நாங்கள் அரி
ஜனங்களாம் கவிஞர் தணிகைச் செல்வன் 1977
கண்ணகியார்
வீசிவிட்ட மதுரைத் தீயிலே –அன்று
கருகிப்போன
மக்கள் எங்க சாதிமக்களே!
கண்ணகி போல்
ஒசந்த சாதி ஜனங்களைமட்டும்- அவ
காப்பாத்துனா
பிறகுயாரு நாங்கதான் மிச்சம்!
பெரிய சாதி
கும்பிடுற சிதம்பர சாமி-அதை
பறையசாதி பாரத்ததாலே
வந்தது தீமை!
எரியவச்சான்
நந்தனாரை உசிரையே கொன்னு- பிறகு
எழுதிவச்சான்
ஜோதியிலே கலந்துட்டாருன்னு!
முந்திக்காலம்போல
இல்லே இந்தக் காலங்கள்- ரொம்ப
முன்னேறிட்டோம்
என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள்!
இந்தியாவின்
எந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும- அய்யோ
எங்கஜனம் அனுபவிக்கும்
கொடுமை ஏராளம்.!
இந்திராவின்
மாநிலத்து ஜாதி இந்துக்கள்- கண்ணில்
எப்போதுமே நாங்களெல்லாம்
இழிந்த ஜந்துக்கள்!
கொஞ்சங்கூட
இரக்கமில்லா ராட்சதனுங்க- எங்க
குழந்தைகளை
மரத்தில் கட்டி உரிக்கிறானுங்க!
காசிநகர்ப்
பண்டாக்கள் புண்ணியதானம்- செய்ய
காசிசேர்க்க
நாங்கதாங்க பிணம் எரிக்கணும்!
கூசுகிற கழிவுகளின்
சாக்கடைகளில் – மலக்
கூடைகளை சுமந்துவரோம்
எங்க தோள்களில்!
மத்தியப் பிரதேசத்திலே
சத்தார்பூரிலே- எங்க
மங்கையரைக்
கற்பழித்தார் லாக்கப்புக்குள்ளே!
சித்ரவதை யானதங்கே
எத்தனை பொண்ணு-அது
செய்தியாக வருவதுண்டா
நூத்துக்கு ஒண்ணு!
ஜெய்ப்பூர்நகர்
சேட்டுகளின் ஆப்பில்ரசத்தில்- எங்க
சிறுமிகளின்
மார்பகங்கள் வடித்த ரத்தத்தில்!
மெயக்கொழுத்துத்
திரிந்தலையும் மாடி ஜனங்களே- எங்க
வாழ்க்கையெல்லாம்
ராஜஸ்தான் பாலைவனங்களே!
பீகாரிலே மோங்கீர்ஜில்லா
காலார் கிராமத்தில்- எங்க
பெண்களினத்
துயிலுரிந்து மர்ம ஸ்தானத்தில்!
தேகவெறி மீறிந்தின்ற
போலீஸ் மிருகங்கள் –ஈட்டி
செருகிணர்கள்
ஓ அவரகள் ஆளும் வர்க்கங்கள்!
மகாலஷ்மி கோயில்கொண்ட
மராட்டியத்தில்- அங்கு
‘மலபார்ஹில்’
மாளிகையின் அந்தப்புரத்தில்!
மைசூரின் அரிஜனப்பெண்
துரோபதையாவாள்-அவள்
மஞ்சத்தின்
மேல்சுவரில் காந்தி புன்னகை செய்வார்!
கேரளத்தில்
குட்டநாட்டின் சேரிமக்களை- உணவு
கேட்டதாலே கசக்கி
விட்டான் எங்க பூக்களை!
ஊரளக்க வந்தோமுன்னு
வாயளந்தாங்க- ஆனா
உயிரளந்து போடத்தானே
ஆளவந்தாங்க!
மேற்குவங்கம்
நாகலாந்து அசாம் நெடுகிலும்- காடு
மேடுகளில் உயிர்பிழைக்கும
ஆதிக்குடிகளும்!
தேக்குகளில்,
தேயிலையின் தோட்டப்புதர்களில்-நாங்க
தேம்பத் தேம்பி
அழுகிறோமே மலைக்குகைகளில்!
ஆந்திரத்து
வயல்களில்தான் என்ன வாழுது- இதோ
‘அரிபகவான்’
ஜனங்களின் மேல் குண்டுபாயுது!
சூழ்ந்திருக்கும்
சேரிகளே தீயில் பொசுங்கும்-ஆளும்
சீமான்களின்
கோப்பையிலே எம்வேர்வையே பொங்கும்!
வெண்மணியில்
அரியின்மக்கள் கருகியவாடை-வீசி
விலகுமுன்னே
எழுந்து வந்தாள் நீதிதேவதை!
வெண்மணியின்
தீயில் எங்க சாதி செத்தது- அதற்கு
விடிவு காண
முடிந்திடாமல் நீதி செத்தது,!
பெரியபண்ணை
சுட்டதாலே தாழங்குடியிலே- செத்த
பக்கிரிக்கு
நீதிஎங்கே இந்த அரசிலே!
திருக்குவளைத்
தஞ்சை மண்ணில் குண்டையூரிலே-ஏழை
சிரிப்பதெங்கே
குடிசைகளைப் பிய்த்தெறிகையிலே!
காருகுடி அரிசனங்கள்
கேட்டதென்னங்க-எங்க
கட்டைகளை புதைக்க
ஒரு துண்டுமண்ணுங்க!
ஊருகூடி ஒதைக்கிறானே
காருக்கடியிலே-எங்க
உயிர்களெல்லாம்
போலீசாரின் காலுக்கடியிலே!
ஆம்பூரின் அரிஜனங்கள்
மனிதரில்லையா-அவங்க
அகில இந்தியாவில்
வாழும் மன்னரில்லையா!
இல்லையென்றால்
எதற்கு இந்த அரசியல் சட்டம்-அதை
எரித்துவிட்டால்
எங்களுக்கு என்னஙள நஷ்டம்!
நொந்து நொந்து
வெந்து வெந்து இன்றுவரையில்-நாங்க
நூறு நூறு ஆண்டுகளாய்
இந்த பூமியில் !
சொந்தமென்று
என்னகண்டோம் பசியைத் தவிர-எங்க
சொத்து என்று
என்ன கண்டோம் உசிரைத் தவிர!
பறையடிச்சதாலே
நாங்க பறையர் இன்னீங்க-கழனிப்
பயிரிட்டவன
வெள்ளாளனு பேருவச்சீங்க!
பறையரெல்லாம்
வெள்ளாமைதான் செய்யறோமுங்க-எங்க
பட்டமிப்போ
வேளாளன்னு சொன்னா என்னங்க!
காந்தி எம்மை
ஆண்டவனின் குழந்தைகள் என்றார்-அந்த
கடவுள் யார்
என்பதைத்தான் காட்டமறந்தார்!
ஆண்டவர்கள்
முன்னாளில் முடிமன்னர்கள்- பின்னர்
அந்நியர்கள்
இந்நாளில யார் மன்னர்கள்?!
ஏகபோக பிர்லாக்கள்
சிவசைலங்கள்-எங்க
‘இரிஞ்சலூரு’
வடபாதி நங்கவரங்கள்!
லோகமெல்லாம
வட்டிக்கடை ராணுவப்படை-வச்சி
ரௌடித்தனம்
பண்ணிவரும் ‘டாலர் கழிசடை’!
இத்தியாதி பயல்களெல்லாம்
ஆண்டவனாக- எங்க
ஏழைஜாதி இவங்களோட
அடிமைகளாகச்!
சத்தமின்றி
நித்தம் நித்தம் ரத்தம் பிழியறோம்-எங்க
தாய்மாரின்
இளமைகளை தத்தம் செய்கிறோம்.!
பொறுத்ததெல்லாம்
பொறுத்தோம் ஒரு புண்ணியமில்லை-காந்தி
போதனைகளாலே
எங்க புண்ணு ஆறலை !
சரித்திரத்தில்
இதுவரையில் ரத்தம் சிந்தினோம்-இனி
சிந்த ஏதும்
ரத்தமில்லை நெருப்பைச் சிந்துவோம்!
வெள்ளைக்காரன்
ஆண்டபோதும் அரிசனங்கள் நாம்-இப்போ
‘டில்லிக்காரி’
வந்தபோதும் அரிசனங்கள் நாம்!
கொள்ளைக்காரன்
இருக்கும்வரை அரிசனங்கள் நாம்-இவுங்க
கூண்டோடு ஒழிஞ்சாத்தான்
சரிஜனங்கள் நாம்!
அரிஜனமும் பிறஜனமும்
ஒருஜனமானால் –
அன்றுதாங்க
சுதந்திரமும் ஒரிஜனலாகும்!
ஒரிஜனல் சுதந்திரத்தை
பார்த்திட வேண்டுமென்றால்
ஒன்றுபட்டு
போர்க்கொடியை தூக்கிடவேண்டும்!
செங்கொடியைத்
தவர போர்க்கொடியில்லை-அது
செல்லும் வழிதவிர
மார்க்கமுமில்லை!
சங்கங்கள் தவிர
வேறு ஸ்தாபனமில்லை-மார்க்ஸியக்
கொள்கையைத்
தவிர வேறு கொள்கையேயில்லை.!
No comments:
Post a Comment