Friday, April 5, 2013

             தோல் நாவல் சமூகமாற்றத்தின் ஒர் வர்க்கப் போர்வாள்
                                              முனைவர் க.கணேசன். 
      ஒரு குறிப்பிட்ட விஷயம்குறித்து நூறு கட்டுரைகள் எழுதுவதைவிட கதாபாத்திரங்களின் மூலம் காட்சிப்படுத்துவதே வாசகர் மனதில் எளிதில்      கலப்பது மட்டுமல்ல,அவைகள் மனதில் அசைபோட்டு  உலுக்கி, சிந்தனை மாற்றத்தை எளிதில் உருவாக்குகின்றன. இது ஏராளமான படைப்புகளுக்கு பொருந்துமென்றாலுங்கூட ‘தோல் நாவலுக்கு மிகப் பொருந்தும் என்பதே உண்மை.   
      தமிழ்கூறும் நல்லுலகில் மூத்த படைப்பாளி நெல்லை மாவட்டத்தில் பிறந்து திண்டுக்கல்லில் வசித்து வழக்கறிஞர் தொழிலோடு எழுத்தையும் அரவணைத்துக்கொண்டு உயர்ந்து நிற்கும் எழுத்தாளர் டி.செல்வராஜ்.மலரும் சருகும்’’தேநீர் அக்னிக்குண்டம், மூலதனம்,நோன்பு போன்ற நாவல்களையும், யுகசங்கம்ம,. பாட்டு முடியும் முன்னே,வேட்டை ஆகிய நாடகங்களையும் எழுத்துலகில் அளித்துள்ளார். மலரும் சருகும் நாவல் காந்திகிராம பல்கலைக் கழகத்திலும் நோன்பு சிறுகதை தொகுப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூலவர்களில் ஒருவர். எழுத்துலகில் சமரசமற்ற போராளி.எழுத்தும் பேச்சும் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற மாறாத கருத்தைக் கொண்டவர். செம்மலர், தாமரை ஆகிய மாத ஏடுகளில் இவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. பொதுவுடமை இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி அர்ப்பணித்த தோழர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாடமிக்காக எழுதி வெளியிட்டார். மிக தாமதமாக ஆனால்  உலகமயமாதல் பண்பாட்டில் மக்களும் தொழிற்சங்கம் மற்றும் அமைப்புகளும் தங்கள் செயல்பாடுகளை தொடர சந்திக்கும் சவால்களும்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிவியல் யுகத்திலும் தீண்டாமையும் ஒடுக்குதலும் நிலவி வருவதைத் தடுத்திட அனைத்து சாதியினரும் சேர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்திருக்கும் இச்சூழலில் ‘தோல் நாவல் வெளிவந்திருப்பதும்,அது சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருப்பதும்  எழுத்தாளர் ஆளுமைக்கு மட்டுமல்ல நாவலில் உலா வருகின்ற உண்மை தொழிற்சங்க தியாகிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியே!
          சாகித்ய அகாடமி விருது கிடைக்கும்முன்பே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சிறந்த நாவலுக்கான விருது வழங்கி கௌரவித்த 695 பக்கங்கள் விரிந்திருக்கும் இந்நாவலை நான் இளவயதில் நானும் என் சமூகமும் அனுபவித்த, நான் இதுநாள்வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உற்று நோக்கிக்கொண்டிருக்கிற அவலங்களையும் நினைத்துக்கொண்டே வாசித்தபோது கண்ணீரும் கம்பீரமுமான உணர்வு நிலைகளே நாவலை முடிக்கும்வரை.
     இயந்திரங்கள் பயன்படுத்தாத காலகட்டத்தில் திண்டுக்கல் நகரத்தில் பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தன.மனிதர்கள்  இறைச்சியும் ரத்தமும் ஒட்டிக்கிடக்கும் தோலை தூக்கிச் சுமந்துகொண்டு சுண்ணாம்பு கலந்த நீரில் போட்டு அந்தக் குழிக்குள் இறங்கி ஊறவைத்த தோலை எடுத்து ரோமத்தை நீக்கி காயவைத்து பக்குவப் படுத்த வேண்டுமானால் மன தைரியமும் உடல்நிலையும் ஒத்துவரவேண்டும்.இத்தொழிலைச் செயவதற்கு வறுமைக்குள்ளான பெரும்பாலும் தலித் மற்றும் பாவப்பட்ட பிற சாதி தொழிலாளர்களை முறி எழுதி வாங்கிக்கொண்டு அடிமைகளாகவே நடத்துவார்கள். பெண்களும் இவ்வேலைக்கு வருவார்கள்.வேலையின்மீது வெறுப்போ, அங்கு நடக்கும் அவலங்களைக் கண்டு ஓடிவிட நினைத்தாலோ  தொழிற்சாலையைச் சுற்றிலும், நகரங்களிலும் இவர்களைக் கண்காணிக்க முதலாளிகள் அடியாட்கள் வைத்திருப்பார்கள் யாரும் தப்பி ஓட முடியாது. திண்டுக்கல் நகரத்தில் முஸ்லிம் முதலாளிகளும் இந்து முதலாளிகளும் ஏன் சுந்தரம் அய்யர் கதாபாத்திரம் கூட தோல் ஷாப் வைத்திருப்பதாக நாவல் பேசுகிறது.
          1930 முதல் 1950 வரை திண்டுக்கல் நகரத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்த அடிமைளைச் சூழ்ந்திருந்த அவலங்களிலிருந்து விடுதலையாக்கி உத்வேகப்படுத்தி தலித் மக்களுக்கு தன்னம்பிக்கைகளையும், தைரியத்தையும் ஊட்டி சுயமரியாதையைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்க தோழர்களின் வரலாறே இந்த ‘தோல் நாவல் .உள்ளூர் வரலாற்றோடு தேசிய வரலாற்றையும் இணைத்திருக்கிறது. உயிரோடு உலாவிய மனித தியாகிகளை கதாபாத்திரங்களாக சித்தரிக்கிறது.பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் தொழிலாளர் தங்கள் இன்னல்களிலிருந்து வெளிவருவதற்கு நடத்திய போராட்டங்கள்,அதன் பின்னணிகள்,மக்கள் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களோடு தங்களை இணைத்துக் கொண்ட பண்பு , போலீஸ் முதலாளிகளின் கைக்கூலிகளாக செயல்பட்டு நடத்திய அடக்குமுறைகளும் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது போலீஸ்களின் கண்ணில் மண்ணைத் தூவி அடித்தட்டு மக்கள் மத்தியிலேயே தோழர்கள்  தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு சங்க நடவடிக்கைகளுக்கு வழிகாட்டிய தன்மைகளையும் உள்ளிட்ட வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு இது.
           ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை ஒடுக்கப்பட்டோர்தான் தீர்மானிக்கமுடியும் என்று நிலவிவரும் கருத்தோட்டத்தை மறுதலித்து வர்க்க ஒற்றுமை சமூகப்போராட்டத்தில் கால்பதிக்கும்போது இது சாத்தியமாகும் என்பதற்கு சாட்சியாக அமைகிறது இந்நாவல்.தோல் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாம், இந்து மக்களில் வறுமைக்குட்பட்ட மக்கள்தான். முதலாளிகளின் சுரண்டலுக்கும்,மோசப்படுத்துதலுக்கும் எதிராக உருவாக்கிய சங்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். தொழிற்சங்கத்தில் அனைத்து சாதியிலும் ஒடுக்குதலை எதிர்ப்போர் இருந்தமையால்  வர்க்கப் போராட்டம் மூலமாக ஒரு நிமிர்தல் கிடைக்கிறது.
     நாவலில் வருகின்ற அழுத்தப்பட்ட ஆண் பெண் பாத்திரங்களை தைரியசாலிகளாகவே படைத்திருப்பது சிறப்பானது.மாடத்தி என்ற தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தலித் பெண் மாடத்தி மீது முதலாளியில் மைத்துனர் முஸ்தாபாவின் கண் விழுகிறது இன்னொரு பெண் மூலம் தூதுவிடுகிறான்.  அவன் ஏற்கனவே சின்னக்கிளி என்ற பெண்ணை மானபங்கப் படுத்தி கொன்றதோடு பல பெண்களை சூரையாடியவன்.இவனுக்கு பாடம் கற்பிக்கவேண்டுமென்று அவன் ஆசைக்கு சம்மதம் சொல்லி வேறு ஒரு மறைவான மலைப்பக்கம் வரச்சொல்லி காத்திருந்து ,அவன் இuறைச்சியோடும் மதுவோடும் வந்தவனை அவன் தலையை அவளின் காலிடுக்கில் வளைத்துப்போட்டு அவனின் மர்மஸ்தானத்தை பிடித்து கதறக் கதறக் ‘சாமி என்னை விட்டுடு என கதறும் அளவுக்கு ‘ஏண்டா பொட்டச்சிண்டா அம்புட்டு எளக்காரமோ? பறச்சி சக்கிலிச்சிண்டா நீங்க கையப்பிடிச்சா படுத்துக்கணமோ பலபட்டறப் பையபொளச்சுப் போ என்று விட்டுவிட்டு புயலாக அவள் புறப்பட்டாள்.  
          ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகளின் அவலங்களை கல்மனதும் கரையும்படி சித்தரிக்கும் அதே சமயத்தில் அவர்களிடமிருந்தே ஆண் பெண்களிடையே சங்கம் கொடுத்த தைரியத்தால் ஆக்ரோஷம் பொங்கியெழுவதையும் காட்டியுள்ளது இந்நாவல்.
   வெளிநாட்டில் வழக்கறிஞர் படிப்பு முடித்த பழமையை மறுத்த காங்கிரஸ் சோசலிஸ்ட எண்ணங்கொண்ட பிராமண குடும்பத்தில் பிறந்த சங்கரன் சனாதன முறையை கைவிட்டு, தொழிற்சங்கவாதியாகி, பூணூலைக் கழட்டிவிட்டு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் ஒடுக்கப்பட்ட மக்களோடு பழகும் அணுகுமுறைகளையும் அவர்கள் வீடுகளில் மாட்டிறைச்சி,மரச்சீனி கிழங்கு ஆகியவைகளை சாப்பிட்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற விதங்களைப் பார்த்து தொழிற்சங்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும்மக்களுக்கும் அர்ப்பணிக்கும் தன்மை பிரமிக்க வைக்கிறது.
       சாதியத்தை உடைத்து தாசி குலத்தில் பிறந்த பெண்ணை நேசித்து பல முறை போராட்டங்களுக்காக சிறையேகியும் தலைமறைவு வாழ்வு மேற்கொண்டும் சங்கத்திற்கு வழிகாட்டி வந்த சங்கரன் காதலித்த பெண்ணை கைவிடக்கூடாது என நினைத்து தனது பெற்றோர் தனது செயல்பாட்டுக்கு எவ்வித தடையேதும் செய்யவில்லை.திருமணம் நடக்கும்போது இவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருந்த காவல்துறை உளவாளிகள் திருமணம் முடிந்தவுடன் கைது செய்து அழைத்துதச் செல்கிறது. இந்த தியாக வரலாறு பதிவு செய்த தன்மை வரும் தலைமுறைக்கு சாதீயம் குறித்து சிந்திக்கதூண்டும்.
     ஓசேப்பு படிப்பறிவில்லாத மூர்க்கமான தொழிலாளி. முஸ்தாபா சின்னக்கிளியை நாசப்படுத்தும்போது கதவை உடைத்து நுழைந்து அவனை அலாக்காக தூக்கி கட்டையால் மண்டையை உடைத்துவிடுகிறான் .முதலாளியின் அடியாட்கள் ஓசேப்பை பிடித்து அடித்து கொன்றுவிடுவார்கள் என பயந்து அருக்காணி என்ற பெண் தொழிலாளி ஓசேப்பை தப்பியோடச் செய்ய உதவுகிறாள் அவன் தனது சொந்த ஊரான பாண்டிசேரிக்கே போய்விடலாமென ரயிலேறப் போகும்போது முதலாளியின் அடியாட்கள் பிடித்து கட்டிவைத்து அடிக்கும்போது ஆசிரியர் இருதயசாமி வந்து காப்பாற்றுகிறார். ஓசேப்பு தன்னை சங்கத்தில் இணைத்துக்கொண்டு சங்கத்தின் முன்னணி ஊழியனாகிறான். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது எழுதப் படிக்க  கற்றுக்கொள்கிறான்.
     ஒரு நாள் அருக்காணியை அவள் ஊரின் திருவிழாவன்போது சக தோழர் வீட்டுக்கு சென்றபோது தனியாக சந்தித்து தங்களின் பாசத்தை வெளிப்படுத்தி தங்களை மறந்து இணைகிறார்கள். பின்பு பல போராட்டங்கள் தன்னை முடக்கிப்போட்டு விடுகிறது. வளர்ப்புத்தாய் தாயம்மாளுக்கு இவனின் திருமண வாழ்க்கைக்கு ஏங்கும்போது அருக்காணியை விரும்பியது தெரியவருகிறது தாமதமாகவே சங்கத்தலைவர்களுக்கும் தெரியவருகிறது. இதற்குள் அருக்காணியை வஞ்சகமாக அவளது வீட்டாரிடம் பூசாரி சாமியாடி குறிசொல்லி இவளை வயிற்றிலிருக்கும் ஓசேப்பின் கருவோடு மூன்றாம் தாரமாக ஆக்கிக் கொள்கிறான் . பூசாரியின் இச்சைக்கு இணங்காத காரணத்தால் அவளின்
ஸ்தனங்களிலும் பிறப்புறுப்பிலும் சூடு வைத்து கொடுமைப் படுத்திவிடுகிறான். பின் ஒருநாள் அவ்வூருக்குச் சென்று அருக்காணியிடம் தன்னோடு வாழ்வதற்கு .சேர்ந்து வாழ கெஞ்சுகிறான். அப்போது அவள் சொல்கிறாள்
’’ நீ இப்போது சாதாரண ஓசேப்பு கெடையாது.அம்ம சங்கத்திலே ஒரு முக்கியமான ஆளு ஒனக்கும் எனக்கும் வர்ற அவப்பேரு ஒனக்குமட்டுமில்லே சங்கத்துக்கும் வரும்,தலைவர்களுக்கும் வரும். அல்லாரும் சங்கத்துக்காரன் அடுத்தவன் சம்சாரத்துக்கு ஆசைகாட்டி மோசம் பண்றவங்கண்டு ஓவலையாப் போவும். வெறும்வாயை மெல்லுற பேய்க்கு அவல் கெடச்சதாட்டம் ஆயிப்போயிடும் அம்மனால இந்த அசிங்கம் சங்கத் தலைவருக அல்லாத்துக்கும் வரவேணாம். என்று சங்கத்தின் தலைவர்களின் கண்ணியத்தின்மீது கவலைப்படுவதாக வருவது ஓசேப்பைவிட சங்கத்தின் தன்மானக்குரல் ஒரு பெண்மனதிலிருந்து எழுந்துவருகிறது.
    முனிசிபல் தொழிலாளிகளிடம் வேலுநாயக்கர் சாட்டைகொண்டு அடித்து துன்புறுத்துவதும் வேலைக்கு வருகின்ற பெண்களை மோசப்படுத்துவதும் வாடிக்கையாக இருந்தபோது புதிதாக வேலைக்கு வந்த பதினாறு வயதுப் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டபோது சுப்பவாடன் தடுக்கிறான். தாய் தகப்பன் இல்லாத பொண்ணு சங்கத்துக்காரங்க்கிட்டே சொன்னேனா ஒன்னை அசிங்கப் படுத்திப் போடுவாணுவ ‘என்று எச்சரித்தபோது நடந்த வாக்குவாத த்தில் ‘ஒங்களைச் சொல்லி குத்தமில்லேடா அந்த பாப்பாரப் பயலையும் பிரதரிங்குறப் பறச் செருக்கி மவனையும் சொல்லணம்.ஒங்களை அல்லாம் உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கிறானுவ என்று ஆத்திரமூட்டவும் அப்படியே அந்த வேலு நாயக்கரை தூக்கி பீ வண்டியில போட்டு உடம்புபூராம் மலத்தோடு எழுந்து ஓடி அசிங்கப்பட்டுப்போனான். இங்கு சங்கத் தலைவர் சங்கரனையும் பிரதர் தங்கசாமியையும் தரக்குறைவாக பேசியதால் மலமே போராட்ட ஆயுதமாக மாறி இருக்கிறது. சங்கத்தின்மீது ஒடுக்கப்பட்ட மக்கள் வைத்திருக்கும் மரியாதையும்ம பிடிப்பையும் அழுத்தமாக பதிவு செய்கிறது இந்நாவல்.
    ஒரு தோல் தொழிற்சாலையில் எழக்கூடிய சமூக அடிமை கோரத்தனத்தையும பொருளாதார சுரண்டலையும் சித்தரித்து முதலாளியையும் காவல்துறையையும் சரண்டையச் செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர்,முதலாளிகள்,தொழிற்சங்கம் இணைந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைமூலம் போனஸ், வேலைத்தன்மை,வேலநேரம், கூலிபிரச்னை, ஆகியவற்றைப் பேசி உடன்பாட்டுக்கு வந்து  வெல்வதும், அந்தப்பகுதி நகரச்சுத்தி தொழிலாளர்களின் பிரச்னைகளைக் கையிலெடுத்து அவர்களையும் ஒருங்கிணைத்து அடிமையைப் போக்குவதும்,
      அப்பகுதியில்   காவல்துறையை கையில் போட்டுக்கொண்டு தானியங்களை ஏராளமாக பதுக்கிவைத்து கள்ளச்சந்தை பதுக்கல் செயது அடாவடித்தனம் செய்யும் முதலாளிக்கெதிராக தோல் தொழிலாளர் சங்கம்,நகரச்சுத்தி தொழிலாளர்க்ள் முஸ்லிம் மக்கள் இன்னும் நகரத்து ஜனங்களைத்திரட்டி போராடி முதலாளியை கைது செய்யவைத்து தானியங்களை பறிமுதல் செய்து மக்களுக்கு வினியோக்கச் செய்து,  சமூகப் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக இயக்கம் நடத்துவதும்
     அப்பகுதி பெண்களை இழிவுபடுத்தும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தனமானத்தைப் பெற்றுத் தருவதுமான பதிவு தற்போதும் நிலவும் இக்கொடுமைகளுக்கு தீர்வு காண நமக்கு வழிகாட்டுகிறது.
     கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அதில் சங்கத்திற்கு வழிகாட்டிய தோழர் வேலாயுதம் சிறையில் இருந்த படியே வெற்றிபெருகிறார். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இரண்டற கலந்துவிடும் தலைமையை நமக்கு காட்டுகிறார்.
    இரண்டாம் உலக யுத்தத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி உள்ளூர் வரலாற்றைத் தொட்டு உலக அரசியல்வரை நாவல் விளக்குவதோடு, அரசு,காவல்துறை,சுரண்டல்வாதிகள் முதலாளிகள் மக்களைச் சுரண்டுவதற்கும் பழிவாங்குவதற்கும் கைகோர்த்திருப்பதையும் இவைகளுக்கு எதிராக அனைத்து சாதிகளிலும் மனிதநேயங்க கொண்டவர்கள்,பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பொது ஜனங்கள் திரண்டு போராடி வெற்றுபெறும் சமூகத் தன்மையை அற்புதமாக புரியவைக்கிறது இந்நாவல்
   கதாபாத்திரங்கள் அனைத்தும் சில பெயர்கள் மாறியிருந்தாலும் உண்மையில் வாழ்ந்து வழிகாட்டியவர்கள்தான்.குறிப்பாக கணேச அய்யர் நகர்மன்ற தலைவர்தான்.தோழர்கள் ஏ பாலசுப்ரமணியன்(சங்கரன்) எஸ் ஏ தங்கராஜ்(பிரதர் தங்கசாமி) இவர் பின்னாளில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பொதுத் தொகுதியில் எம் எல் ஏ வாக வெற்றிபெற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். எரியோடு மதனகோபால், சார்லஸ்,இவர் டிசம்பர்2012ல் தான் இறந்தார்.இன்னும் பலர் .நாமனைவரும் படித்து நெஞ்சிலேற்றி பரப்பவேண்டிய தலைசிறந்த நாவல்.
 









  

No comments:

Post a Comment