Wednesday, November 27, 2013

தேவைதான் இரண்டாவது பகுத்தறிவியக்கம் ஏன் எப்படி?



                தேவைதான் இரண்டாவது பகுத்தறிவியக்கம் எப்படி? ஏன்?                    
தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்; என்ற தலைப்பிட்ட எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களின் கட்டுரை நவம்பர் 25, 2013 தேதியிட்ட தி இந்து தமிழ் நாளேட்டில் படித்தேன்..எதையும் நிரூபணவாதக் கண்கொண்டு பார்க்கின்ற இயக்கத்தை ஆரம்பிப்பதே இரண்டாவது பகுத்தறிவியக்கம் என்பதை வலியுறுத்துவதாக புரிந்துகொள்கிறன்.  மக்களை நோக்கி ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இக்கருத்து வரவேற்கத் தகுந்ததே.இந்நாட்டின் மருத்துவ முறை அலோபதி மருத்துவ முறையால் கபளீகரம் செய்யப்பட்டது குறித்து கவலை கொள்வது நியாயமானது..மேம்போக்காக சில விஷயங்களை தொட்டுக்காட்டி மொத்தத்தில் பகுத்தறிவியக்கம் தேவை என்பதை வலியுறுத்துகிறார். இவரது கட்டுரை இன்னும் வரலாற்று ரீதியாக பகுத்தறிவியக்கம் தாக்குதலுக்கு உள்ளான விதம்,இப்போதும் அது சந்திக்கும் சவால்களையும், குறிப்பிட்டிருக்கலாம். நமக்கு கிடைத்த கல்வியும் அந்த கல்வியில் என்ன உள்ளடக்கம் வழங்கப்பட்டது? யாருக்கு கல்வி வழங்கப்பட்டது?யாருக்கு கலவி வழங்கப்படவில்லை.காலந்தோறும் யாருடைய கையில் கல்வி இருந்தது? பகுத்தறிவுக கலவி கொடுக்கவேண்டியது யாருடைய பொறுப்பு? காலங்காலமாக கல்வி யாருடைய கையில் இருந்தது. என்பதையும் ,மூடநம்பிக்கை இந்த கணிணியுக காலத்திலும் அதிகம் தாண்டவமாடக் காரணம் என்ன?என்பதையும் சேர்த்து பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
அறிவியல் சிந்தனை வளராத காலத்தில் மனித சமூகத்தை ஒழுங்குபடுத்த தோன்றியவைதான் மதங்கள் என்று சொல்லப்பட்டது. மதங்கள் நிறுவனப்படுத்தப்பட்ட பின்பு அவைகள் மக்களின் இயல்பான பழக்கவழக்கங்களை
அந்நிறுவனங்களின் நிலைப்புத்தன்மைக்காக வேதச் சடங்குகளாக ஆக்கப்பட்டு,மக்களை மேலாதிக்கம் செய்தன.இதனால் மத எண்ணங்கள் கொண்டோரிடமிருந்தே கலகக்குரல் எழுந்தன. சித்தர்களும் புத்தமும் சமணமும்
மதப் பழைமைகளையும் மூடநம்பிக்கைகளை சாடி மக்களை கூர்மையான திசையில் சிந்திக்க வைத்தன. இந்து மதத்திற்கு அடித்தளமாக அமைந்த ஆரியத்தனம் இந்து மதத்தை மிக அழுத்தமான நிறுவனப்படுத்தியதிலும், மூடநம்பிக்கையில் முதலெடுத்ததிலும், மக்களை சனாதன முறைகளை உருவாக்கி மனு (அ)தர்ம போதனைளகளை மண்ணில் பாய்ச்சி மக்களை பிளவு படுத்தி வெற்றிகண்டது மட்டுமல்ல,இதற்கு எதிராக கலகக்குரல் கொடுத்து நிரூபணவாதத்தை நோக்கி புறப்பட்டவர்களை நாடு கடத்தியும் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றி கொலை செய்தும்ஆட்சியதிகாரத்தில் இருந்தோரின் கருவியாக மாறிய வரலாற்றுப் பின்னணி மக்களை தங்களின் சுயநலத்திற்கு மடையர்களாக ஆக்கியதில் சில மதங்களுக்கு பங்கு உண்டு என்றாலும் இந்து மதத்திற்கு பெரும்பங்கு உண்டு. இந்தியாவிலிருந்து  சீனா போன்ற நாடுகளுக்கு விரட்டப்பட்டது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவம கொண்ட பௌத்தம் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு மருத்துவத்தில் எளிமையாக மக்களை காக்கக்கூடிய அக்குபஞசர் வைத்தியமுறையும் கூடத்தான் அப்படி விரட்டப்பட்ட பின்னணியை இந்நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதா?
       இந்த நிலைமையை மாற்றி விழிப்புணரவு கொடுத்து மனிதனை மனிதனாக பண்புள்ளவனாக மாற்றவேண்டிய கல்வியும் மக்களை சுரண்டுவதற்கு
துணைநின்ற நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்கும் அம்மதத்தின் துணையோடுஅதிகாரத்திலிருப்பவர்களின் கருவியாக ஆக்கப்பட்டு  ஆதிக்கவர்க்கம் தன்னுடைய அதிகாரப்பசியை கல்விமூலம் போக்கிக்கொண்டது. சமூக சிந்தனையாளர்கள் இடைவிடாத கருத்துப்போராட்டத்தால் கல்வியில் சற்று நெகிழ்ச்சியை உருவாக்கி மாற்றுச் சிந்தனைக்கு சன்னமாகவே கதவு திறந்தது இந்த சன்னமான நுழைவாயிலில் கல்விபெற்ற அறஞர்கள் அறிவியல் சிந்தனை மேலோங்க முயற்சி செய்தனர்.
   சுதந்திரம் கிடைத்தபின்பும் ஜனநாயகத் தன்மை ஓரளவு உருவானபின்பும் ஆரியத்தனமும்,எஞ்சியிருக்கிற பண்ணையார்த்தனமும் உள்நாட்டி,வெளியாட்டு வியாபாரத்தனமும் கைகோர்த்துக் கொண்டு தங்களுடைய பழைமையான மூடநம்பிக்கைகளும் அறிவியல் முலாம்பூசி மக்களிடம் ஆடம்பரமாக ஜகஜாலக் கில்லாடித்தனம் செய்வதோடு, உண்மையான அறிவியல் சிந்தனைகொண்ட இயக்கத்தாரை, எளிய மருத்துவத்தை,ஆக்க பூர்வமான பொருளாதார வளர்ச்சிக்கு உருவாக்கம் திட்டத்தை அடையாளமில்லாமல் அழித்தொழிக்கும் நுட்பமான மதவெறி அரசியலாக மாறிப்போன கொடுமையின் பின்னணியே பகுத்தறிவுக் கல்வியை வளரவிடாமல் செய்துவிட்டது.
    அவனன்றி ஒரு அணுவும் அசையாது எனபதற்கிணங்க அரசியலின்றி ஒரு நடவடிக்கையும் இல்லை என்றாகிவிட்டது. எந்தக் கருத்தையும் பரப்புவதற்கும்  அக்கருத்தை செயலாக்கத்திற்கும் கொண்டுவருவதற்கும் ஒரு அரசியல் உண்டு.
 இந்திய மண்ணிலிருந்தே எளிய மருத்துவமுறைகளும் தற்காப்புக் கலை முறைகளும் சீனாவில் குடியேறியதாக ஒரு கருத்தும் உண்டு.தொடுவர்மம்,படுவர்மம் போன்ற வர்ம  வைத்திய முறைகளும் சீனாவில் குடியேறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. அங்கு குடியேறிய அக்குபஞ்சர் வைத்திய முறையை புரட்சியாளர் மாசேதுங் மக்களிடம் அவசியம் எடுத்துச்சென்று சிகிச்சையளிக்க கட்டளையிட்டிருக்கிறார். இன்றுங்கூட இச்சிகிச்சைமுறையில் வைத்தியம் செய்யும் படிப்பிற்கு ஆறரை ஆண்டுகள் என்று கணக்கிட்டு அதன்பின்புதான் மருத்துவப்படிப்பு சான்றிதழ் வழங்குவதோடு பயிற்சி பெற்றோர் கிராமங்களுக்குச் சென்று வீடுகளுக்கும் சென்று நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி நோயை குணப்படுத்துகிறார்களாம். இதுபோன்ற மக்களுக்கு எளிமையான செலவுகுறைந்த சிகிச்சைமுறையை அமுல்படுத்த மக்களை விழிப்புணர்வுபடுத்த தேவை மக்கள்நலம் சார்ந்த அரசியல்தான்
   

  ஆனால் இந்தியாவில், நல்ல போதனைகளை இலக்கியநயம்பட சொல்லிய இதிகாசங்களை உண்மையான வரலாறு என்று மக்களை நம்ப
வைத்து அதன்மூலம் அரசுக்கட்டிலைப் பிடித்தும்,இன்னும் அந்த அரசுக் கட்டிலை பிடிப்பதற்கு துடிக்கின்ற சக்தி எது?
வடமாநிலங்களில் ஃமுந்தைய ஆட்சிகாலத்தில் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் சோதிடத்திற்கென்றே தனித் துறை ஏற்படுத்தி பின்பு எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது.ம், வடமாநிலங்களிலு பள்ளிப்பாடத்திட்டத்தில்    மதவெறியைத் திணித்தது எந்த சக்தி? இந்தியாவுக்கே பொருளாதார வர்த்தகத்தை மேம்படுத்த பயன்படும் திட்டமாகிய சேது சமுத்திரத் திட்டத்தை பாழடிப்பதற்கு
ராமர்பாலம் என்ற வஜ்ராயுதத்தை ஏவி தடைப்படுத்திய சக்தி எது? புராணங்களின் கதாபாத்திரங்களுக்கும்  கடவுள் உருவகத்திற்கும் ஜெயந்திவிழா பெயரில் நாடுமுழுவதும் விடுமுறை கொடுத்து கொண்டாடி பரப்புவது எது? முன்பெல்லாம்
இந்து கோவில்களில் விழாக்களில் பக்திமட்டுமே மையங்ககொண்டிருக்கும்ஃ.ஆனால் சமீப காலமாக இவ்வாலயங்களில் காவிக் கொடிகளே தோரணங்களாக பறக்கவிடுவது எந்த சக்தி?
    காலங்காலமாக குமரி மாவட்டத்தில் நாட்டுப்புறத் தெய்வமாகிய சுடலைமாடனுக்கு நடுகல மாத்திரமே வழிபாட்டு அடையாளமாக இருந்தது. இப்போது மதுரை ,திண்டுக்கல் மாவட்டங்களில் மக்கள் மருதைவீரன் நாட்டுப்புறக் கடவுளுக்கு பயன்படுத்திய உருவத்தில் வெள்ளையம்மாளையும்,பொம்மியம்மாளையும் எடுத்துவிட்டு மருதைவீரன் உருவப்படத்தை மட்டும் எடுத்துவந்து கோயில்களில் பயன்படுத்துவதோடு ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி என்ற பெயராக்கி, இசக்கியம்மனுக்கு அருள்மிகு இசக்கியம்மன் என்றும் பெயர் வைப்பதோடு நாட்டுப்புற வழிபாட்டுமுறையை மாற்றி பிராமணர்களை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி மேல்நிலையாக்கி வைத்த தன்மை ஏன்? பஜனைகளும் சமயமாநாடும் குமரிமாவட்ட கோயில்களில் மட்டுமல்லாமல் மெல்ல மெல்ல அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் நுழைவது ஏன்? போன்ற வினாக்கள் எழும்புகின்றன. இவையெல்லாம் பகுத்தறிவை முடமாக்குமா இல்லையா? இவற்றிற்கெல்லாம் மக்களின் இயல்பான பக்தி வழிமுறைகளுக்கு எதிராக மதவெறி அரசியலும், உள்நாட்டு,வெளிநாட்டு வர்த்தகமும் மக்களின் இயல்பான பண்பாட்டுச் சூழலை திசைமாற்றி தங்களின் ஆட்சி அரசியல் மோகத்திற்கும், வியாபார கோரத்தனமான லாபவெறிக்கும் பயன்படுத்துவதே ஆகும். தமிழகத்தில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தார் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின்பு இவைகளையெல்லான் கண்டும் மௌனம் சாதிப்பது எதனால்? எல்லாம் எல்லாம் எங்கெங்கு சாத்தியமோ
அனைத்து இடங்களிலும் மக்களின் அறியாமை மீது ஏறி அரசுக்கட்டிலில் அமரவேண்டும் என்பதே. இந்த நுட்பமான அரசியலை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டாதவரை மூடநம்பிக்கை காலம் தொடரும்இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கும் சமூகநீதி சமத்துவத்திற்கும் மிகப்பெரிய தடையாக இருப்பது மூடநம்பிக்கையும் மதவெறி அரசியலும்,தற்போது மக்களிடையே நுகரவுவெறியை கிளரிவிட்டு மக்களை சுரண்டக்கூடிய முதலாளியமும்,பன்னாட்டு பகாசூரக்கம்பெனிகளின் ஏகாதிபத்தியவெறிய்ம்தான் என்பதை இனியாவது மக்களிடம் இயக்கமாக்கவேண்டியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் . பாதியை விழுங்கி பாதியை மட்டும் தங்கள் எழுத்துமூலம் சொல்வதென்பது நல்ல மாற்றத்திற்கு உதவாது. வரலாற்றுப் பின்னணியோடு நிகழ்காலத்தை ஒப்பிட்டு எதிர்காலத்துக்கு பகுத்தறிவு வித்துக்களை நமது பேனாக்கள் விதைக்கவேண்டும் என்பதை நமக்கு வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகிறார் ‘நோய்நாடி நோய்முதல்நாடி-அது தணிக்கும்
               வாய்நாடி வாய்ப்பச் செயல்’

                                          இப்படிக்கு
                    முனைவர் க. கணேசன், வணிகவியல் இணைப்பேராசிரியர்
                                   கொட்டாரம். குமரி மாவட்டம்.
                                 9486864990

No comments:

Post a Comment