Wednesday, April 27, 2011

எத்திப் பிழைப்போரை ஏறி மிதிக்கும் இலக்கியம்

புரட்சிக்கவி பாரதிதாசன் 'சஞ்சீவி பர்வத த்தின் சாரல்' காதல் காவியத்தில் ,காதலைப் பாடவந்த
 கவிஞன் காதலுக்குள் இந்திய சமூகத்தின் அடிமைத்தனத்தை அறியாமையை, பிளவுபடுத்தும் தன்மையை மிக நேர்த்தியாக விளக்குகிறார். குப்பன் வஞ்சியைக் காதலிக்கிறான்.வஞ்சி மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல கேட்கிறாள். ஒருநாள் மலை அடிவாரத்தில் இருந்த இருவரும் ஒரு மூலிகையை சாப்பிடுகிறார்கள். மூலிகையின் ஆற்றலால் மலையுச்சிக்கு சென்றுவிடுகிறார்கள்.மலை உச்சியில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது தூரத்தில் ஒரு ஓசை கேட்கிறது. பல நாட்டுக்கார ர்கள் பேசிக்கொள்ளும் விவரங்களை கூர்மையாக கேட்கும்போது, இத்தாலி. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டவர்கள் உரையாடிக்கொண்டு இருக்கும்போது, இங்கிலாந்து நாட்டார் இந்திய தீபகற்பம் பற்றி இப்படி பேசுகிறார்களாம்; 
   நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது
   வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்களென்றால்
   சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
   ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்
   ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
   பேதம் வளர்க்க பெரும் பெரும் புராணங்கள்
   சாதிச் சண்டை வளர்க்க தக்க இதிகாசங்கள்!
   கட்டிச் சமூகத்தின் கண்ணவித்து தாமுண்ணக்
   கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்
   .........................................................................
  சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம் தோள் உழைப்பிலே நம்பிகை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாற ற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்ற வைத்துப்
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே
இந்த நிலையில் சுதந்திரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
....................................................................................
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்
நீதிப்பிழைகள் நியம பிழைகளும்.
மூடப்பழக்கங்கள் எல்லாம் முயற்சி செய்தே
ஓடச் செய்தால் நமையும் ஓடச் செய்வார் என்பேன்'
என்று இங்கிலாந்துக் காரன் எக்காளமிடுவதை காட்டுகிறார். இந்த நிலை சதந்திரப் போராட்ட
 காலத்தில் மட்டுமல்ல பொருந்துவது. பன்னாட்டுக் கம்பெனிகள் படையெடுக்கின்ற இக்காலத்திலும் மிக பொருத்தமே! சீர்திருத்தம் பேசி ஆட்சிக்கட்டிலிலே ஏறியவர்கள் இந்த சூட்சமத்தை இதுவரை கண்டதாகத் தெரியவில்லை.மூடநம்பிக்கையின் முடைநாற்றத்தையும்,தீண்டாமைக் கொடுமைகளையும் போக்குவதற்கு சீர்திருத்தச் செம்மல் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?. மக்களை மதி மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களின் உழைப்பு ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏமாற்றுபவர்களுக்கு காலந்தோறும் சந்தர்ப்பத்தை வாரி வாரி வழங்குகின்ற ஏற்பாட்டையே செய்துகொண்டு அவர்களின் வாரிசுகள் ஏராளமான தலைமுறைகளுக்கு வைத்துச் சாப்பிட ,உல்லாச வாழ்வுக்கும் தயார்படுத்தும் ஏற்பாடு செய்யும்
புதிய பிராமணர்களாக சூத்திர ர்களும்,சத்திரியர்களும் மாறிவருகிறார்களென்பது அறிவியல் காலத்திலும் வெட்க கேடானது ஆகும்.
     கி மு 6000 ஆண்டுகள் முதல் கி பி 1942 வரை மனித சமூக வளர்ச்சி நிலையை மிக அற்புதமாக சித்தரிக்கும் நாவலாக 'வால்கா முதல் கங்கை வரை' இலக்கிய வித்தகர் உலகம் சுற்றிய மனித நேசிப்பாளர் படைத்து இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்.அந்நாவலில் கட்டங்கட்டமாக வளர்ந்து வரும் சமூகத்தில் கி மு 700 காலகட்டத்தில் பஞ்ச சாலம் என்ற ஐக்கிய மாகாணத்தில் பிரவாஹன் என்ற பிராமணனுக்கும் லோகா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்கிறார்கள் சமூகத்தைப் பற்றியே.முதலில் வேதங்களை,வசிட்டர்,விசுவாமித்திரன் ஆகியோரின் மந்திரங்களை உருப்போடும் பிராமண்ணாகவே இருக்க விரும்பியவன்,பாஞ்சாலபுர ராஜமாளிகையின் அரசனாக துடிக்கிறான்.ராஜமாளிகையில் இவர்கள் இருவரைத்தவிர ஏனையோர் அடிமைகளாக இருக்கும் கொடுமை காதலி லோகாவுக்கு பிடிக்கவில்லை.ராஜமாளிகையே
 எட்டிக்காயாக கசக்கிறது.பிரவாஹனிடம் கேட்கிறாள்;
    'நீ அரசி காரியங்களுக்கு அப்பாலும் நீ தலையிட்டுக்கொண்டிருக்கிறாயே அதற்கு என்ன
அவசியம்?'
    பிரவாஹன் சொல்கிறான்; 'ஓஹோ! பிரம்மாவைத் தாண்டிப் பிர்ம ம் வரை பறப்பதைப் பற்றி சொல்கிறாயா? லோபா! அது அரச காரியங்களுக்கு அப்பாற்பட்ட வேலையல்ல. அரச ஆட்சிக்குத் துணைபலமாக நிற்பதற்காகவே நமது முன்னோர்கள் வசிட்டர்,விசுவாமித்திர ர் முதலிய மகரிஷிகளுக்கு,மிகுந்த மரியாதையும் தானங்களும் கொடுத்தார்கள்.அந்த மகரிஷிகள்;இந்திரன் அக்னி வருணன் முதலிய தெய்வங்களின் பெயரால், மக்களை அரசன் உத்திரவுக்குக் கீழ்ப்படியும்படி தூண்டினார்கள். அக்காலத்து அரசர்கள்,மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக,ஏராளமான செலவு செய்து இந்தத் தெய்வங்களின் மகத்தான சக்திகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காகவும்,அந்தத் தெய்வங்களின் கிருபையானாலேயே நாம் இந்த சுகபோகத்தை இளங்கன்றின் மிருதுவான மாமிசம்,மது,மெல்லிய ஆடைகள்,முத்து ரத்தின ஆபரணங்கள் இவைகளையெல்லாம் உபயோகிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்,என்ற நம்பிக்கை உண்டாவதற்காகவுமே இவைகளைச் செய்கிறோம்' என்று பதிலளிக்கிறான்.காதலி லோகா விடவில்லை மேலும் கேட்கிறாள்; நீ படைக்கத் துடிக்கும் புதிய பிர்மத்தை(தெய்வத்தை)சிருஷ்டிக்கத் துணிகிறாய் இந்த புதிய பிர்மத்தைப் பற்றி சந்தேகம் உண்டாகாதா?' என்று.பிரவாஹன் பதில் சொல்லுகிறான் " பிர்மத்தைப் பார்க்கவேண்டும் என்று யாரும் கேட்கமுடியாதபடி அதை நான் சிருஷ்டித்திருக்கிறேன்.ஆகாயவெளியைப்போல எங்கும் நிறைந்திருப்பது.புலன்களால் உணர முடியாத து பிர்ம ம் என்று நாம் கூறியிருக்கும்போது,அதைப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி,எங்கிருந்து வரும? ' என்று எப்படி திட்டமிட்டு ஒரு மூடநம்பிக்கை பக்தி பண்பாட்டை கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.மாகவிஞன் பாரதிகூட மிக அழுத்தமாகவே தனது கவிதையில் பதிவு செய்கிறார்;
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
 ஓதிடும் தெயவங்கள் பொய்யெனக் கண்டோம்!
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ளமுறைகள் கதையெனக்கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செய்யும் குட்டை முனியும்
நியுனுள்ளே மூழுகிப் போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த-திறல்
வீமனும்  கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் -ஒன்றில்
உண்மையென்றோதிமற் றொன்று பொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பல பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென தெளிவுறக் கண்டோம்!
புவிதனில் வாழ்நெறிகாட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்'
பாரதியை விரும்புவோர் எத்தனையெத்தனைபேர்.அவர்களெல்லாம் இதை மனதில் ஏற்ற வேண்டாமா? இதை பறைசாட்ட வேண்டாமா? இளம் கொளுந்துகள் மனதில் விதைக்க வேண்டாமா? புராணங்கள் கற்பனை கலந்த கதையென்று பகுத்தறிவுக்கு உகந்தபடி சிந்திக்க கற்றுக் கொடுக்க வேண்டாமா? இப்படியெல்லாம் முந்தைய தலைமுறை வலிமையாக எடுத்துச் செல்லாமலிருந்துவிட்ட காரணத்தால் இந்த தலைமுறை மூடநம்பிக்கையின் முடைநாற்றத்தில் சிக்கித் திணருகிறது.இந்த பலவீனத்தைத்தான் ஏமாற்றும் எத்தர்கள் மிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.கல்வி,ஊடகங்கள் காலங்காலமாக யார் கையில் மாட்டிக் கொண்டன? கொள்ளையடிக்கும் வியாபாரிகள் கையில்தான் வசமாக மாட்டிக் கொண்டன.
தனியுடமை,நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏராளமான மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு சுரண்டி கொள்ளையடிப்பதற்குத்தான் இவ்வளவு ஏற்பாடு என்பதை இந்த சமூகம் எப்போது சிந்திக்க முன்வரும்?
'தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் கார ரிடம்
,கைரேகை பார்க்கவரும் முறையிலும்- அவன்
  கண்டதுபோல் சொல்லுவதை நம்புகின்றவிதத்திலும்                              
  ஆரறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
  ஐந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவுங்கூட டவுட்டு.' என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய பாடல் விண்வெளியில் ராக்கெட் விடும் இந்தக் காலத்திலும் , கைக்குள் உலகம் சுருங்கிய மின்னணு காலத்திலும் மக்கள் சிந்தனை மாறாத போக்கைப் படம் பிடித்துக் காட்டுகிறது.கவிஞர் மருதகாசி
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
பக்தரைப்போலவே பகல்வேஷம் போட்டு
பாமர மக்களை வலையினில் மாட்டி -(எத்தனை) என்று ஒரு திரைப்படத்தில் வினா தொடுக்கிறார்.
குமரியில் பிறந்து,சுதந்திரப் போராட்டத்திலும, தமிழகம் முழுக்க பொதுவுடமை இயக்கத்திலும், மக்கள் இலக்கியத்திலும் ஜொலித்த ஜீவானந்தம்
கெட்டாலும் கெட்டோம் மிகவும் கெட்டோம்
கீரியும் பாம்புமாய் வாழ்ந்து கெட்டோம்
முட்டாளில் முட்டாள் அடியுந் தொட்டோம்
மூச்சுப் பேச்சின்றி யடிமைப்பட்டோம்
மோசக்கார ர் பேச்சு முழுதும் வெற்றியாச்சு
நாசக்கார ர் பேச்சு நமையழிக்கப் போச்சு' என்று கவி படைத்தவர், நாம் எப்போது விடிவைக் காண விழிப்புணர்வு பெற்று எழுவோம்? என்ற கேள்விக்கு
'காட்டு வெள்ளம் போலே
கலக உள்ளத்தாலே
ஊட்டு மறிவாலே
ஒரு புரட்சி மண்மேலே
.உற்றால் சுகம் பெறுவோம்-வாழக்
கற்றால் பயன் பெறுவோம்' என்று வழிமுறையை வகுத்துத் தந்துவிட்டு.அதை அடையும் வழியை இன்னும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் ஜீவா
அறிவினைத் தூண்டாது மலைபோல மூளையை
அமிழ்த்தும் சாத் திரமெரிப்பீர்
ஆஷாட பூதிகள் பொம்மலாட்டங்களுக்(கு)
அடிமையா காதுவாழ்வீர்
.-----------------------------
குறியோடு கொள்கையும் புதுஉலகு காண்பதில்
கொண்டுநல் தொண்டு செய்வீர்
கோதிலாச் சமதர்ம ம் ஓங்குதற்கேயொன்று
கூடிவரு வீர் தோழரே' என்றும் நமக்கு ஜீவா அறைகூவல் விடுகிறார்.
 பொய்யும் புரட்டும்,நயவஞ்சகமும்,போலிமயக்கத்தில் ஆழ்த்துகின்ற ஊட கத் தந்திரமும் மக்கள் தலையில் நாட்டியமாடி உள்ளூர் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகளுக்கும் நம் வாழ்க்கையை பந்தி வைக்கின்ற வினோதங்களை நாம் வீழ்த்துவது எப்போது?