Tuesday, November 21, 2017

                                            
                             முத்தாலம்மன் கதை
                                     பேரா.முனைவர் க கணேசன்
      நாட்டுப்புற தெய்வங்களுக்கு தனித்தனியாக ஏராளமான கதைகள் உண்டு. அவற்றை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். சுடலைமாடன்,இசக்கியம்மாள், காளியம்மாள், மதுரை வீரன்,காத்தவராயன்,இருக்கன்குடி மாரியம்மாள், இன்னும் மாவட்டங்கள் தோறும் ஏராளமான தெய்வங்கள் உள்ளன. இவைகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர் கோம்பை, ஸ்ரீராம்புரம், தாடிக்கொம்பு, குஞ்சுவீரன் பட்டி,    மதுரை உத்தபுரம் உட்பட ஏராளமான ஊர்களில் கொடைநடத்தி வழிபட்டுவரும் நாட்டார்தெய்வமான முத்தாலம்மன் கதையும் ஒன்று.  இது கதைப்பாட்டாக வழிவழியாக பாடப்பட்டு, பங்குனி மாதத்தில் கொடைவிழாவிற்கு முன்னால் சாமி சாட்டுதல் என்ற நிகழ்வு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன் பறை தொழில் கலைஞர்களால் தினமும் மாலை வேளைகளில் கோயிலுக்குமுன் பாடப்பட்டு பூசை செய்வார்கள்.
     கொடைவிழா மூன்று நாட்களாக நடைபெறும். கல கலப்பான மகிழ்ச்சியும்,சொந்தக்காரர்கள்,குடும்பத்தினரை பல ஊர்களிலிருந்தாலும் ,அனைவரையும் அழைத்து மூன்று நாட்களும் வீட்டில் தங்கவைத்து, ஆனந்தமான அசைவ உணவு பரிமாறி,உறவுகளின் ஒற்றுமையை மிக நெருக்கமாக  பராமரிப்பார்கள். கொடைவிழாவின் முதல் இரண்டு நாட்களும்  விடிய விடிய நாடகங்கள் நடத்துவார்கள். பவளக்கொடி ,வள்ளிதிருமணம்,சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான காண்டம், பொன்னர் சங்கர்,ஆகிய நாடங்களில் ஏதாவது இரண்டை பிரபலமான நாடக கலைஞர்களை அழைத்து வந்து நடத்துவார்கள். மக்களின் இயல்பான பக்தியே மேலோங்கியிருந்தாலும், மக்களின் இளைஞர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
  சாமி சாட்டியவுடன் வீடுகளில் ,நவதானியங்கள் பயறுவகைகளை ஊறப்போட்டு வளர்த்து முளைப்பாரிகளாக தயார் செய்துவைப்பார்கள். கொடை விழாவின் இரண்டாவது நாளில், மாவிளக்கும் முளைப்பாரியும், பொங்கல் வைப்பதும் நடைபெறும். முளைப்பாரிகளை கோயிலின் முன்னே வைத்து பெண்கள் கும்மியடித்து பாடி ஆனந்த மடைவார்கள். இளைய திலகங்களான ஆண் பெண் கூட்டத்திற்கு வித்தியாசமான மகிழ்ச்சி துள்ளி விளையாடும். இரண்டாவது நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பறைக் கலைஞர்களால் முத்தாலம்மன் கதைப்பாட்டை படுகளக் காட்சியாக்கி, ஒரு மிக அற்புதமான வீதி நாடகமாக மக்களிடம் பக்தி கலந்த பரவசத்தோடு படைப்பார்கள். கொடைவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும். பிராமணி, வைதீக சடங்காச்சாரங்களுக்கு அங்கு இடமே இருக்காது.
    கதையில் வருகின்ற வீரபாகு சாம்பானின் மனைவி புழுக்கச்சி தனது குழந்தைகளை கொன்று நால்வரையும் கிடத்திவிட்டு ஒப்பாரி வைப்பதும், நான்கு சிறுவர்களை படுக்கவைத்து வாயில் வாழைப் பழத்தையும், வயிற்றில் அரிசி தேன் கருப்பட்டி கலந்து தயாரித்த மாவு உருண்டையையும் வைத்து வேட்டியைக் கொண்டு மூடிவிடுவார்கள். நான்கு பையன்களும் வாழைப் பழத்தை அப்படியே வாயில் வைத்திருக்கவேண்டும். சுமார் ஒருமணி நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும், நாற்பத்தைந்து வருடங்களுக்குமுன்பாக அந்த நான்கு பேரில் நானும் ஒருவன். மனைவி புழுக்கச்சியாக எனது மாமா வையாபுரி புளுக்கச்சி வேசம் போட்டு, முறத்தால் மார்பிலே அடித்துக் கொண்டு வருவார், எனது சித்தப்பாக்களான சுப்பையா, ராமன் ஆகியோர் மாறி,மாறி ஒப்பாரி பின்னணியாக பாடுவார்கள்.  புழுக்கச்சியாக வரும் எனது மாமா நான்கு பையன்களையும் சுத்தி சுத்தி வரும்போது “டே உறங்கிறாதே’ என்று காதுக்குள் சொல்லிச்செல்வார்.
      நாங்கள் நான்கு பேரும் படித்துக்கொண்டிருக்கிற பையன்கள். வீட்டில் இப்படிப் படுகளத்தில் படுப்பது நேர்த்திக் கடன், இதைச் செஞ்சிங்கன்னா படிப்பு நல்லா வரும் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பக்தியோடு நாங்களும் நிகழ்ச்சி முடியும்வரை படுத்திருப்போம். நெட்டைக் கழுமரத்தில் ஒரு அம்பல காரரும், (சில ஊர்களில்) குள்ளமான கழுமரத்தில் வீரபாகு சாம்பான் என்ற கதாபாத்திரமும் தொங்கிக்கொண்டு இருப்பார்கள். ஒப்பாரிப் பாடல்களும் அவர்களின் காட்சிப் படிமங்களும் பார்க்கின்ற மக்களிடையே அந்த கதையின் உள்ளடக்கம் உணர்ச்சிப் பெருக்கோடு கண்ணீரை வரவழைக்கும்.அப்படி ஒரு அற்புதமாக கொடைவிழாவாக இருக்கும்.
   மூன்றாம் நாள் முத்தாலம்மன் சாமியை தூக்கிக் கொண்டு ஊரின் எல்லையில் வைக்க அதே   பாடலுடன் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். அதில் மஞ்சள் தண்ணீர் சொந்தங்களில் மாமன் மச்சான், மதினி கொளுந்தி கொளுந்தன் உறவு முறைகளில் திருமணம் ஆகாதோர்  மத்தியிலும்,   திருமணமானோர் மத்தியிலும் ஊற்றப்பட்டு குதூகலிப்புக்கு உள்ளாவார்கள். இந்த மஞ்சத்தண்ணீர் சொந்தங்களை கடந்தும் சாதிவிட்டு சாதியும் அருவியாய் கொட்டும். அன்றைய தினம் இப்படி ஆண்களும் பெண்களும் விளையாடுவதை யாரும் பிரச்னையாக்குவதில்லை. அன்று சுதந்திரமான கேலிச் சிந்தனை சிறகடிக்கும். இருபாலர்மத்தியிலும் சாதி கடந்து கூட காந்தப் பார்வை கவ்விப்பிடித்து, ஆதிப் பண்பாட்டின் மிச்சம்தான் இது என மின்னலாகப் பளிச்சிட்டு மறையும் ..
ஆனந்த கொடைவிழாவின் முத்தாலம்மனின் கதை இதுதான்
        வடக்கே வடதேசம் காசி மாநகரம் என்ற பட்டிணம் இருந்தது. அந்த கிராமம் மிக அழகாகவும் சிறப்புத்தன்மையும் வளம் கொழிக்கும் ஊராக இருந்தது. அந்த கிராமத்தில் துளசி அம்மாள் முத்திமாணிக்கம் செட்டியார் தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு பல வருடங்களாக புத்திர பாக்கியம் இல்லை.
        இவர்களுடைய தொழில் ராட்டை நூல் நூற்று விற்பனை செய்வதுதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகவும் கவலையோடு வாழ்ந்துவந்தனர். 1     
ஒருநாள் இவர்களின் கனவில் ஒரு மாமுனவர் தோன்றி இவர்களின் ஆழ்ந்த கவலையை பார்த்து கேட்டறிந்தார். அவர்களும் தங்களுக்கு திருமணம் முடித்து நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று அவரிடம்  வெளிப்படுத்தினர். அப்படியென்றால் நான் உபதேசம் சொல்கிறேன் கேள் என்று’ தில்லை சிதம்பரம் , திருவேலன் கைலாயம்  உச்சியில் சென்று ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு கடும் தவம் செய்தீர்களென்றால்  பிள்ளை வரம் கிடைக்கும் என கூறினார் ,
         தம்பதியர் இருவரும் அப்படியே அந்த மலைநோக்கி சென்று கடும் தவம் செய்தார்கள். அந்த சமயத்தில் பார்வதி பரமசிவன் தோன்றி அவர்களின் தவத்தின் காரணத்தை அறிந்து கொண்டு பிள்ளைவரம் கொடுத்தார்கள்.
      பராசக்தி தனது கழுத்தில் இருந்த முத்து மாலையில் இருந்து ஒரு முத்துவை எடுத்து துளசி அம்மாள் கையில் கொடுத்து ‘இந்த முத்தை மூடிய கை திறக்காமல் வீடு சென்று ஒரு யாகம் வளர்த்து அதில் இந்த முத்தை போட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு பிள்ளை வரம் கிடைக்கும் போய் வாருங்கள்’ என்று அனுப்பினர்.
        அவர்களிடம் வாங்கிய முத்தை மூடிய கை திறக்காமல் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாயவர் முன்தோன்றி, இருவரும் எங்கு சென்று வாரீர் என்று கேட்க , மாணிக்கம் செட்டியார் ‘சிவனிடத்தில் ஒரு குழந்தை வரம் வாங்கி வருகின்றோம்’ என்று கூறினார். இவர்கள் முன்பிறவியில் மக்களுக்கு, மாமனார், மாமியார் கொடுமை படுத்தியவர்கள்,இதை அறியாமல் சிவபெருமான் வரத்தை கொடுத்துவிட்டார்களே ஆகவே தருமம்  நிலைநாட்டி அதர்மத்தை ஒழிக்கவும், கொடுத்த வரத்தை ஒரு பெண்ணாக சபிக்க வேண்டும் என்று நினைத்து ‘பிரமா ‘ஊர் சென்று யாகம் வளர்த்து அதில் இந்த முத்தை போடுங்கள் ஒரு பெண் குழந்தை உங்களுக்கு பிறக்கும்’ என்று கூறி பிரமா மறைந்து விட்டார்.
    அவ்வாறே இவர்கள் யாகம் வளர்த்து அந்த முத்தை யாகத்தில் போட்டனர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. முத்தினால் பிறந்ததால் (முத்தினால் வந்ததால்) முத்தாலம்மாள் என்று பெயரிட்டனர்.  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். முத்துமாணிக்கம் செட்டியார் வெளியூர் சென்று முத்து ,வைடூரியம் சம்பாரித்து வரவேண்டும் என நினைத்து வெளி மாநிலம் சென்றுவிட்டார். அதன் பிறகு தாயும், பிள்ளையும் ராட்டை சுற்றி நூல் நூற்று ,அதை விற்று பிழைத்து வந்தனர்.
         இந்த நூற்று வைத்த நூலை வாங்குதற்கு வீரபாகு சாம்பான் தெருத்தெருவாக நூலை வாங்கிச் செல்ல வருவான். அந்த சமயம் முத்தாலம்மாள் தனது வயதுள்ள பிள்ளைகளுடன் விளையாடச் செல்வதுண்டு.
      அந்த சமயத்தில் தனது தாயார் துளசி  அடுப்பில் உலை வைத்து அரிசி போட்டு விட்டு  முத்தாலம்மாளிடம் ‘வீரபாகு சாம்பான்  நூற்றுவைத்த நூலை எடுக்க வருவான். நீ நூலையும் நூற்றுக்கொண்டு அடுப்பையும் எரித்துக் கொண்டிரு என்று சொல்லிவிட்டு வெளியே தண்ணீர் எடுக்கச் சென்றுவிட்டாள். அடுப்பை எரிக்க மறந்துவிட்டு முத்தாள் விளையாட்டுப் பிள்ளைகளோடு விளையாடச் சென்றுவிட்டாள். தனது தாயார் துளசியம்மாள் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது அடுப்பும் எரியவில்லை. போட்ட அரிசி போட்டதுபோல் இருக்கிறது.இதைப் பார்த்து கோபங்கொண்டு ‘ஏண்டி நூல் எடுக்க  உன் பறப் புருஷன் வருவானே அவனுக்கு எந்த நூலைப் போடுறது இப்படி விளையாடிக்கொண்டிருக்கிறாயே!நீ வீட்டை விட்டுப் போடி.கண்ணுலேயே முழிக்காதே என்று கண்டபடி ஏசினாள் துளசி அம்மாள்
     தனது தாயார் இப்படி தகாத வார்த்தைகளை வீசிவிட்டு சென்றுவிட்டாளே என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஒட அழுதுகொண்டிருந்தாள் சாம்பான் வந்தால் அவன்கூட போய்விடலாம்  என்று எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் முத்தாலம்மாள்..
           வீரபாகு சாம்பானவன் காசிப் பட்டிணம் முழுவதும் நூலை எடுத்துக்கொண்டு பொதி கட்டி ஒரு மாட்டின்மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அப்போது முத்தம்மாள் அவனின் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். வெகுதூரம் சென்ற பிறகு வீரபாகு சாம்பான் முத்தம்மாள் பின்தொடர்வதை பார்த்து ‘ஏன் அம்மா என் பின்னாலே வருகிறாய் என்று சாம்பான் கேட்க, ‘எனது தாயார் என்னை தகாத வார்த்தைகள் கூறி ஏசி விட்டாள்.உன் பறப் புருஷன் வருவான் நீ அவனோடு போய்விடு வீட்டுக்கு வரக்கூடாது என்று பேசிவிட்டாள்.ஆகவே நான் உன் பின்னால் வருகிறேன் என்று கண்ணீர் பெருக்கோடு  அழுதுகொண்டே சொன்னாள் முத்தம்மாள்
 அப்போது சாம்பான் ‘நீயோ மேல்சாதிப் பெண் நான் கீழ்சாதி சார்ந்தவன் பறையன் என்பின்னால வரலாமா தாயே?’ என்று கேட்டான். அதற்கு முத்தாலம்மாள் ’நீ என்னென்ன சொன்னாலும் ஏதேதோ உரைச்சாலும் நான் உன்னோடுதான் வருவேன். இல்லையின்னா வேறு கெதி இல்லை’என்று கூறி அழுகிறாள். சாம்பான் பதட்டத்தோடு அய்யோ எல்லா வீட்டுலேயும் தாயார் ஏசுவது இயல்புதானே இதுக்கெல்லாம் கோபங்கொள்ளாம வீட்டுக்கு போம்மா, நான் கொண்டு வந்து விட்டுருறேன்’ என்று மன்றாடுகிறான்.  அவள் அடம்பிடித்து மறுக்கிறாள். சரி என்று ஏற்றுகொண்டு வந்து கொண்டிருக்கும் வழிதனில் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்கிறது. சாம்பான் ‘எனக்கு மனைவி பிள்ளைகளெல்லாம் இருக்கிறார்கள் நான் எப்படிம்மா உன்னைக் கூட்டிச் செல்வது?’ என்று கூறவும் அதற்கு முத்தாலம்மாள் ‘நான் செத்தாலும் உன்னை விட்டா வேறு துணை ஏதும் இல்லை என்று அழுத்தமாக கூறியபிறகு, வீரபாகு சாம்பான் மன உறுதிகொண்டு ஊருக்கு அழைத்து வருகிறான்.
       வருகின்ற வழியிலே ஒரு வேளார்(சட்டி பானை செய்வோர்) வீடு சென்று ‘இந்த பொன்னு என் கூட அடம்பிடித்து வந்து விட்டது இன்று ஒருநாள் மட்டும் தங்கள் வீட்டில் இருக்கட்டும அடுத்தநாள் நான் வந்து கூட்டிகிட்டுபு போறேன்.’ என்று கேட்க வேளார் ஒத்துக் கொண்டார்.
       ஆனால் வேளார் வீட்டில் சண்டை சச்ரவு வர ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு வேளார் சாம்பானை அழைத்துவந்து ‘நீ பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றுவிடு என் வீட்டில் சண்டையும் சச்சரவும் விந்துவிட்டது’ என்று கூற வீரபாகு சாம்பானும் அழைத்துக்கொண்டு சென்றான். முத்தம்மாளை அழைத்துக்கொண்டு தான் தங்கியிருக்கும் ஊரின் சேரிக்கு மேற்குப் பக்கம் மந்தையில் சீரான குடுசை கட்டிவைத்து  அதற்கு தேவையான வேப்பம் தளை , மாஇலை எடுத்து பரப்பிவிட்டு முத்தாளை தங்க வைத்துவிட்டு வீரபாகு வீட்டுக்கு சென்றான் வீரபாகு.
       , அந்த பெண் வந்த விபரத்தை அறிந்துமனைவி ‘மானம் மார்க்கம் கெட்ட என் பறையா போனவன் பின்னாள் வந்த பெண் யாருடா என்று கேட்டாள்.அதற்கு அவன் ‘அந்த பெண் மேல் குலப் பெண் மந்தையில் குடியிருக்கிறது.அந்தப் பெண் நமக்கு அல்லும் பகலும ஆன துணையாக இருக்கும்.’ என்று கூறினான். இதைக் கேட்டு வீரபாகுவின்மனைவி முத்தாலம்மாளை தகாத வார்த்தைகூறி வெறுப்போடு வார்த்தைகளை கொட்டித் தீர்த்தாள்
    . வீரபாகு மனது உறுதியோடு முத்தம்மாளுக்கு வேண்டிய அரிசி பருப்பு மரக் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து பசியாற ஏற்பாடு செய்தான். சேரியில் அனுதினமும் மாட்டுக் கறி புழங்கிக்கொண்டு இருக்கின்றது. அந்த பெண் சின்னஞ் சிறு குழந்தை கறி மேல் ஆசைப்பட்டிருக்கும் என்று வீரபாகு  மன ஏக்கத்தோடு  ஆடு திருடி வருவோம் என்று நினைத்து  வீட்டைவிட்டு வெளியேறி முன்பின் திருடிப் பழக்கமில்லாத வீரபாகு  பொழுது மறைய பதறி ஆட்டுக்கிடை நோக்கி நடந்தான் வீரபாகு.
          அந்த ஊரில் கருப்புடையார் ஆட்டுப் பட்டிக்கு சென்று, பட்டியை அவிழ்க்கும்போது,அந்த பட்டியில் காவலுக்கிருந்த கருப்புடையார் பார்த்துவிட,அவனிடம் ‘ஏன் சாம்பான் இன்னேரத்தில் வந்து இருக்கின்றாய்?’ என கேட்க ‘எனக்கும் மந்தையில் இருக்கும் முத்தம்மாவுக்கும் ஒருவிவாதம் சாமி அது ஆட்டிற்கு மேல் பல் கீழ் பல் எத்தனை என்பதுதான் அதற்குத்தான் அது உறுதிப் படுத்த பார்க்கவந்தேன் ’’ என்று பதில் சொன்னான். ‘சரி சரி பாத்துட்டுப் போ என கருப்புடையார் கூறவும், மனக்கலக்கத்துடன்  வீட்டுக்குச் சென்று படுத்துப்பார்த்தான்.
        அவனுக்கோ உரக்கம் வரவில்லை. மறுபடியும் எழுந்து நடந்து வந்து ,அடுத்த ஊரைச் சார்ந்த வெள்ளுடையார் ஆட்டுப் பட்டிக்கு சென்று அங்கு ஒரு ஆட்டைத் திருடி வெளியே வரும்போது கையும் களவுமாக பிடிபட்டு விட்டான். அவனை இழுத்து வந்து மந்தையில் நிறுத்தி அந்த ஊர் நாட்டாமை நாயக்கர் ஊர் பெரியதனம் ஆகியோரை அழைத்துவந்து இவன் செய்ததை கூறவும், ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் இவனுக்கு இந்த கழுகு மரத்தில் தொங்க விட்டு ,அதன் கீழே அவன் திருடிய ஆட்டையும் கட்டிவைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
    அந்த சமயத்தில்  அணில் வேட்டை யாட அம்பலகாரர்கள் வந்தார்கள் .யாரை நினைத்து அறுந்தவம் செய்கின்றாய்? எவரை நினைத்து இந்த தலைகீழாக தொங்குகிறாய்? என்ற வீரபாகுவிடம் கேட்டார் அம்பலகாரர். அதற்கு ‘சாமி அதோ பாருங்கள் இந்த வெள்ளாடு கட்டியிருக்கு இந்த கழுவு மரத்தில் இன்று ஒரு பொழுது மட்டும் தலைகீழாக தொங்கினால் ஊரார் வந்து சகுந்த சன்மானங்கள் வழங்குவார்கள்’ என்று கூறினான் வீரபாகு.         
       ‘அப்படியென்றால் என்னைத் தொங்க விட்டு நீ போயிடு என்றார் அம்பலகாரார்.அதன்படி அம்பலகாரரை ஏற்றிதொங்க விட்டுவிட்டு சென்றுவிட்டான் வீரபாகு .மறுநாள் காலையில் ஊரார் வந்து பார்த்ததும் அம்பலகாரர் தொங்குவதை அறிந்து
     , வீரபாகுவை இழுந்து வந்து ஒரு குட்டையான கழுவு மரம் வெட்டி அதில் வீரபாகு சாம்பானை ஏற்றி தொங்கவிட்டனர். அப்போது தனது கணவன் தொங்கும் செய்தி கேட்டு  ,வீரபாகு சாம்பானின் மனைவி தனது நான்கு மகன்களையும் அழைத்து, முத்தாள் குடிசை முன்பு நின்று ‘உனக்கு அபயம் எனது நான்கு மகன்களையும் கொல்கிறேன் .என் குடும்பத்தை கெடுத்த பாவி என கோபப் பட்டு  கொலை செய்து அவர்களின் ஈரலை எடுத்து அவர்களின் வயிற்றில் வைத்து ,அவர்களின் ஆணுறுப்பை அறுத்து அவர்களின் வாயில் வைத்து,அவர்களின் ரத்தத்தை எடுத்து ,முத்தம்மாளின் குடிசையில் மேல் தூவி தகாத வார்த்தை சொல்லி திட்டித் தீர்த்தாள்.
       அதற்கு பிறகு முத்தாலம்மாளுக்கு ஆங்கார கோபம் வந்து அக்கினிப் பொறி பறக்க வெளியே வந்து நின்றதைக் கண்ட வீரபாகு மனைவி ,காந்தாரி(புளுக்கச்சி) ரூபத்தை பார்க்கவுமே அவளுக்கே மனம் கலங்கி நின்று’அம்மா நான் யாரோ எவரோ என உன்னைப் பற்றி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டேன்.நான் அறியாமல் எனது பிள்ளைகள் நால்வரையும் கொலைசெய்து விட்டேன் தாயே! நீ அண்ட நெருப்பு என தெரியாமல் செய்துவிட்டேன் என்று அழுது புரண்டு அம்மா காலில் விழுந்து கும்பிட்டாள்.
        முத்தாலம்மாள்  ‘என்னைப் படைத்த சக்தி சிவன் பிரமா அழைத்து நான் பெண்ணாகப் பிறந்து, இந்த மண்ணுலகில்,மானிட ஜென்மத்திடம் இப்படி ஒரு தகாத வார்த்தைகளுக்கு ஆளானாய். அதற்கு சக்தி, சிவன் பிரம்மா பார்த்து ‘அம்மா நீ ஏன் கலங்குகிறாய்?’உன்னை ஏன் படைத்தோம் தெரியுமா? அடங்காத மானிடரை ஆட்டிப் படைக்கும் வல்லமை உனக்கு உண்டு. ஆகவே இந்த மண் உலகில் வாழ்கின்ற மக்களுடைய தருமத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை ஒழிக்க காட்சி அளிக்கவேண்டும். என  ஈஸ்வரி சிவன் பிரமா,  கட்டளை இட்டனர்.
           முத்தாலம்மாள் மனம் இறங்கி செத்தவர்களை எழுப்பி திருநீரும், தீர்த்தமும் வர வழைத்து இறந்த பிள்ளைகள், வீரபாகு சாம்பான், அம்பலகாரர் மேல் தெளித்தவுடன், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். அதன்பிறகு வீரபாகுவை அழைத்து நீயும் உனது மனைவியும் இப்போது எப்படி உன் குழந்தைகளைக் கொன்று எனது குடிசையைச் சுற்றி ஒப்பாரி வைத்தாளோ, அதுமாதிரி வருடம் ஒருமுறை கொடை நடத்தவேண்டும்.  என்றும், அம்பலகாரரை அழைத்து நீ அடுத்த சொத்துக்கு ஆசைப் பட்டுவிட்டாய் நீயும் கொடை நடத்தும் நாட்களில் வரும்பொழுது நீ ஒரு கழுவு மரத்திலேறி தொங்க வேண்டும் என்றும் உனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறினாள்.
        ஆட்டுக் கிடைக்காரர்களான கருப்புடையார் வெள்ளுடையார்களை அழைத்து ‘ஏதோ வீரபாகு சாம்பான் எனக்காக ஆடு திருட உங்களது பட்டிக்கு வந்த காரணத்தால் வருடம் ஒருநாள் கொடைநடத்தும்போது ஒரு   ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். வேளாரை அழைத்து நான் ஒருநாள் உனது வீட்டில் தங்கி வந்தது காரணமாக எனது உருவம் செய்து கொடை நடத்தும் நாட்களில் என்னை அழகுபடுத்தி வழிபட்டு வா உனது குடும்பம் தழைத்தோங்கும் என்று கூறியது முத்தாலம்மாள்.
         வீரபாகுவை அழைத்து. அதன்படி வீரபாகு சாம்பான் ஊருக்கு எல்லையில் கட்டைகளை அடுக்கி   முத்தாலம்மாள் அக்கினிப் பிரவேசம்  செய்து கொண்டதுஉன் பின்னால் வந்ததின் காரணமாகவும எனது தாயார் தகாத வார்த்தைகள் பேசி உன் பின்னால் தள்ளி விட்டதின் காரணமாகவும்,என்மீது உன் மனைவி என்மீது கோபங்கொண்டு பேசியதையும் முத்தாலம்மாள்  கூறினாள் .நான் இதற்கு மேல் உயிருடன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல எனக்கு சந்தனக் கட்டைவெட்டி தீமூட்டு. இதில் அக்கினி பிரவேசம் செய்கின்றேன். என்று கூறி மறைந்தாள்
     ஒருவருடம் கழித்து முத்தாலம்மாள் வீரபாகு கனவில் வந்து காட்சாயளித்து நான் இறந்து தெய்வமாகி விட்டேன். நான் அக்கினி பிரவேசம் கொண்ட இடத்தில் கொசவ சேலையும் பூச்செண்டும் எலுமிச்சங்கனியும் அடையாளம் உள்ளது. நீ வந்து அந்த இடத்தில் வெட்டியெடுத்துப் போய் பெரியதனக் காரரிடம் ஒப்படைத்து கோயில்கட்டி என்னை நினைத்து கொடை நடத்தச் சொல். முன்பு சொன்ன மாதிரியே உன்னையும் உனது மனைவி மக்களையும் ஊராரையும் வேளார் அம்பலகாரர், கருப்புடையார் வெள்ளுடையார் அதோடு அனைத்து மக்களையும்  பாதுகாத்து கொள்கிறேன் என்று முத்தாலம்மாள் வீரபாகு சாம்பானிடம் கனவில் சொன்னது.
      ‘எனது கனவில் கூறிகின்றாயே தாயே மேற்குடி மக்கள் நம்புவார்களா என்று வீரபாகு கேட்டான். ‘நான் அவர்களிடத்திலும் காடசியளிக்கிறேன்’ என்று கூறியது முத்தாலம்மாள் .
         அதன்படி  ஊர் நாட்டாமை,அம்பலம் ஊர் பெரியதனம் பூசாரி இப்படி முக்கியமானவர்களின் கனவில் தோன்றி எதுவும் சொல்லாமல் மறைந்து விட்டதாம் முத்தாலம்மாள்
.     அக்கினிப் பிரவேசத்திலிருந்து எழுந்து வந்து அனைத்து சாதியினரிடமும் தனக்கு ஆண்டுக்கொருமுறை கொடைகொடுத்து வழிபடச் சொல்லிவிட்டு மறைந்த காரணத்தால் முத்தாலம்மன் என்ற பெயரில் கோயிலை எழுப்பி திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஊர்களில் ஆண்டுதோறும் கொடைவிழா நடத்துகிறார்க்கள்.   
கதை உணர்த்தும் செய்திகள்
   முத்தாலம்மாள் செட்டியார் வீட்டுப் பெண், தனது தாயாரோடு கோபித்துக்கொண்டு சாம்பான் கூட வந்தாலும், அந்த சாம்பானே தங்குவதற்கு ஏற்பாடு செய்தாலும், கோயில் கட்டி வைத்திருப்பதோ பல்வேறு சாதி இந்துக்களின் வகையறாக்கள்தான். குறிப்பிட்ட சாதி என்று இல்லை. எந்தெந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர் அந்தப் பகுதியில் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதிக் காரர்களின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கின்றன.
    முத்தாலம்மனை இந்தக் கதையில் கதையில் சிறுமியாகத்தான் சித்தரிக்கப் படுகிறது.
         வீரபாகு சாம்பானின் தொழில் நூற்றுவைத்திருக்கும் நூலை வாங்கி வந்து துணி நெய்யும் தொழிலை மேற்கொள்வதாக கதையில் இருப்பதால் பறையர்கள் நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்த செய்தியை பார்க்க முடிகிறது. இந்த கதைப்பாடலில் திருவள்ளுவரையும் இணைத்திருக்கிறார்கள்
.” சீவனப் புகலுக்காக திருவள்ளுவர் நாயனார்
   செய்து கொடுத்த நெசவு வேலை
   தேசமெங்கும் தெரியுமே’’ என்றும்
வம்மிசம் பரம்பரையாய் வழங்கி வரும் வேலைக்கு
மேட்டிமையாய் எங்களுக்கு விற்பதும் உண்மையே
செட்டியார் வீட்டிலே சேர்த்துவைக்கும் நூலைத்தான்
இஷ்டமுடன் விலைக்கு வாங்கி ஏகுவானாம் சாம்பானும்                                  
எம்பெருமான் தானறிய எடுத்துவருவேன் நூலைத்தான்’என்றும்
ராட்டைசுற்றி நூல் நூக்கும் நல்லகுடி ஆச்சியார்
 சாம்பானும்’
இப்படியெல்லாம் பாடிவைத்திருப்பதை பாடியோரிடம் கேட்டேன். அவரகள் ஆம் நாங்கள் திருவள்ளுவரின் பரம்பரைதான் என்று கூறுகிறார்கள்.
இந்த கூற்றை தமிழ் வித்தகர் மறைமலையடிகளாரும் குறிப்பிவதை சிந்தித்தும் பார்க்கவேண்டியுள்ளது.
    இந்த பாடல் எழுதியது யாரென்று தெரியாது. எந்த காலம் என்பதும் அறுதியிட முடியவில்லை. இப்பாடல் மூலம் சாதீய பாகுபாடு இருந்திருக்கிறது என்பதும் அறியமுடிகிறது. முத்தாலம்மனின் தாயார் “உன்னோட பறப்புருஷன் வரும்போது எந்த நூலைப் போடுவது? என்று பேசும்போதும்
வீரபாகு அந்தப் பெண் முத்தாலம்மாள் வீட்டைவிட்டு வரும்போதே ‘நீ என்கூடவராதே நான் சாதியில் தாழ்ந்தவன் நீயோ மேல்சாதி பெண்’ என்று அவனே சொல்வதிலும்,  வேளார் என்ற குயவர் வீட்டில் ஒருநாள் தங்க வைக்கக் கேட்டபோதும் அவ்வீட்டுக்காரர் அப்பெண்ணை அனுமதிக்காததிலும் சாதீய பாகுபாட்டை ஏற்றுக் கொள்ளவைத்த தன்மை பளிச்சென தெரிகிறது.
   முத்தாலம்மனை ஊரின் மந்தையில் குடிவைத்து அவளுக்கு உதவி செய்ததைப் பற்றி வீரபாகுவின் மனைவிக்குத்தான் கோபமே தவிர ஊரிலுள்ள பிற சாதியினருக்கோ, ஊர் பெரியதனக்காரருக்கோ பிரச்னையாக தெரியவில்லை.
   தான் சந்தேகத்திற்குரியவளாக ஆனேனே ஆதலால் சந்தனக்கட்டையை அடுக்கி அதில் அக்கினிப் பிரவேசத்திலிருந்து மீண்டுவருகிறேன்’ என்று சொல்லிய தற்கொலையும் நிகழ்ந்திருக்கிறது.
    தன்னுடன் வந்த பெண் முத்தாலம்மாள் இறைச்சி சாப்பிடட்டுமே என்று ஆட்டுக்கிடையில் ஆடு திருடிய குற்றத்திற்க்காகத்தான் ஊர் பஞ்சாயத்து கழுவிலேற்றும் தண்டனையை கொடுத்திருக்கிறார்கள்.
     ஒராண்டிற்கு பிறகு வீரபாகுவின் கனவில் தோன்றி தன்னை ஊரார் தெய்வமாக வழிபட்டால் ஊரார் அனைவரையும் காப்பேன் என்றும்,பின்பு அனைத்து சாதியினரின் கனவிலும் தோன்றி மறைந்திருக்கிறாள் முத்தாலம்மன்.  இதை அனைத்து சாதியினரும் ஏற்றுக்கொண்டு தெய்வமாக ஏற்றுக்கொண்டனர்.
   இந்த தெய்வத்தை வழிபடக்கூடிய அனைத்து ஊர்களிலும், பறையடித்தும் ,படுகளம் என்ற நாடகம் தடத்தியும் கோயிலுக்கு சேவைசெய்யும் பிரதான கடைமைதான் பறையர் இன மக்களுக்கு. இவர்கள் தங்களின் பகுதியில் கோயில் கட்டியிருப்பதாக தெரியவில்லை. கோயில்கட்டியவர்கள் இவர்களிடம் வரியும் வசூலிப்பதில்லை. கொடைவிழாவின் பொறுப்புகளில் பங்காளிகளாக இணைப்பதில்லை.
     பல நாட்டுப்புற தெய்வங்களின் கதைப் பாடல்களில் பார்வதி பரமசிவன் பிரம்மா ஆகியோரின் பாத்திரங்கள் வருகின்றன. தெய்வத்திற்கு பிராமணிய மேல்நிலையாக்க கருத்து பல காலமாக தொடர்ந்து வந்தாலும், நாட்டார் கோயில்களில் பூசை செய்வதெல்லாம் பிராமணரல்லாத சாதி இந்துக்கள்தான்.
    ஆடு கோழி பலி கொடுத்துவருகிறார்கள்
    கதைப்படி இந்த முத்தாலம்மன் இறுதியாக அம்பலகாரர், ஊர் பெரியதனம்,வேளார்சமூகமஆட்டுக்கிடைவைத்திருந்தோர்,அனைவரையும் இணைத்தே கொடைநடத்தி வழிபடச் சொல்லிவிட்டுத்தான் மறைந்துள்ளது.மூன்றுநாட்களும்நடக்கின்றநிகழ்வுகள்ஆனந்தமாகத்தான்இருக்கின்றன.ஆனால் இந்த சாமி யாரோடு வந்ததோ அவனையும் அவனது மக்களையும் அந்நியராக, தீண்டத்தகாதவர்களாக ,வெறும் ஆட்டக்காரர்களாக ,பாட்டுக்காரர்களாக மட்டும் கோயிலுக்கு வெளியே குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் இருந்து வழிபட வைக்கும் மனிதநேயமற்ற செயல் மட்டும் மாறினால் மட்டுமே வழிபாட்டில் சமூக ஒற்றுமை உண்மையானதாக மாறி சமூக ஜனநாயகம அரும்பி வளரும்.
     இந்த கதைப்பாடலில் எங்குமே வீரபாகு சாம்பானும் அவரைச் சார்ந்தோர் மட்டும்தான் பறையடித்து சேவகம் செய்யவேண்டும் என்று குறிப்பிடவேயில்லை. அதேசமயம் இவர்கள் ஒப்பாரி பாடி கோயிலைச் சுற்றி வரவேண்டும் என்று கதையில் குறிப்பிட்டுள்ளது.
   ஏன் இப்படி சேவகம் செய்யும் நிலை வந்தது? பிறரைப் போல எல்லா உரிமையைப் பெற்ற மனிதனை, தான் அடிமைதான் என்று சொல்ல வைக்கும் வைதீக சாதீய மனுதர்ம சூட்சமம்தான் இப்படி ஆக்கியுள்ளது என்பதை வீரபாகுக்கள் உணரும் தன்மை புதிய நட்சத்திரமாய் புறப்பட்டுவிட்டது.

                                        
மூலக்கதையை சொன்னவர்
                                         ரா.முனியப்பன், ஸ்ரீராமபுரம், வேடசந்தூர் தாலுகா


   
                        





என்மீது இறங்கிய பிள்ளையார் தீக்கதிர் வண்ணக்கதிர் படைப்பு

தீக்கதிர்  19  11  2017 ஞாயிறு (வண்ணக்கதிர் பகுதி)
                                              
                                                    என் மேல் இறங்கிய பிள்ளையார்!
                                                                               பேரா. கொட்டாரம் க கணேசன் 


http://epaper.theekkathir.org/epapers/1/1/2017/11/19/files/News_236941.jpg


    ஆசிரியர் பணியிலிருந்து பணி நிறைவு ஆனபிறகு, ஐம்பது வருடங்களாக நான் அந்நியப்பட்டிருந்த எனது பிறந்த ஊரான  மணியகாரன்
பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் தோழர் முனியப்பன். சமூக விழிப்புணர்வு முகாம் நடத்தி இளைஞர்களிடையே l பரிமாற்றம் செய்வது தோழர்களின் நோக்கம். செழிப்பாக, பச்சைப் பசேலென்றிருந்த விவசாய பூமி தொலைந்து போயிருக்க, பாலைவனம்தான் என்னை வரவேற்றது. கமலையோடு மாட்டைப் பூட்டி தண்ணீர் இறைக்கப் பழகும்போது வடத்துல துள்ளிக் குதித்து உட்கார முயன்று இரண்டுமாடுகளுக்கும் இடையில விழுந்து எழுந்த பெரியப்பாவின் கிணத்துத் தோட்டத்தை காணவில்லை.
     ஊரின் உள்ளே போய் சொந்த பந்தங்களைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, என்னைப் பார்த்தவுடன் ஏக்கத்தோடுஇப்பத்தான் மலையடிவாரத்துப்பட்டி ஊர் ஞாபகம் வந்திச்சாக்கும்,’ என்று என்னோட பெரியம்மாக்கள் சின்னம்மாக்கள் அத்தைகள் கேட்டார்கள். ‘என்ன செய்யுறது என் சூழ்நிலை அப்படி ஆயிட்டுது. உங்களப் பத்தி அடிக்கடி கேட்டுக்குவேன்என்று போலியான ஒரு பதிலைச் சொல்லி உறவைப் புதுப்பித்துக் கொண்டிருந்தபோது, என்னைக் கண்டுகொண்ட குப்பாயக்காள்என்ன சாமி நல்லாயிருக்கியா? ஊரையே மறந்திட்டே. நாங்கள்ளாம் இருக்கிறமா இல்லையான்னு கூட பார்க்க வர்றது இல்லை,’ என புலம்பிச்சு.‘கணேசன் அப்படியெல்லாம் வரக்கூடாதுன்னு நினைக்கிற ஆளு இல்லம்மா. மத்தவங்களப் போல தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிற ஆளும் இல்ல.
     அங்கேயும் வாத்தியார் வேலையோட சேர்த்து ஏதாவது பொது வேலையும் செஞ்சுகிட்டு இருக்குதுன்னு எனக்கு தெரியும். இந்தப் பக்கம் வராமப் போனாலும், நம்மைப் பத்தியெல்லாம் நினைப்பு இருக்கு. எங்க இருந்தாலும் இந்த மண்ணுல பொறந்த பிள்ளை நல்லா இருந்தாலே போதும்என்ற கணவர் பழனிவேலு மாமாவின் உற்சாகமான வார்த்தைகள், குப்பாயி அக்காவுக்கு ஆறுதலாகவும் இருந்தது. ராணுவத்துல வேல செஞ்சு ஒய்வுபெற்று பள்ளிக்கூடத்திலும் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மாமா. எனக்கும் டானிக் கிடைத்த மாதிரி மனத் தெம்போடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிறிய கட்டடத்திற்குள் சென்று அமர்ந்தேன்.
    கூலிவேலை செய்து கொண்டிருந்த அப்பாவைக் காச நோய்க்குப் பறி கொடுத்துவிட்டு, ஒராண்டு காலம் மழைபெய்தால் ஒழுகும் மண்குடிசையில் வாழ்க்கையை கடத்திவிட்டு, கூட்டுக் குருவிகளைப் போல தங்கை தம்பி அம்மா குடும்பத்தை சாலைப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்த எனது தாய்மாமா வையாபுரியும், சின்னம்மா பாட்டியும் அம்மா பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்றது மின்னலென நினைவலைகளில்.ஞானஜோதி உயர் ஆரம்பப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் மாலை நான்கு மணிக்கு கணக்கு விளையாட்டுப் பாடம் முடிஞ்சதும் வகுப்பாசிரியர் கமலம் டீச்சர், ‘டேய் பசங்களா நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தி.
உங்களுக்கெல்லாம் லீவு. பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடுங்க பசங்களான்னு சொன்னதும், நல்ல துடிதுடிப்பான நாய்க்கர் வீட்டுப்பொண்ணு பொம்மக்கா என்ற மாணவி உடனே எந்திருச்சுஎப்படி டீச்சர் கொண்டாடுறதுன்னு கேட்டாள். கமலா டீச்சர் கிறிஸ்தவ மதமாக இருந்தாலும்பிள்ளையாருக்கு தேங்கா பழம் சூடம் சாம்பிராணி அவலெல்லாம் வச்சு கும்பிடுவாங்கன்னு சுருக்கமா சொல்லி முடிச்சாங்க. கோடாங்கி சின்னாம்பட்டி வீராச்சாமி உடனே எழுந்துடீச்சர் கோயிலே இல்லாத தெருவில உள்ள நாங்க, அடுத்த சாதி தெருவில உள்ள கோவிலுக்குப் போக முடியாதே.பின்னே எப்படி பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடுறதுன்னு கேட்டான். கமலம் டீச்சரு ஒரு நிமிஷம் ஷாக்ஆயிட்டாங்க. பின்னே இயல்பு நிலைக்கு வந்துஉங்க தெருவுல வசதியான இடத்தில ஒரு மண்மேடையைப் போட்டு மெழுகி, அதன்மேல் நல்ல ஒரு இரண்டடி உயரத்துக்கு கல்லை எடுத்து, அதை தண்ணீர் ஊத்தி நல்ல சுத்தப்படுத்தி, அதில் சந்தனம் குங்கும் வைத்து தேங்காய் பழம் சூடம் சாம்பிராணி, அவல் இவையெல்லாம் வைத்து எல்லொரும் சேர்ந்து கும்பிடுவதை நான் பாத்திருக்கேன் அதைப்போல செய்யுங்கஎன கமலம் டீச்சர் சட்டெனப் பதில் சொன்னது என்னோட சந்தேகத்தையும் போக்குனமாதிரி ஆயிடுச்சு.காரணம் எங்க தெருவிலேயும் கோயிலே இல்லை. ஆனால் எங்க வகுப்பில படிக்கும் பெரியப்பா மகன் சுடலமுத்து வீட்டில குலசாமி பொய்யக்கன்னிமாரை வச்சு ஆண்டுக்கொரு நாள் படையல் போட்டு கும்பிடுவோம். மாமாமார் குடும்பமெல்லாம் பெருமாளக் கும்பிடுவாங்க 
      .என்னோட படிக்கும் மருதமுத்து, அகரமுத்து, மலுக்கையன்,கிருஷ்ணன், அண்ணன் ஜெயராஜ், அக்கம்மா, தம்பிகள் வைரப்பெருமாள், தங்கமுத்து, மைத்துனர்கள் பழனிவேல், பெரியசாமி இன்னும் தம்பிகளெல்லாம் சேர்ந்து கமலம் டீச்சர் சொன்ன மாதிரி மண்மேடை போட்டு பிள்ளையார் கல்லை வைத்து கும்பிடுவது என திட்டம் போட்டு மூக்கன் மாமாவிடம் யோசனை கேட்டோம். அவரும்டே நல்ல விஷயம்தான் நீங்க ஏற்பாடு செய்யுங்க நான் செலவுக்கு கொஞ்சம் காசு தாரேன்ன்னு சொல்லி உற்சாகப் படுத்தினார். எனது அப்பா இறந்து ஆறு மாசந்தான் ஆயிருந்தது.
      என்மீது ஊரில் சொந்தக்காரர்கள், பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த மைக்கேல் சார், கமலம் டீச்சர், பால்ராஜ் சார்,முத்துக்காளை ஆசிரியர், நல்ல வயசான மேரி டீச்சர் எல்லாரும் அன்பாக இருப்பாங்க.தனம் சித்தியிடமும் பிள்ளையார் சதுர்த்தியப் பத்தி சொன்னேன். ‘மேடை போடும்போது என்னையும் கூப்பிடுங்கடா, நான் வந்து மெழுகி விடுறேன்ன்னு சொல்லி மேலும் உற்சாகப்படுத்திச்சு.அன்றைக்கு ராத்திரி நீண்ட நேரம் அதே நினைப்புதான், தூக்கம் வரலை.. பண்ணையார் இருளப்பன் தோட்டத்தில நாத்துநடப் போயிட்டு வந்த என் அம்மாடே இன்னும் தூங்காமயா இருக்கே தூங்குடான்னு சொல்லநாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடப் போறோமேன்னு நான் சொன்னேன். ‘சரி சரி நாளைக்கு வேலைய நாளைக்கு பாத்துக்கலாம்.இப்போ நீ தூங்கு. நான் காலங்காத்தால நாய்க்கர் தோட்டத்துக்கு எள்ளுக்காட்டுல களை எடுக்கப் போகணும்ன்னு சொன்னது
     .விடிஞ்சதும் ராணுவத்தில் வேலை பார்த்து லீவுல வந்திருந்த சின்னத்தம்பி மாமாகிட்டே மண்மேடை எங்க வைக்கலாம் என கேட்டோம் ,அவர்ஊருல கிழக்குப் பக்கம் தண்ணிக் கிணத்துக்கு பக்கத்திலுள்ள புளியமரத்துக்குக் கீழே வைங்கடா,’ன்னு சொன்னார்.பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு, எங்களையெல்லாம் ஒண்ணாச்சேத்து உடற்பயிற்சி, விளையாட்டெல்லாம் சொல்லிக் கொடுக்கும் முத்துவேல் அண்ணன், தனம் சித்தி எல்லாம் வந்து மண்மேடை போடுவதற்கு உதவினார்கள்..
      திட்டம் போட்ட பையன்களெல்லாம் மக்களையும் திரட்டிக்கொண்டு ஊருல வேலைக்கு போகாம இருந்தவங்களையும் வரச்சொல்லி, தயார்ப்படுத்தி வைத்திருந்த மண்மேடையில கல்லை எடுத்து ஊன்றி தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் வைச்சு, அதனடியில் தேங்காய் பழம் வைத்து சூடம் கொளுத்தி , சாம்பிராணி புகை கொடுத்து, ஊதுபத்தி வாழைப்பழத்தில் ஊன்றி வைத்து எல்லோரும் வரிசையாக நின்னு கும்பிட்டுக்கொண்டிருந்தோம்.பெரியப்பா மகன் அகரமுத்து அந்த நேரத்தில் சாமியாடுவதுபோல லேசாக அசைவதை. நான் இதை கவனிச்சேன்.\ அகரமுத்து ஆடுவதைவிட வேகமாக ஆடலாமென என மனதில் நினைச்சு, நான் வேகமாக முன்னும் பின்னும் அசைஞ்சு எனச் சத்தம் போட்டு ஆடியவுடன் சுடலைமுத்துக்கு வந்த ஆட்டம் நின்னுபோச்சு.கும்பிட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஆச்சரியம். ‘என்னடா பிள்ளையாரைக் கும்பிடும்போது சாமியாட்டம் இந்தப்பையங்கிட்ட வருதே . குலதெய்வம் கும்பிடும்போதுதானே சாமியாட்டம் வரும்என பக்கத்திலிருந்த பெரியம்மா, அத்தைகள் பேசிகிட்டது என் காதுல விழுந்துச்சு.காலை பதினோரு மணிக்கு நடந்த இந்த சம்பவம் காட்டுத் தீ போல பறையர் தெரு, சக்கிலியத் தெரு, நாயக்கர் தெரு இப்படி ஊர் முழுக்கப் பரவிருச்சு. அது ரொம்ப நாளாக மழையே பெய்யாமல் இருந்து மக்கள் கஷ்டப்பட்ட காலம்.
ஊரில் இருந்த பெரியப்பா கருப்பன், சித்தப்பாக்கள் லட்சுமணன், ராமசாமி பெரியசாமி ஆகியோரெல்லாம் கூடிப்பேசிஇன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு எல்லாப் பையன்களையும் வரவழைச்சு கிணத்துல குளிக்கவச்சு மீண்டும் சாமிய வரவழைச்சு பாப்போம்ன்னு முடிவெடுத்தாங்க. எனக்கு மனசுல பகீரென ஆயிருச்சுஏதுடா மாட்டிகிட்டோமேனு பயம் ஒருபக்கம். சரி வர்றது வரட்டும், ராத்திரிக்கும் அதே வழியை கடைப்பிடிக்க வேண்டியதுதான்ன்னு நினைச்சு மனசைத் தைரியப் படுத்திக்கிட்டேன்.காலையில முன்னே நின்று கும்பிட்ட பையன்கள் எல்லாரையும் கூப்பிட்டு மண்மேடைக்குப் பக்கத்துல இருக்கும் கிணற்று நீரில் குளிக்க வைச்சு, நெத்தியில் திருநீறைப் பூசவச்சு, ஊரிலிருந்த ரெண்டு அண்ணன்மார்களை பறையை எடுத்துவரச்சொல்லி அடிக்கச் சொன்னாங்க. பறையை சூடுபடுத்தி ஒரு ஐந்து நிமிஷம் அடிச்சாங்க. அப்போதும் அகரமுத்து லேசாக அசைவதை கவனிச்சேன். காலையில் செய்தது போலவே இப்பவும் நான் வேகமாக ஆங்காரத்தோடு முன்னும் பின்னும் அசைஞ்சு சத்தம் போட்டதும் பறையடிச்சதை நிப்பாட்டுனாங்க.‘இது சாமிங்குறது உண்மையான்னு சோதனை பண்ணி பாருங்கப்பா...’ கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
கையில தாம்பாளத் தட்டை வைத்திருந்த பெரியப்பா பெரியசாமிக்கும் எனக்கும் சோதனை.‘என் தாம்பாளத்தில் என்ன சாமி இருக்குது?’‘தாம்பாளத்தில் திருநீறு இருக்குது.’‘இன்னும் ஒன்னு இருக்குதே அது என்ன சாமி?’‘அது எழுமிச்சம் பழம்.’கூட்டத்தில் இருந்த ஒருவர்எங்க பையன் மேல வந்திருக்க சாமி என்ன சாமின்னு கேட்டாரு.‘நான் விநாயகர்தான் வந்திருக்கேன்னு சொன்னேன். கூட்டத்திலிருந்த ஒரு அம்மாவிநாயகர் எங்கேயும் சாமியாட்டத்தில வந்த மாதிரி தெரியலேயேன்னார்.‘உண்மையச் சொல்லு சாமி. நீ விநாயகர்தானான்னு கேட்க, ‘ஆமா நான் விநாயகரேதான்ன்னு அசட்டுத் தைரியத்துல சொல்லிட்டேன். நான் சாமியாடுவதற்கு முன்பே தாம்பாளத்தில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். சாமி வந்தால் கண்ணும் கவனமும் பூலோகத்தில் இருக்காதுன்னு மக்கள் நினைச்சிருந்திருப்பாங்க போல, அதனாலதான அடையாளம் கேட்கிறதெல்லாமுன்னு மனசில நினைச்சுகிட்டேன்
     .‘சரி சரி, அப்பா இல்லாத பையன் இவன். அதனால் விநாயகர் வந்தாலும் வந்திருப்பாருப்பாஒரு பெரியம்மாவின் குரல் கூட்டத்திலிருந்து வந்தது.‘சரி சாமி, எங்க ஊருல மழை தண்ணி எதுவுமே இல்லை. குடிக்கக் கூட தண்ணி இல்லை. எப்ப வரும் சாமி?’ ஒரு சிக்கலான கேள்வியை கேட்டார் ஊர் பெரியதனக்காரர்.சரி ஓங்கி அடிச்சுவிடுவோம் வர்றது வரட்டும்னு நினைச்சு, ‘நாளை சரியாக மதியத்துக்கு மேல மூணு மணிக்கு மழை வரும்என சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி வந்துவிடக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு, தப்பிச்சேன் பொழைச்சேன்னு, ஆட்டத்தை வேகமாக ஆடி சத்தத்தைக் கூட்டி அப்படியே ஆட்டத்தை நிறுத்தி இயல்பான நிலைக்கு வந்த மாதிரி நடிச்சேன்.‘சாமிகிட்டே இன்னும் கேள்விகளை கேட்கிறதுக்குள்ளே சாமி மலையேறி போச்சப்பாஎன பெரியதனம் நொந்துக்கிட்டாரு.இந்தச் சம்பவம் ஊரெல்லாம் இரவோடு இரவாகப் பரவி ஒரே பரபரப்பு.
     என் அம்மா வேலை செய்யுற தோட்டத்துல, ஆம்பளைங்க விறகு ஒடைக்கிற இடத்துல,. ‘கந்தன் மகன் கணேசன் மேல சாமி வந்திருச்சப்பா. பாவம் அப்பாவைப் பறி கொடுத்த பையன். உண்டாரபட்டி கோயிலில அந்த சாமியார் சொல்லுறது சில காரியம் பலிக்கத்தானே செய்யுது. பாப்போம் கந்தன் மகன் வாக்கு பலிக்குதான்னுஎனவும் பேசிகிட்டாங்களாம்.அடுத்த நாள் ஊர் மக்கள் சட்டமன்ற தேர்தல் முடிவை எதிர்நோக்கி இருப்பதுபோல காத்திருந்தார்கள். உண்மையிலேயே சரியாக மூனு மணிக்கு மழை வந்து விட்டது! ஊரே கொண்டாட்டம் குதூகலம். ஜனங்களெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்கஅந்த கந்தன்மகன் கணேசன் மேல வந்தது சாமிதாப்பாஎன்று.பிரச்சனை இதோட முடிஞ்சதுன்னு நெனச்சேன். ஆனால் முடியவில்லை. ஊருப் பெரியவங்க எல்லாம் கூடிப் பேசி அந்த மண்மேடைய கொஞ்சம் உயர்த்தி கல்லையும் ஊண்டி வச்சு, மேலே சிறிய கூரையும் போட்டு, ‘கணேசா, நீ இந்தக் கோயில்ல வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சாமிக்கு அரளி மாலை போட்டு, பூசை செஞ்சுரு, அதுக்கான செலவை வாங்கிக்க,’ன்னு பொறுப்பை ஏத்தி வச்சிகிட்டாங்க . ஊமை கனவு கண்டா ஒருத்தரிடமும் சொல்ல முடியாதே. அதைப் போல நானும் சரி என சொல்லிவிட்டேன்,இன்னொரு சிக்கலும் வந்திருச்சு.
     எங்க தெருவில மாட்டிறைச்சி அதிகமாப் புழங்குவாங்க. வியாழக்கிழமை சந்தையில மாட்டிறைச்சி வாங்கி வந்து சமைப்பாங்க. நானும் ஒரு பிடி பிடிப்பேன். இப்போ அதுக்கு வேட்டு வைக்கிறமாதிரிகோயில் பூசாரியாக இருக்கிற நீ எந்த இறைச்சியும் சாப்பிடக் கூடாது,’ன்னுட்டாங்க. நானும் அரைமனசோடு சரி எனச் சொல்லி பூசாரி வேலையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செஞ்சுட்டு வந்தேன்.மூணு மாதங்கள் கறி சாப்பிடாம இருந்து பார்த்தேன். அதுக்கு மேல ஆசையை அடக்க முடியவில்லை. என் அம்மா மிலிட்டரிக்கு போய்வந்த சின்னக்காளை அண்ணணிடம் கேட்டது. ‘வீட்டுல நாங்க எல்லாம் கறி சாப்பிடும்போது இவனை மட்டும் பாக்கவைச்சு சாப்பிட்டா கஷ்டமா இருக்குல்லப்பா, என்ன செய்யலாம்,’னு.‘சரிம்மா வெள்ளிக்கிழமை மட்டும் சாப்பிடாம பாத்துக்க மதினி மத்த நாளெல்லாம் சாப்பிட்டடும். ஆபத்துக்குப் பாவம் இல்லை. அவன் குளிச்சிகிட்டுத்தானே பூசை செய்யுறான்,’னு சொல்லவும் .எனக்கு அப்பாடான்னு கொஞ்சம் மனசு ஆசுவாசப் பட்டுச்சு.இப்படியே ஒரு வருஷம் கடந்திருச்சு.
     என்னோட அம்மா ஊருல இருந்த பாட்டியும், சாலைப் பணியாளராக வேலை செஞ்சு அப்பப்போ உதவி செய்யுற மாமாவும் எங்களை குடும்பத்தோட வேற ஊருக்கு கூட்டிப் போக வந்தாங்க. நான் பள்ளிக்கூடத்துல டி.சி., வாங்கப் போகும்போது, என்னோட அம்மாகிட்ட கமலம் டீச்சர், ‘கணேசன் நல்லா படிக்கிற பையன் அவனை எங்களோட விட்டுட்டுப் போங்க, எங்க குழந்தைகளில் ஒரு குழந்தையாக பாத்துக்கிறோம். அவனைப்பத்தி கவலைப்படாதிங்கன்னு ரொம்ப சொல்லிப் பாத்தாங்க.விட்டுட்டுப் போறதுக்கு அம்மா மனசு கேட்கல. ‘உங்க பெரியமனசை நாங்க உசிருள்ளவரை மறக்கமாட்டோம் டீச்சர். நாங்க தாயோட பிள்ளையா இருந்திடுறோமுன்னு தயக்கத்தோட சொல்லுச்சு
         .அந்த பள்ளிப்பருவ காலத்துச் சம்பவத்தை நினைவலையில்  மூழ்கிக்கொண்டிருந்த நான், விவாத அரங்கைத் துவக்கி வைப்பதற்காக சற்று தாமதாக வருகை தந்த மாவட்டச்செயலாளர் தோழர் முத்துச்சாமி வணக்கம் சொன்னவுடன் இயல்பு நிலைக்கு வந்து விட்டேன். அந்த ஊர் இளைஞர்களும் வந்து சேர்வதற்கும் சரியாக.இருந்தது நான் சொந்தக்காரங்களைப்பத்தி மைத்துனர் ரங்கதுரையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அமர்ந்திருந்த கட்டட இடத்தை சுற்றுமுற்றும் பாத்தேன். நான் மனசாட்சியை சந்தர்ப்ப நெருக்கடியால் தள்ளி வைத்து, பார்க்கத் தவறிய சில சித்தப்பா பெரியப்பாக்கள் உயிரோடு இல்லை. என்மீது பாசம் பொழிந்த மாமாக்கள் சிலரும் உயிரோடு இல்லை. சிலர் விவசாயம் செய்துகொண்டிருந்தபோது வைத்திருந்த மாடுகளும் மாட்டுக்கொட்டகைகளும் இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட விநாயகர் மண்மேடை தாங்கிய ஒலைக் கோயிலும் இல்லை.
   பறையர் சக்கிலியர் ரெண்டு தெருக்காரர்களும் சேர்ந்து குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்திய தண்ணீர்க் கிணறும், தரையோடு தரையாக மாறி அது இருந்த இடத்தில் உயர்நிலை தண்ணீர்த் தொட்டி மட்டும் இருந்தது. நாயக்கர் தெருவில போர் பம்புசெட் போட்டு தண்ணீர் ஏத்திவிடும் வேலையெல்லாம் அந்த தெருக்காரங்ககிட்டேதான் இருந்தது.கூரைக் குடிசை பிள்ளையார் மண்மேடை இருந்த இடம் அம்பேத்கர் நலக்கூடமாக மாறிப்போயிருந்தது. பல வீடுகள் கூரை வீடுகளாக இருந்தவைகளில் சில வீடுகள் மட்டும் ஒடு போட்ட வீடுகளாக மாறி இருந்தன.
சில குடும்பங்கள் வேற ஊர்ல குடிபோனதினால் மண்திட்டுகளாக மாறி இருந்தன. அந்த ஊரில் மூணு தெருவில இருக்கிற படிச்ச ஆண் பெண் இளைஞர்கள் பாகுபாடு இல்லாமல் பழகுகிறார்களாம். ஆனால் அந்தந்த தெரு பெரியவங்களத் திருத்த அவங்களால முடியவில்லை என்பதை அறிந்தேன்.இன்னும் அடுத்த சாதி தெருவில் செருப்பு போட்டுப் போக முடியாது என்பதையும், கோயில் கொடைவிழா நடத்தும்போது இந்த தெருக்காரர்களை உள்ளே விடுவதில்லை, வரியும் வசூல் செய்வதில்லை என்ற செய்தியும் அறிந்து மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது. தோழர்கள் கொண்டு வந்திருந்த அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உருவங்கள் பொறிக்கப்பட்ட பதாகையைக் கூட்ட அரங்கில் அப்போதுதான் சுவரில் மாட்டினார் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் பாண்டியக் கண்ணன். வந்திருந்த எட்டு பெண்கள் பதினேழு ஆண்களிடமும் முதன்முதலாக காலந்தோறும் தீண்டாமைக கொடுமைகளும் சமூகத்தின் போக்கும் என்ற தலைப்பை நோக்கி விவாதப் பயணம் துவங்கியது..