Thursday, September 15, 2011

தீராநதி செப்டம்பர் 2011 இதழுக்கு பதில் லட்சுமி மணிவண்ணன் புரிவாரா?


வைகுண்டசாமியும் பத்மனாபசாமி புதையல் ரகசியமும் என்ற தலைப்பில் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் எழுதிவரும் தொடரை தீராநதி செப்.-2011 இதழில் படிக்க நேர்ந்தது. தொடரின் துவக்கத்திலே கட்டுரைகளின் அறியாமையும் அவர் சார்ந்துள்ள அரசியலும் துல்லியமாகவே புலப்படுகிறது. உத்தராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா தற்போது திருவாங்கூர் அரசராக இருப்பவர் என்ற துவக்க வரிகளே, கட்டுரையாளரின் கற்பனை வளத்தை அல்லது அறிவின்மையை தெளிவாக நமக்கு புலப்படுத்தி வருகிறது. இந்திய வரைபடத்தில் 1950 ஆம் ஆண்டுக்குப்பிறகு திருவாங்கூர் என்ற சமஸ்தானம் இல்லை என்ற அடிப்படை அறிவோ அல்லது இங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற புரிதலோ இல்லாமல் தனது தொடர்மூலம்,தன்னை ஒரு
வரலாற்று விற்பன்னராக நிறுவிக்கொள்ளும் முனைப்பையே காணமுடிகிறது.
         வைகுண்ட சாமியின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
என்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரி மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியதை சற்றே கிண்டலடித்துள்ளார் கட்டுரையாளர்.பாடத்திட்டத்தில் வைகுண்டசாமியின் வரலாறு இடம் பெறுவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தனது முடிவையும் பதிவு செய்து உள்ளார். அத்வானி ஜெயலலிதா போன்றோரையும் தனது வாதத்திற்கு வலுசேர்க்க இழுத்து உள்ளார். தேசத்தந்தை அவர்களால், நீங்கள்தான் இந்திய நாட்டின் சொத்து என்று வர்ணிக்கப்பட்ட ஜீவா அவர்களை, முற்போக்கு அடையாளத்தை சூடியவர் என்ற வம்பிழுக்கும் கட்டுரையாளர்,நேசமணி அவர்களை ராஜா என அழுத்தி வலியுறுத்திச் சொல்கிறார். இதன்மூலம் இவரது அரசியல், மொட்டையான இடதுசாரி எதிர்ப்பு அரசியல் என்பதை நமக்கு தெளிவாக்கியுள்ளார். நேசமணி அவர்களை புனிதராக்கும்  காலாவதியாகிப்போன
உத்தியை கையாண்டுள்ளார் கட்டுரையாளர்.
            மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்பும் பழைய அந்தப்புர நினைப்பிலேயே திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாள திகழ்ந்த குமரி மாவட்டத்தையும்
சேர்த்து ஆண்டுவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கெதிராக குமரிமண்ணின்
மைந்தர்கள் அணிதிரண்ட காலம் அது. மக கொடுமையான அடக்குமுரை ஆட்சியை நடத்திவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கு எதிராக மூண்ட கலகம் காலப்போக்கில் பட்டம் தாணுபிள்ளையின் சாதிக்கெதிராகவும் மலயாள மொழி பேசுபவர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடும் அபாயத்தை புரிந்துகொண்ட
கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் ஒற்றுமையை காக்க, ஜீவா  அவர்களது தலைமையில்  ஜீ எஸ் மணி, டி.மணி உட்பட தோழர்களை களமிறக்கியது. மக்களை ஒன்றிணைத்து மொழிவழி மாகாணம் என்ற கோஷத்தை முன்வைத்து அதன் காரணமாக சொல்லமுடியாத கொடுமையினை சந்தித்த வீரவரலாறு கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
              பட்டம் தாணுபிள்ளையின் பேயாட்சிக்கு டெல்லியிலிருந்து ஆதரித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருவாங்கூர் காங்கிரஸ் என்ற அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டு பின்பு திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர்மாற்றம்
செய்யப்பட்டு நேசமணி உட்பட களத்தில் நின்றனர். தாய்த்தமிழகத்தோடு இணையும் போராட்டத்தின் உச்சகட்டமாக 1954 ஆகஸ்ட் 11ஆம் தேதி
நடைபெற்ற நரவேட்டையும் ,பட்டம் தாணுபிள்ளைநின் காவல்துறையின் துப்பாக்கிச்  சூடும் உயிர்பலிகளும் குமரி மாவட்டத்தின் கறைபடிந்த வரலாறு. ஒரு காலம் வரையிலும் இந்த இயக்கங்களோடு இணைந்து காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் செயல்பட்ட நேசமணி அவர்கள், மக்கள் எதிர்ப்பு காரணமாக பட்டம் தாணுபிள்ளை பதவியிறக்கம் செய்ய மத்திய காங்கிரஸ் ஆட்சி முடிவு செய்து, பனம்பள்ளி கோவிந்த மேனன் எனபவரை 1954ஆம் ஆண்டு முதல்வர் ஆக்கியது. அதுவரை களத்தில் நின்றிருந்த திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அதிகார சபலம் ஏற்பட்டது. பட்டம் தாணுபிள்ளையின் நரவேட்டைக்கு துணை போன காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க நேசமணி அவர்கள் முடிவு எடுத்து
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 சட்டமன்ற உறுப்பினர்களும் பனம்பள்ளி கோவிந்த மேனனின் ஆட்சிக்கு ஆதரவளித்தனர். நேசமணி அவர்கள் மேற்கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் சிதம்பரநாதன் அவர்களுக்கு மந்திரி பதவியை பெற்றுத் தந்தது. ஆனால் களத்தில் நின்ற மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனார் நேசமணி அவர்கள். நேசமணி அவர்களை ராசா என்றுதான் அழைக்க வேண்டும் என்ற கட்டுரையாளரின் நோக்கம் அவரது சொந்த ஆசையாகவே இருக்கட்டும் விக்ரமாதித்தன் அவர்களையும் கிருஷ்ணகோபால் அவர்களையும் பெயர் சொல்லியே குறிப்பிட்ட கட்டுரையாளர், நீங்களெல்லாம் கூலிவேலை செய்தால்தானே நாங்களெல்லாம் படைப்பாளிகளாக இருக்கமுடியும் என்று கூறிய நாடறிந்த எழுத்தாளர் பெயரை மிகவும் வசதியாக மறைத்துவிட்டார். சில பத்திரிக்கைகளில் தங்களது சொந்த கருத்தை பதிவு செய்ய, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் கூறினார், என்ற சில செய்தியாளர்களின் அரதப் பழசான உத்தியை கையாண்டு உள்ளார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியை நேசமணி அவர்கள் உருவாக்கினார் என்பதே ஒரு வரலாற்று புரட்டு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

Tuesday, September 13, 2011

அய்யா வைகுண்டரும் பத்மநாபசாமியும் புதையல் ரகசியம்.

 
திரு.லட்சுமி மணிவண்ணன் பேசுவதிலும் எழுதுவதிலும் கட்டுடைப்பு அதிகமாக இருப்பதால் புரிந்து கொள்ள முடிவதில்லை.அவ்வளவு தரமானது. சமூகத்திற்கு என்ன சொல்கிறார் என்பதை பூதக் கண்ணாடி போட்டுத்தான் பார்க்கவேண்டும்.
அவரின் எழுத்தில் கற்பனைக் குதிரை கனவுலகில் அற்புதமாக பறந்தபடியே இருக்கும்  நிஜவுலகில் கால்பதிக்காமல் தாவித் தாவிப் பறக்கும். குமுதம் தீராநதியில் எழுதிவரும் தொடரில்  புரிந்து கொள்வதில் மிகச் சிரமம். செப்டம்பர் தீராநதியில் வைகுண்ட சாமியும் பத்மநாபசாமியும் புதையல் ரகசியம் எனும் கட்டுரையில் அய்யா வைகுண்டரின் சமூக நீதி வரலாற்றை பள்ளி கல்லூரிகளில் பாட்டத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்ற தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து தீர்மானம்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிறைவேற்றியதை நையாண்டி செய்வதோடு,சம்பந்தமில்லாமல் இடதுசாரிகள்மீது
அவருக்கே உரித்தான கற்பனையில் கருத்துகளை எடுத்துரைத்துரைத்திருக்கிறார்.
எந்தக் கட்டுரை எழுதினாலும் சில கட்டுரையாளர்களுக்கு இடையிடையே இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்ட்கள் பற்றி எதிர்மறை வாக்கியம் அல்லது வார்த்தைகளை சொருகிவிட்டால் நவீனத்துவம் என்ற அந்தஸ்தைப் பெற்று மகத்துவமாகிவிடுகிறது.  குழப்பங்களின் நன்மை என்றே இதற்கு முன்வந்த தீராநதி இதழில் கட்டுரை எழுதியிருக்கிறாரென்றால் குழப்புவது அவர் வேலையோ என்று சந்தேகங்கொள்ளச் செய்கிறது..
அய்யா வைகுண்டர்பற்றி சரியான மதிப்பீடு கொண்டு இளைய தலைமுறை க்கு
குமரிமுனையில் சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றை நீண்ட காலமாக இடதுசாரி சிந்தனை கொண்டோர் பரப்பி வருகிறார்கள். 1998 ல் கேரளாவில்
இ எம் எஸ் நம்பூதிரிபாட்டுக்கு அடுத்தபடியாக இருக்கின்ற மார்க்ஸிய அறிஞர்
அப்போதைய கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பி.கோவிந்தபிள்ளை சுவாமித்தோப்புக்கு வந்து தலைமைப் பதியைப் பார்த்துவிட்டு
தவத்திரு பால பிரஜாபதி அடிகளார் அவர்களிடம் உரையாடும்போது ஆத்தியத்து
கம்யூனிஸ்ட் இவடேயாக்கும் என்று புளகாங்கிதம் அடைந்து கேரளாவில் தனது சகாக்களோடு பல நேரங்களில் விவாதித்திருக்கிறார். 1995ல்மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் கலைப்பிரியன் தென்முனையில் ஒரு கலகக் குரல் என்று தீக்கதிர் நாளேட்டில் கட்டுரை எழுதினார். 1999ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அன்றைய மாநிலப் பொதுச் செயலாளர் கதிரேசன் (அருணன்) தமிழகத்தில் சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு என்ற நூலில் இரண்டாவது அத்தியாயமே அய்யா வைகுண்டர் பற்றித்தான். நாவலாசிரியர் பொன்னீலன் தான் எழுதிய தெற்கிலிருந்து என்ற நூலில் அய்யா வைகுண்டர் வரலாறை  முதல் பகுதியில் விளக்கமாக எழுதி சமூக்கத்திற்க அறிமுகம் செய்துள்ளர். கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வி தங்கையா அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை
மலையாளத்தில் எழுதியுள்ளார். ஆற்றிங்கல் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் ஏ. சம்பத் பாராளுமன்றத்தில் அய்யாபற்றி பேசி தபால் தலையில் பதிக்க
முயற்சியும் மேற்கொண்டார். மார்க்ஸிஸ்ட் கட்சியில் கேரள மாநிலச் செயலாளர் தோழர் பினராய் விஜயன் பங்கேற்ற அய்யா வைகுண்டர் பற்றி  பாரசாலையில் கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். கேரளாவில் ஒரு தன்னார்வ மையம்  அய்யா வைகுண்டர் பெயரில் இணையத் தளம் உருவாக்கி ஆராய்ச்சிப் பணி துவங்கியுள்ளது.அதன் துவக்கவிழாவில் கடந்த இடது முன்னணி ஆட்சியின் சட்டசபைத் தலைவர் தோழர் கே.ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்து பேசும்போது அய்யா வைகுண்டர் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியும் புரட்சியாளரும் ஆவார்.அவர் காரல் மார்க்ஸூம் பிரெடரிக்  எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு  12 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சமுதாயம் உருவாக்க சமத்துவ சமாஜம் இயக்கம்  கட்டியவர் என்று புகழாரம் சூட்டியது வெறும் சொல்லில் மட்டுமல்லாது,தோழர் வி எஸ் அச்சுதானந்தன் தலைமையில் நடைபெற்ற இடது முன்னணி அரசில் கல்வி அமைச்சராக தோழர் எம் ஏ பேபி ,கேரளாவில் 7 ஆம் வகுப்பு மற்றும் எம் ஏ பாடவகுப்பிலும் பாடத்திட்டத்தில் இணைத்து தங்களின் வரலாற்றுக் கடமையை ஆற்றியுள்ளார்கள்.  இது நிறைவேற நல்லெண்ணங் கொண்ட அனைவரின் ஆதரவோடு அய்யாவின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டத்தில் இணைந்தால்  தமிழகத்தின் தென்முனையில் குறைந்திருக்கும் ஜாதிவெறி, வடமாவட்டங்களில் வரலாற்று ஒளி வீசி சாதிவெறிக்கு சமாதி கட்டமுடியும். இந்தியாவில் சமூக சீர்திருத்த வாதிகளுக்கெல்லாம் முன்னோடி இணையத்தளத்தில் கேரளாவைச் சார்ந்த திரு.அஹிமோகனன் எழுதியது மிகச் சரியானது. முற்படுத்தப் பட்ட சாதியோரில் மனிதநேயங்க கொண்டோர் மற்றும் அனைத்துச் சாதிகளிலும் மனித
நேயங்கொண்ட பலர் அய்யாவை அடிக்கடி வந்து ஆசி பெற்று உரையாடி பூரித்த
ஐக்கிய முன்னணி 1840 கால கட்டத்தில் இருந்த வரலாறும் பொதிந்திருக்கிறது.
சுவாமித்தோப்புக்கு அம்மையார் ஜெயலலிதாவும் ,திரு அத்வானி அவர்களும் வருகை தந்த பின்புதான் இவர்களுக்கு யோசனை வந்ததாகக் கூறுவது சரியல்ல.
அம்மையார் அவர்கள் வருவதற்கு முன்பே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நாகர்கோவிலில் கேரளாவில் பாடத்திட்டத்தில் சேர்த்ததுபோல தமிழகத்திலும்
சேர்க்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஜெபமாலை கல்யாண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தியது.அதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில தலைவர்களில் ஒருவரும் நாவலாசிரியருமான தோழர் பொன்னீலன், தற்போதைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.இதுவரை வேறு எந்த அமைப்பினரும் இவர்பற்றி சிந்திக்காதபோது
இடதுசாரிகளும் சில பண்பாட்டு அமைப்புகளும் ,நல்ல சமூக சிந்தனைகொண்ட
அறிவுஜீவிகளும் முன்னெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்த சிந்தனையாளர்களெல்லாம்  தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்ற அகிலத் திரட்டின் அடிநாத வரிகள் மட்டுமல்ல, தத்துவமும் நடைமுறையும் ஒருங்கே அமையப் பெற்ற இந்தியாவுக்கே வெளிச்சம் காட்டுபவர் அய்யா என்பதாலும், அய்யாவின் இறுதி அறிவுரையான ஒன்னு சொன்னதை ஒன்னு கேட்டு ஒருவருக்கொருவர் நிரப்பாயிருந்திடுங்கோ என்ற சமதர்மக் கனவும்,
பெண்பாவம் பாராதே என்றும் ஆணும் பெண்ணுங்கூடி ஆசாரஞ்செய்திடுங்கோ என்ற சமநோக்கு சிந்தனையும்,பெட்டைக் கோழி தட்டிக்கூவும் என்ற உயரிய கனவும் , கொத்தைக் குறையாதே குறைமரக்கால் வையாதே என்ற கூலிச்சுரண்டலுக்கு எதிரான கருத்தும், பாரதிக்கு மூன்பே
சமூக மோசமான நிலையை பார்த்தே தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்ற ஆவேசத்திற்கு முன்பே அய்யாவின் சாட்டு
நீட்டோலையில் ஊமையா இருப்பவன் வாயைத் திறந்தாலே உலகமே அழியுமே சிவனே அய்யா தன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆவேசப்ட்டதன் அடையாளமே இது. இன்னும் அய்யாவின் அகிலத்திரட்டிலும், அருள்நூலிலும், தோண்டத் தோண்ட  சமூக அறிவுப் புதையல் வந்து கொண்டே இருக்குமென்று தெளிவாக சிந்தனையாளர்கள் தெரிந்திருக்கிறார்கள். திரு லட்சுமி மணிவண்ணன் கூட தன்
பெயர் பிரபலமாகவேண்டும் என்பதற்காகவோ என்னவோ தெரியாது அவர் மிக
அருமையான அய்யாவின் கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு முத்திரிப்பதம்
என்ற இசைக் குறுந்தகடு வெளியிட்டுள்ளார். அவர் மட்டும் பாடல்கள் முலம் பிரச்சாரம் செய்யலாம்  ஆனால் காலங்காலமாக பல்வேறு சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளை சிந்தித்தும் நேரடி இயக்கமும் நடத்திவரும் அமைப்புகள்
உயரிய கோரிக்கையை தமிழக அரசிடம் வைக்கக் கூடாதா? இதை  எதிர்ப்பதில்
இவருக்கு என்ன லாபம்? அய்யாவின் மகோன்னதமான சமூக இயக்கங்கள் நடந்துள்ளதென்று தெற்கிலிருந்து கருத்து பரவட்டுமே. நீண்ட காலமாக பரவி வரும் கருத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரும்போதுதான் கனியும். கேரளாவில் கனிந்திருக்கிறது.தமிழகத்திலும் கனியும் .இதை வாழ்த்தி வரவேற்பதே மனித மாண்பு. இகழ்வதும் கண்ணில் பல நிறக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதற்கு
இது நேரமல்ல என்பதை நண்பர் லட்சுமி மணிவண்ணன் அவர்களை நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                   
                                                                                                இப்படிக்கு,
                                                                                    க. கணேசன், கொட்டாரம்