Sunday, July 15, 2012

தேவதையும் இல்லை தெய்வமும் இல்லை

தேவதையும் இல்ல தெய்வமும் இல்ல மனுஷிதானம்மா நீ
பெண்ணின் குணமென சொன்னவையெல்லாம் பழமைவாதிகளின் பொய்
கொஞ்சம் நிமிரவும் சொஞ்சம் திமிரவும் தோழிவாராய் மூன்றாம் போராய்

நிலவென்று போற்றி கவிதைகள் சொல்லியுன்னை
துணிகள் துவைக்க விட்டானே
மலரென்று கொஞ்சி மிகழ்ந்தவனுன்னை
சமையலறையில் நட்டானே
தலையில்மட்டுமா நேர்கோடு
வளைவுகள் எதற்கு வாழ்வோடு
நெஞ்சம் வேண்டும் நெருப்போடு
அன்பால் செய்து தந்தால் என்ன
திரிய வேண்டுமா விலங்கோடு
சமத்துவக் கொள்கையில் ஒத்துப்போகிற
கணவனோடு நீ கருத்தறி - இனி
பிள்ளைகள் பெறவே பெண்னென்றால்-உன்
கர்ப்பப் பையினை அறுத்தெறி                 (தேவதையும் இல்ல)

மதமெல்லாம் கூடி மடமைகள் செய்துன்னை
அடிமைப் பொருளென வைத்ததம்மா
பக்தியில் நீயும் ரெக்கையை மறக்க
மண்ணுக்ககுள்ளேதான் புதைத்தம்மா
என்ன ஆடை உடுத்த வேண்டும்
என்ன வேலை பார்க்க வேண்டும்
நீயே முடிவை எடுக்கணும்
உரிமைச் சாவி எவன் கொடுப்பது
நீதான் பூட்டை உடைக்கணும்
கால காலமாய் காத்து வந்ததால்
உன்னதுதானே நெருப்பு-உன்னை
அடிமை செய்திடும் கொடிய மிருகத்துக்கு
கொள்ளி வைப்பதுன் பொறுப்பு.         (தேவதையும்)
                                                                           கவிஞர் ஏகாதேசி

Sunday, June 10, 2012

விழிநீர் துடைத்து வழியைக் காட்டிய திரை நாடக பேனாக்கள்

             விழிநீர் துடைத்து வழியைக் காட்டிய திரை நாடகப் பேனா.க்கள்
Old is gold ‘ என்ற பழைய திரையிசைப் பாடல்களடங்கிய குறுந்தகடு வாங்கி பாடல்களை போட்டுக் கேட்டேன்.  அவைகள் இனிமையாகவும், அறிவுக்கு தீனி போடுவதாகவும் இருந்தன. அக்காலத்தில் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் ஆகியோர் மத்தியில் மக்களிடையே நல்ல கருத்துகளை சுமந்து செல்லவேண்டுமென தாகம் இருந்த்து. கவிஞர்கள் பட்டுக்கோட்டை, மருதகாசி, கண்ணதாசன்,கம்பதாசன்,உடுமலை நாராயண கவி, கு ம பாலசுப்ரமணியம்,தஞ்சை ராமையாதாஸ், கலைஞர் கருணாநிதி, பஞ்சு அருணாச்சலம் இன்னும் பல கவிஞர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் கருத்துகளை நயம்பட எடுத்துரைப்பதில் அவர்களின் பேனா வாழ்வீச்சு அரோக்கியமாக இருக்கும். இசையமைப்பாளர்களும் ஒருவரையொருவர் மிஞ்சும அளவு கொடிகட்டி பறந்தவர்கள். கிராமங்களில் அமைந்துள்ள டூரிங் டாக்கீஸில் படம் பார்த்துக்கொண்டிருந்ந பெரும்பாலான குடும்ப ஆண்களும் பெண்களும் திரையில் நடிகர்கள் அழுதால் இவர்களின் கண்ணில் கண்ணீர் மாலை மாலையாக வரும். அவர்கள் சிரித்தால் இவர்களும் சிரிப்பார்கள்.ஒருவகையில பார்த்தால் ஒரளவு மனிதனுக்கு உலகத்தைப் புரியவைத்த்தும்,வாழ்க்கைக்கு ஆரோக்கியமான பாதையைக் காட்டியதும் திரைப்படம் எனலாம்முத்துராமன் நடித்த.ந்த்தையில் முத்து,எஸ்.எஸ் ஆர். விஜயகுமாரி நடித்த ‘தங்கரத்திணம் ஆகியவைகள் அன்றைய காலத்தில் (இன்றும் அப்படியே அதுவும நாகரிக வடிவில் வளரந்துள்ள) தீண்டாமைக்கொடுமைகளை சித்தரித்தன.இப்படியெல்லாம்  திரைப்படம் அமைந்த காலமது மதவெறியைக்கூட சாடாமல் விட்டதில்லை. 1955ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாஸ்திகன் என்ற திரைப்படத்த்திற்கு கவிஞர் கு.மா.பாலசுப்ரமிணியம் எழுதிய பாடல் மனதைக் கவரும்படியாக உள்ளது. திருச்சி லோகநாதனின் வெங்கலக்குரலின் இனிமை நம்மை சுண்டி இழுக்கும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இருபகுதி மக்களில் பெண்கள் சூரையாடப்பட்ட அவலம், உட்பட குழந்தைகள் அநாதைகளாக ஆக்கப்பட்ட கொடூரம், கவிஞரின் உள்ளத்தை பாதித்திருக்கவேண்டும்.தேச்ப்பற்றை நேர்த்தியாகவே திரைக்கதையாக வடித்து மக்களின் மனதில் ஒற்றுமையை விதைத்த அற்புத காலமது. மதவெறி சிந்தனை இன்னும் மறையாமல் இருப்பதாலும், கூடவே அரசியலிலும் கலந்து ‘ மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியுறுக்கவேண்டும் என மாமியார்(சொலவடை) ஆசைபோல நாடு வாழ்வியல் ரீதியாக எக்கேடுகெட்டாலென்ன மதவெறி மூலதனத்தோடு நாற்காலியைப் பிடிக்கத் துடிக்கும் இக்காலத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது. பாடல் இதுதான்.
மாநிலமே சில மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா-மனிதன் மாறியதேனய்யா
வானத்துநிலவில் ஆதவன் திசையில் மாறுதல் ஏதய்யா-மனிதன் மாறியதேனய்யா                                                                        {மாநிலமே}
மண்ணில் பலவித பிரிவினையாலே மனிதன் மிருகமாய் ஆனதனாலே
என்னே கொடுமை எங்குமிந்நாளே வீணர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அனபையும் பண்பையும் தன்னலத்தால் பலியாக்கிடும் பேதையாய்-மனிதன் மாறியதேனய்யா-                                                                {மாநிலமே}
ஈஸ்வர அல்லா தாஸர்கள் இன்றோ பூசனை செய்தல் நாசத்தையன்றோ
தேசம் சுடுகாடாவது நன்றோ தெய்வத்தின் பேரால் கொல்வதுமுண்டோ
தேசமறந்து ஆசைமிகுந்து மோசடிபுரிபவனாய்-மனிதன்மாறியதேனய்யா.                                               {மாநிலமே}
அன்பே ஆண்டவன் என்று நினைத்தால் அனைவரும் ஓர்குலமாகவே வாழ்ந்தால்
தனலாய் வெந்தே வீடுகள் விழுமா தாய்கள் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தியெனும் காந்தியின் குரல்கள் ஓய்ந்திடச் செய்பவனாய்-மனிதன் மாறியதேனய்யா.                                               {மாநிலமே}
 
இப்போதெல்லாம் திரையில் கவிஞர்களின் பேனா மதவெறியை இவ்வளவு கூர்மையாக் குத்திக் கிழிக்கின்றனவா?  கொஞ்சம் தேடித்தான் பார்க்கவேண்டும்.
  நான் பிறந்து வளர்ந்த்து ஒலைக்குடிசை. பத்துவயதாக இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். கட்டுடல்மிக்க கூலிவேலை செயத என் தாய் மூன்று குழந்தைகளை ‘கைச்சிறகால் குஞ்சுகளை காக்கும் கிளிபோல மெய்ச்சிறகால் போர்த்தியவள் பட்ட பாடு அதிகம். மழை  பெய்யும் இரவுவேளை கூரையிலிருந்து வீட்டுக்குள் மழைநீர் ஓழுகும். மழை கொட்டும் இடங்களில் பாத்திரங்களை வைத்தாலும் வீட்டுக்குள் தேங்கிய தண்ணீரை சணல் சாக்கை எடுத்து நனைத்து நனைத்து தண்ணீரை ஒட்டி எடுக்கும்போது கொஞ்சம் நனையாமல் இருக்கும் இடத்தில் நாங்கள் அரைத்தூக்கத்தில் இருப்போம். அப்போது எங்களுக்கு இது புதுமையாகத் தெரியவில்லை,காரணம் எங்கள் வீடு மட்டும் இப்படி இல்லை எங்கள ஊரில் நிறையவீட்டின் நிலை இதுதான்.. இப்படி வறுமையை மென்று விழுங்கிய நான் சமீபத்தில் அன்றைய கவிஞர் ஜெயகாந்தனும் மக்கள் கவி பட்டுக்கோட்டையாரும் பங்கெடுத்த ‘பாதை தெரியுது பார்என்ற நாடகத்திற்கு கவி ஜெயகாந்தன் எழுதிய பாடலைக் கேட்கும்போது எனது பழைய வாழ்க்கை கண்முன்னே வந்த்து. என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என் தாய் உட்பட வறுமையை தோளில் போட்டு தாலாட்டும் தாய்மார்களின் மனது எப்படி பதை பதைக்கும். பின்னால் காரல் மார்கஸ் வரலாற்றை படிக்கும்போது பாட்டாளி வர்க்கத் த்த்துவத்தை சொன்னவனை நாடு கடத்தி வைத்திருந்த சமயத்தில் மார்க்ஸும் ஜென்னியும் பட்ட வறுமையை விடவா நம் வறுமை என நினைத்து என் கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.  குழந்தை ஜென்னியின் மார்பில் பசியின் கோரத்தில் பாலருந்த்த் துடிக்கிறது பால் வரவில்லை தாயின் கண்ணீரே குழந்தையின் வாயில் விழுகிறது.சரிவர தாயிக்கு உணவு இல்லாமல் இருந்தால் தாயிக்கு பால் எங்கிருந்து சுரக்கும்.இவறையெல்லாம் கிளறி விட்ட ஜெயகாந்தன் பாடல்   இதுதான்.
                   ' தாயொரு ஏழை அறியாமல்-துயர்
                    தந்திட வந்தாய் என் மகனே
                    நீயொரு செல்வம் என்றிடுவார்-என்
                    நெஞ்சக்குமுறலைச் சொல்லிடுவாய்
                    சின்னஞ் சிறிய குடிசையிலே-ஒளி
                    சிந்திடவந்த திரிவிளக்கே
                    எண்ணெயில்லாமல் பொன்விளக்கின்-திரி
                    ஆடித்துடிக்குது ஆண்டவனே
                    நட்ட நடுத் தெரு வீதியிலே-பனி
                    கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய்
                    ஒட்டிய மார்பினில் முகம்புதைத்தே-கண்
                   உறங்கிடடா என் கண்மணியே!      '          

இப்படி இலக்கியம் உழைப்பவனின் அருகில் அமர்ந்து அவரகளைப் பாடியது. சோகத்தை மட்டுமல்ல, சோகத்தை மாற்றி விழிநீர் துடைத்து வழியையும் காட்டிய திரை நாடக பேனாக்கள் ஜொலித்த இலக்கிய உலகம்.

Monday, May 14, 2012

வெட்கத்தை உதறினால் விஷயத்தை பரப்பலாம்


தயக்கத்தையும் வெட்கத்தையும்  விட்டால் விஷயங்களை பரப்பலாம்.
 ஒருநாள் திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து   எண்ட் டூ எண்ட் பஸ்ஸில் ஏறி புறப்பட்டு கொஞ்ச தூரம் கடந்ததும்  நாகர்கோவிலுக்கு கண்டகடரிடம் டிக்கட் எடுக்க ரூ 50 எடுத்து கையில் வைத்திருந்தேன். பக்கத்தில் இருந்த பயணி ரூ 100 வைத்திருந்தவர் என்னிடம் உள்ள 50ஐ வாங்கி இரண்டு டிக்கட்டாக எடுத்தார் 45 சில்லறை என்னிடமும் அவரிடமும் இல்லாத்தால். கண்டக்டர் டிக்கட்டுக்கு ரூ 90 போக மீதி ரூ 10 பக்கத்திலிருந்த பயணி என்னிடமே கொடுத்து சில்லறை இருந்தால் கொடுங்க இல்லைன்னா வையுங்க சார் எனச்சொன்னார். என்னிடம் சில்லறை இல்லாத்தால்,நான் வைத்திருந்த பையில் ஏப்ரல் மாத புதிய ஆசிரியன் இதழை எடுத்து அவரிடம் நீட்டி 'சில்லறை இல்லை சார் இத வச்சுக்குங்க இது அருமையான இதழ் சமூக விஷயங்களை அருமையாக அக்கரையோடு பேசும்' என சொல்லி கொடுக்கும் போது ஒரு புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டு புரட்டிப் பார்த்துவிட்டு தனது பையில் வைத்துவிட்டு எங்கள் அறிமுகத்தைத் தொடர்ந்தோம் அந்த பக்கத்துப்பயணி நாகர்கோவிலில் ஒரு கிளினிக் வைத்திருக்கும் சித்த மருத்துவ இளைஞர்.
          விடைத்தாள் திருத்தும் இடத்தில் மதிய ஓய்வு நேரத்தில்  ஆசிரியர்களிடம் சென்று புதிய ஆசிரியன் இதழை அறிமுகப்படுத்தி சந்தா சேர்ப்பது வழக்கம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேராசிரியரிடம் முயற்சி செய்தேன். அவர் சொன்னார் எனக்கு தமிழ் தெரியாது மலையாளம்தான் தெரியும்சார் ஆனா உங்களுக்காக சந்தா கொடுக்கிறேன் சார் எனச் சொன்னார். சந்தா முக்கியம் இல்ல சார் இதை வாங்கி படிக்கக் மனசுல பதிக்கவேண்டிய சமூக மருந்து சார் பரவாயில்லை என சொல்லிவிட்டு அடுத்த பேராசிரியரிடம் முயற்சியை தொடர்ந்தேன். பேப்பர் திருத்தும்போது மலையாளம் தெரியும் எனச்சொன்ன பேராசிரியர் திருத்திக்கொண்டிருந்த விடைத்தாள் தமிழில் எழுதப்பட்டிருந்தது.எழுதிய மாணவனுக்கோ மாணவனுக்கோ என்ன ஆகுமோ என யோசித்தேன்.              மாத்ததின் ஆரம்ப வாரத்தில் என்னிடம் எப்பவும் புதிய ஆசிரியன் சில செம்மலர் கொஞ்சம் இருக்கும். நான் ஏதாவது துணி தைக்க கொடுக்கும் டெய்லரிடம் கூலி கொடுக்கும்போது இப்புத்தகத்தையும் கணக்கில் சேர்த்துக் கொடுப்பதுண்டு. முடிதிருத்தும் கடைகளில் நான் முடி வெட்டியவுடன் அக்கடைகளிலிலிருக்கும் பல பத்திரிக்கைகளோடு இதையும் போட்டுவிட்டு கொடுக்கும் கூலியில் கழித்துக்கொள்வேன்.கடைக்கார்ரிடம் புத்தகம்பற்றி விளக்கிச சொல்லும்போது அவர் ஏற்றுக்கொள்வார். இப்படி புத்தகம் விற்பதே மிக அலாதியான இன்பமே.

Wednesday, May 9, 2012

சமரசம் உலாவும் இடமா சம பந்தியும் புதைவிடமும்.?


                          
'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி

பல ஆன்மீகப் பெரியோர்கள் பசித்துவந்தோர்க்கு பசியைப் போக்குவதுதான் உண்மையான தர்மம் எனப் போதித்தார்கள்.சுவாமி விவேகானந்தர்கூட' பசித்திருப்பவனிடம் கீதையை போதிப்பதைவிட முதலில் அவனுக்கு பசியைப் போக்குங்கள் பின்பு கீதையைப் போதியுங்கள்' அய்யா வைகுண்டர் தீண்டாமைக் கொடுமை கோரநர்த்தனம் ஆடிய அந்தக் காலத்தில் நாடார் உள்ளிட்ட பள்ளு பறை பதினெட்டு ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒன்றுசேர்க்கவே, தானியங்களை வீடுவீடாக பிச்சையெடுத்து சேர்த்து அவற்றைக்  குத்தி அரிசியாக்கி பொங்கி எல்லோரையும் ஒன்றுபோல அமர்ந்து உணவருந்த வைத்த ஏற்பாடு தீண்டாமையை விரட்ட அவர் வீசிய அற்புதமான கருவி. இதையே வடலூர் வள்ளலாரும் கடைப்பிடித்து அவர் அன்னம் வழங்க பற்றவைத்த அணையாஅடுப்பு இன்னும் அணையாமல் அங்கு செல்லும் மக்களுக்கு பசியாரும் தாயகமாக இருக்கிறது என்பதெல்லாம் மகிமையானது.மகிழ்ச்சியானதுதான். அதன்பிறகு சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் தியாகிகள் உருவாக்கிய ஆஸ்ரமங்களில் சம்பந்தி போஜன முறைகளைக் கடைப்பிடித்தார்கள்.இக்காலகட்டத்தில் தந்தை பெரியார்  காங்கிரஸில் இருந்த காலத்தில் சேரன்மாதேவியில் பிராமணர்களுக்கு தனிபந்தியும்,பிராமணரல்லாதோருக்கு இன்னொருபந்தியும் வைப்பதைப் பார்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய வரலாறும் நடந்துள்ளது.  இன்னும்கூட திருவண்ணாமலை உட்பட ஏராளமான இடங்களில் முதியோர்களுக்கும் பக்தர்களுக்கும் ,இயலாதோருக்கும் பசிபோக்க செயல்படுவதைப் பார்க்க முடிகிறது..பொதுவாக ஒருநாட்டில் வாங்கும் அவலத்திற்கு உள்ளான மக்கள் இருப்பதால்   கொடுக்கும் நபர்களின் கொடைவள்ளல் தன்மை  வளர்கிறதென்றால், அந்த நாட்டின் அமைப்பை கேள்விக்குட்படுத்தவேண்டியது ஆகும். இருப்பவன் இல்லாதவன் நிலையின் வெளிப்பாடு இது  என்று சிந்தனை செய்தாலும், ஆன்மீகத்தளங்களில் இவையெல்லாம் செயல்பட்டாலும், ஏதோ இயலாதோருக்கும் முதியோருக்கும் பசிபோக்குகிறார்கள் என்று இலகுவாக எடுத்துக் கொள்கிறோம்.அதுவும் பசியால் வாடிய ஒருவனுக்கு உணவு கொடுத்தவனை தெய்வம்போலவே உணவு பெற்றவன் துதிக்கிறான். இந்த சோறு படைப்பது ஒருகாலத்தில் பக்தி கலாச்சாரத்தில் இதுவொரு பிரிக்கமுடியாத பகுதியாக மாறி அதுவே இன்னும் தொடர்கிறது அன்னதானம் என்ற பெயரில். இப்போது அறிவியல் முன்னேற்றம் வந்த பின்பும், தொழிலமுறைகளில் சாதனை கண்டபின்பும் அவனவன் ஏன் இன்னும் உணவைப்பெற முடியவில்லை,? ஏன் மக்கள் சாப்பாடு போடும் இடங்களுக்கு செல்கிறார்கள்?, சிந்திக்கவேண்டியுள்ள வினாக்கள். பெற்றோர்களை பிள்ளைகள் கவனிப்பதில்லை,கடவுள் பக்தியென்ற பேரில் ஆலயங்களுக்கு சென்று இப்படி வாழ்க்கையை கழிக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. பணம் படைத்தவன் ஏதோவொரு சேவை செய்கிறேன் என்ற பேரில் ஒரு முக்கிய நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளில் எம்மதம் சார்ந்தோரையும், எச்சாதியைச் சேர்ந்தோரையும் ஒன்றாக உட்காரவைத்து சாப்பாடு போட்டுவிட்டால் அவரும் இமாலய சாதனை செயததாக மகிழ்கிறார்., ஏதோ சமத்துவத்திற்கு வித்திட்டது போலவே கருதுகிறார். இது இன்றைய சாதிய சமூகத்தில்,மதவெறி தலைக்கேறிய சமூகத்தில் இது எந்த அளவு பயன் உள்ளதாக அமையும்?பழைய திரைப்படத்தில் ஒரு பாடல் 'சமரசம் உலாவும் இடமே-நம்
வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ஆண்டியும் இங்கே அரசனும் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா சமரசம்
உலாவும் இடமே' என்று இடுகாட்டைப் பற்றி  பாடுகிறார். இதில்கூட சமரசம் எந்தக் காலத்தில் உலாவியது.மனிதன் வாழும்போதே மேலத்தெரு,கீழத்தெரு என்று பி,ரித்து தாழ்ந்த சாதி பக்களெல்லாம்  ஒதுக்குப்புறமாக வாழவிட்டு மேல்சாதி மக்களெல்லாம் இன்னொருப்பக்கம் வாழவழிவகை செய்திருக்கும் சமூகச் செயல்பாட்டின்மீது நாம் காறி உமிழாமல் வேறு என்ன செய்ய? இது இப்படியென்றால், வாழும்போதாகிலும் மனிதன் ஒன்றாக வாழமுடியவில்லை .இந்த சாதீய சமூகத்தில் இறந்தபின்பாவது மண்ணில் புதைக்கும்போதாவது சமத்துவம் வேண்டுமென எந்த மதவாதியாவது கேள்வியெழுப்பினானா? சித்தர்கள் எழுப்பிய கேள்வி,அய்யா வைகுண்டர் தொடங்கி வைத்த முத்திரிக்கிணறு [ எல்லா சாதியினரும் தண்ணீரைக் கோரிக் குழித்து குடிக்கும் கிணறு) இயக்கமுங்கூட அய்யா வைகுண்டரின் உள்ளக்கிடக்கையை இன்னும் நனவாக்கவில்லை.  காரணம் இவர்கள் கட்டிய சமத்துவக் கோட்டையை விட சனாதனவாதிகள் கட்டியெழுப்பிய  வைதீக கோட்டை  சாதிப்பாகுபாட்டின் இருப்பில் மிக உயர்ந்த அளவ் வளரந்து பல உத்தபுரங்களின் தீண்டாமைச் சுவர்களாக வளரந்துவிட்டதுதான் கொடுமை. அந்த அடித்தளத்தின்மீது கேள்வியெழுப்பினால் மதம் குறிப்பாக வைதீக  சனாதனம் இருக்காதல்லவா? நாமெல்லாம் மதத்தால் ஒன்று என்று கூப்பாடுபோட்டு அரசியல் செய்பவர்கள் இதுவரை இதுபற்றி எந்த மூச்சும் வெளிவிடவில்லை.?ஊர்கள் தோறும் சாதிக்கொரு சுடுகாடும் இடுகாடும் அந்தந்த தொகுதியில் அனைவரின் ஓட்டுகளை வாங்கி ஜெயித்த எம்.எல.ஏ., எம்.பி க்களுக்கு தொகுதிகளுக்கு ஒதுக்கும் தொகையில் கட்டி, அவர்களின் பெயர்களோடு சாதிபாகுபாடு சந்தோசமாக நாட்டியமாடுகிறதே!  அரசும்கூட இங்குமங்கும் மின்சார மயானம் வைத்துள்ளதே அவற்றை அனைத்து மாவட்டங்களிலும் வைக்கவேண்டுமென சட்டம்போட்டு அமைக்கவில்லையே ஏன்? எம் எம் எல்.ஏ, எம் பி க்களுக்கு ஒதுக்கும் தொகுதிப பணத்திலோ,அல்லது அரசு பணத்திலோ, பஞ்சாயத்துக்கு ஒரு பொதுச் சுடுகாடும், நகராட்சிக்கு ஒரு மின் மயானமும் உருவாக்குவதில் என்ன சிரமம்.? பெரும்பாலான தலித்துகள் வாழும் பகுதிகளில் ஆத்தோரம் குளத்தோரம் புதைக்கவேண்டிய அவலம் இன்னும் தொடர்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் பாலசமுத்திரம் என்ற ஊரில் பிணத்தை  படகு போல பாடைகட்டி ஆற்றில் நீச்சல் அடித்துக்கொண்டே இருவர் மூவர் தள்ளி ஆக்கரையில் பிணத்தைப் புதைக்க வேண்டிய கட்டாயம் .காரணம் இக்கரையில் ஆதிக்க சாதியினர் இடம்தர சம்மதம் இல்லை ,பின்பு திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலையிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்திய பின்பு ஆற்றுக்கு இந்தப்பக்கம் தலித்துகளுக்கு இடுகாடு கிடைத்துள்ளது. இப்படி பல ஊர்களில் புதைக்கும் உரிமைகூட மறுக்கப்படுகின்ற நிலையை மனச்சாட்சி உள்ளோர் எத்தனைபேர்  கேட்டார்கள்? சுயமரியாதை இயக்கம் நடத்திய தந்தை பெரியார் வாழந்த தமிழகத்தில், பெரியாரின் வாரிசுகள் ஆட்சியில் அமர்ந்தபின்பும், திராவிடம் பெயரை கட்சிக்கு பெயர்சூட்டி அரசுக்கட்டிலில் இருப்பவர்களுக்கு பெரியாரின் சுயமரியாதை கோரிக்கை மட்டும் அனாதையாக கிடப்பது நியாயமாகுமா? இதுபோன்ற  சம்ம என்ற கருத்து  சுடு காட்டில் இடுகாட்டில் வந்துவிட்டால் தாழ்ந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வந்துவிடும்  மேல்சாதிக்கார்ரர்களுக்கு எரிச்சல் வந்துவிடும் என்பதாலா? அல்லது  ஓட்டுப்போய்விடும என்பதாலா?  சமத்துவம் பேசும் அமைப்புகளுக்கு இதுகுறித்த சிந்தனை ஏன் வரவில்லை? சம்பந்தி நடத்தி எல்லோரையும் அமர்த்தி உணவு பரிமாறிவிட்டால் சாதிவித்தியாசம் போய்விடுமா?
நகராட்சிகளில் மின்மயானம் உருவாக்குவது நகரங்களில் ஏற்படும் இடநெருக்கடிக்கு சிறந்த தீர்வாகுமே! புதைப்பதும் எரிப்பதும் சாதிக்கேற்ற பண்பாடாக இருந்தாலும்  இடநெருக்கடி வரும்போது இப்பண்பாட்டில் மாறக்கூடியவர்கள் மாறுவார்கள் என்ற விஷயத்தையும் யோசிக்கலாமே.
தலித்துகளுக்கு தமிழக அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகள் மழைக்காலங்களில் இத்து விழுகும் நிலையில் இருக்கின்றன. அவற்றை புதுப்பிக்க வீடுகளை சோதனை செய்து உரியவர்களுக்கு வழங்கி வாழ வழியை யோசிப்பதல்லவா சமத்துவத்தை எண்ணத்தில் கொண்டோர் செயல்படுத்தவேண்டியது அல்லது அரசை வலியுறுத்தலாமே.
   இது வேரில் சீழ்பிடித்திருக்கும்போது கிளைகளுக்கு மருந்து தெளிக்கும் கிறுக்குத்தனம் என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல், தாழ்த்தப்பட்ட மக்களை சக மக்களாகவே நினைக்காத சமூகத்தில், ஆண் பெண் பேதமுள்ள சமூகத்தில், வரதட்சணை தலைவிரித்தாடும் சமூகத்தில் சமத்துவ பந்தி மட்டும் வைப்பது உண்மையான ஒரு அணுகுமுறைதானா? இல்லை.  உதட்டில் ஒன்றும்,உள்ளத்தில் வேறு ஒன்றும் வைத்துக்கொண்டு இப்போஜனம் செய்தால் அது எவ்வகையில் பொருந:தும? சம்பந்தி போஜனம் செயவோர் மத்தியில்
வரதட்சணை ஒழிந்துவிட்டதா? கோயிலுக்குள்ளும் ,தெருக்களுக்கு உள்ளே செருப்பு போட்டு நடக்க அனுமதி கிராமங்களில் கிடைத்துவிட்டதா? கோயிலுக்குள்ளே சென்று வழிபட உரிமை தலித் மக்களுக்கு உரிமை பயன்படுகிறதா பின் ஏன் சினிமாவில் ஒரு கவிஞன் எழுதினான் 'அன்னசத்திரம் வைப்பதெதனாலே? பல திண்ணைதூங்கி பயல்கள் இருப்பதாலே?' என்றும் எழுதியுள்ளான்.
'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் மின்சுடு( பொது )இடுகாடைமத்தல்' என்று திருத்தினால்கூட கனகலிங்கத்துக்கு பூணூல் சூட்டி அழகு பார்த்த பாரதி ஒன்றும் கோபப்படமாட்டார். சமத்துவம் விரும்பும் மனசுகள் கரமுயர்த்துமா?'தீண்டாமை பாவச்செயல்' என எழுதிப்போட்டதை அங்கீகரிக்கும் அரசு நிறைவேற்றுமா?
                                                                                          பேரா.க.கணேசன்.
                                                                                                   கொட்டாரம்
                                                            த மு எ க ச மாநில்ச் செயற்குழு
                தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்

Tuesday, May 8, 2012

இக்காலத்திற்கும் பொருந்தும் பழைய பாடல்

பழைய திரையிசைப் பாடல் ஒன்று திருச்சி லோகநாதனின் இனிமையான குரல்வளத்தில் அமையப்பெற்றது. 1955ல் வெளியான படத்திற்கு கு ம பாலசுப்ரமணியம் எழுதியது.இசையமைப்பாளர் சி.ராமச்சந்திராவின எளிமையான இசையில் தவழந்துவந்துள்ளது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இருபகுதி மக்களில் பெண்கள் சூரையாடப்பட்ட அவலம் உட்பட குழந்தைகள் அநாதைகளாக ஆக்கப்பட்ட கொடூரம் கவிஞரின் உள்ளத்தை பாதித்திருக்கவேண்டும்.தேச்ப்பற்றை நேர்த்தியாகவே திரைக்கதையாக வடித்து மக்களின் மனதில் ஒற்றுமையை விதைத்த அற்புத காலமது. மதவெறி சிந்தனை இன்னும் மறையாமல் இருப்பதாலும் கூடவே அரசியலிலும் கலந்து நாற்காலிக்குத் துடிக்கும் இக்காலத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது. எழுதிய கவிஞர் யாரென்றும் தெரியவில்லை. பாடல் இதுதான்.
மாநிலமே சில மானிடரால் என்ன
மாறுதல் பாரய்யா-மனிதன்
மாறியதேனய்யா
வானத்துநிலவில் ஆதவன் திசையில்
மாறுதல் ஏதய்யா-மனிதன்
மாறியதேனய்யா              {மாநிலமே}
மண்ணில் பலவித பிரிவினையாலே
மனிதன் மிருகமாய் ஆனதனாலே
என்னே கொடுமை எங்குமிந்நாளே
வீணர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அனபையும் பண்பையும் தன்னலத்தால்
பலியாக்கிடும் பேதையாய்-மனிதன்
மாறியதேனய்யா-                   {மாநிலமே}
ஈஸ்வர அல்லா தாஸர்கள் இன்றோ
பூசனை செய்தல் நாசத்தையன்றோ
தேசம் சுடுகாடாவது நன்றோ
தெய்வத்தின் பேரால் கொல்வதுமுண்டோ
நேசமறந்து ஆசைமிகுந்து மோசடி புரிபவனாய்-மனிதன்
மாறியதேனய்யா.                     {மாநிலமே}
அன்பே ஆண்டவன் என்று நினைத்தால்
அனைவரும் ஓர்குலமாகவே வாழ்ந்தால்
தனலாய் வெந்தே வீடுகள் விழுமா
தாய்கள் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தியெனும் காந்தியின் குரல்கள்
ஓய்ந்திடச் செய்பவனாய்-மனிதன்
மாறியதேனய்யா.                    {மாநிலமே}