தீக்கதிர் 19 11
2017 ஞாயிறு (வண்ணக்கதிர் பகுதி)
என் மேல் இறங்கிய பிள்ளையார்!
பேரா. கொட்டாரம் க கணேசன்

ஆசிரியர் பணியிலிருந்து பணி நிறைவு ஆனபிறகு, ஐம்பது வருடங்களாக நான் அந்நியப்பட்டிருந்த எனது பிறந்த ஊரான மணியகாரன்
பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் தோழர் முனியப்பன். சமூக விழிப்புணர்வு முகாம் நடத்தி இளைஞர்களிடையே l பரிமாற்றம் செய்வது தோழர்களின் நோக்கம். செழிப்பாக, பச்சைப் பசேலென்றிருந்த விவசாய பூமி தொலைந்து போயிருக்க, பாலைவனம்தான் என்னை வரவேற்றது. கமலையோடு மாட்டைப் பூட்டி தண்ணீர் இறைக்கப் பழகும்போது வடத்துல துள்ளிக் குதித்து உட்கார முயன்று இரண்டுமாடுகளுக்கும் இடையில விழுந்து எழுந்த பெரியப்பாவின் கிணத்துத் தோட்டத்தை காணவில்லை.
ஊரின் உள்ளே போய் சொந்த பந்தங்களைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, என்னைப் பார்த்தவுடன் ஏக்கத்தோடு ‘இப்பத்தான் மலையடிவாரத்துப்பட்டி ஊர் ஞாபகம் வந்திச்சாக்கும்,’ என்று என்னோட பெரியம்மாக்கள் சின்னம்மாக்கள் அத்தைகள் கேட்டார்கள். ‘என்ன செய்யுறது என் சூழ்நிலை அப்படி ஆயிட்டுது. உங்களப் பத்தி அடிக்கடி கேட்டுக்குவேன்’ என்று போலியான ஒரு பதிலைச் சொல்லி உறவைப் புதுப்பித்துக் கொண்டிருந்தபோது, என்னைக் கண்டுகொண்ட குப்பாயக்காள் ‘என்ன சாமி நல்லாயிருக்கியா? ஊரையே மறந்திட்டே. நாங்கள்ளாம் இருக்கிறமா இல்லையான்னு கூட பார்க்க வர்றது இல்லை,’ என புலம்பிச்சு.‘கணேசன் அப்படியெல்லாம் வரக்கூடாதுன்னு நினைக்கிற ஆளு இல்லம்மா. மத்தவங்களப் போல தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிற ஆளும் இல்ல.
அங்கேயும் வாத்தியார் வேலையோட சேர்த்து ஏதாவது பொது வேலையும் செஞ்சுகிட்டு இருக்குதுன்னு எனக்கு தெரியும். இந்தப் பக்கம் வராமப் போனாலும், நம்மைப் பத்தியெல்லாம் நினைப்பு இருக்கு. எங்க இருந்தாலும் இந்த மண்ணுல பொறந்த பிள்ளை நல்லா இருந்தாலே போதும்’ என்ற கணவர் பழனிவேலு மாமாவின் உற்சாகமான வார்த்தைகள், குப்பாயி அக்காவுக்கு ஆறுதலாகவும் இருந்தது. ராணுவத்துல வேல செஞ்சு ஒய்வுபெற்று பள்ளிக்கூடத்திலும் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மாமா. எனக்கும் டானிக் கிடைத்த மாதிரி மனத் தெம்போடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிறிய கட்டடத்திற்குள் சென்று அமர்ந்தேன்.
கூலிவேலை செய்து கொண்டிருந்த அப்பாவைக் காச நோய்க்குப் பறி கொடுத்துவிட்டு, ஒராண்டு காலம் மழைபெய்தால் ஒழுகும் மண்குடிசையில் வாழ்க்கையை கடத்திவிட்டு, கூட்டுக் குருவிகளைப் போல தங்கை தம்பி அம்மா குடும்பத்தை சாலைப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்த எனது தாய்மாமா வையாபுரியும், சின்னம்மா பாட்டியும் அம்மா பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்றது மின்னலென நினைவலைகளில்.ஞானஜோதி உயர் ஆரம்பப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் மாலை நான்கு மணிக்கு கணக்கு விளையாட்டுப் பாடம் முடிஞ்சதும் வகுப்பாசிரியர் கமலம் டீச்சர், ‘டேய் பசங்களா நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தி.
உங்களுக்கெல்லாம் லீவு. பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடுங்க பசங்களா’ ன்னு சொன்னதும், நல்ல துடிதுடிப்பான நாய்க்கர் வீட்டுப்பொண்ணு பொம்மக்கா என்ற மாணவி உடனே எந்திருச்சு‘எப்படி டீச்சர் கொண்டாடுறது’ ன்னு கேட்டாள். கமலா டீச்சர் கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் ‘பிள்ளையாருக்கு தேங்கா பழம் சூடம் சாம்பிராணி அவலெல்லாம் வச்சு கும்பிடுவாங்க’ ன்னு சுருக்கமா சொல்லி முடிச்சாங்க. கோடாங்கி சின்னாம்பட்டி வீராச்சாமி உடனே எழுந்து ‘டீச்சர் கோயிலே இல்லாத தெருவில உள்ள நாங்க, அடுத்த சாதி தெருவில உள்ள கோவிலுக்குப் போக முடியாதே.பின்னே எப்படி பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடுறது’ ன்னு கேட்டான். கமலம் டீச்சரு ஒரு நிமிஷம் ஷாக்ஆயிட்டாங்க. பின்னே இயல்பு நிலைக்கு வந்து ‘உங்க தெருவுல வசதியான இடத்தில ஒரு மண்மேடையைப் போட்டு மெழுகி, அதன்மேல் நல்ல ஒரு இரண்டடி உயரத்துக்கு கல்லை எடுத்து, அதை தண்ணீர் ஊத்தி நல்ல சுத்தப்படுத்தி, அதில் சந்தனம் குங்கும் வைத்து தேங்காய் பழம் சூடம் சாம்பிராணி, அவல் இவையெல்லாம் வைத்து எல்லொரும் சேர்ந்து கும்பிடுவதை நான் பாத்திருக்கேன் அதைப்போல செய்யுங்க’ என கமலம் டீச்சர் சட்டெனப் பதில் சொன்னது என்னோட சந்தேகத்தையும் போக்குனமாதிரி ஆயிடுச்சு.காரணம் எங்க தெருவிலேயும் கோயிலே இல்லை. ஆனால் எங்க வகுப்பில படிக்கும் பெரியப்பா மகன் சுடலமுத்து வீட்டில குலசாமி பொய்யக்கன்னிமாரை வச்சு ஆண்டுக்கொரு நாள் படையல் போட்டு கும்பிடுவோம். மாமாமார் குடும்பமெல்லாம் பெருமாளக் கும்பிடுவாங்க
.என்னோட படிக்கும் மருதமுத்து, அகரமுத்து, மலுக்கையன்,கிருஷ்ணன், அண்ணன் ஜெயராஜ், அக்கம்மா, தம்பிகள் வைரப்பெருமாள், தங்கமுத்து, மைத்துனர்கள் பழனிவேல், பெரியசாமி இன்னும் தம்பிகளெல்லாம் சேர்ந்து கமலம் டீச்சர் சொன்ன மாதிரி மண்மேடை போட்டு பிள்ளையார் கல்லை வைத்து கும்பிடுவது என திட்டம் போட்டு மூக்கன் மாமாவிடம் யோசனை கேட்டோம். அவரும் ‘டே நல்ல விஷயம்தான் நீங்க ஏற்பாடு செய்யுங்க நான் செலவுக்கு கொஞ்சம் காசு தாரேன்’ன்னு சொல்லி உற்சாகப் படுத்தினார். எனது அப்பா இறந்து ஆறு மாசந்தான் ஆயிருந்தது.
என்மீது ஊரில் சொந்தக்காரர்கள், பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த மைக்கேல் சார், கமலம் டீச்சர், பால்ராஜ் சார்,முத்துக்காளை ஆசிரியர், நல்ல வயசான மேரி டீச்சர் எல்லாரும் அன்பாக இருப்பாங்க.தனம் சித்தியிடமும் பிள்ளையார் சதுர்த்தியப் பத்தி சொன்னேன். ‘மேடை போடும்போது என்னையும் கூப்பிடுங்கடா, நான் வந்து மெழுகி விடுறேன்’ ன்னு சொல்லி மேலும் உற்சாகப்படுத்திச்சு.அன்றைக்கு ராத்திரி நீண்ட நேரம் அதே நினைப்புதான், தூக்கம் வரலை.. பண்ணையார் இருளப்பன் தோட்டத்தில நாத்துநடப் போயிட்டு வந்த என் அம்மா ‘டே இன்னும் தூங்காமயா இருக்கே தூங்குடா’ ன்னு சொல்ல ‘நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடப் போறோமே’ன்னு நான் சொன்னேன். ‘சரி சரி நாளைக்கு வேலைய நாளைக்கு பாத்துக்கலாம்.இப்போ நீ தூங்கு. நான் காலங்காத்தால நாய்க்கர் தோட்டத்துக்கு எள்ளுக்காட்டுல களை எடுக்கப் போகணும்’ ன்னு சொன்னது
.விடிஞ்சதும் ராணுவத்தில் வேலை பார்த்து லீவுல வந்திருந்த சின்னத்தம்பி மாமாகிட்டே மண்மேடை எங்க வைக்கலாம் என கேட்டோம் ,அவர் ‘ஊருல கிழக்குப் பக்கம் தண்ணிக் கிணத்துக்கு பக்கத்திலுள்ள புளியமரத்துக்குக் கீழே வைங்கடா,’ன்னு சொன்னார்.பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு, எங்களையெல்லாம் ஒண்ணாச்சேத்து உடற்பயிற்சி, விளையாட்டெல்லாம் சொல்லிக் கொடுக்கும் முத்துவேல் அண்ணன், தனம் சித்தி எல்லாம் வந்து மண்மேடை போடுவதற்கு உதவினார்கள்..
திட்டம் போட்ட பையன்களெல்லாம் மக்களையும் திரட்டிக்கொண்டு ஊருல வேலைக்கு போகாம இருந்தவங்களையும் வரச்சொல்லி, தயார்ப்படுத்தி வைத்திருந்த மண்மேடையில கல்லை எடுத்து ஊன்றி தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் வைச்சு, அதனடியில் தேங்காய் பழம் வைத்து சூடம் கொளுத்தி , சாம்பிராணி புகை கொடுத்து, ஊதுபத்தி வாழைப்பழத்தில் ஊன்றி வைத்து எல்லோரும் வரிசையாக நின்னு கும்பிட்டுக்கொண்டிருந்தோம்.பெரியப்பா மகன் அகரமுத்து அந்த நேரத்தில் சாமியாடுவதுபோல லேசாக அசைவதை. நான் இதை கவனிச்சேன்.\ அகரமுத்து ஆடுவதைவிட வேகமாக ஆடலாமென என மனதில் நினைச்சு, நான் வேகமாக முன்னும் பின்னும் அசைஞ்சு ஆ ஆ எனச் சத்தம் போட்டு ஆடியவுடன் சுடலைமுத்துக்கு வந்த ஆட்டம் நின்னுபோச்சு.கும்பிட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஆச்சரியம். ‘என்னடா பிள்ளையாரைக் கும்பிடும்போது சாமியாட்டம் இந்தப்பையங்கிட்ட வருதே . குலதெய்வம் கும்பிடும்போதுதானே சாமியாட்டம் வரும்’ என பக்கத்திலிருந்த பெரியம்மா, அத்தைகள் பேசிகிட்டது என் காதுல விழுந்துச்சு.காலை பதினோரு மணிக்கு நடந்த இந்த சம்பவம் காட்டுத் தீ போல பறையர் தெரு, சக்கிலியத் தெரு, நாயக்கர் தெரு இப்படி ஊர் முழுக்கப் பரவிருச்சு. அது ரொம்ப நாளாக மழையே பெய்யாமல் இருந்து மக்கள் கஷ்டப்பட்ட காலம்.
ஊரில் இருந்த பெரியப்பா கருப்பன், சித்தப்பாக்கள் லட்சுமணன், ராமசாமி பெரியசாமி ஆகியோரெல்லாம் கூடிப்பேசி ‘இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு எல்லாப் பையன்களையும் வரவழைச்சு கிணத்துல குளிக்கவச்சு மீண்டும் சாமிய வரவழைச்சு பாப்போம்’ன்னு முடிவெடுத்தாங்க. எனக்கு மனசுல பகீரென ஆயிருச்சு ‘ஏதுடா மாட்டிகிட்டோமே’னு பயம் ஒருபக்கம். சரி வர்றது வரட்டும், ராத்திரிக்கும் அதே வழியை கடைப்பிடிக்க வேண்டியதுதான்ன்னு நினைச்சு மனசைத் தைரியப் படுத்திக்கிட்டேன்.காலையில முன்னே நின்று கும்பிட்ட பையன்கள் எல்லாரையும் கூப்பிட்டு மண்மேடைக்குப் பக்கத்துல இருக்கும் கிணற்று நீரில் குளிக்க வைச்சு, நெத்தியில் திருநீறைப் பூசவச்சு, ஊரிலிருந்த ரெண்டு அண்ணன்மார்களை பறையை எடுத்துவரச்சொல்லி அடிக்கச் சொன்னாங்க. பறையை சூடுபடுத்தி ஒரு ஐந்து நிமிஷம் அடிச்சாங்க. அப்போதும் அகரமுத்து லேசாக அசைவதை கவனிச்சேன். காலையில் செய்தது போலவே இப்பவும் நான் வேகமாக ஆங்காரத்தோடு முன்னும் பின்னும் அசைஞ்சு சத்தம் போட்டதும் பறையடிச்சதை நிப்பாட்டுனாங்க.‘இது சாமிங்குறது உண்மையான்னு சோதனை பண்ணி பாருங்கப்பா...’ கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
கையில தாம்பாளத் தட்டை வைத்திருந்த பெரியப்பா பெரியசாமிக்கும் எனக்கும் சோதனை.‘என் தாம்பாளத்தில் என்ன சாமி இருக்குது?’‘தாம்பாளத்தில் திருநீறு இருக்குது.’‘இன்னும் ஒன்னு இருக்குதே அது என்ன சாமி?’‘அது எழுமிச்சம் பழம்.’கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘எங்க பையன் மேல வந்திருக்க சாமி என்ன சாமி’ன்னு கேட்டாரு.‘நான் விநாயகர்தான் வந்திருக்கேன்’னு சொன்னேன். கூட்டத்திலிருந்த ஒரு அம்மா ‘விநாயகர் எங்கேயும் சாமியாட்டத்தில வந்த மாதிரி தெரியலேயே’ ன்னார்.‘உண்மையச் சொல்லு சாமி. நீ விநாயகர்தானா’ ன்னு கேட்க, ‘ஆமா நான் விநாயகரேதான்’ன்னு அசட்டுத் தைரியத்துல சொல்லிட்டேன். நான் சாமியாடுவதற்கு முன்பே தாம்பாளத்தில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். சாமி வந்தால் கண்ணும் கவனமும் பூலோகத்தில் இருக்காதுன்னு மக்கள் நினைச்சிருந்திருப்பாங்க போல, அதனாலதான அடையாளம் கேட்கிறதெல்லாமுன்னு மனசில நினைச்சுகிட்டேன்
.‘சரி சரி, அப்பா இல்லாத பையன் இவன். அதனால் விநாயகர் வந்தாலும் வந்திருப்பாருப்பா’ ஒரு பெரியம்மாவின் குரல் கூட்டத்திலிருந்து வந்தது.‘சரி சாமி, எங்க ஊருல மழை தண்ணி எதுவுமே இல்லை. குடிக்கக் கூட தண்ணி இல்லை. எப்ப வரும் சாமி?’ ஒரு சிக்கலான கேள்வியை கேட்டார் ஊர் பெரியதனக்காரர்.சரி ஓங்கி அடிச்சுவிடுவோம் வர்றது வரட்டும்னு நினைச்சு, ‘நாளை சரியாக மதியத்துக்கு மேல மூணு மணிக்கு மழை வரும்’ என சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி வந்துவிடக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு, தப்பிச்சேன் பொழைச்சேன்னு, ஆட்டத்தை வேகமாக ஆடி சத்தத்தைக் கூட்டி அப்படியே ஆட்டத்தை நிறுத்தி இயல்பான நிலைக்கு வந்த மாதிரி நடிச்சேன்.‘சாமிகிட்டே இன்னும் கேள்விகளை கேட்கிறதுக்குள்ளே சாமி மலையேறி போச்சப்பா’ என பெரியதனம் நொந்துக்கிட்டாரு.இந்தச் சம்பவம் ஊரெல்லாம் இரவோடு இரவாகப் பரவி ஒரே பரபரப்பு.
என் அம்மா வேலை செய்யுற தோட்டத்துல, ஆம்பளைங்க விறகு ஒடைக்கிற இடத்துல,. ‘கந்தன் மகன் கணேசன் மேல சாமி வந்திருச்சப்பா. பாவம் அப்பாவைப் பறி கொடுத்த பையன். உண்டாரபட்டி கோயிலில அந்த சாமியார் சொல்லுறது சில காரியம் பலிக்கத்தானே செய்யுது. பாப்போம் கந்தன் மகன் வாக்கு பலிக்குதான்னு ’ எனவும் பேசிகிட்டாங்களாம்.அடுத்த நாள் ஊர் மக்கள் சட்டமன்ற தேர்தல் முடிவை எதிர்நோக்கி இருப்பதுபோல காத்திருந்தார்கள். உண்மையிலேயே சரியாக மூனு மணிக்கு மழை வந்து விட்டது! ஊரே கொண்டாட்டம் குதூகலம். ஜனங்களெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க ‘அந்த கந்தன்மகன் கணேசன் மேல வந்தது சாமிதாப்பா’ என்று.பிரச்சனை இதோட முடிஞ்சதுன்னு நெனச்சேன். ஆனால் முடியவில்லை. ஊருப் பெரியவங்க எல்லாம் கூடிப் பேசி அந்த மண்மேடைய கொஞ்சம் உயர்த்தி கல்லையும் ஊண்டி வச்சு, மேலே சிறிய கூரையும் போட்டு, ‘கணேசா, நீ இந்தக் கோயில்ல வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சாமிக்கு அரளி மாலை போட்டு, பூசை செஞ்சுரு, அதுக்கான செலவை வாங்கிக்க,’ன்னு பொறுப்பை ஏத்தி வச்சிகிட்டாங்க . ஊமை கனவு கண்டா ஒருத்தரிடமும் சொல்ல முடியாதே. அதைப் போல நானும் சரி என சொல்லிவிட்டேன்,இன்னொரு சிக்கலும் வந்திருச்சு.
எங்க தெருவில மாட்டிறைச்சி அதிகமாப் புழங்குவாங்க. வியாழக்கிழமை சந்தையில மாட்டிறைச்சி வாங்கி வந்து சமைப்பாங்க. நானும் ஒரு பிடி பிடிப்பேன். இப்போ அதுக்கு வேட்டு வைக்கிறமாதிரி ‘கோயில் பூசாரியாக இருக்கிற நீ எந்த இறைச்சியும் சாப்பிடக் கூடாது,’ன்னுட்டாங்க. நானும் அரைமனசோடு சரி எனச் சொல்லி பூசாரி வேலையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செஞ்சுட்டு வந்தேன்.மூணு மாதங்கள் கறி சாப்பிடாம இருந்து பார்த்தேன். அதுக்கு மேல ஆசையை அடக்க முடியவில்லை. என் அம்மா மிலிட்டரிக்கு போய்வந்த சின்னக்காளை அண்ணணிடம் கேட்டது. ‘வீட்டுல நாங்க எல்லாம் கறி சாப்பிடும்போது இவனை மட்டும் பாக்கவைச்சு சாப்பிட்டா கஷ்டமா இருக்குல்லப்பா, என்ன செய்யலாம்,’னு.‘சரிம்மா வெள்ளிக்கிழமை மட்டும் சாப்பிடாம பாத்துக்க மதினி மத்த நாளெல்லாம் சாப்பிட்டடும். ஆபத்துக்குப் பாவம் இல்லை. அவன் குளிச்சிகிட்டுத்தானே பூசை செய்யுறான்,’னு சொல்லவும் .எனக்கு அப்பாடான்னு கொஞ்சம் மனசு ஆசுவாசப் பட்டுச்சு.இப்படியே ஒரு வருஷம் கடந்திருச்சு.
என்னோட அம்மா ஊருல இருந்த பாட்டியும், சாலைப் பணியாளராக வேலை செஞ்சு அப்பப்போ உதவி செய்யுற மாமாவும் எங்களை குடும்பத்தோட வேற ஊருக்கு கூட்டிப் போக வந்தாங்க. நான் பள்ளிக்கூடத்துல டி.சி., வாங்கப் போகும்போது, என்னோட அம்மாகிட்ட கமலம் டீச்சர், ‘கணேசன் நல்லா படிக்கிற பையன் அவனை எங்களோட விட்டுட்டுப் போங்க, எங்க குழந்தைகளில் ஒரு குழந்தையாக பாத்துக்கிறோம். அவனைப்பத்தி கவலைப்படாதிங்க’ன்னு ரொம்ப சொல்லிப் பாத்தாங்க.விட்டுட்டுப் போறதுக்கு அம்மா மனசு கேட்கல. ‘உங்க பெரியமனசை நாங்க உசிருள்ளவரை மறக்கமாட்டோம் டீச்சர். நாங்க தாயோட பிள்ளையா இருந்திடுறோ’முன்னு தயக்கத்தோட சொல்லுச்சு
.அந்த பள்ளிப்பருவ காலத்துச் சம்பவத்தை நினைவலையில் மூழ்கிக்கொண்டிருந்த நான், விவாத அரங்கைத்
துவக்கி வைப்பதற்காக சற்று தாமதாக வருகை தந்த மாவட்டச்செயலாளர் தோழர் முத்துச்சாமி வணக்கம் சொன்னவுடன் இயல்பு நிலைக்கு வந்து விட்டேன். அந்த ஊர் இளைஞர்களும் வந்து சேர்வதற்கும் சரியாக.இருந்தது நான் சொந்தக்காரங்களைப்பத்தி
மைத்துனர் ரங்கதுரையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அமர்ந்திருந்த கட்டட இடத்தை சுற்றுமுற்றும் பாத்தேன். நான் மனசாட்சியை சந்தர்ப்ப நெருக்கடியால் தள்ளி வைத்து, பார்க்கத் தவறிய சில சித்தப்பா பெரியப்பாக்கள் உயிரோடு இல்லை. என்மீது பாசம் பொழிந்த மாமாக்கள் சிலரும் உயிரோடு இல்லை. சிலர் விவசாயம் செய்துகொண்டிருந்தபோது வைத்திருந்த மாடுகளும் மாட்டுக்கொட்டகைகளும் இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட விநாயகர் மண்மேடை தாங்கிய ஒலைக் கோயிலும் இல்லை.
பறையர்
சக்கிலியர் ரெண்டு தெருக்காரர்களும் சேர்ந்து குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்திய தண்ணீர்க் கிணறும், தரையோடு தரையாக மாறி அது இருந்த இடத்தில் உயர்நிலை தண்ணீர்த் தொட்டி மட்டும் இருந்தது. நாயக்கர் தெருவில போர் பம்புசெட் போட்டு தண்ணீர் ஏத்திவிடும் வேலையெல்லாம் அந்த தெருக்காரங்ககிட்டேதான் இருந்தது.கூரைக் குடிசை பிள்ளையார் மண்மேடை இருந்த இடம் அம்பேத்கர் நலக்கூடமாக மாறிப்போயிருந்தது. பல வீடுகள் கூரை வீடுகளாக இருந்தவைகளில் சில வீடுகள் மட்டும் ஒடு போட்ட வீடுகளாக மாறி இருந்தன.
சில குடும்பங்கள் வேற ஊர்ல குடிபோனதினால் மண்திட்டுகளாக மாறி இருந்தன. அந்த ஊரில் மூணு தெருவில இருக்கிற படிச்ச ஆண் பெண் இளைஞர்கள் பாகுபாடு இல்லாமல் பழகுகிறார்களாம். ஆனால் அந்தந்த தெரு பெரியவங்களத் திருத்த அவங்களால முடியவில்லை என்பதை அறிந்தேன்.இன்னும் அடுத்த சாதி தெருவில் செருப்பு போட்டுப் போக முடியாது என்பதையும், கோயில் கொடைவிழா நடத்தும்போது இந்த தெருக்காரர்களை உள்ளே விடுவதில்லை, வரியும் வசூல் செய்வதில்லை என்ற செய்தியும் அறிந்து மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது. தோழர்கள் கொண்டு வந்திருந்த அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உருவங்கள் பொறிக்கப்பட்ட பதாகையைக் கூட்ட அரங்கில் அப்போதுதான் சுவரில் மாட்டினார் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் பாண்டியக் கண்ணன். வந்திருந்த எட்டு பெண்கள் பதினேழு ஆண்களிடமும் முதன்முதலாக
காலந்தோறும் தீண்டாமைக கொடுமைகளும் சமூகத்தின் போக்கும் என்ற தலைப்பை நோக்கி விவாதப்
பயணம் துவங்கியது..
மனம் இளகியது.
ReplyDelete