Thursday, September 15, 2011

தீராநதி செப்டம்பர் 2011 இதழுக்கு பதில் லட்சுமி மணிவண்ணன் புரிவாரா?


வைகுண்டசாமியும் பத்மனாபசாமி புதையல் ரகசியமும் என்ற தலைப்பில் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் எழுதிவரும் தொடரை தீராநதி செப்.-2011 இதழில் படிக்க நேர்ந்தது. தொடரின் துவக்கத்திலே கட்டுரைகளின் அறியாமையும் அவர் சார்ந்துள்ள அரசியலும் துல்லியமாகவே புலப்படுகிறது. உத்தராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா தற்போது திருவாங்கூர் அரசராக இருப்பவர் என்ற துவக்க வரிகளே, கட்டுரையாளரின் கற்பனை வளத்தை அல்லது அறிவின்மையை தெளிவாக நமக்கு புலப்படுத்தி வருகிறது. இந்திய வரைபடத்தில் 1950 ஆம் ஆண்டுக்குப்பிறகு திருவாங்கூர் என்ற சமஸ்தானம் இல்லை என்ற அடிப்படை அறிவோ அல்லது இங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற புரிதலோ இல்லாமல் தனது தொடர்மூலம்,தன்னை ஒரு
வரலாற்று விற்பன்னராக நிறுவிக்கொள்ளும் முனைப்பையே காணமுடிகிறது.
         வைகுண்ட சாமியின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
என்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரி மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியதை சற்றே கிண்டலடித்துள்ளார் கட்டுரையாளர்.பாடத்திட்டத்தில் வைகுண்டசாமியின் வரலாறு இடம் பெறுவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தனது முடிவையும் பதிவு செய்து உள்ளார். அத்வானி ஜெயலலிதா போன்றோரையும் தனது வாதத்திற்கு வலுசேர்க்க இழுத்து உள்ளார். தேசத்தந்தை அவர்களால், நீங்கள்தான் இந்திய நாட்டின் சொத்து என்று வர்ணிக்கப்பட்ட ஜீவா அவர்களை, முற்போக்கு அடையாளத்தை சூடியவர் என்ற வம்பிழுக்கும் கட்டுரையாளர்,நேசமணி அவர்களை ராஜா என அழுத்தி வலியுறுத்திச் சொல்கிறார். இதன்மூலம் இவரது அரசியல், மொட்டையான இடதுசாரி எதிர்ப்பு அரசியல் என்பதை நமக்கு தெளிவாக்கியுள்ளார். நேசமணி அவர்களை புனிதராக்கும்  காலாவதியாகிப்போன
உத்தியை கையாண்டுள்ளார் கட்டுரையாளர்.
            மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்பும் பழைய அந்தப்புர நினைப்பிலேயே திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாள திகழ்ந்த குமரி மாவட்டத்தையும்
சேர்த்து ஆண்டுவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கெதிராக குமரிமண்ணின்
மைந்தர்கள் அணிதிரண்ட காலம் அது. மக கொடுமையான அடக்குமுரை ஆட்சியை நடத்திவந்த பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சிக்கு எதிராக மூண்ட கலகம் காலப்போக்கில் பட்டம் தாணுபிள்ளையின் சாதிக்கெதிராகவும் மலயாள மொழி பேசுபவர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடும் அபாயத்தை புரிந்துகொண்ட
கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் ஒற்றுமையை காக்க, ஜீவா  அவர்களது தலைமையில்  ஜீ எஸ் மணி, டி.மணி உட்பட தோழர்களை களமிறக்கியது. மக்களை ஒன்றிணைத்து மொழிவழி மாகாணம் என்ற கோஷத்தை முன்வைத்து அதன் காரணமாக சொல்லமுடியாத கொடுமையினை சந்தித்த வீரவரலாறு கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
              பட்டம் தாணுபிள்ளையின் பேயாட்சிக்கு டெல்லியிலிருந்து ஆதரித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருவாங்கூர் காங்கிரஸ் என்ற அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டு பின்பு திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர்மாற்றம்
செய்யப்பட்டு நேசமணி உட்பட களத்தில் நின்றனர். தாய்த்தமிழகத்தோடு இணையும் போராட்டத்தின் உச்சகட்டமாக 1954 ஆகஸ்ட் 11ஆம் தேதி
நடைபெற்ற நரவேட்டையும் ,பட்டம் தாணுபிள்ளைநின் காவல்துறையின் துப்பாக்கிச்  சூடும் உயிர்பலிகளும் குமரி மாவட்டத்தின் கறைபடிந்த வரலாறு. ஒரு காலம் வரையிலும் இந்த இயக்கங்களோடு இணைந்து காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் செயல்பட்ட நேசமணி அவர்கள், மக்கள் எதிர்ப்பு காரணமாக பட்டம் தாணுபிள்ளை பதவியிறக்கம் செய்ய மத்திய காங்கிரஸ் ஆட்சி முடிவு செய்து, பனம்பள்ளி கோவிந்த மேனன் எனபவரை 1954ஆம் ஆண்டு முதல்வர் ஆக்கியது. அதுவரை களத்தில் நின்றிருந்த திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அதிகார சபலம் ஏற்பட்டது. பட்டம் தாணுபிள்ளையின் நரவேட்டைக்கு துணை போன காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க நேசமணி அவர்கள் முடிவு எடுத்து
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 சட்டமன்ற உறுப்பினர்களும் பனம்பள்ளி கோவிந்த மேனனின் ஆட்சிக்கு ஆதரவளித்தனர். நேசமணி அவர்கள் மேற்கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் சிதம்பரநாதன் அவர்களுக்கு மந்திரி பதவியை பெற்றுத் தந்தது. ஆனால் களத்தில் நின்ற மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப்போனார் நேசமணி அவர்கள். நேசமணி அவர்களை ராசா என்றுதான் அழைக்க வேண்டும் என்ற கட்டுரையாளரின் நோக்கம் அவரது சொந்த ஆசையாகவே இருக்கட்டும் விக்ரமாதித்தன் அவர்களையும் கிருஷ்ணகோபால் அவர்களையும் பெயர் சொல்லியே குறிப்பிட்ட கட்டுரையாளர், நீங்களெல்லாம் கூலிவேலை செய்தால்தானே நாங்களெல்லாம் படைப்பாளிகளாக இருக்கமுடியும் என்று கூறிய நாடறிந்த எழுத்தாளர் பெயரை மிகவும் வசதியாக மறைத்துவிட்டார். சில பத்திரிக்கைகளில் தங்களது சொந்த கருத்தை பதிவு செய்ய, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் கூறினார், என்ற சில செய்தியாளர்களின் அரதப் பழசான உத்தியை கையாண்டு உள்ளார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியை நேசமணி அவர்கள் உருவாக்கினார் என்பதே ஒரு வரலாற்று புரட்டு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment