Sunday, October 27, 2013

        மாணவ மாணவியர் சீருடையும் கண்ணியக் கட்டுப்பாடும்.
    நீண்ட காலமாகவே பள்ளிகளில் மாணவ மாணவிருக்கு சீருடை அணியும் ஏற்பாட்டை இதுவரை ஆண்ட அரசாங்கங்கள் உருவாக்கி வருகின்றன. நாம் படிக்கும்போதும் இதை அணியும்போது ஒருவித மகிழ்ச்சியே.இன்னும் அரசாங்கமே ஏழை மாணவர்களுக்கு கைத்தறி துணியில் தைத்த வெள்ளை, காக்கி உடைகளை 1968 ஆண்டுகளில் வழங்கின வீடுகளில் உடை எடுக்க வசதியற்றோருக்கு இது பலமடங்கு மகிழ்ச்சிதான். இப்படி சீருடை உடைகள் அரசாங்கம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவோ, பிற மாணவ மாணவிகளை உடுத்திவரும் கட்டாயப் படுத்தியோ அணியச் செய்வதில் இதுவரை எந்த மாற்றுச் சிந்தனையும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை.காரணம் பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஏழைக் குழந்தைகளும், பணக்காரக் குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் விதவிதமாள ஆடைகளை உடுத்தும்போது மாணவர்கள் மத்தியில் வித்தியாசமான ஏக்கமான எண்ணங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது. மனநிலையும் உயர்வு தாழ்வு அடிப்படையை உருவாக்கும்.சமத்துவ சிந்தனை உருவாக்கவேண்டும் என்பதே அதன் அடிப்படையாக இருக்கவேண்டும்.      ‘
         சுதந்திர தினம்
மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியருக்கு,
நேற்று நடந்த ஜாதிக் கலவரத்துல
என் அப்பாவை யாரோ அடிச்சி
எரிச்சு கொன்னுட்டாங்க.
அம்மாவோ அரசு ஆஸ்பத்திரியில் ஆறுமாசமாக.
படிச்சு முடிச்சு வேல தேடிப்போன
என் அண்ணன் இன்னும் வீடு திரும்பல
வயசுக்கு வந்த அக்கா வீட்டைவிட்டு
ஓடிப்போயி ஒருமாசமாச்சு
என்  டவுசரின் பின்பக்கமும் கிழிஞ்சு போச்சு
எனவே ஐயா.
மந்திரி வந்து சுதந்திரக் கொடி ஏற்றி
மிட்டாய் கொடுக்கும் இந்த
சுதந்திரதின விழாவில் நான்
பங்கெடுக்க முடியாது என்பதை
வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
               இப்படிக்கு
தங்கள் கீழ்ப்படிதலுள்ள மாணவன் குப்புச்சாமி
என்று ஒரு கவிஞன் மாணவனின் வறுமையோடு மாற்று உடை இல்லாத கொடுமையோடு பல பிரச்னைகளை முன்வைத்து விடுப்பு கடிதம் எழுதுவதுபோல வடித்திருக்கிறார்.குப்புச்சாமிகளுக்கு ஒரு காலத்தில் அவசியமான தேவையை அரசு பூர்த்தி செய்த்தை மறக்க முடியாது.
இன்னொன்று பள்ளி வளாகம் முழுதவதும் ஒரே நிறத்தில் இருந்தால் அதன் அழகுத் தன்மை வித்தியாசம்தான்..ஆனால் நீண்ட காலமாக கல்லூரிகளில் இவ்வித சீருடை முறையை அமுல்படுத்தவில்லை., 1984க்குப்பின் சுயநிதிக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முளைக்க ஆரம்பித்து மக்கள்மத்தியில் ஆங்கில மோகம் படர்ந்தபின்பு அரசாங்கம் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் உருவாக்கிய மாநிலமெங்கும் ஒரே விதமான கலரில் அணிய கட்டளையிட்டதற்கு மாறாக அந்த அந்த தனியார் பள்ளிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் சீருடை அணியும் பண்பாடு உருவாக்கப்பட்டது. இதுவும் மக்கள் மத்தியில் ஒருவிதமான கவர்ச்சி ஏற்புத்தன்மை கவர்ந்துவட்டது.. இந்த இரண்டு போக்குகளை உற்றுநோக்கும்போது மாநிலமெங்கும் ஒரே வண்ணத்தில் சீருடை அணியச்ச்சொன்ன முதல காலகட்டப்போக்கில்,  வியாபாரத்தன்மை குறைந்து விவசாய விளைபொருளான பருத்தியும் நம் தேசத்து ஆலைகளின் உற்பத்தியும்.தொழிலாளர்களுக்கான வேலையும் எவ்வித பாதிப்புக்கு உள்ளாகவில்லை.இது ஒரு சுமையாக மக்களுக்கு இல்லை. விவசாயமும் ஆலைகளும் கைகோர்த்த பொன்னான காலம் என்றுகூட சொல்ல்லாம். ஆனால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டபின்பு இது அரசாங்கத்தின் பிடியிலிருந்து நழுவி தனியார் பள்ளி நிர்வாகங்களின் கையில் சீருடைக் கலாச்சாரம் விழுந்தபின்பு வண்ணங்களை தீர்மானிப்பது மட்டுமல்ல, அதை மக்கள் கொள்முதல் செய்யும் இடத்தையும் தீர்மானித்து நிர்வாகங்களுக்கு ஆடைகளுக்கான விலையை கடையில் விற்பதைவிட அதிக விலை நிர்ணயித்து மாணவ மாணவிகளிடையே லாபத்தை எடுக்கும் வர்த்தக குணமும் வந்துவிட்டது. தங்களின் பிள்ளைகளின் ஆசைக் கனவு படிப்பிலேயே மூழ்கிவிட்ட பெற்றோருக்கு இது ஒரு சுமை என்ற எண்ணம் ஏறபடவில்லை.இந்த வர்த்தகம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தொடர்கிறது. மக்களின் ஆங்கில மோகத்தை தக்கலை ஹலீமா என்ற கவிஞர்  

     காட் பிளஸ் ம்ம்மி
‘விடாது பெய்த அடைமழை
வீதியில் சேறும் சகதியுமாய்
வண்ணக் குடை பிடித்து
செல்லமாய் நடக்கும் சின்னத் தேர்கள்
ஆட்டோவரை சென்று டாட்டா காட்டும்
என் பத்தினி முகத்தில் பரவசம்!
அவள் காலிக்கழுத்தும் கனராவங்கியும்
மாறி மாறி என் மனசுகளில்
வெளியே விட்டிருந்த மழை
இப்போது என் கண்களில்!என்று தாலியை அடகு வைத்தாவது ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கும் கட்டாய நிலையை கணவனின்கண்ணீர் முலமாக உணர்த்துகிறார்.

  கல்லூரிகளில் சீருடை அணிவகுப்பு       
   கல்லூரிகளில் 1984க்குப் பின்பு சுயநிதிக் கல்லூரிகள் முளைத்தபின்பு அக்கல்லூரிகளில் சீருடை எட்டிப்பார்த்து கல்லூரிகளில் புத்தகங்கள் விற்பனை செய்யும் இடத்தில் துணிகளும் விற்கப்பட்டன.
கல்லூரிக்கு கல்லூரி விதவிதமான கலரில் சீருடை பவணி வருகிறது.பெரும்பாலும் அரசு கலைக் கல்லூரிகளில் சீருடைக் கலாச்சாரம் இல்லை. அங்கெல்லாம் எவ்வித சீரழிவும் கண்ணியமும் குறைந்த மாதிரி தெரியவில்லை.சமீப காலமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் இக்கலாச்சாரம் எட்டிப்பார்த்து அக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற அமைப்பு தொடங்கி அதன்மூலம் இந்த வியாபாரம் செய்யும் நடைமுறை உருவாகி உள்ளது. தனியாருக்கு சாமரம் வீசும் உலகமயமாதல் போக்கு ஆழிப்பேரலை நாடெங்கும் அரசின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு தேசத்தின் தெருவெங்கும் வீசி வியாபாரிகள் தீர்மானித்த பண்பாடாக மக்கள்மத்தியில் திணிக்கப்பட்டது என்றே கூறலாம்.
          இப்படிப்பட்ட சூழலில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டீ ஷர்ட், ட்ராக் ஷூட், ஜீப்பா போன்றவற்றை அணிந்து வருவதால் கல்லூரிகள் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படுகறிது. ஆகவே டீ ஷர்ட், ஸ்லீவ்லெஸ் மற்றும் ஜீன்ஸூக்கு தடைவிதிக்கப்டுகிறது. மாணவிகள் சேலை அல்லது சல்வார் கமீஸில்தான் வரவேண்டும். மாணவர்கள் முழுக்கைச் சட்டை, பேண்ட் அணிந்துதான் வரவேண்டும் என்று தமிழக கல்லூரி இயக்க்கம் உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவு பல விதமான சிந்தனைகளை கிளறுகிறது.
கல்விச் சாலைகளில் சீருடை ஒரே மாதிரி சிந்தனையை வளர்க்குமா?
சமநிலைச் சிந்தனை வளர்க்கும்.சரியா?
    உடை அணிவதில் பாகுபாடின்மை மனப்பக்குவம் இருப்பது என்பது தற்காலிகமானதுதான். மேம்போக்காகப் பார்த்தால் இது சரியாகத் தெரியும்.சீருடை அணிந்திருக்கும் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்துகொண்டு வந்திருக்கும் உணவு வகைகளில் ஒரே மாதிரி தரமானதாக இருக்குமா?மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டுவரவில்லையென்றால் இப்போது நான் உட்பட 50 வயதுக்கு மேறப்பட்ட ஏராளமானபேர் கல்விச்சாலை பக்கமே காலெடுத்து வைக்கமுடியாது என்ற நிலையை எண்ணிப்பார்ப்பது இந்த இடத்தில் பிரமிக்கவைக்கிறது. பெருமைப் படக்கூடியதுதான் என்றாலும் இப்போதெல்லாம் நிச்சயமாக குழந்தைகளின் குடும்ப நிலைக்கேற்றாற்போல அவர்கள் கொண்டுவரும் உணவு வகைகள் மாறி இருக்கும்.இது ஒருவருக்கொருவர் தாழ்வு எண்ணத்தை உருவாக்காதா? குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவந்துவிடுகின்ற முறைகளில் மலையும் மடுவும போல, அப்பா அம்மாவின் காரிலும் பல குழந்தைகளும், பல குழந்தைகள் தங்களது பெற்றோரின் சைக்கிளிலும் அம்மாவின் கைபிடித்து நடந்துவருவதும், சில குழந்தைகள் தாங்களாகவே நடந்து வரும் குழந்தைகள் மத்தியில் இருப்பது ஏற்ற தாழவு எண்ணத்தை உருவாக்காதா? குழந்தைகள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களின் வீடுகளின் அமைப்பு, தரம் ஆகியவற்றால் பாகுபாடு எண்ணம் வருமா? வராதா? இந்தியாவின் ஏராளமான கிராமங்களில் ஜாதி இந்துக்களின் தெருக்களில் பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து செல்ல முடியாது பெற்றோர்களின் இந்த நிலையை உற்றுநோக்கும் குழந்தைகளுக்கு உயர்வான எண்ணம் வருமா? சமநிலை மன சிந்தனையை உருவாக்குவது போலியான தற்காலிகமான சம மனப்பக்குவ ஏற்பாடுதான்.
கண்ணியம் கெடுவது உடையால்தானா?
    ஆண் பெண் இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் உடையால்தான் படிப்பு வீணாகிப்போவதும் படிப்பு சிந்தனை சிதறுவதும் கலாச்சார சீரழிவு நடைபெறுகிறது என்பதற்கு ஏதாவது ஆய்வு உண்டா? அரசு புள்ளிவிவரங்கள் உண்டா? எல்லா இடங்களிலும் நடைபெறும் கலாச்சார சீரழிவு பாலியல் அசம்பாவிதங்கள் எங்கோ சில கல்வி நிறுவனங்களிலும் நடந்திருக்கலாம். அதை பொதுவான அளவுகோலாக எடுத்துக கொள்ள முடியாது. அரசின் உத்தரவுங்கூட ஆண்களுக்கு வரையறை சொல்வது போல இருந்தாலும் அதிக மையங்கொண்டிருப்பது பெண்களைச்சார்ந்தே பார்க்கப்டுவதாகத்தான் இருக்கிறது. காலங்காலமாக தங்கள் உடம்பில் உடை கவனமாகவே இருந்த பெண்கள் இப்போதுதான் சுதந்திரமாக தன் கூச்சத்திலிருந்து விடுபட்டு வருகிறார்கள்.அப்படி வந்தபின்புதான் கிரென்பேடிகளும் சானியாமிர்சாக்களும், திலகவதிகளும்,இன்னும் பல துறைகளில் சாதனைப் பெண்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் உடை அணியும் பழக்கத்தில் மாற்றம் வேண்டும் என்றுதான் தந்தை பெரியார் கனவு கண்டார்.இப்போது அது மலர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
‘டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட்,கூலிங்கிளாஸ் இளைஞர்கள் போட்டுக்கொண்டு நாடக்க்க் காதல் புரிகிறார்கள் ‘ என்று ஒரு அரசியல் கட்சி தலைவர் தனது  மேலாதிக்கப்புத்தியோடு வெளிப்படுத்தியிருப்பது இதோடு பொருந்துகிறது. இந்தியாவெங்கும் ஒரு மனநோய் பரப்ப்ப் படுகிறது. இளைஞர்கள் உடுத்தும் ஆடைதான் ஒழுக்க்க் கேடுகளும் பாலியல் குற்றங்களுமு பெருக காரணம் என்பதே அந்த மனநோய். ‘கல்லூரிகளில் ஆடைகட்டுப்பாட்டை வலியுறுத்தி சொல்லப்படும் காரணங்கள் அவை ஒழுக்க் கேடானது அல்லது ஒழுக்க கேட்டைத் தூண்டுவது பாலியல் வன்முறைக்கு காரணமாக அது அமைகிறது.
படிப்பில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. நமது கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத்து,போதுமான அடிப்படை கட்டுமானங்கள் இல்லாத து ,பாடத்திட்டம் சம்பத்தமான குளறுபடிகள்,கொடூரமான கல்விக் கட்டாய கட்டணம் என எதைப்பற்றியும் எந்தக் கவலையும் இவர்களுக்கு கிடையாது.இந்தக் கல்லூரிகளில் படித்துவிட்டு போகிறவர்ளில் முக்கால்வாசிப் பேருக்கு எந்த எதிர்காலமும் கிடையாது என்பதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கறை கிடையாது என்று நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் மனுஷயபுத்திரன் வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய சமூக அக்கறைப் பதிவாகும். சில மத அடிப்படைவாதிகள் பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு தேவைதான் என கூக்குறலிடுவது ஆச்சரியம் இல்லை.காரணம் நுட்பமான முறையில் உள்ளே பொதிந்திருப்பது மதங்களும் பெண்ண்டிமைத்தனமும் ஒட்டிப்பிறந்தவைதானே?
  பெண்களை ஓயாமல் துரத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது.இந்த நாட்டின் ‘கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடைமீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள்.கொடூரமான பாலியல் வக்கிரங்களுக்குச் சாக்கடையாக மாறிப்போன ஆண் மனத்தின் வக்கிரங்களை காரணம் காட்டாமல், காவுகொள்ளப்பட்ட பெண்ணின் நடை உடை, பானைகளை மீதே கேள்விகள் எழுப்புகின்றனர்.......மாணவிகள் ஜீன்ஸ, டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்பதான கட்டுப்பாடுகளைப் பல கல்வி நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளால் ‘சமத்துவமாக மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் சில கல்வி நிறுவனங்களால் விதிக்கப்படுகின்றன......பெண்கள் தன் உடலை முழுவதுமாக மறத்துக்கொண்டு வீதியில் சென்றால்மட்டும், அவளுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருந்துவிடுமா? பாதிப்புக்குள்ளான பெண்கள் உடை விஷயத்தில்தான் அந்தபாதிப்புக்கு உள்ளானார்களா? என்று அக்டோப்ர் 20, 2013 தேதியிட்ட தமிழ் ‘தி இந்து நாளிதழில் சிறப்புப்பக்கம் 2ல் எம் ஆர் ஷோபனாவின் ‘கட்டுப்பாடா ஆணாதிக்கமா?தலைப்பிட்ட கட்டுரை மிக அழுத்தமாக கருத்துகளை முன்வைப்பதை சிந்திக்கவேண்டியுள்ளது.
சீருடைக் கலாச்சாரம் ஒரு விளம்பர அடையாளம்தான்.
   பொதுவாகவே சீருடை என்பது ஒருவிதமான விளம்பர அடையாளம்தான். இப்போது பல சுய உதவி குழுக்களில், அரசியல் கட்சிகளில், மத அமைப்புகளில் தங்களின் விளம்பரக் குறியீடாகவே கையாண்டு வருகிறார்கள். சில கல்வியியல் கல்லூரிகளில் காவிக் கலரைக்கூட சீருடையாக பயன்படுத்திவருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பர யுத்தியாகவும் பள்ளி கல்லூரிகளில் பயன்படுத்தும்போது கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு சீருடை பற்றி உத்தரவென்பதெல்லாம் காலத்திற்கு ஒத்துவராத கட்டுப்பெட்டித்தனமாக தன்மையை வளர்க்க உதவுமேயல்லாமல்
கண்ணியத்திற்கும, கட்டுப்பாட்டிற்கும் இது ஒத்துவராத ஒன்றே.
வக்கிரமும் வன்முறைகளும் நடந்த இடங்களில் ஆடைகள் காரணமா?
   கற்பழிப்புகளும் கலாச்சார ஆபாசங்களும் நடைபெற்ற இடங்களிலெல்லாம் ஆடைஉடுத்தும் தன்மை காரணமே அல்ல.ஆதிக்க எண்ணங்க கொண்டோரின், ஆண்களின் ஆபாச உளவிய்ல் சிந்தனையே காரணம்.சிதம்பரம்  காவல்நிலயத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது ஆடையாலா? வாச்சாத்தியில் 17 மலைவாழ் பெண்களை சூரையாடிய கொடூரம் அப்பெண்களின் ஆடை உடுத்தலினாலா? சல்வார் கமீஸ் அணிந்த பெண்தானே ஷரிகாஷா என்ற மாணவி கயவர்கள் ஆட்டோவிலிருந்தி இழுத்து கீழே இழுத்துப்போட்டது உடைக்கவர்ச்சியாலா? இப்படி ஏராளம் வினாக்கள் எழுகின்றன..
 பாலின சமத்துவக் கல்வி போதிக்கப் படுகின்றனவா?
     பாலின சமத்துவ சிந்தனை பாடத்திட்டம் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்டுகிறதா? கல்விக் கூடங்களில் திருவள்ளுவர் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ள பொருட்பால் காமத்துப்பால் குறள்களில் எத்தனை குறள்கள் பாடத்திட்டத்தில் உள்ளன? சங்க இலக்கியங்களில் வருகின்ற வாழ்வைச் சுவைக்கின்ற சிந்தனைகளை விதைத்துள்ளோமா? எந்த வகுப்பிலிருந்து ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் பிரித்து உட்கார வைத்து பாடம் நடத்தும் முறை தொடங்கினோம் இப்போதும் அதை தொடர்கிறோம். ஏன் இவையெல்லாம்? இவையெல்லாம் ஆய்வு செயது நம் உளவியல் வக்கிரங்களை விரட்டியடிக்க முன் வரவேண்டாமா? அப்போதுதானே வாழ்க்கையை நேசிக்கும் பாலின சமத்துவ சிந்தனை பரவி கலாச்சார சீரழிவுக்கு விடை கொடுக்க முடியும். கல்வி வியாபாரிகள்(கலாச்சாரக் காவலர்கள்) கட்டணக்கொள்ளையை நிறுத்திவிட்டு கல்வியை கண்ணியமாக நடத்த முற்பட்டு, நிர்வாகங்கள் முதல்வருக்கும் தலைமையாசிரியருக்கும் சுதந்திர உரிமை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வியில் ஆரோக்கியமாக பங்கெடுக்கும் ஜனநாயக நெறிமுறைகளை உருவாக்கினாலே உடை கட்டுப்பாடும் வக்கிரப்புத்தியும் தேவையில்லாமல் போகும்
                                                முனைவர் க.கணேசன்.
                                               விவேகானந்தா கல்லூரி
                                                அகஸ்தீஸ்வரம் .