என்றும் என் நினைவில் ஓம் முத்துமாரி
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு மேடைகளில் 70 வயது கிழவியாகவும், வெள்ளைக்காரத் துரையாகவும் திறந்த மேடையிலேயே உடனுக்குடன் மேக்கப் செய்து தோன்றி ஆயிரக்கணக்கான மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ஆடிப்பாடி தெருக்கூத்துவடிவத்தை மேடையில் நவீனக் கூத்தாக வழங்கிய பாவலர் ஓம் முத்துமாரி என்ற கலைமாமணி விருது மட்டுமல்ல தமிழக முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரின் உள்ளங்களிலும் இதயவிருது பெற்ற சமூகக் கலைஞன் 14 நவம்பர் அவரது ஊரான திருவேங்கடத்தில் காலமானார்.வயது 70க்கு மேலாக இருக்கும் ,வயதின் காரணமாக இருந்தாலும் சமூகத்தின் பிற்போக்கு அழுக்கு சிந்தனைகளை கலை இலக்கியத்தின் கருவி கொண்டு அடித்துவிரட்டிய மகாகலைஞன் இன்னும் தேசத்தின் தெருவெங்கும் பவணி வந்திருக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம்.அது நமக்கு கொடுத்துவைக்கவில்லை. உளப்பூர்வமான அந்த சமூகக் கலைஞன் அவரின் வாரிசையும் இக்கலைக்கு அர்ப்பணித்துச் சென்றிருக்கிறார். சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் காக்கி உடை ஓநாய்களால் மோசப்படுத்தப்பட்டு கணவன் நந்தகோபால் காவல் நிலையத்திலேயே இறந்தபோதும் ,வாச்சாத்தியில் மலைவாழ் சகோதரிகள் 17 பேரை வீரப்பனை தேடும் வேட்டையில் ஈடுபட்ட காக்கி ஓநாய்கள் சூரையாடியபோதும் அவைகளுக்கெதிராக அக்கினி வரி பாடல்கள் எழுதி தமிழகத்து வீதிகளில் ஆதிக்கவெறியர்களை அம்பல்படுத்திய மனிதநேயக் கலைஞன் ஓம் முத்துமாரி.
மேடையில் நிகழ்த்தும் தெருக்கூத்தில் காலங்காலமாக பெண்களின் மீது வாரி வீசுகின்ற விதவை என்னும் கொடிய நோயை சாடும் விதத்தில் விதவைத் திருமணத்தை அனைவரும் ஏற்கும்படி அழகு பாடல்களும் வசனங்களும் கலந்து மாந்தோப்பில் சந்திக்கும் இளம் விதவையோடு உரையாடி அவளைப் பற்றி தெரிந்துகொண்டு வாதாடி இறுதியில் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். வெற்றிகரமாக திருமணம் முடிகிறது.
அந்த காலத்தில் பெரிய தாய்மார்கள் ஊர்களில் எப்படியெல்லாம் பண்பாட்டு
நடவடிக்கைகளில் பங்கு கொண்டனர் என்றும் குழந்தைகளை தூங்க வைக்க தாலாட்டுப் பாடிய விதத்தையும் எடுத்துரைக்கும்போது :
அழுகிற குழந்தையை தூங்க வைக்க முதலில் மனைவி தாலாட்டுறார்
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அடிச்சாரைச் சொல்லி அழு -என் கண்ணே
ஆக்கினைகள் செய்திடுவேன் ' என்று பாடி தூங்க வைக்க முயற்சிக்கும்போது
உலையில் கொதிக்கும் அரிசி பொங்கி வருவது கண்டு அடுப்புக்கு சென்றுவிட
அருகிலிருக்கும் கணவன் குழந்தையை தூங்க வைக்க முயற்சிக்கும்போது அவன் பாடுகிறான்
'அத்தை அடிக்கவில்லை அரளிப்பூ செண்டாலே
மாமன் அடிக்கவில்லை மல்லிகைப்பூ செண்டாலே
ஆரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை--அவன்
தானா அழுகிறாண்டி ஒரு தம்பி துணை வேணுமின்னு 'என்று நையாண்டி ததும்ப ஒரு கையில் தொட்டில் போல ஒரு டவலை வைத்து ஆட்டிப் பாடும்பொது ஜனங்கள் குலுங்க குலுங்க சிரிப்பார்கள்.
,இன்றெல்லாம் மந்திரி ஊர்களுக்கு வந்துவிட்டால் காத்திருக்கும் தனிநபர் துதிபாடும் பண்பாட்டை கிண்டல் செய்யும் விதமாக அந்த காலத்து பொம்பள மந்திரியும் ராசாவும் வருவாரென காத்துக்கொண்டிருந்து அவர் வருவதற்கு காலதாமதமாக ஆன பிறகு இப்படிப் பாடுவாளாம்
'மந்திரி வருவாருன்னு மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் -நான்
மந்திரி வரவுங்காணேன் -ஞானத் தங்கமே
மல்லிகைப்பூ வாடிப்போச்சே!
ராசா வருவாருன்னு ரோசாப்பூ வாங்கி வச்சேன்
ராசா வரவுங்காணேன் -ஞானத்தங்கமே
ரோசாப்பூ வாடிப்போச்சே! என்று அந்தக காலத்து கிழவி புலம்பிவிட்டுகத்தோடு மனங்கவரும் விதத்தில் பாடுவார்.
கிராமப் புறங்களில் பெண்களுக்கு பேய் பிடிப்பதை 'பேயோட்டுவது ' என்ற நிகழ்ச்சியை நடத்தும்போது உடன் இருக்கும் வேலுவும் பெண்வேடமிட்டு இருப்பார் அவரிடம் கேட்பார்
எங்காவது பிராமணத் தெருவில பேய் பிடித்ததுண்டா?
வேலு ; இல்லை.
எங்காவது படிக்கும் பெண்களுக்கு பேய் பிடித்த:துண்டா?
வேலு ;இல்லை
உழைக்கிறவங்கன்னா பேயிக்கு கூட இளக்காரம் என்று சொல்லி விட்டு
வேலு பேயாட ஓம்முத்துமாரி உடிக்கடித்து பேயோட்ட அந்த கிராமத்தில் விடிய விடிய பேயோட்டும் நிகழ்ச்சியை அப்படியே மேடைக்கு கொண்டுவந்து
பேயோட்டுபவர் பாட பேய் பிடித்த பெண் பின்பாட்டு பாடவேண்டும். பாட்டு இதுவே;
மதுரைக் கடை பொன்னையா சந்தனமாம் கண்ணையா சந்தனமாம்
மாருக்கட்டு மச்சானுக்கு மரிக்கொளுந்தாம் என்றும் பேயாடுபவர் உண்மையிலேயே கழுத்து ஒடிந்துவிட்டது என்றுதான் பார்ப்போருக்கு தோன்றும். அந்த அளவு கழுத்து சுழலும் இப்படியே பாட பின்பாட்டு பேயாடுபவர் பாட இறுதியில் மனோதத்துவ முறையில் பேய் பிடித்தவரிடமிருந்து பேய் ஒடிவிட்டது
என்ற எண்ணத்தை உருவாக்க
இந்தப்பாட்டையும் நாட்டுப்புற பூசாரி உடுக்கடித்து பாட பேய் பிடித்தவர் பாடவேண்டும். பாட்டு இதுதான்;
அத்தி மரம் ஆலமரம் சோலை சோலை-நான்
அண்டிருந்த பெண்ணை விட்டு போரேன் போரேன்
புங்க மரம் புளியமரம் சோலை சோலை -நான்
புடிச்சிருந்த பொண்ணை விட்டு போரேன் போரேன்' என்று பாடி பேயை ஓட்டிவிடுவார். இப்படித்தானடி நம்ம கிராமியக்கலையே பேயையே விரட்டி இருக்கிறது.என்று கூறியவுடன் பின்பாட்டு பாடும் வேலு அட ஆமா.என்று முடிப்பார்.மூடநம்பிக்கையை சாடுவதற்கு ஏராளமான விஷயங்களை கோர்த்துசொல்வார் அதில்பக்திப்பாடலில் முருகனையே கிண்டல் செய்வார்
'திருப்பரங்குன்றத்திலு நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்' என்பதையும்'கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்' என்று பாடிவிட்டு
ஒரு மூடை திருநீரை வாங்கி ஒரு அண்டாவில போட்டு தண்ணியில் கலக்கி
நோய் வந்தவுங்ககிட்ட கோரி கோரி குடிங்கண்ணு கொடுத்தா நோய் போயிருமில்ல அப்புறம் எதுக்கு ஆஸ்பத்திரியெல்லாம் ஆஸ்பத்திரியெல்லாம் தேவையில்லையே' என விழிப்புணர்வை
கொடுக்கும் விதமே தனி சுவையாக இருக்கும்.ட்ட
சுதந்திரப் போராட்ட வரலாற்றை பாட்டு நாட்டியத்தோடு வழங்கி அந்த போரா ட்டத்தையே கண்முண் கொண்டு வருவார். .
மதவெறிகொண்டு மக்களை பிரிவுபடுத்தும் கூட்டத்தின் கொடுமையைக் கண்டும்,
எவ்வளவு சொன்னாலும் மக்கள் சிந்திக்க மறுக்கிறார்களே என்ற வருத்தத்திலும். சமூகத்திலு நடக்கும் அக்கிரமங்களை அநீதிகளைக் கண்டு கோபங்கொள்ள மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் ஒரு பாடல்
தத்துவம் சொன்னாலும் புரயல-இதை
தாரிட்டு இடிச்சாலும் சொனையில்ல
மொத்தமா மேயவும் வழியில்ல-இதுக்கு
மெத்தனம் என்னாவோ தெரியலே -அண்ணே தத்துவம்
குணமாறி என்னவோ நடக்குது -ஒரு
இனத்துக்குள்ளே முட்டி மொறைக்குது
மனம்போன போக்கெல்லாம் போகுது -பின்னே
மண்டியிட்டுத்தானே சாயுது (-அண்ணே தத்துவம்)
பாரத அர்ச்சுணன் மேய்ச்சுட்டான் -அந்த
பரந்தாமனும் மேய்ச்சுப் பாத்துட்டான்
நம்ம பாட்டன் பூட்டனெல்லாம்
மேய்ச்சப்பாத்துப்போட்டு பாதி வழியில செத்துட்டான்(-இதுக்கு தத்துவம்)
என்று கலை இரவு மேடையில் பார்ப்போரை பரவசப் படுத்தியிம் அப்படியே கட்டிப்போட்டும் அவர்களின் காதுகளை கூர்மையாக்குவதோடு சிந்தனையையும் மக்களை நோக்கியே சிந்திக்க வைத்து நாட்டில் பிற்போக்கு தனமான சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு முறைகளை அம்பலப் படுத்தி மக்களுக்கான மாற்று மார்க்ஸீய சமூக அரசியல் பண்பாட்டு பொருளாதார சிந்தனைகளை தனது கிராமிய தெருக்கூத்து மூலமாக அள்ளித் தெளித்து பறந்துவிட்ட அந்த அற்புதமான கலைமாமணி ஓம்முத்துமாரி இன்றும் என்றும் நம் நெஞ்சில் வீற்றிருப்பார். கலைன் கவிஞன் சமூகப் படைப்பாளி ஒருபோதும் மரணமடைவதில்லை. அவருக்கும் என்றும் மரணமில்லை.
:
No comments:
Post a Comment