தமிழ்ஒளியின் வீராயி காவியமும்
இன்னும் தொடரும் ஆணவக் கொலைகளும்
பேரா.
முனைவர். க. கணேசன்
கொட்டாரம்
முன்னுரை
கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 ந்தேதி குறிஞ்சிப்பாடியை
அடுத்த ஆடூர் என்ற ஊரில் திரு பொ. சின்னையா வுக்கும் திருமதி செங்கேணியம்மாள் ஆகியோருக்குப்
புதல்வனாகப் பிறந்தவர். இயற்பெயர் விஜயரங்கன் வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் பட்டுராசன்.
கவஞரின தொடக்கக் கல்வி புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியிலும், உயர்கல்வி
கல்வே கலாசாலையிலும் படித்தார். பாவேந்தர் பாரதிதாசன் புதல்வன் மன்னர்மன்னன் மூலமாக
பாவேந்தரின் அரவணைப்பைப் பெற்றார். சிறிது காலம் அவருக்கு உதவியாளராகவும் இருந்தார்.
அந்நாளில் தினம் ஒரு கவிதை எழுதி பாவேந்தர் முன் வைத்துப் பாராட்டுதலையும் பெற்றார்.
பின்னர் பாவேந்தரின் சிபாரிசில் கரந்தை தமிழ்க் கல்லூரியிலும் தமிழ் பயின்றார். தன்
எதிர்காலம் குறித்த சிந்தனையோடு 1945ல் சென்னைக்குப் பயணித்தார். அங்கிருந்த நண்பர்கள்
கூட்டம் அவரை உற்சாகப்படுத்தி இலக்கிய ஏடுகள் பலவற்றிலும் கவிதைகள இடம்பெற உதவினர்.
1947 ல் மூன்று காவியங்களான வீராயி, நிலைபெற்ற சிலை,மேதின ரோஜா ஆகியவற்றைப் படைத்தார். அதே ஆண்டில் கவிஞர் மிகுந்த ஆர்வத்துடன்
பொதுவுடமைக் கட்சியில் காலூன்றினார். கட்சி எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டத்தில்
1948-49 ஆண்டில் “முன்னணி” ஏட்டின் துணையாசிரியராகப் பொறுப்பேற்று பல படைப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதை இலக்கியங்களைத் தமிழ் நல்லுலகிற்கு வழங்கினார். ஆரம்பக்
கட்டத்தில் (1944-1947)’ திராவிட நாடு’, ’குடியரசு’ பிரசண்ட விகடன் ‘கவிமலர்’ ‘புதுவாழ்வு’
‘தமிழ்முரசு’ அமுதசுரபி, நவசக்தி, ஜனசக்தி, கலைமகள், முன்னணி, சோசலிஸ்ட், சோவியத் நாடு
உள்ளிட்ட 35 இதழ்களில் கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகள் பவணி வந்தன.
கவிஞர் தமிழ்ஒளியின் காவியங்களும், கவிதைகளும் மிக எளிமையான சந்த லயத்தோடு கவிதைக் கம்பீரமாகவும அருவி போல வார்த்தைகள் கொட்டுகின்றன . மே தினத்தை நீண்ட கவிதையின் மூலம் வரவேற்ற முதல் கவிஞன் ,பாரதிதாசனின் மாணவன், எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளம் வயது சிநேகிதன் மட்டுமல்ல அவரை இலக்கிய உலகத்தில் நுழையத் தூண்டியவர். பட்டுக்கோட்டையார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்தான். சிலப்பதிகாரத்தை அதன் உள்ளடக்கத்தை எத்தனையோ பேர் மிகப்பெரிய ஆய்வுகள் செய்து தமிழ் இலக்கிய உலகில் உலவ விட்டாலும், தமிழ்ஒளி ஒருவர் மட்டும்தான் உள்ளடக்கத்தை எளிமையான காவிய வடிவத்தில் வழங்கியிருப்பதோடு, சிலப்பதிகாரம் கிரேக்க நாடகங்களுக்கே முன்னோடியான வடிவம் கொண்ட இசை நாட்டிய
நாடகம் என்பதை எளிய புத்தகத்தில் அரிய ஆய்வை அர்ப்பணித்திருக்கிறார்.
சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? என்ற
ஆய்வு நூல்தான் அது.
கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின
ரோஜா, விதியோ? வீணையோ? கண்ணப்பன் கிளிகள், கோசல
குமரி, புத்தர் பிறந்தார், மாதவி காவியம் ஆகிய
9 காவியங்கள் படைத்திருக்கிறார். தமிழ்ஒளி கட்டுரைகள்.தமிழ்ஒளி கவிதைகள், உயிரோவியங்கள், குருவிப்பட்டி ஆகிய
சிறுகதைத் தொகுப்புகள்,தமிழர் சமுதாயம், பாலுவுக்கு எழுதிய கடிதம் ஆகிய அரிய
படைப்புகளைப் படைத்தவர் கவிஞர் தமிழ்ஒளி. எளிய மக்களோடு வாழ்ந்து, அவர்களின் துன்பங்களைக் கண்டு,படைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கான எதிர்கால பொன்னுலகத்தைப் படைத்திடும் நோக்கில் இலக்கியப் பயணம் மேற்கொண்டவர். உயரியத் தமிழ்ப் பற்று, மார்க்ஸியம், தலித்தியம் ஆகிய தடங்களில் தனது படைப்புகளை வழங்கிய தமிழ் இலக்கியக் கொடையாளர்.
”தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில்
நானுனக்கு புதிய சொத்து
அமிழ்தான
கவிதை பல அளிக்க வந்தேன்
அவ்வழியே உனைத்திருத்த ஓடி வந்தேன்” என அவர் பாடும் கவிதைப்படி
உலக மக்களின் சமத்துவ வாழ்க்கையை படைக்க வந்த அரிய சொத்துதான் கவிஞர் தமிழ்ஒளி. டாக்டர் மு.வரதராசனார். பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார்
இன்னும் பல அறிஞர்கள் இவரின் படைப்புகளைப் படித்து பிரமிப்போடு பாராட்டு மகிழ்ந்தனர்.
அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் கிளையாக 1949ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கிய பெருமைக்குரியவர். மாகவிஞன் பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்
வழித்தடத்தில் படைப்புகள் படைத்தாரென்றாலும், அவர்கள் படைத்த காவியங்களின் வீரியத்தை
விட தமிழ்மொழி குருக்களை மிஞ்சிய சீடனாக காவியங்கள்
படைத்ததில் மிஞ்சி விட்டார் என்றே சொல்லலாம். அவரின் காவியங்களில் வீராயி காவியத்தை
மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ”தமிழ்ஒளியின் வீராயி காவியமும் இன்னும் தொடரும்
ஆணவக் கொலைகளும்” என்ற ஆய்வை முன்வைக்கிறேன்.
வீராயி காவியக் கதை இதுதான்
’எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! உங்களுக்கு நான் ‘வீராயி’ மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்; மக்களுக்காக, மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். முடிந்த வரையில்,’ வீராயி’ யை ‘ஏழையப்பரின் இதய எதிரொலியாகச் செய்ய முயன்றிருக்கிறேன். முழுதும் வெற்றியடைந்தேனா என்பதை நீங்களே சொல்லுங்கள்’ என்று தனது முன்னுரையில் 15 நவம்பர் 1947 அன்று வீராயி காவியத்தின் படைப்பாளி கவிஞர்தமிழ்ஒளி முன்னுரையில் பதிவு செய்ததே காவியத்தை துவக்குகிறார்.
உழைத்திளைத்து குடிசைகளில் சேரிமக்கள் பள்ளமான பகுதியில் வாழும் ஊர்தான் மருதூர் கிராமம். ஐப்பசி மாதம் பேரிரைச்சலோடு, இடி மின்னலோடு இரவெல்லாம் பேய்மழை பிடித்தாட்டுகிறது அவ்வூரில். ஊர்மக்கள் குகையில் வாழ்வதுபோல் கரு இருட்டு சூழ்ந்திடவே, குழந்தைகளும், பெரியவர்களும்,, ஆண்களோடு பெண்களும் கண்ணீரும் கதறலோடு கலங்கிப் போயிருந்தனர். மாடாக உழைத்தவர்கள் மரணத்தின் வாசலிலே துடி துடித்துக் கொண்டிருந்தனர்.
மேட்டுப் பகுதியில் உழைப்போரின் உதிரத்தை உறிஞ்சி உண்டு கொழுத்த பண்ணையார் கூட்டம் கூத்தும் குடியுடன் கும்மாளங்கொட்டி ஆனந்தத்தில் மிதந்தார்கள்., சேரியின் வெள்ள அபாயத்தை அவர்களிடம் பண்ணையாட்கள் மூலம் அவர்களிடம் சொல்லியும்,,எவ்வித உணர்வுமின்றி உல்லாசத்தில் திளைத்தனர், பள்ளமான பகுதியில் அமைந்துள்ள சேரிமக்கள் ஊரே பெருவெள்ளத்தில் மக்களெல்லாம் மரணத்தின் பிடியில் மூழ்கிப் போனார்கள். அவ்வூரில் இருந்த வைக்கோல் போர் அப்படியே வெள்ளத்தில் மிதந்து வந்து மருதூர் அருகிருக்கும் புதுப்பட்டி என்று ஊரின் ஒரு பாலத்தின் மோதி கரையோரம் ஒதுங்கி இருந்தது..
புதுப்பட்டி மக்களுக்கு மருதூர் வெள்ளத்தில் மூழ்கி மண்ணோடு மண்ணாகி, ஊரிருந்த இடமே தெரியாமல் கட்டாந்தரையாகிப் போனது என்ற செய்தி பரவியது. அதிகாலை புதுப்பட்டி மக்கள் ஓடி வந்து பார்த்தனர். ஒதுங்கி கிடந்த வைக்கோல் போரில் வயதில் முதிர்ந்த பெரியவரும் இளமங்கை ஒருத்தியுமான தந்தையும் மகளும் துவண்டுபோன தாய்கோழியும் குஞ்சுபோல முடங்கிக் கிடந்தனர். தந்தை இறந்திருக்க, மகளின் உயிர்மூச்சு வந்து கொண்டிருந்தது. தந்தையையும் இளமங்கையையும் பார்த்தோர் சிலர் அந்த வைக்கோல் போர்மீது ஏறி தூக்கி வந்து தரையில் கிடத்தினார்கள்.
கூட்டத்தில் இருந்த புதுப்பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் என்ற பறையர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ‘மண்ணோடு மண்ணாகிப் போன மருதூர் சேரியில் வாழ்ந்த இக்கிழவன் பெயர் வேடப்பன். இந்த மங்கை அவரின் மகளான வீராயி என்று பதைபதைப்போடு சொன்னான்.
பார்க்க வந்தோரில் பலர் இவர்கள் பறையர்கள் என அறிந்ததும், தொட்டால் தீட்டு என்று பேசிக்கொண்டே விலகிப் போய்விட்டனர். வீரண்ணன் புதுப்பட்டி ஊருக்கு ஓடிப்போய் மக்களிடம் தெரிவிக்க, வீரண்ணனின் தந்தை மாரியுடன் அவ்வூர் மக்கள் ஓடோடி வந்து இருவரையும் தூக்கிச் சென்றனர், இளமங்கை வீராயியை காப்பாற்றி விட்டனர். இறந்துபோன வீராயியின் தந்தை வேடப்பனை அடக்கம் செய்துவிட்டனர்., மங்கை வீராயிடம் வீரண்ணனின் தந்தை மாரி ’நீங்கள் எங்களுக்கு ஒன்றுவிட்ட சொந்தம்தான் உன்னை என் மகள் போல் வைத்து காப்பாற்றுவேன். நீ கவலைப்படாதே அம்மா ‘ என்று ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்தார்.
ஒரளவு ஆறுதல் அடைந்து வரும் வேளையில், வீராயி அந்த ஊர்ப் பெண்களுடன் அவ்வூர் ஜமீன்தாரின் வயலுக்கு நாற்று நடுவதற்கும் களை எடுப்பதற்கும் போய்வந்தாள்.
இளமங்கை வீராயியின் பருவ வயது ஜமீன்தாரின் கண்களில் பட்டு, மனதில் வேட்கையுடன் தினமும் வயலுக்கு வந்து நோட்டமிட ஆரம்பித்தான்.
எப்படியும் இப்பெண்ணை அடைய வேண்டும்
இன்றேல்நம் ஆவியிருந் தாவ தென்ன?
தப்பியவள் பறையரிடம் பிறந்து விட்டாள்;
தனியாக இவள்கூலி கேட்க வந்தால்
கைப்பிடியில் அடக்கிடலாம் என்றே எண்ணிக்
கள்ளனவன் தீமையினை வளர்த்தான் நெஞ்சில் .என்று கவிஞர் வார்த்தைகள் ஜமீன்தாரின் மனதிற்குள் கழுகுப் பார்வை குதியாட்டம் போட்டது.
அனைவருக்கும் நாற்றுநட்ட கூலி கொடுப்பதற்கு மங்கை வீராயியை மாலையில் வீட்டுக்கு வரச்சொல்லி உத்தரவிட்டான் ஜமீன்தார்.
வேலை முடிந்து மாலை வேளையில் வீராயி ஜமீன்தார் வீட்டுக்குப் போனாள். அந்தச் சமயம்பார்த்து மழையும் வந்து விட்டது. வீட்டின் முன்புறம் தாழ்வாரத்தின் அடியில் வீராயி மருகி மருகி நின்றாள்.
உள்ளே வா வீராயி மழையில் நனையாதே. இந்த நேரத்தில் தீட்டெல்லாம் பார்க்க மாட்டேன்.. ஆபத்துக்குப் பாவமில்லை என தீண்டாமையை தூர
எறிந்தது போல பசப்பு வார்த்தை பேசினான். வீட்டின்உள்ளே செல்லத்
தயங்கினாள். அவனின் வஞ்சகம் அறிந்திடாத . வீராயி உள்ளே ஒரு எட்டு வைத்ததவுடன் கதவைச் சாத்தி தாழிட்டான்.
வீரராயின் மனதுபடபடத்து பதட்டத்தில் ரெக்கையடித்தது.பருந்தொன்று குஞ்சினைப் பாய்ந்து கவ்வுதல்போல் பாய்ந்துஇழுத்தான். இவன் வஞ்சக காமுகன் என்று உண்ர்ந்த வீராயி திமிறினாள் அலறினாள். திமிறினாள், வெறிபிடித்த மிருகத்திடம் மாட்டிக் கொண்டோமேயென்று அலறினாள்.
.
கூலி வாங்கப் போன தங்கை இன்னும் வீடு வரக்காணோமென்று ஜமீன் வீடு நோக்கி ,வீரண்ணன் மரம்வெட்டிக கொண்டிருந்தகோடாரியோடு .ஜமீன்தாரின் வீட்டருகில் வந்தான். உள்ளே அலரல் சத்தம் கேட்கவே பதறிப்போனான். தாழிட்ட கதவை பாறையைப் பிளப்பது போல் சக்தியெல்லாம் கொடுத்து மோதி உடைத்து உள்ளே சென்றான். கோடையிடி கேட்ட நாகம்போல் கொதித்து நின்றவன். கூலி வாங்க வந்த என் தங்கையை என்னடா நீ நினைத்தாய்?. அவள் தாலி பெற்றிடும் வரையிலும் சடைமுடிதாங்கிய முக்கண்ணனான ஈசனே ஆயினும் அவள் மேல் கைபட்டால் வெட்டுவேன் என கர்ஜித்தான். ஜமீன் சுவரில் மாட்டியிருந்த சாட்டையை எடுத்து அடித்தான். சீறுகின்ற புலியைப் போல கையோடு கொண்டுவந்திருந்த கோடரியால் ஜமீனின் மண்டையை பிளந்தான். அடிபட்ட பெரும்பன்றி போல அலறி தரையில் வீழ்த்தான் ஜமீன்தார்.
பெருங்கூச்சல் கேட்டு ஓடிவந்த காவலர்கள் வீரண்ணனை சிறையில் மாட்டித் துடுக்கடக்க வேண்டுமென இழுத்துக்கொண்டு சென்றார்கள். இதைக் கண்ட வீராயி தீயில் வீழ்ந்த புழுவெனத் துடி துடித்தாள். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.’ நாங்கள் ஏழையெளியவர் ஆயினும், யாருடைய சொத்தை திருடினோம்? கூழைக் குடிப்பவராயினும் உங்கள் குடியைக் கெடுத்திட வில்லையே! பாழும் பணத்திமிர் கொண்டு சதி செய்யத் துணிந்த மூடரே தங்கையின் கற்பை சூரையாடுதல் நீதியோ?’ எனக் கேட்டான். ‘கன்னியாகிய என்னை அந்த காமுகன் கற்பை சூரையாடத் துடித்தான். என் இன்னுயிர் அண்ணன் காப்பாற்றுதல் குற்றம் என்று சொன்னவன் எவனடா? இன்னல் விளைத்திட்ட ஜமீன் காமுகன் என்னை சாட்டையால் அடித்தது நியாயமோ? இந்த சின்னத்தனத்தை நாங்கள் போற்றிடவோ? என்று வீராயி துணிந்து கோபக்கனல் வீசினாள். காவலர்கள் அவளை பிடித்து வெளியே தள்ளிவிட்டு வீரண்ணனை இழுத்துச் சென்றார்கள்.
கரைபுறண்ட கண்ணீரோடு வீடு வந்து சேர்ந்தாள் வீராயி. அண்ணன் உன்னைத் தேடி வந்தானே அவனெங்கே?’ என தந்தை மாரி கேட்டார்., ஜமீன் வீட்டில் நடந்த கொடுமைகளை தந்தையிடம் குமுறிக் கொட்டினாள். இதைக்கேட்ட மாரியின் நெஞ்ம் கனத்தது .இரவெல்லாம் மனம் துன்பத்தில் கழிந்தது.
அடுத்த நாள் காலை மாரியும் வீராயும் காவல் நிலையம் நோக்கி விரைந்தனர். சேரி மக்கள் இவர்கள்மீது பரிதாபப்பட்டனர், வேறு சிலர் ஏளனமாக ஜமீன்தாரைக் கொலை செய்தவனின் தங்கை இதோ போகிறாள் என்றார்கள்.காவல்நிலையம் சென்றவுடன் வீராயி ‘ஊராளும் நல்லவர்களே நான் சொல்வதை ஒன்றிரண்டைக் கேளுங்கள் என வேண்டினாள். பால்குடிக்கும் பிள்ளையைப் போல் பசப்புகிற நீலி வெளியே போ, எழைநாயே காலை உடச்சுப் போடுவேன் எனப் பேசி வெளியே தள்ளிவிட்டனர். வீரண்ணன் கைகளில் விலங்கை மாட்டினர். மகனை கைவிலங்கோடு பார்த்த மாரியின் கண்கள் குளமாயின. வீரண்ணன் தந்தையைப் பார்த்து ‘நிலமுண்டு வானமுண்டு நல்ல எண்ணம் கொண்ட மக்களுண்டு.உண்மைக்கு மதிப்பு வரும் காலம் வரும். தங்ககையைக் கற்பழித்த காமுகனைக் கொன்ற அண்ணனுக்கு தீங்கிழைத்த நடுநிலைமை தவறிய கொடூரர்களைக் கண்டு மண்ணுலகம் பழிக்கும். யாவரும் என் பெயரை மறக்க மாட்டார்கள். இறப்பென்பது எனக்கு இப்போது இன்பந்தான். என் தங்கையின் கற்பைக் காத்தேன், தர்மத்தைக் கொன்ற அறிவிலி ஜமீனைக் அடியோடே ஒழித்திட்டேன். உன் மகன் சிறப்புறவே பெயர்பெற்றான் என்று நினைத்து கவலையை விட்டுவிடு. ‘ என்று தேற்றினான்.
நீதி மன்றத்தில் ஊரார்கள் கூடிவிட்டனர். குற்றவாளிக் கூண்டினில் வீரண்ணன் ஏறி நின்றான். பொய்ச் சாட்சிகள் பேசுவோர்கள் இன்னொருபுறம் நின்றனர். நீதிபதிக்கும் வீரண்ணனுக்கும் விவாதம் நடந்தது.
நீதிபதி; ஜமீன்தாரை நீ கொலை செய்தாயா?
வீரண்ணன்; ஆமாம் உண்மை. ஜமீன்தார் செய்ததும் குற்றம்தானே?.
நீதிபதி; குற்றம் என்பதை ஒப்புக்கொள்.
வீரண்ணன்; கற்பழிப்பது குற்றமில்லையோ?
நீதிபதி; ஆமாம் அதற்கு கொலை செய்வதுதான் சரியா?
வீரண்ணன்; ஆபத்து நேர்ந்தால் அதை நீக்கலாகாதோ?
நீதிபதி; காவல்நிலையம், நீதிமன்றம் இருக்க கொலை செய்வது நீயாயமா? உடலோடு உயிரை ஒட்ட வைக்க முடியுமா?
வீரண்ணன்; காவல்நிலையமும் நீதிமன்றமும் பறிபோன கற்பை மீண்டும் கொடுக்குமா? நாட்டில் பெண் கற்பே பெரியது. கற்புள்ள மங்கையால்தான் வானம் மழை கொடுக்கும் என்பது பெரியோரின் எண்ணம்.
நீதிபதி; எப்படி ஆகிணும் இன்னுயிர்க் கொன்றவன் கொலைக் குற்றத்திற்காளாகிறான்.
வீரண்ணன்; ஆம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களை ஒன்று கேட்கிறேன். உம்முடன் பிறந்த தங்கையை ஒருவன் கற்பழிக்க நீர் கண்ணால் கண்டால் என்ன செய்குவீர்? எப்படிக் காப்பீர்? நீதிமன்றம் தேடி நடந்து சேவகர் தம்மை அழைத்து வந்து காவல்செய்து காப்பீரோ கற்பை.
நீதிபதி; கேட்கக் கூடாதவற்றை கேட்கின்றாய் சற்று நேரம் யோசிக்கிறேன்.
அப்போது தந்தை மாரியும் வீராயும் நீதிமன்றம் உள்ளே வந்தனர்.
நீதிபதி தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்டார்.
வீரண்ணன்; சிரித்து குமுறிக் கொக்கரித்து ‘ என்னை சீக்கிரம் தூக்கிலிடுங்கள். நாளை இளைஞர் கூட்டம் என் வரலாற்றை படிக்கும். பைத்தியக் காரத்தனமான தீர்ப்புகளை தீயிலே கொளுத்துவதற்கும் பின்னால் வருவார்கள்.
வீராயி; என் இன்னுயிர் அண்ணனை விட்டிடுவீர். என்னைத் தூக்கிலேற்றுங்கள். என்னை ஜமீன்தாரன் கற்பழிக்கத் துணிந்து எட்டிப் பிடித்து இழுக்கும் நேரத்தில், கோடரியால் அவன் உயிரை நானே குடித்தேன். கொலை செய்தவள் நானிருக்க ஒரு குற்றமுமிலா அண்ணனை தூக்கிலிட சொன்ன நீதி விற்றுப் பிழைத்து மக்களை வேட்டையாடுகிறீர்கள். நீங்களும் வெளங்க மாட்டீர்கள்’ என சாபமிட்டாள்.
நீதிபதி; அந்த பெண்ணை இழுத்து வெளியே தள்ளுங்கள் என் உத்தரவிட்டார்.
தந்தை மாரியும் கோபம் கொப்பளிக்க நரம்புகள் புடைக்க ‘எங்களை சங்கடப் படுத்திய மூடர்களே சத்தியத்தை மீறிடும் ஏமாற்றுக் காரர்களே என்னையும் என் மகளையும தூக்கிலேற்றுங்கள்.’ என சீறினார். பொதுமக்கள் கண்டும் இரக்கங்கொள்ளாமல் அவனின் விதி சாகின்றான் என்று பேசி நடந்தனர். பெரும்பாம்பின் வாயில் சிக்கிய தவளையென,வெறிநாயால் கடிபட்ட குழுந்தையென தந்தையும் மகளும் தரையில் விழுந்து அழுதுபுரண்டனர். இரக்கமில்லா பணவெறியர்கள் கண்டுகளித்தனர், மாரியும் வீராயும் வறுமையுடனும் மகனை இழந்த துயரத்துடனும் வாழ்க்கையை நகர்த்தினார்கள்.
வெளிநாட்டில் தேயிலைத்தோட்டத்திற்கு அழைத்துச் செல்லும் எஜெண்டு
ஒருவன் இவர்களின் கஷ்டத்தைபார்த்து அவர்களை ஆப்பிரிக்கா தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டு அவர்களிடம்
’அமைதியுடன் வாழ்ந்திடலாம் ; அனைவருமே
அன்புடனே ஆதரிப்பார்
சுமையற்றத் தொழி லுண்டு ;சுகமான
சம்பளமோ அதிகம் உண்டு!
நமையாரும் மதிப்பார்கள் நலிவில்லை
’ஆப்பிரிக்கா’ என்னும் பேரே
அமைகின்ற நாடதுவாம்; அங்கேதான்
பூலோக சுவர்க்கம் உண்டு’ என்று பசப்பு மொழி பேசி ஆப்பிரிக்கா தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்..அங்கு சென்று பார்க்கும்போது
சுடுகாடு போன்ற துவாம் சுரங்கம்! அங்கே
தொல்லை யெலாம் ஏற்றதொரு கும்பல்! ரப்பர்
எடுக்கின்ற தோட்டத்தில் இருமிக் கொண்டே
இரவு பகல் உழைத்ததொரு கும்பல்! சாவைக்
கொடுக்கின்ற தேயிலையின் தோட்டத் துள்ளே
கொடுமெயல்லாம் அடைந்ததொரு கும்பல்! வாழ்வு
கெடுமாறு பவாகப் பிரிந்து சென்றே
கேடெல்லாம் உற்றதடா கூலிக்கூட்டம்’ என்ற கொடூரச் சுரண்டல் நிலைமையைப் பார்த்து ஜீரணித்துக் கொண்டும், முதலாளிகளின் வேலைச் சுரண்டலோடும் கங்காணிகளின் கெடுபிடிகளோடு பிற தொழிலாளிகள்போல இவர்களும் வாழ்ந்து வரும்வேளையில் தந்தை மாரி பாம்பு கடித்து இறந்து போகிறார்.
இருந்த ஒரு ஆதரவும் போய்விட்டதே என்று கதிகலங்கி,’அண்ணன் இறந்தவுடன் நான் செத்திருப்பேன்,புண்ணியமான தந்தை இருந்ததால் துன்பத்தோடு வாழ நினைத்தேன். இப்போது இருந்த ஒரு ஆதரவும் போய்விட்டது. இந்த மண்ணில் வாழ்ந்து என்ன பயன்? என்று நினைத்து, வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் துணிந்து, தந்தையை கைதொழுது, அண்ணனையும் வணங்கி, இடையில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய நெஞ்சில் குறிவைத்து குத்திக் கொள்ளப் போகும்போகிறாள்., ஒரு கை வந்து தடுக்கிறது. அவள் திரும்பிப் பார்த்தாள் ஒரு இளைஞன். அவன் அங்குபணிபுரிந்த ஆனநதன் எனற இளைஞன் வீராயிக்கு ஆறுதல் சொல்லித் தன்னை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள கேட்கிறான்.
ஒரு பெண் தற்கொலை செய்ய விடமாட்டேன், அதுவும் நீ தமிழ்நாட்டுப் பெண் உன்னை சாகவிட மாட்டேன் எனக் கெஞ்சுகிறான்.
என் அண்ணனை கொன்றவர்கள் சிறந்தோங்கும் அறமும் இல்லாத நாட்டில் பிறந்த நாட்டில் பெரும் பேய்கள் இருக்குதய்யா நான் வாழ்ந்தால் உறங்கும் நேரத்திலும் எனது உள்ளம் நடுங்கும்.எனக் கூறி மறுக்கிறாள் வீராயி. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. சாதிவெறி பிடித்த சமூகம். நான் உன்னோடு வாழ இச்சமூகம் ஒத்துக் கொள்ளுமா? என்று குமுறுகிறாள்.
’ என்னை முதலில் என்னை உன் கையால் குத்துக் கொல். பிறகு உன்னை நீயே குத்துக்கொள் ‘ காலைப் பிடித்து அவனின் மனித நேயக் காதல் மன்றாடுகிறது.
‘வீராயி குனிந்து கைதொட்டு எழுப்பி சரி உன் விருப்பம்போல் வாழ்வோம் இனி தட்ட மாட்டேன்’ என்று ஏற்றுக் கொள்கிறாள்.
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்தின் முதலாளி பார்த்துவிடுகிறான். இரண்டு பேரையும் வெட்டிவிடுவேன் என மிரட்டுகிறான். அவளின் துக்கமான நிலைமையை எடுத்துக் கூறியும் இளைஞன் ஆனந்தனை சாட்டையால் அடித்துவிடுகிறான முதலாளி.. அவளும் அடிக்காதீர்கள் என கெஞ்சிப் பார்க்கிறாள். அந்த மிருகம் கேட்கவில்லை. இழுத்துச் சிறையினில் போட்டிட ஆட்களை அழைத்து கட்டளை இடுகிறான்.
நாட்கள் பல போனபின்பு இருவரும் தன் சொந்த நாட்டுக்கே போய்விடலாம் என்று முடிவுசெய்து, கப்பல்வரும் நாளில் ஆனந்தனின் வீட்டிற்கு பயணப்படுகிறார்கள். ஆனநதன் வீட்டில்இருவரும் வந்தவுடன்
வந்ததுமிகப்பெரியசாதியப்பேய்ச்சிக்கல். சொந்தக் காரனில் ஒருவன். வீராயியைஅடையாளங்கண்டு
, இவள் புதுப்பட்டி பறையர் சாதியை சேர்ந்தவள் என்று சொல்லவே, ஆனந்தன் வீட்டில் அவர்களை ஏற்க
மறுக்கிறார்கள். ஆனநதன் பெற்றோரிடம் சாதிவேற்றுமை வேண்டாம் எனஎவ்வளவோ சொல்கிறான்.
பெற்றோர் கேட்பதாக இல்லை.வீராயியை அழைத்துக் கொண்டு பறையர்வாழும் சேரிக்கே அழைத்து
வந்து ஒருவீட்டில் குடிபுகுந்து தங்கள் திருமணத்தை ஊரார் அறியும்படி
பக்கத்த்தில் வீராயிஉட்காந்து கொள்வாய்
பறையடிக்கப் போகின்றான்’பார்’ என்று சொன்னான்
அக்கணமே வீராயி உட்கார்ந்து கொண்டாள்
அடித்திட்டான்அப்பறையன்மேளத்தைஅங்கே எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்!
எதிர்நின்ற சாதிவெறிமதவெறிகள் எல்லாம்
சுக்காகப் போயிற்று பறையோசை ஓடிச்
சுதந்திரத்தைச் சொல்லியுமே முழங்குதடா ஊரில்!
காதெல்லாம் கிழியும் வனம் பறையடித்து விட்டான்
கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று
தீதெல்லாம் கிழியும் வணம் ஆனந்தன் செய்த
திருமணத்தைப் பறையடித்துத் திக்கெட்டுஞ் சாற்றி
சூதெல்லாம் ஒழியும் வணம் சுழலுதடா! ஒசை!
தொல்லைமிகத் தருகின்ற வைதீகம் செய்தத்
தோதெல்லாம் அழிந்துவிடத் துள்ளுதடா ஓசை!
சுற்றுதடா பறையோசைப் புரட்சியினைச் சொல்லி!
பறை முழங்கச் செய்கிறான். ஊரார்கள் இதைக்கேட்டு ஓடி வந்தார்கள் ஆனந்தனின் தந்தையானசெல்லப்ப கவுண்டர் தன் மானம் போய்விட்டதென்று கர்வம் கொண்டு, ஆட்களை ஏவி விட்டு ,இவர்கள்இருவரையும் கொன்று விடுங்கள் என கட்டளையிட்டு, பறையடித்தவனையும் அடித்து நொறுக்கி வீட்டிற்குள் புகுந்து இருவரையும்கொலை செய்துவிடுகிறார்கள். சாதி ஆணவத்தை மீறி போராட்டவாழ்க்கையை துவங்கலாம் என்ற தம்பதியரின் புதுமைக் கனவு புரையோடிப்போன சாதிவெறிக்கு பலியாகி மூழ்கிப் போனது.. இதுதான்காவியத்தின் கதை.
காவியத்தின் சிறப்புத் தன்மைகள்
இந்த காவியத்தில் கதாபாத்திரங்கள் உணர்வுபூர்வமாக பேசுவதோடு, ஆசிரியரின் தத்துவார்த்த நிலைகளை வாசிப்பாளர்கள் எளிதில் புரியும்படி வெளிப்படுத்துவது சிறப்பானது.
வீரண்ணனை தூக்கிலிட உத்தரவிட்டபிறகு, மாரி வீராயி இருவரது கதறலைப் பார்த்து எவ்வித இரக்கமும் இல்லாத மக்களை சித்தரிக்கும்போது
என்ன இது ஞாலமடா! ஏழைகளும்
இங்கேதான் வாழ்வதற்குச்
சின்ன தொரு புகல் உண்டோ? சிறிதேனும்
நெஞ்சினிலே இரக்க முண்டோ
தன்னலமே பெருகிற்றுத் தரணியிலே
மக்களெலாம் வறுமை என்னும்
இன்னலிலே வதைக்கின்றார்! பணக்காரர்
மிதிக்கின்றார்! கொடுமை என்னே!
இல்லாரை இல்லாராய் எந்நாளும்
வைப்பதற்கும், எதிர்த்தே ஒன்றுஞ்
சொல்லாமல் ஏழையரைத் தூக்கிட்டுக்
கொல்வதறகும், திமிர்கொண்டுள்ள
பொல்லாத மகாராசர் புரட்டுக்குத்
திருப்புகழைப் பாடு தற்கும்
வல்லானை விட்டிங்கே வாய்க்காலை
்வெட்டியுமே வகுத்தார் நீதி! என்று கவி வரிகள் மூலம் வலியோர் எளியோர் தத்துவத்தை பதிவு செய்கிறார்
2. சாதிவெறியின் இறுக்கம் இந்து மதம் வளர்த்துவிட்ட எண்ணம் என்பதை வெள்ளத்தின்கொடூரத்தால் இருவர் வைக்கோல் போர்மூலம் தப்பிவந்தவர்களை புதுப்பட்டி ஊரார்பார்த்துகொண்டிருந்தபோது, இருவரும் பறையர் சாதி என தெரிந்தபின்பு தொடக்கூடாது என ஓடியவர்களின் எண்ணம் இந்து மதம் விதைத்து வைத்த தீட்டு, சாதி அடுக்குச் சிந்தனையின் வெளிப்பாடு என்று அழுத்தமாக விளக்குகிறார்.
வியப்புற்றார் அங்கிருந்தோர் அடுத்தகணம் அன்னோர்
மெதுவாக நழுவியுமே நடந்திட்டார் என்னே!
பயப்பட்டார் பறையர்களைத் தொட்டெடுத்து விட்டால்
பார்ப்பவர்கள் என்சொல்வார் என்றொதுங்கிப் போனார்!
தயைமிக்க இந்துமதம் வளர்த்துவிட்ட எண்ணம்!
தமிழரிடை இத்தீமை விளைத்தவரைக் காணின்
கையிரண்டும் காலிரண்டும் வெட்டி அவர் கண்ணைக்
கழுகுக்குப் பலியிடுவேன்; என்ன இது நீதி? என்று பளிச்சென உரைக்கிறார்.
3. வர்க்கப் பாகுபாட்டுச் சிந்தனையின் கொடூரங்கள் இடையிடையே வந்து போவதைப் பார்க்கலாம்.
மருதூரின் சேரி மக்கள் ஊர் வெள்ளத்தால் அழியும்போது
விண்மீன்கள் மொய்த்ததுபோல் பொத்தலடா பொத்தல்!
வெற்றுடலில் சுற்றுகிற கந்தலெனக் கீற்றுக்
கண்களிலே மழையோட்டம் அருவியெனப் பாயும்!
கதறியழு கின்றார்கள் ஏழையெலாம் அங்கே!
உண்டுறங்கும் மகாராசர் காதினிலே இந்த
ஒலந்தான் கேட்டிடுமோ? இல்லையடா இல்லை!
கண்டிரங்கா நெஞ்சத்தைக் கல்லென்று
காட்டுவிஷப் பாம்பென்று நீங்களெலாஞ் சொல்வீர்! என்று படைக்கிறார்.
4. மருதூரில் உழைக்கும் ஏழை மக்கள் படும் வேதனைகளையும்,ஆப்பிரிக்காவில் தேயிலைத் தோட்டத்திலும் ரப்பர் தோட்டத்திலும் நாடுவிட்டு நாடு பிழைக்கப்போன தொழிலாளர்கள் அட்டையாக உழைப்பின் உதிரம் முதலாளியால் உறிஞ்சப் படும் கொடூரத்தை காவிய வரிகள்
சுடுகாடு போன்றதுவாம் சுரங்கம்! அங்கே
தொல்லை யெலாம் ஏற்றதொரு கும்பல்! ரப்பர்
எடுக்கின்ற தோட்டத்தில் இருமிக்கொண்டே
இரவுபகல் உழைத்ததொரு கும்பல்! சாவைக்
கொடுக்கின்ற தேயிலையின் தோட்டத் துள்ளே
கொடுமையலாம் அடைந்ததொரு கும்பல்! வாழ்வு
கெடுமாறுபலவாகப் பிரிந்து சென்றே
கேடெல்லாம் உற்றதடா, கூலிக்கூட்டம்! என்றும்
5.உழைத்து உழைத்து காடு மேட்டை கழனியாக்கி, காட்டை அழித்து மாளிகைகளாக்கி ,இயற்கை வளங்களை செம்மையாக்கி பசுமையாக்கி, உழைப்பின் வியர்வையால் ஊருக்கும் உலகுக்கும் சோறுபோடும் பாட்டாளிகளை பஞ்சையைப் போல் நடத்திடும் சுரண்டிக் கொளுக்கும் கூட்டம் ஒன்று, சாதியென்றும் மதமென்றும் சமூகத்தில் உழைப்போரை சாதிவெறியால் ஒடுக்கி மேலாதிக்கத்தால் ஆணவத் திமிர் கொண்டு ஒடுக்கப்படும் கூட்டம் இன்னொன்று இருக்கும்போது எல்லாம் ஒன்றென எப்படி சொல்வது? என்ற கேள்வியை தமிழ்ஒளி
உடல் இளைத்து விழிகுழிந்து கன்னம் வற்றி
உறு வயிறு மிக்கொட்டி உழைக்கும் போதும்
’நடவுங்கள் விரைவினிலே’ என்று சொல்லி
நடுமுதுகில் சாட்டையினால் அடித்து வாட்டிப்
படவைப்பான் முதலாளி துன்பந்தன்னை!
பதைக்கின்றார் தேயிலையின் தோட்டத்துள்ளே!
அடமனிதா! நீயென்ன நாவை நீட்டி
அளக்கின்றாய்? ‘ஓருலகம்’ என் கின்றாயே? என்று கேள்விச் சாட்டையை வீசுகிறார். காவியம் முழுவதும் கம்பீரமான கவி வரிகள் பிரவாகமெடுக்கின்றன. சமூகச் சிந்தனைக்கு சிகரம் அமைப்பதாக அமைந்துள்ளது.
6. ஒடுக்குவோரின் ஒப்புதல் வாக்குமூலமும், சமத்துவம் நாடும் தன்மையையும் இந்தக் காவியம் காட்டுகிறது.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்தும், கொடுமைப்படுத்தியும் உழைப்பையும் உறிஞ்சி வஞ்சித்து விட்டோம் என்று இடைநிலைச் சாதியினரின் குரலை கேட்க முடியவில்லை. தன்னெழுச்சியாக அவர்களுக்குள் விவாதம் வருவது போலவும் தெரியவில்லை. அந்த விவாதத்தைத் தூண்டுவதற்கும் சமத்துவத் தடத்தை நோக்கி இழுப்பதற்கும் ஓர் இலக்கியம் தேவையாக இருக்கிறது. கூடவே அனைத்துச் சாதிகளிலிருக்கும் முற்போக்காளர்கள், மனித நேயர்கள் பொதுஜனம் நோக்கி புறப்படவும் வேண்டும். இந்தச் சூழலில் வீராயி காவியத்தின் மூலம் ஆதிக்க சாதியே காலந்தோறும் தான் இழைக்கின்ற பாகுபாட்டு ஒதுக்கல் ,ஒடுக்கல், சுரண்டல் முறை தவறுதான் என்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போலக் காட்டுகிறார். அந்தத் தவறுக்கு எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு சமத்துவ நிலையை நாம்தான் வழங்க வேண்டும் என்ற பரிகாரத்தையும் செயவது போல கவிஞர் தமிழ்ஒளியின் அறைகூவல் புதுமையானது. காரணம் அவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவன் அல்லவா? ஆதிக்க சாதிக்காரர்கள் பேசுவது போல இந்தக் காவியத்தின் வரிகள் நாம் புரிந்து கொள்ள சிரமம் ஏதும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிடமே போதனைகள் சொல்லிச் சொல்லி எத்தனை காலம் கழிப்பது? என்ற சிந்தனைக் கவிஞர் தமிழ்ஒளிக்கு வந்திருக்கக் கூடும். அந்தக் கவிதை வரிகள் இதுதான்.
“சாதியிலே தாழ்ந்தவராய் ஏழையரா யிங்குத்
தலைமுறைகள் பல கழிந்தும் அடிமைகளாயிந்தத்
தேதிவரை வாழ்கின்ற எளியோர்க்கு வசதி
தேவை; அவர் வாழ்க்கைக்குக் காப்பளிக்க வேண்டும்
நீதிசெய முன்வருவாய் தமிழ்நாடே நீதான்
நிலமுழுது நெல்விளைத்துக் காவலெல்லாங் காத்து
தீதின்றி நாம் வாழச் செய்திட்ட மக்கள்
திக்கற்றுச் சாவதெனில் மாக்கொடுமை யன்றோ?” என்றும்
”அவர்தானே நம்ஆடு மாடுகளைக் காத்தார்
அவர்தானே தானியங்கள் அத்தனையும் சேர்த்தார்
எவர்மறுப்பார்? உழைப்பெல்லாம் நாமுறிஞ்சி விட்டோம்
எக்கேடு அவர்கெட்டால் நமக்கென்ன? என்று
சுவர்போல மரம்போல இருக்கின்றோம் நாமே
தொல்லையெலாம் அவருக்குச் சுகமெலாம் நமக்கோ
தவறுதலே நம்வாழ்க்கைத் தத்துவமாய்க் கொண்டோம்
தக்கதொரு நியாத்தைச் செய்துவிட வேண்டும்!” என்ற ஒப்புதலை முழங்குகிறார் கவிஞர் தமிழ்ஒளி. 1
நாட்டார் தெய்வ வாய்மொழி இலக்கியத்தில் சாதி ஆணவப் படுகொலை
மக்கள் வழிபடக்கூடிய ஏராளமான நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளின் உள்ளடக்கம் சாதி ஆணவப் படுகொலையாகத்தான் இருக்கிறது. இந்தக் கருத்தாக்கமும், வழிபாடும் தொடங்கிய காலத்தைச் சரியாகக் கணிக்க முடியாததாக இருந்தாலும், சமூகத்தில் சாதிப் பிரிவினை சங்க காலத்தில் நிலவிய தொழில் பிரிவினைக்குப் பின் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அழுத்தம் பெற்ற பிறகாகத்தான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.
நாஞ்சில் நாட்டுச் சிறுதெய்வங்களன் கதைகளில் பகவதியம்மன், ஆவுடையம்மாள், பூலங்கொண்டாள் ஆகிய தெய்வங்களின் கதைகளில் சாதி ஆணவப் படுகொலைதான் உள்ளடக்கமாக இருக்கிறது.
பகவதியம்மாள் வெள்ளாளச் சமூகத்தில் பிறந்தவள். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த குறவ மன்னன் திருமணம் செய்ய விரும்பியதால் பகவதியம்மாள் குடும்பத்தினர் இருவரையும் தந்திரமாகக் கொலை செய்துவிடுகிறார்கள். பகவதியம்மாள் தெய்வமாக ஆக்கப்பட்டு தோவாளைத் தாலுகா அழகியபாண்டிபுரத்தில் வணங்கப்பட்டு வருகிறாள்.
ஆவுடையம்மாள் பிராமண குலத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்தவள். சேர மன்னன் திருமணம் செய்ய விரும்பியதால் ஆவுடையம்மாள் தனது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டுத் தெய்வமாக ஆக்கப்பட்டு தோவாளைத் தாலுகா ஞாலம் ஊருக்குப் பக்கம் அந்தரபுரம் என்ற ஊரில் சாம்பவர் மற்றும் ஆசாரியார் சமூகத்தினரால வழிபடப்பட்டு வருகிறாள்.
நாடார் சமூகத்தில் வசதியான நாட்டாமை குடும்பத்தில் பிறந்த பூலங்கொண்டாள் என்ற பெண்ணை, மந்திரவித்தை தெரிந்த மேற்கத்திய நாடார் ஒருவர் விரும்பியதால் பெண் வீட்டார் மறுத்ததால், மந்திரவாதி கடத்திக் கொலை செய்கிறார். கொலை செய்யப்பட்ட பூலங்கொண்டாளைத் தெயவமாக ஆக்கி அகஸ்தீஸ்வரம் அருகில் வடுகம்பற்று ஊரில் வழிபட்டு வருகின்றனர்.2
மதுரை வீரன், காத்தவராயனில், முத்துப்பட்டன், திண்டுக்கல் மாவட்டத்தில் முத்தாலம்மன், தமிழகத்தில் இன்னும்
பல நாட்டார் தெய்வங்களின் கதைகளின் உள்ளடக்கங்கள் பல வகைகளில் ஆணவப் படுகொலையாகவே
உள்ளன என்பதைப் பார்க்க முடியும்.
நவீன காலத்தில் நாட்டு நடப்புகளில் சாதி ஆணவப்படுகொலைகள்
கவிதைகளில்
ஒடுக்கப்பட்டோரின் நிலை
1977ல் கவஞர் தணிகைச்செல்வன் “நாங்கள் அரிசனங்களாம் நாங்கள்
அரிசனங்களான்” என்ற தலைப்பில் ஒரு நீள் கவிதை படைத்திருந்தார். அந்தக் கவிதையில்
”மத்தியப்பிரதேசத்திலே காலார் ஜில்லா கிராமத்திலே-எங்கள்
மங்கயரைக் கற்பழித்தார் லாக்கப்புக்குள்ளே
சித்திரவதையானதுங்க எத்தனை பொண்ணு- அதில்
செய்தியாக வருவதுண்டோ நூத்துக்கு ஒண்ணு” என்ற வரிகள் படைத்திருப்பார்.
எவ்வித அறிவியல் முன்னேற்ற
மின்றி, தகவல் தொடர்பும் இல்லாத காலத்தில் ஊமை கண்ட கனவாக எத்தனையெத்தனை சோகங்களை பெண்களும் ஆண்களும் அனுபவித்திருப்பர்?
1930ஆம் ஆண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 20 பக்கங்கள் எழுதிய சமத்துவப் பாட்டு என்ற தலைப்பில் தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு என்ற கவிதையை திரு ம. நோயேல் என்பவர் நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அந்தப் பாடலில்
பிறந்த முப்பது கோடிப்
பேரில் ஐங்கோடி மக்கள்
இறந்தாரோ சொல்வாயடி-சகியே
இறந்தாரோ சொல்வாயடி
பேதம் பாராட்டி வந்தோம்
பிழை செய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு –சகியே
மீதம் உயிர்தானுண்டு
வெள்ளையுடம்பு காட்டி
வெறும்வாக்கு நயம் காட்டி
கள்ளங்கள் செய்தாரடி-சகியே
கள்ளங்கள் செய்தாரடி
என்ற வரிகள் உட்பட 20 பக்கங்களும் இந்தியாவில் அன்று ஆறில் ஒரு பங்கான ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம் விடுதலையின்றி புளுவினுங்கேடாக இருந்த நிலையை மாற்றி சுயமரியாதையோடு உயரச் செய்ய சமூகத்திற்கு அறைகூவல் விட்டார்.
விடுதலைக்குப்பின் சட்டப்பாதுகாப்பு
கிடைத்த பின்பும் ஆணவக் கொலைகள்
சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக 1955 லிருந்து 2015 வரை குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் முதல் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் வரை நிறைவேற்றப்பட்டன. ஆனால் தீண்டாமையும், சாதி ஆணவப் படுகொலைகளும் குறைந்த பாடில்லை உசிலம்பட்டி விமலாதேவி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது. வழக்கறிஞர் உ. நிர்மலாராணி நீதிமன்றத்தில் 2010 முதல் 2015 வரை தமிழகத்தில் மட்டும் 47 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்த பட்டியலைச் சமர்ப்பித்தார். நீதியரசர் இராமசுப்ரமணியன் வரலாற்றுப் பெருமைமிக்கத் தீர்ப்பை வழங்கினார். காவல்நிலையங்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளும் தீர்ப்பில் இணைக்கப்பட்டிருந்தது.
”சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதற்கான எந்தப் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை தொடங்கவில்லை.
தொடங்கி இளவரசன், கோகுல்ராஜ் ,உடுமலைப்பேட்டை சங்கர், பள்ளிக்கரணை பிரவீன், ஓசூர் நந்தீஷ்-சுவாதி, திருவாரூர் அபிராமி, நெல்லை கல்பனா, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி, கண்ணகி - முருகேசன் என வெளிச்சத்திற்கு வந்த படுகொலைகள் மட்டுமே சமூகத்தின் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் வெளியுலகிற்குகே வராமல் கொன்று புதைக்கப்பட்டவர்கள், எரிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 185 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 3 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்து உள்ளதாகவும், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதியக் குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்றும் ‘எவிடென்ட்ஸ்’ கதிர் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டில் மேற்கு தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 30 ஆணவக் கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சாதி ஆணவக் கொலைகள் 2010ம் ஆண்டில் மட்டும்
5,000 கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகின்றது”.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்த காதல் புரிவோருக்கு படுகொலைக் கொடுமைகள். ஏறவும் இறங்கவும் முடியாத, ஏணிப்படிகளில்லாத சாதி அடுக்குமாடி கொண்ட இந்திய சமூகமல்லவா இது? சில மாநிலங்களில் நிகழ்ந்த சாதி ஆணவப் படுகொலை உட்பட காதல் புரிவோரின் படுகொலை எண்ணிக்கை ஒரு வருடத்தில் சராசரியாகக் காட்டும் விவரங்கள்;
உத்திரப்பிரதேசம் 395, ஆந்திரப்பிரதேசம் 384, மகாராஷ்டிரா 277, தமிழ்நாடு 240,குஜராத் 156, கர்நாடகா 113, பஞ்சாப் 98, டெல்லி 51, மேற்கு வங்கம் 29, கேரளா 06 .இந்திய ஒன்றியத்தில் நிகழும் கொலைகளுக்கான காரணங்களில் காதலால் ஏற்படும் கொலைகள் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது”
சட்டப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இல்லாத காலத்தில் நிகழ்ந்த சாதி ஆணசவப் படுகொலையை 1947 ல் வீராயி காவியத்தின் மூலம் அறிவிக்கிறார். மே தின ரோஜா என்ற காவியத்தில் பறையர் சாதி மக்களை சிந்தனையில் உயர்த்தி செங்கொடியைப் பறக்கவிட்ட பிற்படுத்தப்பட்ட வாலிபன் கொலை செய்யப்படுகிறான். நிலைபெற்ற சிலை என்ற காவியத்தில் காதலினால் கொலைதான். ஆனால் கவிஞரின் படைப்பு காலத்திலும், அதற்கு முன்பும் காலங்காலமாக பண்ணையாருக்கு அடிமையாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரும் கதறலும் எப்படி இருந்திருக்கும்? அதை கவிஞர் தணிகைச் செல்வன் 1977 ல் 22 பாராக்கள் அடங்கிய “நாங்கள் அரிசனங்களாம் நாங்கள் அரிசனங்களாம்” என்ற தலைப்பில் கவதையில்
இந்தப் பாடலை சமூக சமத்துவ நிலையை அரசுகள் பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருந்தால் மக்கள் சிந்தனை சிறப்படைந்திருக்கும். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேசுபொருளாக மாற்றியிருந்தால் அது பௌதீக சக்தியாக மாறியிருக்கும். இன்று சாதி ஆணவப் படுகொலைக்கு சமாதி கட்டிருக்கலாமே.
”சுதந்திரம் உழைப்பவர்க்கே
சுதந்திரம் எளியவர்க்கே
மதத்திமிர் சாதிக்கூச்சல்
மதர்த்தெழும் அடிமைவாழ்வு
மடிந்தபின் முன்பமுற்றுக்
கதறிடும் குரல் எழுந்தால்
கடும்புயல் புரட்சி வீசும்! “ கவிஞர் தமிழ்ஒளி 1948 ஆம் ஆண்டு சென்னை வானொலியில் அன்றைய சென்னை மாகாணப் பிரதமர் ஒமந்தூரார் முன்னிலையில், தெ பொ மீனாட்சிசுந்தரனார் தலைமையில் சுதந்திரம் என்ற தலைப்பில் கவியரங்கத்தில் பாடிய சமூக சமத்துவக் கவிதை.
“சமுதாய நிலையில் சமத்துவமற்ற, தரவாரியான கோட்பாட்டைக் கொண்ட ஒரு சமுதயமே இந்தியாவில் உள்ளது. …..1950 ஆம் ஆண்டு 26 ஜனவரியிலிருந்து ஒரு முரண்பாடான வாழ்க்கை முறையில் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவமும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமற்ற நிலையிலும் இருப்போம். அரசியலில் ஒருவனுக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாட்டை அங்கீகரிப்போம். ஒரு வாக்கு ஒரே மதிப்பு என்று இருக்கும். நமது சமுதாய மற்றும் பொருளாதார வாழ்க்கையில் நமது பொருளாதார சமூகக் கட்டமைப்பின் காரணமாக எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை என்ற கோட்பாட்டை தொடர்ந்து மறுத்து வருவோம். எவ்வளவு காலம் இந்த முரண்பாடான வாழ்க்கையைத் தொடர்வோம்? நமது சமுதாய மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை எவ்வளவு காலம் மறுக்கப் போகிறோம்? நீண்டகாலம் அதை த் தொடர்ந்து மறுத்தால், நமது அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிப்பதிலிருந்து தப்ப முடியாது. நாம் விரைவில் இந்த முரண்பாடுகளை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள் இந்த சபை கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.” என்று டாக்டர் அம்பேத்கர் 1949 நவம்பர் 26 அன்று அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை இதுவரை ஆண்ட அரசுகள் சமூக சமத்துவத்தை தனிமனித சுயமரியாதைக்கு நடைமுறைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தனரா? (பக்கம் 284 அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 30)
கவிஞர் தமிழ்ஒளியின் சுதந்திரம் பற்றி வானொலிக்
கவிதையில் உள்ள உள்ளடக்கத்தில், மேல் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் பாபாசாகேப்
டாக்டர் அம்பேத்கரின் நவம்பர்26, 1949ன் உரையில் குறிப்பிட்டிருக்கும்
”முரண்பாடுகளை விரைவில் நீக்க வேண்டும்” என்பதைக் கவிஞர் தமிழ்ஒளி முரண்பாடுகள்
எவையெவை என்று விரிவாகக் குறிப்பிடுகிறார. அதோடு ”இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள் இந்த சபை கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.” என்ற பாபாசாகேப்பின் எச்சரிக்கை கவிஞரின்
வார்த்தையாகிய “கடும்புயல் புரட்சி வீசும்” என்று ஒராண்டிற்கு முன்பே
பிரதிபலித்திருக்கிறார்.
இப்படி ஏராளமான படைப்புகளில் திராவிடம்,, மார்க்ஸியம், அம்பேத்கரியம்
இவைகள் மூன்றும் பொதிந்திருக்கின்றன. கவிஞர் தமிழ்ஒளி பாபாசாகேப் டாக்டர் பி ஆர்
அம்பேத்கரைப் பற்றி எங்கும் உச்சரித்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவரின்
சிந்தனைகள் பலவற்றில் பொருந்தியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யமுடியும்.
உச்சநீதி மன்றத்தில் டாக்டர்
அம்பேத்கரின் சாதி ஒழிப்புச் சிந்தனையை உயர்த்தி ஜொலித்த ஒரு தீர்ப்பு
லக்ஷமிபாய் சந்தாரகி எதிர் கர்நாடக மாநில அரசு W. P NO 359/2020/ தேதி
08-02-2021 வழக்கில் நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கௌல், ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய
அமர்வில் வழங்கிய தீர்ப்பில்
“நன்கு படித்திருக்கின்ற அணும் பெண்ணும் சாதியும் இனமும் அதிக செல்வாக்கு
செலுத்துகின்ற பழைமையான சமூக முறைகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்களாகவே
இல்வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டனர். இந்த மாதிரி முற்போக்கு சாதி மறுப்புத்
திருமணங்களால் சமூகப் பதட்டம் தணிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கிடையில்
இந்த இளையோர்கள் முதியோர்களின் அச்சுறுத்தலைச சந்திக்க வேண்டியுள்ளதால்
நீதிமன்றங்கள் முன்வந்து துணை நிற்க வேண்டியுள்ளது
இரு வயதுவந்த இளையோர்கள்
ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு இல்வாழ்க்கையில் நுழைய விருப்பப்படும்போது
குடும்பத்தின் அல்லது சாதி அல்லது இனத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. இந்த இருவரின் ஒப்புதலைப் பெற்றோர்கள் பரிவுடன்
ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்……..டாக்டர் சாதி ஒழிப்பு என்ற நூலில்
குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “ சாதி ஒழிப்புக்கு
உண்மையான வழி புறமணமுறைதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரத்தக் கலப்பின்
மூலம்தான் உற்றார் உறவினர் என்ற உணர்வு ஏற்படும். இந்த உறவு உணர்வு ஏற்பட்டு
வலுவடைந்தாலன்றி, சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை உணர்வும் ஒருவருகொருவர்
அந்நியராக நினைப்பதும் மறையாது. சமூகத்தில் மற்ற பிணைப்புகள் மூலம் வலுவான இணைப்பு
இருக்கும்போது திருமணம் என்பது சாதாரண நிகழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் சமூகம் துண்டுபட்டு சிதறியிருக்கும் நிலையில்
திருமணம் ஒரு பிணைப்புச் சக்தியாக வருவது அவசரத் தேவையாகிறது. சாதியை உடைப்பதற்கு
உண்மையான தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவம் சாதியைக் கரைக்க முடியாது” என்று
நீதிபதிகளின் தீர்ப்பு முடிகிறது. கவிஞர் தமிழ்ஒளி படைத்த வீராயி காவியத்தில்
ஜமீன்தாரைக் கொலை செய்த வழக்கின் தீர்ப்பை இதோடு ஒப்பிட்டுப் பார்த்து இரண்டு
காலச் சூழலையும் புரிந்து கொள்ள முடியும்.
.1988-1991 காலகட்டங்களில் இந்தியா முழுவதும் தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் எண்ணறிவுக்கும் எழுத்தறிவுக்கும் இயக்கம் கட்டிய அரசுகள். சாதி ஒழிப்புக்காக பேரியக்கம் நல்லோரின் நாட்டோரின் சமூகநீதிக் காவலர்களின் தூண்டுதலால் சாதி
ஒழிப்பு அறிவொளி இயக்கம் நடத்துங்காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நாம் நம்புவோம். கவிஞர் தமிழ்ஒளி ஒரு கவிதையில் காதலியிடம் அவரின் லட்சியத்தை
விவரிக்கும்போது
”மக்கள் மடிந்திடும் போதிலே- அவர்
மானங்குலைந்திடும்
போதிலே
கெக்கலி கொட்டியும்
ஆடியும்-பல
கேளிக்கை
பேசியும் பாடியும்
பக்கமிருப்பவன்
பாதகன் –அவன்
பாலையின்
வேடரைப் போன்றவன்
செக்கடி மாடுபோல்
வாழ்வதோ-என்
சிந்தைக்கினியளே
சொல்லடி”
“மக்களுக்காக
உழைக்கவும்-அவர்
வாழ்விடர்
முற்றும் ஒழிக்கவும்
தக்கசெயல்
செய எண்ணினேன்-எனைத்
தாவியழைத்தது
தேசமும்
இக்கருத்தோடுன்னை
கேட்கிறேன்-உன்
இன்பம் எதிலுண்டு
சொல்லடி
இக்கணந்தொட்டுநம்
ஆசையும்
காதல் இன்பமும்
மக்களின் தொண்டடி”
என்று லட்சியத்தை
முழங்கிய கவிஞர் தமிழ்ஒளியின் சமூகச் சிந்தனையை உட்கொள்வோர், வாசிப்போர், பேச்சாளப்
பெருமக்கள், இலக்கிய எழுத்தாற்றல் மிக்கோர் சாதி என்ற சமூக நோயைப் போக்குகின்ற மருத்துவர்களாக
மாற வேண்டியது மிக அவசியம் மிக அவசரம். . சாதி ஒழிப்புச்
சிந்தனையை பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு வைக்க வேண்டியது காலத்தின்
அவசியம். அப்போதுதான் இளைய மாணவத் திலகங்களிடம் சாதிகளை மறந்த ஒற்றுமை வேர்விட்டு வளரும் .சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும்.
ஆதாரம்; 1.தமிழ்ஒளி காவியம், தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு
வெளியீடு
2016
2.தமிழ்ஒளி
கவிதைகள் , புகழ் புத்தகாலயம் 2018
சாதி ஆணவக் கொலைகள்- உசிலம்பட்டி திலீப்குமார்
வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியீடு. பாரதி புத்தகாலயம்
3. 1-7-2024 தேதியிட்ட கீற்று இணைய இதழ் கட்டுரை
4. மே 17 இயக்கக் குரல் (N C B R தகவல் அடங்கிய) ஆகஸ்ட் 17,
2024 இணைய இதழ் கட்டுரை
5. பாபாசாகேப்
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
எல்லோருக்குமானவரே,நூல் பேராசிரியர் க.
கணேசன்,பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வெளியீடு
டிசம்பர் 2021
No comments:
Post a Comment