மனிதநேயம் உயர்த்தும் சிறுகதை நூல்
‘கதவிலக்கம்’
.
வாழ்க்கை நிகழ்வுகளைப் படம் பிடித்து வாழவின்
உள் விவகாரங்களை அலசி ஆராய்ந்து கண்ணுக்கு புலனாகாத வாழ்வியல் நுட்பங்களை கண்டு
சொல்வது இலக்கியம். ஒரே ஒரு நிகழ்வை அல்லது நிகழவோடு தொடர்புடைய ஒரு சில
நிகழ்வுகளைப் படம் பிடிக்கிறது சிறுகதை இலக்கியம். நவீன உரைநடை இலக்கிய வடிவம்
சிறுகதை,வாழ்க்கை நிகழ்வுகளை கதை நிகழ்வுகளாக மறுபதிப்பு செய்யும் கலைவடிவம்
சிறுகதை.
உள்ளடக்கம் உருவத்தை தீர்மானிக்கிறது என்கிறார்
ரஷய எழுத்தாளர் மாகஸிம் கார்க்கி. தேர்ந்தெடுத்த உள்ளடக்க கருவுக்கு உயிர்கொடுக்க
எங்கே தொடங்குவது, எப்படி தொடர்வது விவரிப்பது, எங்கே முடிப்பது என்பவை மிக மிக
தேவையான அம்சங்க்ள். நாம் தேர்ந்தெடுத்து கருப்படைப்பு வாசகனுக்கு புரிந்து அவன்
அவள் மனதில் சிறு சலனத்தை அசைவை நெகிழ்வை உருவாக்குமானால் அப்படைப்பே வெற்றிப்
படைப்பாகும். மக்கள் இலக்கியம் படைக்கும் மகத்தானவர்களின் படைப்புகள்
இப்படித்தானிருக்கும்.
இந்த தன்மைகள்
யாவும் படைப்பாளி இளையவனின் சிறுகதை தொகுப்பான ‘கதவிலக்கம் சரியாகவே அமைந்திருக்கிறது..
அனைத்து கதைகளின் துவக்கமே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் சரியான புள்ளியில்
துவங்குவதோடு நல்ல வர்ண்ணையோடும் துவக்குகிறார்.செம்மொழி இளம் தமிழறிஞர்
விருதுபெற்ற உதவிப்பேராசிரியர் முனைவர் சு.மாதவன் இளையவனை உற்சாகப் படுத்தி
எழுதியிருக்கும் தனது வாழ்த்துரையில் ‘பல கதைகள் தொடங்கும்போதே முன்னுணர்த்துதல்
உத்தியோடு தொடங்குகின்றன.’என்று சில
கதைகளின் உதாரணங்களோடு பாராட்டுகிறார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செலவன்’ ‘பல கதைகள் இச்சமூகத்தின்
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பேச முயற்சிப்பது உண்மையில்
பாராட்டத்தக்கது.வெண்மணியை நினைவுபடுத்தும் ‘வீரமணி’ கதையும் குறிப்பிடத்தக்க முயற்சியே.’என்று தனது
அணிந்துரையில் பாராட்டுகிறார்.
எழுத்தாளர் தேர்ந்தெடுத்த உள்ளடக்க கரு கூட கற்பனையிலிருந்து
தேர்ந்தெடுத்த்துபோல் அல்லாமல் சமூக நடப்புகளை உற்றுநோக்குவதிலிருந்தும்,,தனது
வாழ்வனுபவத்திலிருந்து எடுத்த தன்மைதான் தெரிகிறது.
புத்தகத்தின் தலைப்பிட்ட ‘கதவிலக்கம்’ ’ இவரின் 17
கதைகளில் மூன்றாவது கதையாகும். இதுவே அவரின் மனசின் விசாலத்தையும்,,மனிதநேயத்தை
வெளிப்படுத்துகறது. மனித சமூகம் இன்னும் கிண்டலுக்கும் கேலிக்கும் உட்படுத்தி
இவர்களும் மனித மனுஷிகள்தான் என்பதை அங்கீகரிக்க மறுக்கப்பட்டும், தனது
பெற்றோரால்கூட வீட்டை விட்டு துரத்தப்பட்டு அலைகிற ஒரு கூட்டமான மூன்றாம் பாலின
சகோதர சகோதரிகளை ‘(திருநங்கையர்களை) ப்பற்றிய கதைதான் இது. பள்ளி கல்லூரிகளில்
ஒன்பது என்று ஏதாவதொரு சூழலில் உச்சரித்தால்கூட யாராலோ கட்டமைக்கப்பட்ட மாணவ
மாணவியர் சிந்தனை கேலிப்புன்னகையை உதிர்ப்பதை
பார்க்க முடிகிறது. இக்கதையில்
மீரா என்ற மகேந்திரனும் சுந்தர் என்ற சுந்தரியும் மும்பை சென்று அறுவைச் சிகிச்சை
செய்து கொண்டவர்கள். ரயில் பயணத்தின்போது நட்பாக உருவாகி இருவரும் வாழ்க்கையமைக்க
வழிதேடும்போது வீட்டைவிட்டே துரத்தப்படுகிறார்கள்.தங்களது தோழியிடம் அடைக்கலம்
புகவே வீட்டின் முகவரியை வைத்துக்கொண்டு தேடுகிறார்கள் மீராவிடம் முழு வீட்டு எண்களை
சொல்லவில்லை.ஆனால் விலாசத்தை வாங்கிப்பார்த்த மீரா இந்த எண் கொண்ட வீட்டை வந்த
வழியில் முன்பே பார்த்தேனே என் முன்னமே என்னிடம் முழுமையாக சொல்லவில்லை என கேட்கிறார்.’ 9 என சொல்வதற்கு கஷ்டமாக இருந்த்து சமூகம் நம்மை 9 என்றே
கிண்டல் செய்யும் அவலத்தை எண்ணியே’ என தனது வலியை
வெளிப்படுத்துகிறார் சுந்தர்.அதன்பிறகு முன்பு பார்த்த வீட்டைநோக்கி
பயணிக்கிறார்கள். என்பதாக படைத்திருக்கிறார்.இதை ஒரு சாதாரண வாசகன் படித்தால்
திருநங்கையர்களைப் பற்றி சமூகம் பார்க்கிற பாரவையோடு எண்ணிப் படித்தால் இவர்கள்
இணைந்து வாழத் துடிப்பதை ஏற்றுக்கொளவாரா என்ற கேள்வி இருந்தாலும் இதை இவ்விவாதமாக
ஒரு படைப்பின்மூலம் முன்வைப்பது அவசியம்தான்.
விதவைத் தாயையும் மகளையும் இணைத்துக்கொண்ட
ஒருவன் சிறுமி பூப்படைந்தவுடன் சற்று நாட்கள் கழித்து தாய் வெளியே சென்றபிறகு மகள்
உறவென்றும் பாராமல் மோசப்படுத்திய காமக் கொடூரனாக மாறுகிறான்.மனைவியாக மீண்டும்
வாழ்க்கைப்பட்டவளே அவனை கொலைசெய்து மகளின் பிணத்தின் மீது விழுந்து கதருகிறாள்.’வேலி’ என்னும் சிறுகதை சில தகப்பனே தனது சொந்த மகளையே
மோசப்படுத்திய சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது.
வாயக்கும் கைக்கும் எட்டாத அளவில் வருமானம்
ஈட்டி வாழ்ந்துவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளி, அவரின் மகனும் பட்டப்படிப்பு
படித்துக் கொண்டே தொழிலுக்கு உதவிபுரிகிறான். வட்டிக்கு வாங்குவது மகனின் கல்லூரி
படிப்புக்குமட்டுமல்ல குடும்பத்தின் வயிற்றை கழுவி வறுமையை போக்கவதற்காகவும்தான்
என்பதை அருமையான சித்தரிப்பில் ‘வரவும் செலவும்’ கதையில் பதிவு செய்கிறார்.
மாணவர்கள் சுய அறிவை வெளிப்படுத்த இடமில்லாத
கல்விச் சூழல்.கட்டுப்பெட்டித்தனமாக வைத்திருப்பதே இக்கால வகுப்பறையின்
நோக்கம்.பன்முக திறமைகளை கொலைசெய்யும் வகுப்பறையாகவே இருக்கின்றது என்பதை ‘கவிதையின்
காதலன்’ கதை நமக்கு விளக்குகிறது.
‘அரைப்படி நெல்மணி கூடக் கேட்டதில்
வெண்மணி வெந்த தடா –அதில்
உன் பாட்டனும் செத்தானடா
நீ நடக்கும் பாதையில் நெருஞ்சி முள் வரும்
உன்பாதம் நெருப்பாய் மாறனுண்டா’ என்ற புதுக்கோட்டை வெற்றிநிலவன் தமிழகத்தின் அறிவொளி இயக்க
காலத்தில் பாடிய பாடலொன்று நினைவுக்கு வருகிறத். 1968 டிசம்பர் 25ல் தஞ்சை
மாவட்டத்தில் கீழவெண்மணியில் விவசாயத் தொழிலாளிகள் கூலிப்போராட்டத்தில்
ஈடுபட்டதற்காக பண்ணையார்கள் பகலில் 44 தலித் விவசாய கூலித் தொழிலாளிகள் குழந்தைகள்
உட்பட உயிரோடு எரித்து கொலைசெய்யப்பட்டார்கள்.என்பது வரலாறு.இந்த வரலாற்றை
உள்வாங்கி செரித்து எதிர்கால சமூகநீதி பெற்ற சமத்துவ தீர்வுக்கு ‘வீரமணி’ என்ற கதையில் ஆதிக்க சமூகத்திலிருந்தே ஆணவத் தகப்பனுக்கு
எதிராகவே மகனே பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதாக கதை படைத்திருக்கிறார். இது
தலித்துகளின் விடுதலையை தலித்துகளாலேயே பெற முடியாது ஆதிக்க சமூகத்திலிருந்தே
மாற்றத்துக்கு தயாரானால் விடுதலை இன்னும் எளிமையாகும், பாதிப்பும் சேதாரமும்
இல்லாமலாகும் என்பதை நல்ல திசைவழியை காட்டுகிறார்.
பேருந்து பயணத்தில் உற்று நோக்கினால் பிறர் பேசுவதை
ஒட்டுக்கேட்டால் சமுத்திரம்போல கதைக் கருக்கள் கிடைக்கும். இப்படியெல்லாம்
நடந்துவிடக்கூடாது என்பதற்காக என்னவோ பேருந்துகளில் பாடல்களும் சினிமாக்களும்
போட்டு வருவதை சந்தேகிக்கவேண்டியுள்ளது பயணம் செய்யும் இளம்தம்பதியரில் தனது
மனைவியை மது போதையால் தாறு மாறாக ஏசுகிறான்.அடிக்கிறான் .பயணிகள்
கண்டிக்கிறார்கள். பேருந்தை காவல் நிலையம் கொண்டு செல்ல கண்டகடரிடம்
கேட்கிறார்கள். அடிவாங்கிய மனைவியோ பயணிகளைக கெஞ்சுகிறாள் போலீஸிடம்
ஒப்படைக்காதிங்க என்று. ‘மனைவி’ என்ற சிறுகதையில்
காலங்காலமாகவே பெண்களின் நிலை இதுதான் சமூகம் போதித்திருக்கிற ‘கல்லானாலும்
கணவன்’என்பதுதான் வேலை செய்கிறது என்பதை கதை தெரிவிக்கிறது.
என்னதான் சம்பந்தி போஜனம் நடத்தினாலும்
நடத்துபவர்கள் மத்தியில் காலங்காலமாக படிந்து கிடக்கும் தீண்டாமையின் ஒரு வடிவம்
துருத்திக்கொண்டு வருவதை எடுத்துக் காட்டுகிறது ‘அன்னதானம்’ சிறுகதை
பாசமாக ஆதரவாக வளர்த்த பாட்டி இறந்து பிணமாக
வைத்திருந்தபோது
இனம்புரியாத
சிறுவனுக்கு பாட்டியோட நினைவலைகள் மட்டும் வந்து வந்து போகின்றன நெஞ்சு கனத்து
கண்ணீரே வருகிறது. பிணத்தை எடுக்கும் வரை சுற்றிலும் என்ன நடக்கிறது என சிறுவன்
பார்ப்பதுபோல சித்தரித்து உயிரோடு இருக்கும்போது என்னவெல்லாம் செய்தாளோ அவற்றை
கண்முன்னே விரித்து மார்த்தாண்டம் மொழியில் பதிவு செய்வது வாசிப்பை பாட்டிமீதும்
அச்சிறுவன்மீது ஒரு பரிவை உருவாக்குவதாக அமைகிறது ‘மூச்சடங்கிய நேரத்தில்’எனும் சிறுகதை. எனக்கு பத்து வயதாயிருக்கும்போது என் அப்பா
இறந்தபின்பு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கூலிவேலை செய்தே எங்களை பாதுகாத்த
பாட்டி இறந்தபோது கண்ணீரைச் சிந்திய மனநிலையை இவர் படைத்திருக்கிறார்.
பேருந்து பயணத்தின்போது பயணிகள் உறங்குவது,
திருடர்களை பிகபாகெட் அடிப்பது இவற்றை நகைச்சுவையாக ஆர்ம்பித்து வழியில் சினிமா
சூட்டிங் பார்ப்பதுபோல கூட்டம் பயணம் தடைபடுகிறது. இறங்கிப்பார்க்கும்போது விபத்து
நடந்துள்ளது. ஒருவர் உயிருக்கு துடித்துக்கொண்டிருக்கிறார். கதைசொல்பவர் கூட்டத்தை
விலக்கிவிட்டு ஏதாவது உதவலாம் என்று போகும்போது போலீஸ் தடுத்தி யாரும ஒன்னும்
செய்யாதிங்க என தடுக்கிறார். போலீஸ் தப்பித்துப்போன டிரைவரை தேடுகிறது.
சிறிதுநேரம் கழித்து போலீஸ் வழியில் போகிற வருகிற வேன்,ஆட்டோ ஆகியவற்றை தடுத்தி
அடிபட்டவரை ஏத்திச் செல்ல முயற்சிக்கிறார். கதைசொல்பவர் இப்போதாவது ஏதாவது
போலீஸூக்கு உதவ ஒடிவந்து பார்க்கும்போது போலீஸ்கள் வந்த ஜீப் ஓரமாக
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ‘பொறுப்பு’ எனும் கதை இப்படி முடிகிறது.
அதிகாரத்தில்
இருப்போரின் உயிர்காக்கும் பொறுப்பு எந்த லடசணத்தில் இருக்கிறது என்பதை இக்கதை
வாசிப்பாளனுக்கு சிந்திக்க வைக்கிறது.
மூன்றாவதாக பிறந்த பள்ளிக்கு செல்லவேண்டிய
சிறுவன் குடும்ப வறுமை,தந்தை நோயில் படும் அவஸ்தைகளைப் பார்த்து
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு வீட்டுவேலைக்கு செல்லும் அவலம். தாயின் குழந்தைப்
பாசம் பார்க்கத் துடிக்கிறது. கனவில் மகன் மின்சாரத்தில் கையைக் கொடுத்து
இறந்துவிட்டதுபோல காண்கிறாள்.அதிகாலையில் மகனை பார்க்க அவனை வேலைக்கு சேர்த்தவரோடு
கேரளா சென்று மகனை பார்க்கிறாள். மகனின் வாழ்நிலை கொடூரமான நிலைதான். சரியாக
சாப்பாடு போடுவதில்லை வேலையோ அதிகம். என அழுகிறான். ஊருக்கே திரும்ப அழைத்துச்
செல்ல கேட்கிறான் ஆனால் தாயோ தனது வறுமையால் அழைக்க மறுக்கிறாள்.மீண்டும் மகன்
சொல்கிறான் ‘நீ அழைத்துச் செல்லாவிட்டால் நான் கரண்டில் கை வைத்து இறந்து போவேன்’என்று.தாய் உடனே திரும்ப அழைத்துச்செல்ல சம்மதித்து
அழைத்துச் செல்கிறாள் குழந்தைத்தொழிலாளரின் அவலத்தை ‘இளங்கன்று பயமறியா’ என்ற சிறுகதைமூலம் விவரிக்கிறார்.
கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி தொலைத்து
தனிக்குடித்தன சுயநலம் தேசமெங்கும பரவிவிட்ட தன்மையை சித்தரித்து வெளிநாட்டில்
வேலைபார்த்து சந்தோசமாக வீட்டுக்கு வந்தவனிடம் மனைவி தனிக்குடித்தனம் செல்ல
கட்டாயப் படுத்திகிறாள். தனிக்குடித்தனம் அம்ர்ந்து பெற்றோரை பிரிந்தாலும்
மனைவிக்குத் தெரியாமல் அம்மாவின் ஒருகைப்பிடி சோற்றை வாங்கிச்சாப்பிடும் பாச
நிலைமையை அருமையாக கதைப் பதிவு செய்கிறார் ‘தனிக்குடித்தனம்’ சிறுகதையில்.
பேருந்து மற்றும் ரயில் பயணங்களில்
கைக்குழந்தையோடு இளந்தம்பதியர பயணிக்கும்போது, குழந்தை பசியின் அழுகை நீண்டநேரம்
பேருந்து முழுக்க ஒலிக்கும் காரணத்தைப் பார்க்கும்போது பெண்கள் குழந்தையின்
பசியடக்க தடையாக அவர்கள் போட்டிருக்கும் உடைமட்டுமல்ல சக பயணிகளின் கண்களுக்கு
பயப்பட்டும் வெட்கப்பட்டும் சங்கடப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.. படைப்பாளி
இளையவன் ‘ரயில்பயணம்’ எனும் கதையில்
கூட்ட நெரிசல்மிக்க ஒரு பதிவுசெய்யாத ரயில் பெட்டியில் பயணம் செய்யும் இரு
இளந்தம்பதியரின் குழந்தை பசிக்காக துடிக்கிறது. நீண்டநேரம் விளையாட்டுக
காட்டிப்பாத்தாலும் அடங்குவதாக இல்லை. பிற பயணிகள் பரிதாபம் கொண்டு வழியைச
சொல்கிறார்கள். கழிவறைப் பக்கம் அமர்ந்திருந்த பயணிகளை இடம் கொடுக்கச்சொல்லி
பசியடக்க தான் அணிந்திருந்த சுடிதாரின் தடையை போக்கி பசி அடக்கிறாள் என்பதாக
முடிக்கிறார்.
இறுதியாக அமைத்திருக்கிற கதை ‘நானும் ஒரு
சாட்சி’’தமிழகத்தில் வடமாவட்டங்களில் சாதி
மறுப்பு திருமணங்களால் குறிப்பாக தலித் இளைஞர்கள் தலித் அல்லாத பெண்களை விரும்பி
திருமணம் முடிக்கும்போது ஏற்படுகிற கலவரம் தீ வைப்புகள் இன்னும் தொடரவது ஒரு
துரதிஷடமானது.இந்த நிகழவுகளின் தாக்கமே ‘நானும் ஒரு சாட்சி’ கதை பிறந்திருக்கிறது.இக்கதையில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத நீதி மன்ற
காட்சியை காட்சிப் படுத்துவதும் நான்காவது வகுப்பு படிக்கும் ராமசாமி ஒடுவது தாகம்
எடுத்து தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடிப்பது,அதுபோல் நீதிமன்றத்தில் சிறுவன்
வெளிப்படுத்தும் சாட்சி திகிலூட்டுவதாக அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் உள்ளன. ஆனால்
இவரின் மனிதநேயப் பார்வை சரியாகவே உற்றுநோக்கி இருக்கிறது.
எழுத்தாளர் இளையவன் இன்னும் கொஞ்சம்
காட்சிபடுத்துதலில கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக அமையும். எழுத்துலக
ஜாம்பவான்களின் கதைகளை முப்பது வயதான இளையவன் உள்வாங்குவாரேயானால்
சாதனைபுரிவார்.அவரின் சிந்தனைச் சுரங்கத்தில் நிறைய சமூக நிகழ்வுகள் இருக்கின்றன. அவரின்
பேனா இன்னும் இன்னும் தோண்டியெடுத்து படைத்தால் இலக்கிய உலகம் இவரை அடையாளம் கண்டு உயர்த்தும் என்பதில்
ஐயமில்லை.
இக்கதைத் தொகுதியை
வாங்கிப் படிப்போம் வாழ்த்துவோம். நன்றி.
(திருவனந்தபுரம் அகில இந்திய வானொலி நிலையத்தில் 10-03-2014 அன்று வாசித்து 15-03-2014 காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகியது.)
படைப்பாளர்
முகவரி; இளையவன்(அலெக்ஸாண்டர்) 9-88பி 144 அலெக்ஸ்பவன்,மணலிவிளை
வீடு,இட்டகவேலி,செருப்பாலூர் அஞ குமரி மாவட்டம்
வெளியிட்டோர்;
திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம், டிசி 38-2799,பழையசாலை,திருவனந்தபுரம்
6950036 போன்.0471 2470086 நூல் விலை’ரூ.100