முத்தாலம்மன்
கதை
பேரா.முனைவர் க கணேசன்
நாட்டுப்புற தெய்வங்களுக்கு தனித்தனியாக ஏராளமான
கதைகள் உண்டு. அவற்றை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். சுடலைமாடன்,இசக்கியம்மாள்,
காளியம்மாள், மதுரை வீரன்,காத்தவராயன்,இருக்கன்குடி மாரியம்மாள், இன்னும் மாவட்டங்கள்
தோறும் ஏராளமான தெய்வங்கள் உள்ளன. இவைகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர் கோம்பை, ஸ்ரீராம்புரம்,
தாடிக்கொம்பு, குஞ்சுவீரன் பட்டி, மதுரை
உத்தபுரம் உட்பட ஏராளமான ஊர்களில் கொடைநடத்தி வழிபட்டுவரும் நாட்டார்தெய்வமான முத்தாலம்மன்
கதையும் ஒன்று. இது கதைப்பாட்டாக வழிவழியாக
பாடப்பட்டு, பங்குனி மாதத்தில் கொடைவிழாவிற்கு முன்னால் சாமி சாட்டுதல் என்ற நிகழ்வு
சுமார் பதினைந்து நாட்களுக்கு முன் பறை தொழில் கலைஞர்களால் தினமும் மாலை வேளைகளில்
கோயிலுக்குமுன் பாடப்பட்டு பூசை செய்வார்கள்.
கொடைவிழா மூன்று நாட்களாக நடைபெறும். கல கலப்பான
மகிழ்ச்சியும்,சொந்தக்காரர்கள்,குடும்பத்தினரை பல ஊர்களிலிருந்தாலும் ,அனைவரையும் அழைத்து
மூன்று நாட்களும் வீட்டில் தங்கவைத்து, ஆனந்தமான அசைவ உணவு பரிமாறி,உறவுகளின் ஒற்றுமையை
மிக நெருக்கமாக பராமரிப்பார்கள். கொடைவிழாவின்
முதல் இரண்டு நாட்களும் விடிய விடிய நாடகங்கள்
நடத்துவார்கள். பவளக்கொடி ,வள்ளிதிருமணம்,சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான
காண்டம், பொன்னர் சங்கர்,ஆகிய நாடங்களில் ஏதாவது இரண்டை பிரபலமான நாடக கலைஞர்களை அழைத்து
வந்து நடத்துவார்கள். மக்களின் இயல்பான பக்தியே மேலோங்கியிருந்தாலும், மக்களின் இளைஞர்களின்
மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
சாமி சாட்டியவுடன் வீடுகளில் ,நவதானியங்கள் பயறுவகைகளை
ஊறப்போட்டு வளர்த்து முளைப்பாரிகளாக தயார் செய்துவைப்பார்கள். கொடை விழாவின் இரண்டாவது
நாளில், மாவிளக்கும் முளைப்பாரியும், பொங்கல் வைப்பதும் நடைபெறும். முளைப்பாரிகளை கோயிலின்
முன்னே வைத்து பெண்கள் கும்மியடித்து பாடி ஆனந்த மடைவார்கள். இளைய திலகங்களான ஆண் பெண்
கூட்டத்திற்கு வித்தியாசமான மகிழ்ச்சி துள்ளி விளையாடும். இரண்டாவது நாளில் குறிப்பிட்ட
நேரத்தில் பறைக் கலைஞர்களால் முத்தாலம்மன் கதைப்பாட்டை படுகளக் காட்சியாக்கி, ஒரு மிக
அற்புதமான வீதி நாடகமாக மக்களிடம் பக்தி கலந்த பரவசத்தோடு படைப்பார்கள். கொடைவிழாவின்
முத்தாய்ப்பான நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும். பிராமணி, வைதீக சடங்காச்சாரங்களுக்கு
அங்கு இடமே இருக்காது.
கதையில் வருகின்ற வீரபாகு சாம்பானின் மனைவி புழுக்கச்சி
தனது குழந்தைகளை கொன்று நால்வரையும் கிடத்திவிட்டு ஒப்பாரி வைப்பதும், நான்கு சிறுவர்களை
படுக்கவைத்து வாயில் வாழைப் பழத்தையும், வயிற்றில் அரிசி தேன் கருப்பட்டி கலந்து தயாரித்த
மாவு உருண்டையையும் வைத்து வேட்டியைக் கொண்டு மூடிவிடுவார்கள். நான்கு பையன்களும் வாழைப்
பழத்தை அப்படியே வாயில் வைத்திருக்கவேண்டும். சுமார் ஒருமணி நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும்,
நாற்பத்தைந்து வருடங்களுக்குமுன்பாக அந்த நான்கு பேரில் நானும் ஒருவன். மனைவி புழுக்கச்சியாக
எனது மாமா வையாபுரி புளுக்கச்சி வேசம் போட்டு, முறத்தால் மார்பிலே அடித்துக் கொண்டு
வருவார், எனது சித்தப்பாக்களான சுப்பையா, ராமன் ஆகியோர் மாறி,மாறி ஒப்பாரி பின்னணியாக
பாடுவார்கள். புழுக்கச்சியாக வரும் எனது மாமா
நான்கு பையன்களையும் சுத்தி சுத்தி வரும்போது “டே உறங்கிறாதே’ என்று காதுக்குள் சொல்லிச்செல்வார்.
நாங்கள் நான்கு பேரும் படித்துக்கொண்டிருக்கிற
பையன்கள். வீட்டில் இப்படிப் படுகளத்தில் படுப்பது நேர்த்திக் கடன், இதைச் செஞ்சிங்கன்னா
படிப்பு நல்லா வரும் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பக்தியோடு நாங்களும் நிகழ்ச்சி
முடியும்வரை படுத்திருப்போம். நெட்டைக் கழுமரத்தில் ஒரு அம்பல காரரும், (சில ஊர்களில்)
குள்ளமான கழுமரத்தில் வீரபாகு சாம்பான் என்ற கதாபாத்திரமும் தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.
ஒப்பாரிப் பாடல்களும் அவர்களின் காட்சிப் படிமங்களும் பார்க்கின்ற மக்களிடையே அந்த
கதையின் உள்ளடக்கம் உணர்ச்சிப் பெருக்கோடு கண்ணீரை வரவழைக்கும்.அப்படி ஒரு அற்புதமாக
கொடைவிழாவாக இருக்கும்.
மூன்றாம் நாள் முத்தாலம்மன் சாமியை தூக்கிக் கொண்டு
ஊரின் எல்லையில் வைக்க அதே பாடலுடன் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
அதில் மஞ்சள் தண்ணீர் சொந்தங்களில் மாமன் மச்சான், மதினி கொளுந்தி கொளுந்தன் உறவு முறைகளில்
திருமணம் ஆகாதோர் மத்தியிலும், திருமணமானோர்
மத்தியிலும் ஊற்றப்பட்டு குதூகலிப்புக்கு உள்ளாவார்கள். இந்த மஞ்சத்தண்ணீர் சொந்தங்களை
கடந்தும் சாதிவிட்டு சாதியும் அருவியாய் கொட்டும். அன்றைய தினம் இப்படி ஆண்களும் பெண்களும்
விளையாடுவதை யாரும் பிரச்னையாக்குவதில்லை. அன்று சுதந்திரமான கேலிச் சிந்தனை சிறகடிக்கும்.
இருபாலர்மத்தியிலும் சாதி கடந்து கூட காந்தப் பார்வை கவ்விப்பிடித்து, ஆதிப் பண்பாட்டின்
மிச்சம்தான் இது என மின்னலாகப் பளிச்சிட்டு மறையும் ..
ஆனந்த கொடைவிழாவின் முத்தாலம்மனின்
கதை இதுதான்
வடக்கே வடதேசம் காசி மாநகரம் என்ற பட்டிணம்
இருந்தது. அந்த கிராமம் மிக அழகாகவும் சிறப்புத்தன்மையும் வளம் கொழிக்கும் ஊராக இருந்தது.
அந்த கிராமத்தில் துளசி அம்மாள் முத்திமாணிக்கம் செட்டியார் தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.அவர்களுக்கு
பல வருடங்களாக புத்திர பாக்கியம் இல்லை.
இவர்களுடைய
தொழில் ராட்டை நூல் நூற்று விற்பனை செய்வதுதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகவும்
கவலையோடு வாழ்ந்துவந்தனர். 1
ஒருநாள்
இவர்களின் கனவில் ஒரு மாமுனவர் தோன்றி இவர்களின் ஆழ்ந்த கவலையை பார்த்து கேட்டறிந்தார்.
அவர்களும் தங்களுக்கு திருமணம் முடித்து நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை
என்று அவரிடம் வெளிப்படுத்தினர். அப்படியென்றால்
நான் உபதேசம் சொல்கிறேன் கேள் என்று’ தில்லை
சிதம்பரம் , திருவேலன் கைலாயம் உச்சியில் சென்று
ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு கடும் தவம் செய்தீர்களென்றால் பிள்ளை வரம் கிடைக்கும் என கூறினார் ,
தம்பதியர்
இருவரும் அப்படியே அந்த மலைநோக்கி சென்று கடும் தவம் செய்தார்கள். அந்த சமயத்தில் பார்வதி
பரமசிவன் தோன்றி அவர்களின் தவத்தின் காரணத்தை அறிந்து கொண்டு பிள்ளைவரம் கொடுத்தார்கள்.
பராசக்தி தனது கழுத்தில் இருந்த முத்து மாலையில்
இருந்து ஒரு முத்துவை எடுத்து துளசி அம்மாள் கையில் கொடுத்து ‘இந்த முத்தை மூடிய கை திறக்காமல் வீடு சென்று
ஒரு யாகம் வளர்த்து அதில் இந்த முத்தை போட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு பிள்ளை வரம்
கிடைக்கும் போய் வாருங்கள்’ என்று அனுப்பினர்.
அவர்களிடம் வாங்கிய முத்தை மூடிய கை திறக்காமல்
வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாயவர் முன்தோன்றி, இருவரும் எங்கு சென்று வாரீர் என்று கேட்க , மாணிக்கம் செட்டியார் ‘சிவனிடத்தில் ஒரு குழந்தை வரம் வாங்கி வருகின்றோம்’
என்று கூறினார். இவர்கள் முன்பிறவியில் மக்களுக்கு, மாமனார், மாமியார் கொடுமை படுத்தியவர்கள்,இதை
அறியாமல் சிவபெருமான் வரத்தை கொடுத்துவிட்டார்களே ஆகவே தருமம் நிலைநாட்டி அதர்மத்தை ஒழிக்கவும், கொடுத்த வரத்தை
ஒரு பெண்ணாக சபிக்க வேண்டும் என்று நினைத்து ‘பிரமா ‘ஊர் சென்று யாகம் வளர்த்து அதில் இந்த முத்தை போடுங்கள் ஒரு பெண் குழந்தை
உங்களுக்கு பிறக்கும்’ என்று கூறி பிரமா மறைந்து விட்டார்.
அவ்வாறே
இவர்கள் யாகம் வளர்த்து அந்த முத்தை யாகத்தில் போட்டனர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை
பிறந்தது. முத்தினால் பிறந்ததால் (முத்தினால் வந்ததால்) முத்தாலம்மாள் என்று பெயரிட்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர்.
முத்துமாணிக்கம் செட்டியார் வெளியூர் சென்று முத்து ,வைடூரியம் சம்பாரித்து வரவேண்டும்
என நினைத்து வெளி மாநிலம் சென்றுவிட்டார். அதன் பிறகு தாயும், பிள்ளையும் ராட்டை சுற்றி
நூல் நூற்று ,அதை விற்று பிழைத்து வந்தனர்.
இந்த நூற்று வைத்த நூலை வாங்குதற்கு வீரபாகு
சாம்பான் தெருத்தெருவாக நூலை வாங்கிச் செல்ல வருவான். அந்த சமயம் முத்தாலம்மாள் தனது
வயதுள்ள பிள்ளைகளுடன் விளையாடச் செல்வதுண்டு.
அந்த சமயத்தில் தனது தாயார் துளசி அடுப்பில் உலை வைத்து அரிசி போட்டு விட்டு முத்தாலம்மாளிடம் ‘வீரபாகு சாம்பான் நூற்றுவைத்த நூலை
எடுக்க வருவான். நீ நூலையும் நூற்றுக்கொண்டு அடுப்பையும் எரித்துக் கொண்டிரு என்று
சொல்லிவிட்டு வெளியே தண்ணீர் எடுக்கச் சென்றுவிட்டாள். அடுப்பை எரிக்க மறந்துவிட்டு
முத்தாள் விளையாட்டுப் பிள்ளைகளோடு விளையாடச் சென்றுவிட்டாள். தனது தாயார் துளசியம்மாள்
வீட்டுக்கு வந்து பார்க்கும்போது அடுப்பும் எரியவில்லை. போட்ட அரிசி போட்டதுபோல் இருக்கிறது.இதைப்
பார்த்து கோபங்கொண்டு ‘ஏண்டி நூல் எடுக்க உன் பறப் புருஷன் வருவானே அவனுக்கு எந்த நூலைப்
போடுறது இப்படி விளையாடிக்கொண்டிருக்கிறாயே!நீ வீட்டை விட்டுப் போடி.கண்ணுலேயே முழிக்காதே
என்று கண்டபடி ஏசினாள் துளசி அம்மாள்
தனது
தாயார் இப்படி தகாத வார்த்தைகளை வீசிவிட்டு சென்றுவிட்டாளே என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
ஒட அழுதுகொண்டிருந்தாள் சாம்பான் வந்தால் அவன்கூட போய்விடலாம் என்று எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் முத்தாலம்மாள்..
வீரபாகு சாம்பானவன் காசிப் பட்டிணம் முழுவதும்
நூலை எடுத்துக்கொண்டு பொதி கட்டி ஒரு மாட்டின்மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அப்போது
முத்தம்மாள் அவனின் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். வெகுதூரம் சென்ற பிறகு
வீரபாகு சாம்பான் முத்தம்மாள் பின்தொடர்வதை பார்த்து ‘ஏன் அம்மா என் பின்னாலே வருகிறாய் என்று சாம்பான் கேட்க, ‘எனது தாயார் என்னை தகாத வார்த்தைகள் கூறி ஏசி
விட்டாள்.உன் பறப் புருஷன் வருவான் நீ அவனோடு போய்விடு வீட்டுக்கு வரக்கூடாது என்று
பேசிவிட்டாள்.ஆகவே நான் உன் பின்னால் வருகிறேன் என்று கண்ணீர் பெருக்கோடு அழுதுகொண்டே சொன்னாள் முத்தம்மாள்
அப்போது சாம்பான் ‘நீயோ மேல்சாதிப் பெண் நான் கீழ்சாதி சார்ந்தவன் பறையன் என்பின்னால வரலாமா
தாயே?’ என்று கேட்டான். அதற்கு முத்தாலம்மாள் ’நீ என்னென்ன சொன்னாலும் ஏதேதோ உரைச்சாலும் நான் உன்னோடுதான் வருவேன். இல்லையின்னா
வேறு கெதி இல்லை’என்று கூறி அழுகிறாள். சாம்பான் பதட்டத்தோடு அய்யோ எல்லா வீட்டுலேயும் தாயார் ஏசுவது இயல்புதானே
இதுக்கெல்லாம் கோபங்கொள்ளாம வீட்டுக்கு போம்மா, நான் கொண்டு வந்து விட்டுருறேன்’ என்று
மன்றாடுகிறான். அவள் அடம்பிடித்து மறுக்கிறாள்.
சரி என்று ஏற்றுகொண்டு வந்து கொண்டிருக்கும் வழிதனில் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்கிறது.
சாம்பான் ‘எனக்கு மனைவி பிள்ளைகளெல்லாம் இருக்கிறார்கள்
நான் எப்படிம்மா உன்னைக் கூட்டிச் செல்வது?’ என்று கூறவும் அதற்கு முத்தாலம்மாள்
‘நான் செத்தாலும் உன்னை விட்டா வேறு துணை ஏதும்
இல்லை என்று அழுத்தமாக கூறியபிறகு, வீரபாகு சாம்பான் மன உறுதிகொண்டு ஊருக்கு அழைத்து
வருகிறான்.
வருகின்ற
வழியிலே ஒரு வேளார்(சட்டி பானை செய்வோர்) வீடு சென்று ‘இந்த பொன்னு என் கூட அடம்பிடித்து வந்து விட்டது இன்று ஒருநாள் மட்டும் தங்கள்
வீட்டில் இருக்கட்டும அடுத்தநாள் நான் வந்து கூட்டிகிட்டுபு போறேன்.’ என்று கேட்க
வேளார் ஒத்துக் கொண்டார்.
ஆனால்
வேளார் வீட்டில் சண்டை சச்ரவு வர ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு வேளார் சாம்பானை அழைத்துவந்து
‘நீ பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றுவிடு என்
வீட்டில் சண்டையும் சச்சரவும் விந்துவிட்டது’ என்று கூற வீரபாகு சாம்பானும் அழைத்துக்கொண்டு
சென்றான். முத்தம்மாளை அழைத்துக்கொண்டு தான் தங்கியிருக்கும் ஊரின் சேரிக்கு மேற்குப்
பக்கம் மந்தையில் சீரான குடுசை கட்டிவைத்து
அதற்கு தேவையான வேப்பம் தளை , மாஇலை எடுத்து பரப்பிவிட்டு முத்தாளை தங்க வைத்துவிட்டு
வீரபாகு வீட்டுக்கு சென்றான் வீரபாகு.
, அந்த பெண் வந்த விபரத்தை அறிந்துமனைவி ‘மானம் மார்க்கம் கெட்ட என் பறையா போனவன் பின்னாள்
வந்த பெண் யாருடா என்று கேட்டாள்.அதற்கு அவன் ‘அந்த பெண் மேல் குலப் பெண் மந்தையில் குடியிருக்கிறது.அந்தப் பெண் நமக்கு
அல்லும் பகலும ஆன துணையாக இருக்கும்.’ என்று கூறினான். இதைக் கேட்டு வீரபாகுவின்மனைவி
முத்தாலம்மாளை தகாத வார்த்தைகூறி வெறுப்போடு வார்த்தைகளை கொட்டித் தீர்த்தாள்
. வீரபாகு மனது உறுதியோடு முத்தம்மாளுக்கு வேண்டிய
அரிசி பருப்பு மரக் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து பசியாற ஏற்பாடு செய்தான். சேரியில்
அனுதினமும் மாட்டுக் கறி புழங்கிக்கொண்டு இருக்கின்றது. அந்த பெண் சின்னஞ் சிறு குழந்தை
கறி மேல் ஆசைப்பட்டிருக்கும் என்று வீரபாகு
மன ஏக்கத்தோடு ஆடு திருடி வருவோம் என்று
நினைத்து வீட்டைவிட்டு வெளியேறி முன்பின் திருடிப்
பழக்கமில்லாத வீரபாகு பொழுது மறைய பதறி ஆட்டுக்கிடை
நோக்கி நடந்தான் வீரபாகு.
அந்த ஊரில் கருப்புடையார் ஆட்டுப் பட்டிக்கு சென்று,
பட்டியை அவிழ்க்கும்போது,அந்த பட்டியில் காவலுக்கிருந்த கருப்புடையார் பார்த்துவிட,அவனிடம்
‘ஏன் சாம்பான் இன்னேரத்தில் வந்து இருக்கின்றாய்?’
என கேட்க ‘எனக்கும் மந்தையில் இருக்கும் முத்தம்மாவுக்கும்
ஒருவிவாதம் சாமி அது ஆட்டிற்கு மேல் பல் கீழ் பல் எத்தனை என்பதுதான் அதற்குத்தான் அது
உறுதிப் படுத்த பார்க்கவந்தேன் ’’ என்று பதில் சொன்னான். ‘சரி சரி பாத்துட்டுப்
போ என கருப்புடையார் கூறவும், மனக்கலக்கத்துடன்
வீட்டுக்குச் சென்று படுத்துப்பார்த்தான்.
அவனுக்கோ
உரக்கம் வரவில்லை. மறுபடியும் எழுந்து நடந்து வந்து ,அடுத்த ஊரைச் சார்ந்த வெள்ளுடையார்
ஆட்டுப் பட்டிக்கு சென்று அங்கு ஒரு ஆட்டைத் திருடி வெளியே வரும்போது கையும் களவுமாக
பிடிபட்டு விட்டான். அவனை இழுத்து வந்து மந்தையில் நிறுத்தி அந்த ஊர் நாட்டாமை நாயக்கர்
ஊர் பெரியதனம் ஆகியோரை அழைத்துவந்து இவன் செய்ததை கூறவும், ஊர்ப் பெரியவர்கள் அனைவரும்
இவனுக்கு இந்த கழுகு மரத்தில் தொங்க விட்டு ,அதன் கீழே அவன் திருடிய ஆட்டையும் கட்டிவைத்துவிட்டு
வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
அந்த சமயத்தில் அணில் வேட்டை யாட அம்பலகாரர்கள் வந்தார்கள் .யாரை நினைத்து அறுந்தவம் செய்கின்றாய்? எவரை நினைத்து
இந்த தலைகீழாக தொங்குகிறாய்? என்ற வீரபாகுவிடம் கேட்டார் அம்பலகாரர். அதற்கு ‘சாமி அதோ பாருங்கள் இந்த வெள்ளாடு கட்டியிருக்கு
இந்த கழுவு மரத்தில் இன்று ஒரு பொழுது மட்டும் தலைகீழாக தொங்கினால் ஊரார் வந்து சகுந்த
சன்மானங்கள் வழங்குவார்கள்’ என்று கூறினான் வீரபாகு.
‘அப்படியென்றால்
என்னைத் தொங்க விட்டு நீ போயிடு என்றார் அம்பலகாரார்.அதன்படி அம்பலகாரரை ஏற்றிதொங்க
விட்டுவிட்டு சென்றுவிட்டான் வீரபாகு .மறுநாள் காலையில் ஊரார் வந்து பார்த்ததும் அம்பலகாரர்
தொங்குவதை அறிந்து
, வீரபாகுவை
இழுந்து வந்து ஒரு குட்டையான கழுவு மரம் வெட்டி அதில் வீரபாகு சாம்பானை ஏற்றி தொங்கவிட்டனர்.
அப்போது தனது கணவன் தொங்கும் செய்தி கேட்டு ,வீரபாகு சாம்பானின் மனைவி தனது நான்கு மகன்களையும்
அழைத்து, முத்தாள் குடிசை முன்பு நின்று ‘உனக்கு
அபயம் எனது நான்கு மகன்களையும் கொல்கிறேன் .என் குடும்பத்தை கெடுத்த பாவி என கோபப்
பட்டு கொலை செய்து அவர்களின் ஈரலை எடுத்து
அவர்களின் வயிற்றில் வைத்து ,அவர்களின் ஆணுறுப்பை அறுத்து அவர்களின் வாயில் வைத்து,அவர்களின்
ரத்தத்தை எடுத்து ,முத்தம்மாளின் குடிசையில் மேல் தூவி தகாத வார்த்தை சொல்லி திட்டித்
தீர்த்தாள்.
அதற்கு
பிறகு முத்தாலம்மாளுக்கு ஆங்கார கோபம் வந்து அக்கினிப் பொறி பறக்க வெளியே வந்து நின்றதைக்
கண்ட வீரபாகு மனைவி ,காந்தாரி(புளுக்கச்சி) ரூபத்தை பார்க்கவுமே அவளுக்கே மனம் கலங்கி
நின்று’அம்மா நான் யாரோ எவரோ என உன்னைப் பற்றி
தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டேன்.நான் அறியாமல் எனது பிள்ளைகள் நால்வரையும் கொலைசெய்து
விட்டேன் தாயே! நீ அண்ட நெருப்பு என தெரியாமல் செய்துவிட்டேன் என்று அழுது புரண்டு
அம்மா காலில் விழுந்து கும்பிட்டாள்.
முத்தாலம்மாள் ‘என்னைப்
படைத்த சக்தி சிவன் பிரமா அழைத்து நான் பெண்ணாகப் பிறந்து, இந்த மண்ணுலகில்,மானிட ஜென்மத்திடம்
இப்படி ஒரு தகாத வார்த்தைகளுக்கு ஆளானாய். அதற்கு சக்தி, சிவன் பிரம்மா பார்த்து
‘அம்மா நீ ஏன் கலங்குகிறாய்?’உன்னை ஏன் படைத்தோம்
தெரியுமா? அடங்காத மானிடரை ஆட்டிப் படைக்கும் வல்லமை உனக்கு உண்டு. ஆகவே இந்த மண் உலகில்
வாழ்கின்ற மக்களுடைய தருமத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை ஒழிக்க காட்சி அளிக்கவேண்டும்.
என ஈஸ்வரி சிவன் பிரமா, கட்டளை இட்டனர்.
முத்தாலம்மாள் மனம் இறங்கி செத்தவர்களை எழுப்பி திருநீரும்,
தீர்த்தமும் வர வழைத்து இறந்த பிள்ளைகள், வீரபாகு சாம்பான், அம்பலகாரர் மேல் தெளித்தவுடன்,
அவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். அதன்பிறகு வீரபாகுவை அழைத்து நீயும் உனது மனைவியும் இப்போது எப்படி உன் குழந்தைகளைக்
கொன்று எனது குடிசையைச் சுற்றி ஒப்பாரி வைத்தாளோ, அதுமாதிரி வருடம் ஒருமுறை கொடை நடத்தவேண்டும். என்றும், அம்பலகாரரை அழைத்து நீ அடுத்த சொத்துக்கு ஆசைப் பட்டுவிட்டாய் நீயும்
கொடை நடத்தும் நாட்களில் வரும்பொழுது நீ ஒரு கழுவு மரத்திலேறி தொங்க வேண்டும் என்றும்
உனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறினாள்.
ஆட்டுக்
கிடைக்காரர்களான கருப்புடையார் வெள்ளுடையார்களை அழைத்து ‘ஏதோ வீரபாகு சாம்பான் எனக்காக ஆடு திருட உங்களது பட்டிக்கு வந்த காரணத்தால்
வருடம் ஒருநாள் கொடைநடத்தும்போது ஒரு ஆட்டுக்குட்டியைக்
கொண்டு வர வேண்டும். வேளாரை அழைத்து நான் ஒருநாள் உனது வீட்டில் தங்கி வந்தது காரணமாக
எனது உருவம் செய்து கொடை நடத்தும் நாட்களில் என்னை அழகுபடுத்தி வழிபட்டு வா உனது குடும்பம்
தழைத்தோங்கும் என்று கூறியது முத்தாலம்மாள்.
வீரபாகுவை அழைத்து. அதன்படி வீரபாகு சாம்பான்
ஊருக்கு எல்லையில் கட்டைகளை அடுக்கி முத்தாலம்மாள் அக்கினிப் பிரவேசம் செய்து கொண்டதுஉன் பின்னால் வந்ததின் காரணமாகவும எனது தாயார் தகாத வார்த்தைகள் பேசி உன் பின்னால்
தள்ளி விட்டதின் காரணமாகவும்,என்மீது உன் மனைவி என்மீது கோபங்கொண்டு பேசியதையும் முத்தாலம்மாள் கூறினாள் .நான் இதற்கு மேல் உயிருடன் இருப்பது அவ்வளவு
நல்லதல்ல எனக்கு சந்தனக் கட்டைவெட்டி தீமூட்டு. இதில் அக்கினி பிரவேசம் செய்கின்றேன்.
என்று கூறி மறைந்தாள்
ஒருவருடம் கழித்து முத்தாலம்மாள் வீரபாகு கனவில்
வந்து காட்சாயளித்து நான் இறந்து தெய்வமாகி
விட்டேன். நான் அக்கினி பிரவேசம் கொண்ட இடத்தில் கொசவ சேலையும் பூச்செண்டும் எலுமிச்சங்கனியும்
அடையாளம் உள்ளது. நீ வந்து அந்த இடத்தில் வெட்டியெடுத்துப் போய் பெரியதனக் காரரிடம்
ஒப்படைத்து கோயில்கட்டி என்னை நினைத்து கொடை நடத்தச் சொல். முன்பு சொன்ன மாதிரியே உன்னையும்
உனது மனைவி மக்களையும் ஊராரையும் வேளார் அம்பலகாரர், கருப்புடையார் வெள்ளுடையார் அதோடு
அனைத்து மக்களையும் பாதுகாத்து கொள்கிறேன்
என்று முத்தாலம்மாள் வீரபாகு சாம்பானிடம் கனவில் சொன்னது.
‘எனது கனவில் கூறிகின்றாயே தாயே மேற்குடி மக்கள்
நம்புவார்களா என்று வீரபாகு கேட்டான். ‘நான் அவர்களிடத்திலும் காடசியளிக்கிறேன்’
என்று கூறியது முத்தாலம்மாள் .
அதன்படி ஊர் நாட்டாமை,அம்பலம் ஊர் பெரியதனம் பூசாரி இப்படி
முக்கியமானவர்களின் கனவில் தோன்றி எதுவும் சொல்லாமல் மறைந்து விட்டதாம் முத்தாலம்மாள்
. அக்கினிப் பிரவேசத்திலிருந்து எழுந்து வந்து
அனைத்து சாதியினரிடமும் தனக்கு ஆண்டுக்கொருமுறை கொடைகொடுத்து வழிபடச் சொல்லிவிட்டு
மறைந்த காரணத்தால் முத்தாலம்மன் என்ற பெயரில்
கோயிலை எழுப்பி திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஊர்களில் ஆண்டுதோறும் கொடைவிழா நடத்துகிறார்க்கள்.
கதை
உணர்த்தும் செய்திகள்
முத்தாலம்மாள்
செட்டியார் வீட்டுப் பெண், தனது தாயாரோடு கோபித்துக்கொண்டு சாம்பான் கூட வந்தாலும்,
அந்த சாம்பானே தங்குவதற்கு ஏற்பாடு செய்தாலும், கோயில் கட்டி வைத்திருப்பதோ பல்வேறு
சாதி இந்துக்களின் வகையறாக்கள்தான். குறிப்பிட்ட சாதி என்று இல்லை. எந்தெந்த பிற்படுத்தப்பட்ட
சாதியினர் அந்தப் பகுதியில் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதிக் காரர்களின் கட்டுப்பாட்டில்
கோயில்கள் இருக்கின்றன.
முத்தாலம்மனை இந்தக் கதையில் கதையில் சிறுமியாகத்தான்
சித்தரிக்கப் படுகிறது.
வீரபாகு சாம்பானின் தொழில் நூற்றுவைத்திருக்கும்
நூலை வாங்கி வந்து துணி நெய்யும் தொழிலை மேற்கொள்வதாக கதையில் இருப்பதால் பறையர்கள்
நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்த செய்தியை பார்க்க முடிகிறது. இந்த கதைப்பாடலில் திருவள்ளுவரையும்
இணைத்திருக்கிறார்கள்
.” சீவனப் புகலுக்காக
திருவள்ளுவர்
நாயனார்
செய்து கொடுத்த நெசவு
வேலை
தேசமெங்கும் தெரியுமே’’ என்றும்
வம்மிசம் பரம்பரையாய் வழங்கி
வரும் வேலைக்கு
மேட்டிமையாய் எங்களுக்கு
விற்பதும் உண்மையே
செட்டியார் வீட்டிலே சேர்த்துவைக்கும்
நூலைத்தான்
இஷ்டமுடன்
விலைக்கு வாங்கி ஏகுவானாம் சாம்பானும்
எம்பெருமான் தானறிய எடுத்துவருவேன்
நூலைத்தான்’என்றும்
ராட்டைசுற்றி நூல் நூக்கும்
நல்லகுடி ஆச்சியார்
சாம்பானும்’
இப்படியெல்லாம்
பாடிவைத்திருப்பதை பாடியோரிடம் கேட்டேன். அவரகள் ஆம் நாங்கள் திருவள்ளுவரின் பரம்பரைதான்
என்று கூறுகிறார்கள்.
இந்த
கூற்றை தமிழ் வித்தகர் மறைமலையடிகளாரும் குறிப்பிவதை சிந்தித்தும் பார்க்கவேண்டியுள்ளது.
இந்த பாடல் எழுதியது யாரென்று தெரியாது. எந்த
காலம் என்பதும் அறுதியிட முடியவில்லை. இப்பாடல் மூலம் சாதீய பாகுபாடு இருந்திருக்கிறது
என்பதும் அறியமுடிகிறது. முத்தாலம்மனின் தாயார் “உன்னோட பறப்புருஷன் வரும்போது எந்த
நூலைப் போடுவது? என்று பேசும்போதும்
வீரபாகு
அந்தப் பெண் முத்தாலம்மாள் வீட்டைவிட்டு வரும்போதே ‘நீ என்கூடவராதே நான் சாதியில் தாழ்ந்தவன்
நீயோ மேல்சாதி பெண்’ என்று அவனே சொல்வதிலும், வேளார் என்ற குயவர் வீட்டில் ஒருநாள் தங்க வைக்கக்
கேட்டபோதும் அவ்வீட்டுக்காரர் அப்பெண்ணை அனுமதிக்காததிலும் சாதீய பாகுபாட்டை ஏற்றுக்
கொள்ளவைத்த தன்மை பளிச்சென தெரிகிறது.
முத்தாலம்மனை
ஊரின் மந்தையில் குடிவைத்து அவளுக்கு உதவி செய்ததைப் பற்றி வீரபாகுவின் மனைவிக்குத்தான்
கோபமே தவிர ஊரிலுள்ள பிற சாதியினருக்கோ, ஊர் பெரியதனக்காரருக்கோ பிரச்னையாக தெரியவில்லை.
தான் சந்தேகத்திற்குரியவளாக ஆனேனே ஆதலால் சந்தனக்கட்டையை
அடுக்கி அதில் அக்கினிப் பிரவேசத்திலிருந்து மீண்டுவருகிறேன்’ என்று சொல்லிய தற்கொலையும்
நிகழ்ந்திருக்கிறது.
தன்னுடன் வந்த பெண் முத்தாலம்மாள் இறைச்சி சாப்பிடட்டுமே
என்று ஆட்டுக்கிடையில் ஆடு திருடிய குற்றத்திற்க்காகத்தான் ஊர் பஞ்சாயத்து கழுவிலேற்றும்
தண்டனையை கொடுத்திருக்கிறார்கள்.
ஒராண்டிற்கு பிறகு வீரபாகுவின் கனவில் தோன்றி
தன்னை ஊரார் தெய்வமாக வழிபட்டால் ஊரார் அனைவரையும் காப்பேன் என்றும்,பின்பு அனைத்து
சாதியினரின் கனவிலும் தோன்றி மறைந்திருக்கிறாள் முத்தாலம்மன். இதை அனைத்து சாதியினரும் ஏற்றுக்கொண்டு தெய்வமாக
ஏற்றுக்கொண்டனர்.
இந்த தெய்வத்தை வழிபடக்கூடிய அனைத்து ஊர்களிலும்,
பறையடித்தும் ,படுகளம் என்ற நாடகம் தடத்தியும் கோயிலுக்கு சேவைசெய்யும் பிரதான கடைமைதான்
பறையர் இன மக்களுக்கு. இவர்கள் தங்களின் பகுதியில் கோயில் கட்டியிருப்பதாக தெரியவில்லை.
கோயில்கட்டியவர்கள் இவர்களிடம் வரியும் வசூலிப்பதில்லை.
கொடைவிழாவின் பொறுப்புகளில் பங்காளிகளாக இணைப்பதில்லை.
பல நாட்டுப்புற தெய்வங்களின் கதைப் பாடல்களில் பார்வதி
பரமசிவன் பிரம்மா ஆகியோரின் பாத்திரங்கள் வருகின்றன. தெய்வத்திற்கு பிராமணிய மேல்நிலையாக்க
கருத்து பல காலமாக தொடர்ந்து வந்தாலும், நாட்டார் கோயில்களில் பூசை செய்வதெல்லாம் பிராமணரல்லாத
சாதி இந்துக்கள்தான்.
ஆடு கோழி பலி கொடுத்துவருகிறார்கள்
கதைப்படி இந்த முத்தாலம்மன் இறுதியாக அம்பலகாரர்,
ஊர் பெரியதனம்,வேளார்சமூகமஆட்டுக்கிடைவைத்திருந்தோர்,அனைவரையும் இணைத்தே கொடைநடத்தி
வழிபடச் சொல்லிவிட்டுத்தான் மறைந்துள்ளது.மூன்றுநாட்களும்நடக்கின்றநிகழ்வுகள்ஆனந்தமாகத்தான்இருக்கின்றன.ஆனால்
இந்த சாமி யாரோடு வந்ததோ அவனையும் அவனது மக்களையும் அந்நியராக, தீண்டத்தகாதவர்களாக
,வெறும் ஆட்டக்காரர்களாக ,பாட்டுக்காரர்களாக மட்டும் கோயிலுக்கு வெளியே குறிப்பிட்ட
தூரத்திற்கு அப்பால் இருந்து வழிபட வைக்கும் மனிதநேயமற்ற செயல் மட்டும் மாறினால் மட்டுமே
வழிபாட்டில் சமூக ஒற்றுமை உண்மையானதாக மாறி சமூக ஜனநாயகம அரும்பி வளரும்.
இந்த கதைப்பாடலில் எங்குமே வீரபாகு சாம்பானும்
அவரைச் சார்ந்தோர் மட்டும்தான் பறையடித்து சேவகம் செய்யவேண்டும் என்று குறிப்பிடவேயில்லை.
அதேசமயம் இவர்கள் ஒப்பாரி பாடி கோயிலைச் சுற்றி வரவேண்டும் என்று கதையில் குறிப்பிட்டுள்ளது.
ஏன் இப்படி
சேவகம் செய்யும் நிலை வந்தது? பிறரைப் போல எல்லா உரிமையைப் பெற்ற மனிதனை, தான் அடிமைதான்
என்று சொல்ல வைக்கும் வைதீக சாதீய மனுதர்ம சூட்சமம்தான் இப்படி ஆக்கியுள்ளது என்பதை
வீரபாகுக்கள் உணரும் தன்மை புதிய நட்சத்திரமாய் புறப்பட்டுவிட்டது.
மூலக்கதையை சொன்னவர்
ரா.முனியப்பன்,
ஸ்ரீராமபுரம், வேடசந்தூர் தாலுகா
No comments:
Post a Comment