Monday, May 30, 2011

'விடை தேடிப் புறப்படுவோம்' கவிதைத் தொகுப்பின் விமர்சனம்.

         கவிதையானாலும், வேறு எந்த கலை இலக்கியப் படைப்பானாலும்சரி, அறிவையும்,வயிற்றையும், உடலையும் ஒதுக்கிவிட்டு தோன்றுவதில்லை. கவிதை-புலனுணர்வுகளின் உயர்ந்த, திறம்வாய்ந்த வெளிப்பாடுதான.கலை இலக்கியம் சாதாரண மக்களின் அருகே அமர்ந்து வாழக்கையின் சுக துக்கங்களை விசாரிக்க வேண்டும்.இந்த அடிப்படையில் கவிதையும் மனித வாழ்க்கையின் சகல நடவடிக்கைகளையும் கூர்மையாக உற்று நோக்கி, அவற்றை லாவகமாக வெளிப்படுத்தி வாசகனின் சிந்தனைத் தளத்தில் அதிர்வை உருவாக்க வேண்டும்.
         எல்லாவகையான இலக்கியத்தைப் போல கவிதை இலக்கியமும் அந்தந்த காலத்தின் மனித சமூகத்தின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கக் கூடியதுதான்.எனவேதான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றார்கள்.கவிதையும் அப்படித்தான்.அந்தந்த காலகட்டத்தில் இருக்கும் வாழ்நிலையை பிரதிபலிப்பது மட்டுமல்ல,மாறுபாடோ,குறைகளோ இருக்குமாயின் அவற்றை திருத்தக் கூடியி ஆற்றல் படைத்ததுதான் கவிதைக்கண்ணாடியும்.
        உலகம் முழுக்க படைப்புணர்வு ஒன்றுதான் வயிற்றுப்பசி,உடற்பசி உலகமெங்கும் ஒன்றுதான்.கி மு 427-348 ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்கத் த த்துவ ஞானி பிளேட்டோ கவிதையைப்பற்றி இழித்துத் தூற்றினார்.ஆனால் அவரின் மாணவர் அரஸ்டாட்டில் (கி மு 384-322) காலத்தில் வாழ்ந்தவர் கவிதை பற்றி மிகவும் போற்றுகிறார். இப்படி விமர்சனத்தின் அடிப்படையில் வளர்ந்ததுதான் கவிதை உலகம்.
         கி மு சில நூறு நூற்றாண்டுகளின் தொடங்கிவிட்ட கவிதை வரலாறு சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ்க்கவிதை கனிந்த நிலையை எட்டிவிட்டது.  கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகம் அரசர்களைச் சுற்றியும்,அன்பளிப்புத் தந்தவரைச் சுற்றியும் அமைந்து கிடந்தது.ஆனால் நாட்டுப்புற இலக்கியம் தொடங்கி சித்தர்கள் முதல்,பாரதி முதல் ஆரம்பித்த கவிதை உலகம்,இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் பரவலாக்கப்பட்டு,ஜனநாயகப்படுத்தப் பட்டு உலகம் முழுக்க விரிந்து பரந்து பறவைகளாக உலாவருகிறது.
           ஒருவரின் அனுபவத்தை,கண்ட காட்சிகளின் தாக்கத்தை,சமூக நிகழ்வுகளை மக்களிடம், வாசகனிடம் எடுத்துச் செல்லும் வாகனமாகவே கலை இலக்கியத்தை பார்க்கவேண்டும்.கவிதையையும் அப்படியே கருதவேண்டும்.
          ஏடறியா எழுத்தறியா காலத்தில் மக்கள் தங்களது சுக துக்கங்களை பாடல் வாயிலாக வெளிப்படுத்தியபோது,கவித்துவமாக சிந்தித்து விடைதேடும்படியாக அமைந்தது சிறப்பு.கேட்போரை கிறங்கச் செய்யும்,.ஆவலைத் தூண்டிவிடும.
                          ' சின்னச் சின்ன ஆளுங்கிட்ட
                            சினேகிதங்கள் செய்யப் போயி
                            தங்கமான தாய்தந்தையர் கட்டா கட்டழகா-இப்போ
                           தலைகுனய லாச்சுதய்யா குங்கும பொட்டழகா'  என்ற கிராமியப் பாடலில் எதுகை உண்டு,இசையுண்டு,கூடவே மிக ஆழமான சாதீய சமூகத்தின் இறுக்கத்தை சிந்திக்க வழிகாட்டுவதாகவும் அமைகிறது. 'சின்ன சின்ன' என்பது சிறிய வயது இல்லை.சாதியில் தாழ்ந்தவன் என்பதே பொருள். இதே பாடலில்
                             'அச்சுக்கருப்பட்டியாம்
                              அரும்பரும்பா வெத்தலையாம்
                             சில்லுக் கருப்பட்டியாம் கட்டா கட்டழகா-நான்
                            திங்காம பேருமானேன் குங்கும பொட்டழகா.'  உன்னைக் காதலிப்பதால் ஊர் சனம் மோசமாக ஆபாசமாக பேசித் திரிகிறது என்பதை இவ்வளவு பூடகமாகச் சொல்கிறாள் காதலி.படைப்பிலக்கியத்துக்கும் கவிதைக்கும் வேர் இதுதான்.
             கவிதை உலகில் மிகப்பெரிய விவாதமான புதுக்கவிதை சிறந்ததா,மரபுக்கவிதை சிறந்ததா என்பது தொடர்ந்து வந்தாலும்,முன்னைவிட அது மிக சன்னமாகவே ஒலிக்கிறது.                
      அடுத்து சித்தர்கள் காலத்தில்  சமூகத்தில் நிலவிய கசடுகள் வைதீக மூடத்தனம் ஆகிவற்றை மிக கடுமையாக புரியும்படியாக வார்த்தைகளை   சந்தத்தோடுஅடுக்கிறார்கள்.இதுவும் காலத்தால் முந்தியவையே.   
                   'சாத்திரம் என்பது சண்டைச் சரக்கு-அட
                   சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
                  தோத்திரக் குப்பைகள் மூடர்கள் கூச்சல்-எண்ணத்
                  தொலையாத தர்க்கங்கள் பொய்ஞானக் காய்ச்சல்'என்று உலோகாயுதச் சித்தர் பாடுவதில் எதுகை,மோனை கூடவே எளிமையோடு மிகப் பெரிய சமூக மூடநம்பிக்கையை சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல வார்த்தைகள் தெறிக்கின்றன.இது மரபுக்கவிதைதான்.ஆனால் புரிகிறது.
           மரபோ புதுமையோ, எதுவானாலும் மக்களிடம் கொண்டு செல்லும்போது அது எளிமையோடு சிந்திக்கத் தூண்டுவதாக அமையவேண்டும். 1977ல் கவிஞர் தணிகைச் செல்வன் 'நாங்கள் அரிசனங்கலாம்'என்ற தலைப்பில் சிறு கவிதைப் பிரசுரம் வெளியிட்டார்.அதில் 22 பாராக்களில் ஒரு பாரா இப்படி அமைந்தது.
                  'பெரியசாதி கும்பிடுற சிதம்பரசாமி-அதை
                  பறையசாதி பார்த்ததாலே வந்தது தீமை
                  எரியவச்சான் ந ந்தனாரின் உயிரையே கொன்னு-பிறகு
                  எழுதிவச்சான் சோதியிலே கலந்திட்டாருன்னு' சந்தம் கொடுக்கும் வித த்தில் மரபுக்கவிதையை தீண்டாமை வரலாற்றை உள்ளடக்கி எழுதினார்.இலக்கண மரபுகளை நிகண்டுகளைப் பார்த்து புரிந்துகொள்ளும் வித த்தில்தான் அன்றைய மரபுக்கவிதைகள் அமைந்திருந்ததால் பண்டிதர்கள் மட்டுமே எழுதினர்,மன்னர்களின் சபைகளில் மட்டுமே மகுடம் சூடின என்பது குறையே.அது பாரதி காலத்தில் உடைக்கப் பட்டு ஏகாதிபத்தியத்தை,சமூக நிலையை மரபிலும்,வசன கவிதையிலும் வழங்கி புதுமை படைத்தான்.வானம்பாடி கவிஞர்கள் படையெடுப்பிற்குப் பின் இலக்கண வரையறைகளை மீறி ரசிக்கும் விதமாக நம்பிக்கைதரும் நெம்புகோல் பறவைகளாக நாடெங்கும் பயணிக்கின்றன. மரபின் அருமையை விடமுடியாது.எனவே மரபின் தோளில் ஏறிநின்று புதுமையை தரிசிக்கவேண்டும் என்பதும் நிஜமாகி வருகிறது.
         முற்போக்கு முகாமின் மூத்த கவிஞர் கந்தர்வன் கவிதைகளின் புதுக்கவிதையாகவே வடிக்கும் போது உள்ளம் துள்ளும் உத்வேகமூட்டும்.
              'மண் பொய் சொல்வதில்லை மிதிக்கிறோம்
                மரம் பொய் சொல்வதில்லை வெட்டுகிறோம்
              மந்திரி பொய் சொல்கிறான் மாலை சூட்டுகிறோம்' என்றும்
               'பொதுக்கிளாஸில் டீ கேட்க
               தனிக்கிளாஸில் டீ கொடுக்க
               ஒரு கப் டீ யின் விலை
               ஒன்பது உயிர்கள்' என்று இன்றும் கிராமங்களில் தீண்டாமை தாண்டவமாடுகிறது என்பதை சுட்டும் விதமாக படைக்கிறார்'.கவிதை சமூகத்திலிருந்து படைக்கப் படுகிறது. சமூகத்திற்காகப் படைக்கப் படைக்கப்படுகிறது.அதனால் சமூகத்திற்கு அது பயன் அளிக்க வேண்டும்' அறிஞர்கள விடுக்கும் அறைகூவல்.இந்தப் பின்னணியில் முப்பது கவிதைகளை உள்ளடக்கி இளம் கவிஞர் துடிப்போடு வெளியிட்டுள்ள 'விடைதேடிப் புறப்படுவோம்' கவிதைப் புத்தக விமர்சன களத்தில் இறங்குவோம். கவிஞனை இன்னும் வளர்த்தெடுப்பதற்காக.
'கவிதை'தலைப்பில் நீண்ட கவிதை வடித்திருக்கிறார்.அதில் நாம் ஏற்கனவே நம் மனதில் நிற்கிற "pen is mightier than sword".என்ற ஆங்கில பழமொழியை இவர் கவிதையில சுட்டுகறார் 'வாள் முனையில் கூர்மை
பேனா முனையில் சீர்மை' என்று' கவிதை தானே விழிகள்' என்றும்,
பேனா மை கரைய கரைய
துன்பங்களும் கரைவதாய்
கவியெழுதும்போது
பொய்களுக்கு வேலையில்லை'என்றும் கவிஞன் கவி எழுதும் தன்மையை எழுதும்போது
'கவிதைகள்
தருணமேதும் பார்பதில்லை
மழை பொழியும்போது
நில்லென்று சொல்ல முடியாது' என்று அருவிபோல சிந்தனை வந்துகொண்டே இருக்கும் என்கிறார்.கவிதை உலகம் இன்று ஜனநாயகப் பட்டு வியாபித்து இருப்பதை கவிஞர்
                         'கண்டம்வட்டு கண்டம்தாவும்
                         கவிதைப் பறவைகள்!
                         பறவை சுதந்திரமானது
                        கவிதை நிரந்தரமானது' என கவிதைபற்றி நம்பிக்கை அலையைப் பாய்ச்சுகிறார் கவிஞர்.
உண்மையே என்றும் அழகுதான் என்பதை கவிஞர் _
                     'உணர்ச்சிகளை மறந்துவிட்டு
                    வெற்றுவாழ்க்கை வாழும்
                   மனங்களின் தருணங்களை
                   கவிதைகள் நேசிப்பதில்லை!
                        துளி மையும் தன் குருதியெனக்
                        கருதும்போது நம்பிக்கைகள்
                        கவிதைகளில்  நட்டுவைக்கப் படுகிறது' என்று உண்மை அனுபவத்தை உயர்த்திப் பிடிப்பதையே கவிதைகள் அரவணைக்கும் என்ற கவிதையை பதித்துவிட்டு,கவிதையை பல கோணங்களில் சித்தரிக்கிறார். நம்பிக்கை நெம்புகோலை இளைஞனுக்கு கொடுக்கும் விதமாக
                     'அலைபாயும் மணத்தையும்
                      நிலைமாறும் குணத்தையும்
                    வலைவீசும் கணத்தையும்
                    இனம் கண்டிடு!
                       பாதைகள் பலவிதம்
                    போதைகள் பலரகம்
                   பாதங்களஐ சரியாகப்பதி
                   வாதங்களை நெறிப்படுத்து
                  மேதைகளின் வழி ஏறு!'போன்ற வரிகள் அமைகின்றன. இன்னும் நம்பிக்கை அறைகூவல் விடுக்க 'போற்றலும் தூற்றலும்
                                     மனிதர்களின் சடங்கு
                                    ஆற்றலும் மாற்றலும்
                                    வெற்றிகளின் கிடங்கு!' என்ற த த்துவ விசாரணை செயவதாகப் பேசுகிறது.
மொதுவாக ஓரு கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையை கவிஞர் குறிப்பிடும்போது
              ' சமுதாயத்தின் நாடிபிடித்து
               விடைகள் நவிலும் வைத்தியன்' என்பதோடு சமூக பாசமில்லாத,மாற்றத்தை விரும்பாத கவிஞன் மீது வினா தொடுக்கிறார்.
               ' சொல்லொன்று செயலொன்று நல்குபவனல்ல கவிஞன்
                தாமும் வாழ்ந்து
                யாவும் வளர்ப்பவனே-கவிஞன்
                கலை வளர்க்கிறோமென்று
                கரை கற்பிப்போரா கவிஞர்கள்?' என்ற கேள்வியோடு இன்றைய ஊடகங்கள் பக்கமும் கவிஞரின் பார்வை விழுகிறது
            . 'பாடலெனும் பெயரிலே
              ஊடகங்கள் துணையோடு
              கேடுவிளைவித்தால்
              நாடு செழிக்குமா?'என்று கேட்கிறார்.வாணிபக்கவிஞர்கள் மீது கேள்வி தொடுக்கிறார்.தாய்மொழியாம் தமழ்மீதும் கவிஞர் அமீனின் பார்வை விழுகிறது.தமிழகத்தில் தாய்மொழிக்கல்வி பறிபோவதை கவலையோடு
              தமிழ்வழிக்கற்றல் போதியஅறிவு
              பெறலரிதென்றும் வாழ்வின் ஊதியச் செறிவு
              குறைந்திடுமென்றெண்ணி தாய்மொழியை
              மறந்திட்டோமே! ' என்றும் பதிவு செய்கிறார். நாடெங்கும் பரவி வரும் கல்யாண வியாபாரம் குறித்தும் கவிதை கோபாவேசத்தை
                வரதட்சணை பிச்சைகேட்கும்
                கூட்டங்கள் அநேகம்!
                உயிரணுக்களுக்கு விலைபேசும்
                ஈன ஜென்மங்கள்!'
                சில லகரங்களின் தொடங்கி
                கோடிகளின் சிகரம் தொடும்
                சமூகத்தில் படிந்த கரைகள்'  என்று வீசுகிறது.. இந்த நாட்டில் காலங்காலமாக ஆணிவேர் சல்லிவேர்களோடு படர்ந்திருக்கிற சாதி வெறியை கவிஞர் உற்றுநோக்க தவறவில்லை. 'கண்டங்களும் கடல்களும்
                          கடந்தாயிற்று,அண்டங்களுக்கும்
                          மடல்கள் வரைந்தாயிற்று-பிண்டங்களின்
                          மூடல்களிலும் சாதி!' என்று சாதிவெறியை சல்லடையாய் துளைக்கிறார்.
அழகு தேவதை என்னும் காதல் கவிதையில் கவிஞர் வைரமுத்துவின் 'கவிதைக்கு பொய்யழகு' என்பதை நிஜமாக்குகிறார்.'அன்ன நடைபோட்டு
                                                 அழகு தேவதை வருகிறாள்
                                                ஆர்ப்பரித்தெழும் அலைகடலும்
                                                 அடங்கிப் போகும்!' என்றும்
                                   முகத்தின் வசீகரத்தில்
                                   முழுமதியும் நாணத்தில்
                                   மங்கிப்போகும்!' என்றும்
;'நீயும்'  எனும் தலைப்பில் 'மேக கூட்டத்தினிடையே
                                               வெட்கப்பட்டு பதுங்கும்
                                               வெண்மதி போன்றுதானடி-நீயும்
                                               வெட்கும் போது!' என்று பட்டுக்கோட்டையார் உட்பட ஏராளமான கவிஞர்களோடு நிலவுக்கு ஒப்பிடுவதில் இவரும் இணைகிறார்.
                                              கண்களால் எனைக்
                                              கைது செய்யும்போது
                                              மழைச் சாரல்கள்-நினைவில்' அழகு தரும் ரசனைகள் கொட்டுகின்றன.இப்படியெல்லாம் கவிஞர் மணவை அமீன் தனது முதல் கவிதைத் தொகுப்பில் மூலம் இலக்கிய பூங்காவில் தடம் பதிக்க முயற்சிக்கிறார். கவிதை உலகில் கவிதையின் உருவம் உள்ளடக்கம் விவகாரத்தின் விவாதம் இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. அந்த அடிப்படையில்,இளங்கவி அமீனின் உள்ளத்தில் சமூக நேசம் அதிகம் உள்ளதால் கவிதைகளின் உள்ளடக்கம்  த்ததுவத் தளத்திலும்,பொதுவான அறிவுத்தளத்திலும் மையங்கொள்கின்றன.எந்தவொரு இலக்கியப் படைப்பும் சுவைமிகுந்த சுண்டக்காய்ச்சிய திருவில்லிப்புத்தூர் பால்கோவா போல அமைவதே வாசகனை சுண்டியிழுக்கும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இன்னும் சுண்டக்காய்ச்சி சுவையான இனிப்பும் சேர்த்திருக்க வேண்டும். முதல் தொகுப்பானதால் ஏதோ சில சூழல்களால் சில இடங்களின் கவிதை தெளிவின்றி தடுமாறுகிறது. 'கடந்த காலம் நிழல்
                                                                                       நிகழ்காலம்  நிஜம்
                                                                                        எதிர்காலம் நிர்மூலம்
                                                                                        இங்கேதான் கேள்வி!' என்பதிலும்,
         நாத்திகமா? ஆத்திகமா?
         விஞ்ஞானமா? மெய்ஞானமா?
         விடையில்லாத வினாவுமுண்டு
         வினாவில்லா விடையுமுண்டு'  என்பதிலும்,
தமிழ்மொழி பற்றி கவிதையில் குறிப்பிடும் போது 'குமரித் தமிழ், மதுரைத தமிழ்
                                                                                        சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ்
                                                                                         எனப் பிரிந்து நிற்கிறதே!' என்பதிலும்
காலம் பற்றியும், நாத்திகம்,ஆத்திகம் பற்றியும், வட்டார வழக்குபற்றியும் சரியான புரிதல் இல்லாமல் கவிதைகள் தடுமாறுகின்றன. வார்த்தைகளை வலிந்து வரவழைப்பதால் அதன் பொருள் முன்வரிக்கும் அடுத்த வரிக்கும் மாறுபட்டதாக வந்துவிடுகிறது.இக்குறைபாடு எழுத எழுத நீங்கிவிடும்.'நானொன்றும் பைத்தியமல்ல' தலைப்பிட்ட கவிதையில் இக்குறைபாட்டைக் காணலாம். கவிதைகள் சிறு பருவத்திலிரிந்தே எழுதியவைகள் தொகுக்கப் பட்டிருப்பதால் கவிநயம் சற்று குறைவாக அமைந்துள்ளன. பின் நவீனத்துவ வட்டத்துக்குள் சிக்காமல் தனது சிந்தனையை தன் சமூக ஆர்வப்போக்கில் வடித்துள்ளார்.இந்த இளம் படைப்பாளி பல சமூக நோக்கு கவிஞர்களின் கவிதைகளையும் வாசிப்புக்குள்ளாக்கும்போது வடிவ நேர்த்தி வந்து வந்து விழும் அப்போது கவிஞரின் பேனா கவிதை உலகில்  நாட்டியமாடும் கவிதைத் தேரை முன்னோக்கி நகர்த்த இவரின் கரங்கள் சேரும் .இலக்கிய பூங்கா இவரைப் பாடி மகிழும் .இலக்கிய உலகத்துக்கே இவர் பெருமை சேர்ப்பார்.
                                                                  வாழத்துகளுடன்.முனைவர்.க.கணேசன். 
நூல் பதிப்பகத்தார்; "மணிமேகலைப் பிரசுரம்
                              தபால் பெட்டி எண் 1447,
                                 7.(ப.எண்;4) தணிகாசலம் சாலை,
                                     தியாகராய நகர்,சென்னை 600017
                                         விலை ரூ 45