சிலு சிலுன்னு அடிச்சுகிட்டு இருந்த சித்திரமாச ராத்திரி ஒன்பது மணி சுகமான காத்துல பஸஸூ கன்னியாகுமரி நோக்கி பறந்துகிட்டு வந்துச்சு.வி.கே.புரத்துல சங்கத் தலைவரோட மகளோட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில கலந்துகிட்டு திருநெல்வேலியில வந்து எறங்கினவுடன இந்தப் பஸஸூ கெடச்சது.
எப்பவும் போராட்டத்தில பாத்த முகங்களை அங்கேயும் பாத்ததுனால உரிமைக்கான ஆர்ப்பாட்டத்துக்கு போயிவந்த நெனப்புலயே மிதந்துகிட்டு,உட்கார சீட்டு இல்லாம நின்னுகிட்டே, சீட்டுல உட்கார்ந்திருந்த மூனு எளவட்ட போலீஸ்காரங்க பேசியதைக் கவனிச்சுகிட்டே வந்தேன்.
பஸஸில டி வி இல்லாத துனால அவுங்கவுங்க பாடுபேசிகிட்டே வந்தாங்க. பஸஸூ மூன்றடைப்பு பக்கத்தில வரும்போது டிரைவருக்கு ரெண்டு சீட்டுக்கு பொறத்தால நடந்த சம்பவம் பஸஸூல இருந்தவங்க அத்தன பேரையும் சுண்டி இழுத்துச்சு
.ஆம்பள பொம்பள அத்தன பேரும்’ம்..ம்..அடி..அடி..அப்படிப் போடு’ ன்னு ஆனந்தமா தலையாட்ட, போலீஸ்காரங்களும் ‘சபாஷ்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணுமு’ன்னு சம்மதிச்சாங்க.
இருபத்திமூனு வயசிருக்கும் சன்னலோரத்துல உட்காந்துகிட்டு வந்த
பொண்ணுகிட்டே பின்னாடி சீட்டுல இருந்த சுமார் முப்பது வயசிருக்கும் பையன், அவன் கையி சும்மா இருக்காம சைடோட இடவெளியில நொழச்சு சேட்டைய காட்டிகிட்டே வந்திருக்கான்.
ரொம்ப நேரம் அந்தப் பொண்ணும் தள்ளி தள்ளி முன்னே போயிருக்கா.பையன் சேட்டைய விடுற மாதிரி தெரியல.அந்தப் பொண்ணோட காலுல இருந்த செருப்பை கையில எடுத்து சீட்டுமேல ஏறி பின்புறம் திரும்பி பையனோட முகத்துல தலையில ‘செருப்பாபிஷேகம்’ நடத்திருச்சு.அவன் கைய வச்சு மறச்சுப்பாத்தான் விளாசல் நிக்கல.’ஏலே நீ அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கியாலே, ஒன் தங்கச்சிகிட்டே போயி நோண்டுல நாயே’ ன்னு புதியவேத த்தை ஓதிகிட்டு அந்தப் பொண்ணு மொகம் பத்ரகாளியா
மாறிப்போச்சு.
இந்தக் காட்சியப் பாத்துத்தான் பஸஸூல சனங்க சந்தோசத்துல சபாஸ் போட்டாங்க.அந்த நேரத்துல சம்பவத்தப் பாத்த பொம்பளைங்க மொகத்துல பரவசத்தப் பாக்கணுமே! இதுக்குமுன்னால பல நேரங்களுல இப்படிச்
செஞ்சிருப்பான் பொண்ணுங்கெல்லாம் வெட்கப்பட்டும்,பயந்துகிட்டும் இருந்திருக்குங்க.
இப்படி நடக்குமுன்னு அவன் நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டான்.அடிவாங்குனவன் கூனிக் குறுகி வெட்கத்துல படபடத்துப் போயி எதுத்துப் பேச வாய் வரல.
‘ காலங்கெட்டுப்போச்சுப்பா இப்படியே கொஞ்ச நாயிங்க எவடா கெடைப்பான்னு நாக்கை தொங்கப்போட்டு அலையுதுங்க’ ன்னு
வயசான ஒருத்தரு வருத்தப்பட்டாரு.’ அட நீங்க ஒன்னு, போனவருசம் ஒரு அம்பத்தாறு வயசு இருக்கும் வாத்தியாராம் நல்ல நெரிசலா இருந்த பஸஸூல நின்னுகிட்டே வந்தவரு பக்கத்தில நின்ன ஒரு பொம்பளையோட இப்படித்தான் சேட்டையக் காட்டியிருக்காரு.
அந்தப் பொம்பளை’எச்சக்கள நாயே பாக்க நீ படிச்சவனைப்போல இருக்கே ஒமக்கு இந்த வயசில கேக்குதாக்கும் நாயிக்குப்பொறந்தவனே’ ன்னு செருப்பைத் தூக்கிட்டா.இவரோட வகுப்பில
மாணவிக கிட்டே பண்ணுற சேட்டைய தெரிஞ்ச பஸஸூல இருந்த மாணவன்,இதுதான் சான்ஸின்னு ‘அட என்னம்மா வாத்தியாரை கன்னா பின்னான்னு பேசுறீங்க’ன்னு சத்தம் வேற கொடுத்துப்புட்டான்.இஞ்சி தின்ன குரங்குபோல வாத்தியாரு மொகம். அந்தப் பொம்பளை’ அடச் சீ நீயெல்லாம் ஒரு வாத்தியாரு
ஒங்கள நம்பியும் பிள்ளைங்க’ன்னு அத்தனபேரு முன்னால மானத்த வாங்கிப்புட்டா.அப்புறம் என்ன ஆசாமி எந்த எடத்துல எறங்குனாறுன்னு தெரியல. பள்ளிக்கூடத்துக்கு ஒரு மணிநேரம் லேட்டு நடந்தே போயிருக்காரு.
வாத்தியார்களே இப்படீன்னா இதெல்லாம் நடக்ககத்தான் செய்யும்’முன்னு இன்னொரு பெரியவரு மன பாரத்தை எறக்கிவச்சாரு.’இந்த மாதிரி எளவெடுப்பானுகனாலதான் நல்ல வாத்தியாருங்களுக்கு மதிப்பே இல்லாம போகுது’ன்னு பக்கத்துல இருந்தவரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினாரு
.பஸஸூ நாங்குநேரி வர்றதுக்கு முன்னால அடிவாங்குன சில்மிச பையன் இறங்கலாமுன்னு நெனச்சு எந்திரிச்சான்.மூனு போலீஸ்காரங்கள்ல ஒருத்தர் எழும்பி முன்னே வந்து அவனைப்பாத்து’ஏலே என்னா? கறித் திமிறா?’ன்னு அதட்டல் போட,அடிச்ச பொண்ணும் போலீஸைப் பாக்க ‘ஸ்டாப்புல எறங்குனவுடன கம்பிளைண்ட் கொடுப்பியாம்மா?’ன்னு அவரு கேட்க, அந்தப் பொண்ணும் ‘கொடுக்கிறேன் சார்’ன்னு தைரியமா சொல்லுச்சு
.எப்படியாவது தப்பிச்சு எறங்கிப்போக நெனச்சவனுக்கு எறங்க முடியல.’உள்ளே போலேன்னு சட்டையப்பிடிச்சு இழுத்து கீழே உட்கார வச்சாரு.அவன்கிட்டே டாஸ்மாக் வாடை வேற ‘ஏலே தண்ணிபோட்டா எதையும் செய்வியாலே’ன்னு பல்லைக் கடிச்சாரு ‘இல்ல சார் நான் ஒன்னும் செய்யல சார்’ன்னு படபடப்போட சொன்னான் பையன்.’இல்ல சார் நொல்ல சார் ஒண்ணுஞ் செய்யாமலா செருப்படியெல்லாம் வாங்கிகிட்டு சும்மா இருந்தே? ஒனக்கு எந்த ஊர்ல ‘ன்னு கேட்க பறவக்கோயில் ன்னு ஏதோ ஊரைச் சொன்னான்.
உள்ளே உட்காந்திருந்த இன்னொரு போலீஸ் அவரு பங்குக்கு ஒரு அடி கொடுத்து இழுத்து அவருக்குப் பக்கத்துல ஒட்கார வச்சு தொடையில ஒரு கிள்ளு கிள்ளி ‘என்னலே செஞ்சே’ன்னு இறுகினாரு.
அவனும் உள்ளதைச் சொல்லி ‘தண்ணி போட்டதால தெரியாமத் தப்பு செஞ்சுட்டேன் இந்த ஒருமுறை காப்பாத்துங்க சாரு’ன்னு கையத் தொட்டு கும்பிட்டபோது அவன் கண்ணீரு அவரோட கையில சொட்டுன்னு விழுந்துச்சு. ‘தண்ணியடிச்சா நரகல எடுத்து யாரும் திங்கக் கொடுத்தா நீ திம்பியாலே? இதெல்லாம் செய்யுறதுக்கு முன்னால புத்து வேணுமிலே’ன்னு ஒத்த இடி கொடுத்தாரு. திடீருன்னு பஸஸில டயரு லொட லொட ன்னு சத்தம் போட ஆரம்பிச்ச கொஞ்ச தூரத்துல பஸஸில உட்காந்திருக்கிறவங்களுக்கு பயம் வர்ற மாதிரி டப.. டப.. ன்னு சத்தம் பெரிசாக வர,டிரைவரு ஓரமா எந்த வீடும் கடையும் இல்லாத காட்டுப் பக்கம் நிறுத்திட்டாரு.’போச்சா இதுவரைக்கும் பஸஸூ நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு இப்ப அது வேலையக் காட்டிருச்சி’ன்னு ஒருத்தர் பேச ‘மேல மினுக்கடி உள்ளே புளுக்கடி’ன்னு சும்மமாவா பெரியவக சொன்னாங்க.
.புது டயரு வாங்கினதா கணக்கைக் காட்டிப்புட்டு கண்டமான பஸஸுலயிருந்து டயரைப் புடுங்கி மாட்டிகிட்டு கமிஷன் அதிகாரிகளுக்கும் மந்திரிகளுக்கும் கைமாறுச்சின்னா பஸஸூ மயிரா ஒழுங்கா ஓடும்’முன்னு இன்னொரு பெரிசு நாட்டு நடப்பைச் சொன்னாரு.பஸஸூ டிரைவருக்கு ஒண்ணும் ஓடல.
சில்மிச பையன பிடிச்சுவச்ச போலீஸூ தன்னோட செல்போனுல ஒரு கி.மீ தூரத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேசன்ல இருக்கிற நண்பருகிட்டே நல்ல கத்திய எடுத்துவரச் சொல்ல அவரும் உடனே பைக்கில கத்தியக் கொண்டுவந்து டயரை அறுத்த துமே பழைய வேகத்துல பணகுடிக்குப் பக்கத்துல வரும்போது சில்மிசப் பையன்’என்னோட இடம் வந்திருச்சு எறங்கனும் சார் இந்த ஒருமுற காப்பாத்துங்க சார்
.இனிமே தப்பு செய்யமாட்டேன் சார்’ன்னு கெஞ்சி அழுதான்.போலீஸூம் அந்த அடிச்ச பொண்ணை கூப்பிட்டு ‘இவன விட்டுறலாமா ? இல்ல,நீ எறங்குற எடத்துக்குப் பக்கத்துல ஸ்டேசனுக்கு கூட்டிப் போகலாமா? என்ன செய்யலாம் சொல்லும்மா’ன்னு கேட்டாரு.
‘எல்லாரும் பாக்கும்படியா அவன்பட்ட அவமானத்துக்கு இந்த நாயி திருந்துமுன்னு நெனக்கேன் , விட்டுத் தொலைங்க சார்’ன்னு அந்தப் பொண்ணு தன்னொட பெருந்தன்மையக் காட்டிடுச்சு. பணகுடி ஸ்டாப்பு நின்னதும் அடிபட்ட நாயி வீலுன்னு கத்திகிட்டு போறமாதிரி தலையத் தொங்கப் போட்டுகிட்டே நடயக்கட்டினான்.
ஆரல்வாய்மொழி ஸ்டாப்பு வந்ததும் அந்தப் பெண்ணும் பஸஸைவிட்டு இறங்கி கம்பீரமா போயிகிட்டு இருந்தப்போ’இந்தப் பொண்ணுக்கு இருக்கிற தைரியம் எல்லாப் பொண்ணுங்களுக்கும் இருந்திட்டா காலிகெல்லாம் வாலைச் சுருக்கிக்கிடுவாங்க’ன்னு பஸஸுக்குள்ளயிருந்து பேச்சுவர,பஸஸூல இருந்தவங்க
வச்சகண்ணை வாங்காம பஸஸூ கிளம்பும் வரை அந்தப் பொண்ணை பாத்திகிட்டே யிருந்தாங்க.
__________________
பேரா.க.கணேசன்.கொட்டாரம்.
தீக்கதிர் வண்ணக்கதிர்
No comments:
Post a Comment