Sunday, November 20, 2011


                                     கண்ணீரும் கதை  சொல்லும் வாச்சாத்தீ
வீடுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட பெண்களை மந்தையிலே நிறுத்தி  பதினெட்டுப்பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உள்ள ஏரிக்கு கூட்டிச்சென்று வன்புணர்ச்சி செய்ததை இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.எங்களை விட்டுவிடுங்கள் என்று காலில் விழுந்து கதறியதைக்
கூட கண்டு மனமிறங்காத மிருகமாக நடந்து கொண்டார்கள்
   எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துகிட்டுப் போய் விசாரிக்கும் போது
குழந்தைக்கு தண்ணீர் கொடுங்கன்னு கேட்டேன் மூத்திரத்தைக் கொடு ன்னு அதிகாரி சொன்னாரு என பாதிக்கப்பட்ட பழனியம்மாள் நீதிமன்றத்தில் நீதியரசர்
அசோக்குமாரிடம் சொன்னார்.அந்நீதிபதி சற்றுநேரம் உறைந்துபோய் யார் அவன்  உன்னால் இங்கு அடையாளம் காட்டமுடியுமா? எனக் கேட்க பழனியம்மாள் 269 பேரில் அப்படிச் சொன்னவனை சரியாக அடையாளம் காட்டினார்.
        இப்படி எத்தனையோ வாக்குமூலங்கள் நம் நெஞ்சைப் பதறவைத்து இது நாடுதானா? இல்லை சுடுகாடுதானா? என்று பதைக்கவைக்கும்
அளவில் விசித்திரங்கள்  நிறைந்ததுதான் வாச்சாத்தி வழக்கு.
        ஒரு கிரிமினல் வழக்கில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 215 அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள தண்டனை என்பது முன்னெப்போதுமில்லாத ஒன்றாகும். அதேபோல் 1992 ஜூன் மாதம் 20 ஆம் தேதியன்று தர்ம்புரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் நடைபெற்ற சம்பவங்களும் அதற்குமுன் வேறெங்கும் நடைபெறாதவைகளாகும்
என 1-10-2011ல் தி நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது.
          அப்படி என்னதான் நடந்தது வாச்சாத்தியில் ? என வகுப்பறை ஆசான்கள்
நாமும் மனதில் அசைபோட்டுப் பார்ப்பது அவசியம். காரணம், தேசத்தில் எங்கோவொரு மூலையில் பிடிக்கும் பண்பாட்டு நெருப்பு நம்மையும் வாட்டும்.
            தர்ம்புரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஜூன் 20 ந்தேதி மலைவாழ் பழங்குடி மக்கள்மீது கொடூரமான முறையில்
காவல்துறை,வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய மூன்றும் அகோரத் தாண்டவமாடின. 18 பெண்களை பாலியல் வன்புணர்ச்சி இழிசெயல்களையும் புரிந்தனர். வீடுகளை ,உடைமைகளை துவம்சம் செய்தனர். ஆடுகளைப்பிடித்து வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆட்டுத் தோல், எலும்புகளை குடிதண்ணீர் கிணற்றில் போட்டு மக்களின் தாகத்திற்குக் கூட கொள்ளிவைத்தனர். இச்சம்பவம் வெளியே தெரிந்து விடாதபடி கிராமமே வெறிச்சோடி கிடக்குமளவு 28 குழந்தைகள்,90 பெண்கள், 28ஆண்கள் உட்பட 133
பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். அக்கிராமத்திலிந்து தப்பியோடிய சிலர்
மலைவாழ்மக்கள் சங்கத் தலைவர்களுக்கும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.அண்ணாமலைக்கும் தெரிவித்தனர். உடனே
மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் பெ.சன்முகம், பாஷாகான்,கிருஷ்ணமூர்த்தி,
சித்தேரி பொன்னுச்சாமி உட்பட பலர் சேலம் சிறையில் மக்களைச் சந்தித்து நடந்தவற்றைக் கேட்டு புகார்களை காவல்துறைக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்தனர். அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் ஏ.நல்லசிவன் நேரில் சென்று நடந்த துயரங்களை, வேதனைகளை ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தினார். அன்றைய அ தி மு க அரசு இவையெல்லாம் பொய் என்று
அலறித்துடித்தது. நம்பர் போர்டு இல்லாத லாரியில் சாதாரண உடையில் சந்தனக்
கட்டைகளைக் கடத்திச் சென்ற வன ஊழியரை மடக்கிப் பிடித்து அரசின் சொத்தைப் பாதுகாக்க முயற்சித்தவர்கள் மீதே வழக்குப்போட்டு , ஊழல் வெளியே
கொண்டுவர சாட்சிகளாக இருக்கக் கூடாது என்பற்காகவே இந்த மூன்று துறையினரும் அந்த அப்பாவி மக்கள்மீது அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டனர்.
   மலைவாழ்மக்கள்தான் சந்தனக் கட்டை கடத்துபவர்கள், இதைத் தடுக்கப் போன
அதிகாரிகளை ஊர்மக்கள்தான் தாக்கினார்கள், கம்யூனிஸ்டுகள்  சொல்லக்கூடிய
எந்தக் குற்றச்சாட்டுமே அங்கு நடக்கவில்லை என்று அன்றைய அரசு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தது.
    1995ல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் ஆர்.வைகை,என்.ஜி ஆர் .பிரசாத் , இளங்கோ, சம்கிராஜ் ஆகியோர் வாதாடினர். உச்சநீதிமன்றம் வழக்கை சி பி ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.
     நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிரசனைக்கு தீர்வு கண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி மு க அரசு இம்மக்களின் வழக்குமீது எவ்வித அக்கரையும் செலுத்தவில்லை.
   2002ல் வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கும், பின்பு தர்மபுரி நீதிமன்றத்திற்கும் வழக்கு தாவித் தாவி ஒடி, இழுத்தடிக்கப் பட்டதோடு குற்றவாளிகளை அடையாளங்காட்ட  பலமுறை அடையாள அணிவகுப்புகள் நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் ஒவ்வொரு நீதிபதியிடமும் சாட்சியமளிக்க வைத்து அலைக்கழிவு செய்தனர். இந்த விசாரணை நடைபெறும் காலத்திலேயே 54 பேர் மரணமடைந்துவிட்டனர். இதில் 215 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வரலாற்றில் முதன்மை முத்திரையைப் பதித்தனர் நீதிமான்கள்.
    19 ஆண்டு காலம்  போராடிய அந்த மக்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின  முன்னாள் எம் எல் ஏ தோழர்
அண்ணாமலை, இந்நாள் எம் எல் ஏ தோழர் டில்லிபாபு, அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன், வழக்கில் வாதாடிய தோழர்
பி.ராமமூர்த்தியின் புதல்வியான வைகை உட்பட வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு
மட்டுமல்ல இந்த வரலாற்றில் பதிக்கவேண்டிய தீர்ப்பின் வெற்றி. தேசத்தை நேசிக்கிற, சமூக மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.
     இவ்வெற்றியை பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளும், பறிதவித்த குழந்தைகளும் இனிப்பை இன்முகத்தோடு கொடுக்கவில்லை. மாறாக ஆறாக
பெருக்கெடுத்தோடும் கண்ணீரையே நன்றியின் அடையாளமாக சிந்தினர். 
        கி மு முதல்  நூற்றாண்டிலேயே மன்னர்களாக,போர்வீரர்களாக, வில்லாளிகளாக , வேட்டைக்காரர்களாக விளங்கிய பரம்பரையின் பதினெட்டுப் பெண்கள் ,காவல்துறையினர்களால் கற்பைச் சூரையாடியபோது சித்தேரி மலையில் மோதி எதிரொலித்த ரணவலியின் மிச்சம்தான் அந்தக் கண்ணீர்.
              இந்தக் கண்ணீர் நமக்கு, அவர்களின் கரடு முரடான வாழ்க்கைப் பயணத்தில் ஒட்டு மொத்த சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேதனை வரலாறை உணர்த்துகிறது.
                   கம்பராமாயணத்தில் காவிய நாயகன் ராமன்
'குகனொடு ஐவரானோம்-முன்பின்
குன்றுசூழ்வான் மகனொடு அறுவரானோம் 
எம்முழை அன்பின் வந்த அகனமர் காதலய்ய
நின்னொடு எழுவரானோம்' என்று வனத்தில் உதவியோரை தனது சகோதரர்களாக ஏற்றெடுத்துப் பாடியது காவியத்துக்கு மட்டுமல்ல, நிஜவாழ்க்கையில் நாம் மனிதநேயத்தோடு
பின்பற்றவும்தான்.
                   ஆண்டவர்களின்,ஆள்வோர்களின் குறுகிய சுயநலப்போக்கால் வாக்குறுதி வீசுபவர்கள் வாழ்க்கையில் அடித்தளத்தில் இருப்போரை கண்டு கொள்வதேயில்லை என்பதுதான் இம்மக்களின் அவலங்களுக்கு காரணம்.
     சந்தனக்கடத்தல் வீரப்பனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு,கோடிக்கணக்கான
   ரூபாய் என்ன ஆனது என்பதையும் மறைத்துவிட்ட படலத்தில் , காவல்துறையின் வேட்டையில் வாழ்வை பறிகொடுத்தது இவ்வினம்தான்.
                  பல இடங்களில் இம்மக்களின் வாழிடங்களில் நகரவாசிகளின் உல்லாச மாளிகைகள் கட்டி வாழ்விடங்கூட இல்லாமல் விரட்டியடிக்கப்படும் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிறது இவர்களின் கண்ணீர்.
                              இத்தனை துயரங்களை காலங்காலமாக மென்று விழுங்கியவர்களின் இந்தக் கண்ணீர் அவர்களுக்காகவும், நாடுமுழுக்க அல்லோகலப்படும் இவ்வினத்திற்காகவும் வேண்டுவது; உயர்நீதி மன்றத்திற்கு போயிருக்கும் வரலாற்றுபூர்வ தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டியதும், வாழ்க்கை நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகமாக்கி வழங்கவேண்டுவதோடு, அவர்களின் நிரந்தர நிம்மதியான வாழ்க்கைக்கு , நாடாளுமன்றத்தில்  சமீபத்தில் நிறைவேற்றிய வன இலாகா சட்டத்தை அமுல்படுத்த வைப்பதும் ஆகும். ஆம் தோழர்களே இவைகள் அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல ஆதரவு தர வேண்டிய கருத்தால் கரத்தால் உழைப்போராகிய நமது ஆசையுங்கூட.
     பாதிக்கப்பட்ட அபலைகளின் போர் மட்டுமல்ல, உ.ழைக்கும் மக்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்ற  தொழிலாளி வர்க்கத்திற்கும் 
  திங்கள் ஒளியில் துயிலவோர்க்கும் தினம் 
  சூரியத் தீயினில் குளிப்போர்க்கும் ‘-நம்
 போர் இன்னும் முடியவில்லை-இந்த
   பூமி முழவதும் விடியும் வரை.
                                                                                முனைவர். க.கணேசன்
                                                                                விவேகானந்தா கல்லூரி
                                                                                 அகஸ்தீஸ்வரம்
 
          

No comments:

Post a Comment