார்கள் .ஆனால் இந்த விஞ்ஞான காலத்துல நாம் இப்படியெல்லாம் பயப்படவேண்டியுள்ளதே என சிந்தனையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தார் முத்துநாதன்.
     தனது மகளின் பிரசவத்திற்கு நேரம் போயிக்கொண்டே இருந்த்து. இரவு எட்டுமணி ஆனபோது.டாக்டரம்மா அழைத்து ‘நான் ரொம்ப முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன்.குழந்தை எடை அதிகமானதாலதான இவ்வளவு நேரமாகுது.இன்னும் ஒருமணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம் அதுக்குப்பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிப்போம் என சொன்னவுடன். பேராசிரியர் முத்துநாதனுக்கு முப்பத்திரெண்டு வருடங்களுக்குமுன்னால் பி காம் படித்துமுடித்தவுடன், தனது பெரியப்பா மகளை பிரசவத்துக்கு திண்டுக்கல்லில் பிரபலமான ஆஸ்பத்திரியில் சேர்த்து இன்று காத்திருப்பதுபோல அன்று வெகு நேரம் காத்திருந்தபின்பு குழந்தை எடை அதிகமானதால் சிறிய ஆபரேசன் செய்யவேண்டுமென செய்து இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தையை எடுத்தபின்பு தாயைக் காப்பாற்ற முடியாத சோகம் உருவானது அப்படியே ரத்தம் சட்டையில் சிந்தச்சிந்த தூக்கி காரில் வைத்து ஊருக்கு கொண்டு சென்ற சம்பவம்வேறு வந்து வந்து போனது.இருந்தாலும் அந்த காலத்தல மருந்து மாத்திரைகள் ஊசி மருந்து அதிகம் கண்டுபிடிக்காத்தால் அப்படி ஆனது.இப்போது அப்படியெல்லாம் வராது என ஆறுதல் படுத்திக்கொண்டு  பேராசிரியர் முத்துநாதன் டாக்டரம்மாவிடம் மகள் ஜெகத்பிரியா ரொம்ப நேரம் வலியைத் தாங்கமாட்டாள் வேணுமின்னா சிசரியன் செய்துடுங்கோ டாக்டர் என சொன்னவுடன். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க சார் இன்னும் அரைமணிநேரத்துல குழந்தை வெளியே வர வாய்ப்பி இருக்கு.கர்ப்ப்ப் பை நல்ல திறந்து கொடுக்குது.முயற்சி செய்கிறோம் .சிசரியனெல்லாம் தேவைப்படாது ‘ எனத் தைரியம் சொல்லிச் சென்றுவிட்டார். பிரசவ வார்டு உள்ளே இருந்த நர்ஸ் நல்ல முயற்சி செய்து டாக்டருக்கு உரியமுறையில் உதவி செய்தார். டாக்டருக்கு இணையாக அனுபவமுள்ள நர்ஸின் பணி தொடர்ந்து கொண்டிருந்த்து,உள்ளே மகள் ஜெகத்பிரியாவின் ரணவேதனை கதறல் சத்தம் வெளியே கேட்டது. கூடவே மழலையின் வீரென்ற அழுகைச்சத்தமும் கேட்டது. நர்ஸ் வெளியே வந்து

     ‘ஜெகத்பிரியா கூட வந்திருப்பவங்க யாருங்க? பேராசிரியர் முத்துநாதனும் சுந்தரவதனியும் சென்றார்கள் . ‘பழைய வேட்டி எண்ணெய கொடுங்க பெண்குழந்தை பிறந்துள்ளது.என்று  செய்தியை சொன்னவுடன் தேர்தலில்வெற்றிபெற்ற செய்தி கேட்டு பட்டாசு கொளுத்திக் கொண்டாடும தொண்டர்களைப்போல் ஏற்கனவே சுகப்பிரசவ ஆனந்த்த்தில் கலகலப்பாக இருக்கும் மக்களிடையே  முத்துநாதனின் மகன் எழில்சிகரம் தான் வாங்கிவந்த இனிப்புகளை பரிமாறி மகிழ்ந்தனர்.