அகஸ்தீஸ்வரம்
ஈன்றெடுத்த மலையாளப்படத்தின் பிதாமகன் ஜே.சி.டேனியல்
முனைவர் க.கணேசன்.வணிகவியல் துறை
1913ல் இந்தியாவின் முதல் திரைப்படத்தை தாதாசாகேப் பால்கே உருவாக்கினார் என்பது நாம் அறிந்ததே.1920ல்
தமிழின் முதல் வாய்மொழியில்லா படத்தினை இயக்கிய நடராஜா முதலியாரையும்,1931ல் வெளிவந்த முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியையும் சினிமா உலகம் நன்கறியும்.ஆனால் 1928ல்
மலையாளத்தில் வெளிவந்த முதல் பேசாத படத்தை எடுத்தவரை அதுவும் சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன்
விடாத முயற்சியால் பிரபலமாக்கிய அகஸ்தீஸ்வரத்தைச் சார்ந்த ஜே சி டேனியல் என்று தெரியவருகிறது.மிகப்பெரிய
திரைச் சாதனைக் கலைஞரின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
பிறப்பு;
ஆங்கிலேயராட்சி காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள்ளிருந்த நெய்யாற்றின்கரையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து
கொண்டிருந்த என் ஜே டேனியலுக்கும் அகஸ்தீஸ்வரம் கட்டுமானப் பணி ஒப்பந்தக்காரரும் சமுதாயப்
பணியில் நாட்டங்கொண்ட சாலமன் மகள் ஞானம்மாளுக்கும்11பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையாக
1900 நவம்பர் 28ல் பிறந்தவர்தான் ஜே சி டேனியல்.
இளமைக் காலம்.
ஜே
சி டேனியலியன் தந்தை இவரின் 11வது வயதில் காலமாகிவிட்டார்.தொடக்கக் கல்வியை அகஸ்தீஸ்வரத்திலும்
உயர்நிலை கல்வியை நாகர்கோவிலிலும், மேல்நிலை மற்றும் கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்திலும்
படித்து தேர்ந்தார்.இவர் வாழ்ந்த காலத்தில் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் நாடகம் பார்ப்பது
பாவம் என்ற மனோபாவத்திற்கு உட்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் ஆச்சாரங்களை துச்சமாக
நினைத்து சுற்று வட்டாரங்களில் எங்காவது நாடகம் நடந்தால் இவரும் தனது விளையாட்டுத்
தோழனான ராமன்சங்கும் தங்களின் வீடுகளுக்குத் தெரியாமல் போய்ப் பார்த்துவருவதுண்டு
.இதைத் தெரிந்து வீட்டக்காரர்கள் மிகக் கடுமையாக தண்டித்தும் கலையார்வத்தை கட்டுப்படுத்த
முடியவில்லை.நல்ல உடல்கட்டு உடையவராதலால் அக்காலத்தில் பரவியிருந்த அடிமுறைக் கலையாகிய
தெக்கன் களரியில் ஆர்வம் ஏற்படவே பிரபலமான ஆசான் மூலம் களரியை கற்றுக் கொண்டார். ஜிம்னாஸ்டிக்கிலும்
தேர்ந்தவராக இருந்தார். இவற்றிலெல்லாம் கவனமிருந்தாலும் படிப்பிலும் கூர்மைபெற்றிருந்தார்.
திருவனந்தபுரத்தில் பேசாத திரைப்படங்களை சென்று பார்ப்பது டேனியலின் வழக்கமாக இருந்ததால்
சினமா மீது காதல் உருவானது.
சினிமா எடுக்க சிந்தனை உதயம்;
அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையை
அவர் பார்க்க நேரந்தது.அதில் ஒலிப்பதிவுடன்கூடிய பேசும் படங்களை தயாரிப்பது குறித்த
கட்டுரை ஒன்று சினிமா எடுக்கும் முடிவை இவரின் மனதில் விதைத்துவிட்டது.
திருமணத்தில் முடிந்த காதல்;
புத்தக வாசிப்புப் பிரியராக இருந்த டேனியல்,
எல் எம் எஸ் பள்ளியில் தலைமையாசிரியரான ஜெ.ஜோயல் சிங் என்பவர் தனது வீட்டருகே வைத்திருந்த
புத்தகக் கடையில் புத்தகம் வாங்கச் சென்றபோது,ஜோயல்சிங் மகனும் மகளும் சண்டைபோட்டுக்கொண்டு
புத்தக கடைக்குள் வந்தவர்கள்,சகோதரன் சகோதரி ஜெனட்டை தள்ளிவிட்டதில் புத்தகம் வாங்கச்
சென்ற டேனியலின் அருகே மோதி நின்றாள். அப்போது ஒரு நொடிக்குள் இருவரின் கண்களும எதைஎதையோ
பரிமாறிக்கொண்டன. நட்பாக பரிணமித்து இரண்டாவதாக வாழ்க்கை காதலாக அரும்பி ஐந்து வருடங்களாக
தொடர்ந்து, பின் 1924ல் திருவனந்தபுரம் எல் எம் எஸ் தேவாலயத்தில் ஜெனட்டைத் தனதாக்கிக்கொண்டார்.
இந்த திருமண வைபவத்தில் ஜெனட்டின் தந்தை தான் எழுதிய தமிழ்வாழ்த்துப் பாடலைப் பாடி
இவர்களின் வாழ்க்கையை துவக்கிவைத்தார்.
சினிமா பற்றி களப்பயிற்சி
பெண்கள்
சினிமா பார்ப்பது பாவம்,ஏன் ஒரு துண்டுப்பிரசுரம் படிப்பதைக்கூட தவறாக கருதிய காலகட்டம்.சமூகத்தின்
கட்டுப்பாடுகள் காரணமாக சினிமா பார்க்கப் போகும் பெண்களுக்கு தண்டனைகள் காத்திருந்தன.
தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்ற சாதிவெறி உச்சத்தில் இருந்த காலம் அது. இந்த சூழலில் பெண் கதாநாயகியைக் கொண்டு பேசாத படம்
எடுக்கும் ஆர்வத்தில் சென்னையிலும் மும்பையிலும் உள்ள ஸ்டுடியோக்களுக்குச் சென்று உரிமையாளர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடி செயல்பாடுகளைப் பார்வையிட்டு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இந்திய
சினிமாவின் பிதாமகன் தாதா சாகேப் பால்கேவையும் தமிழில் முதலில் படமெடுத்த நடராஜ முதலியாரையும்
சந்தித்து கருத்துகளை மனதில் பதித்துக்கொண்டார்.
திரைக்கதை இதுதான்
திருவனந்தபுரத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சந்திரகுமார் என்ற சிறுவனை இலங்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரியும் பூதநாதன் கடத்திக்
கொண்டு போய்விடுகிறான்.சந்திரகுமாரை காணாமல் அவனது பெற்றோர் தவிக்கின்றனர்.இலங்கையில்
தோட்டத் தொழிலாளியாக வளரும் சந்திரகுமார் ஒரு ஆங்கிலேய தோட்ட முதலாளியிடம் ஏற்பட்ட
நட்பினால், தோட்ட கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுகிறான். இந்த காலகட்டத்தில் திருவனந்தபுரத்தைச்
சேர்ந்த ஜெயச்சந்திரன் தனது உயர் படிப்பிற்காக இங்கிலாந்துக்கு செல்லும் வழியில்,கொழும்புக்கு
வருகிறான். கொழும்பில் பூதநாதனும் அவனது கூட்டாளிகளும் ஜெயச்சந்திரனின் உடைமைகளை கொள்ளையடித்துச்
சென்று விடுகின்றனர். கொழும்பில் பணமின்றி தவிக்கும் ஜெயச்சந்திரன் தேயிலை தோட்டம்
ஒன்றில் வேலைக்கு சேருகிறான். அந்த தோட்டத்தின் கண்காணிப்பாளரான சந்திரகுமாரும் ஜெயச்சந்திரனும்
நெருங்கிய நண்பர்களாகின்றனர்.சில நாட்களுக்குப் பிறகு ஜெயச்சந்திரன் திருவனந்தபுரத்திற்கு
சந்திரகுமாரை அழைத்து வருகிறான். அப்போது பூதநாதனும், கூட்டாளிகளும் திருவனந்தபுரத்திற்கு
வருகின்றனர்.ஜெயச்சந்திரனின் காதலி சரோஜினியை பூதநாதன் கும்பல் கடத்த முயற்சிக்கிறது.
அப்போது நண்பர்கள் இருவரும் கடத்தல் கும்பலுடன் சண்டையிட்டு துரத்தி விடுகின்றனர்.
சந்திரகுமாரின் உடலில் இருக்கும் அடையாளம் ஒன்றை காணும் சரோஜினி,சிறுவயதில் காணாமல்
போன தனது சகோதரன்தான் சந்திரகுமார் என்பதை தெரிந்து கொள்கிறாள்.தனது தாய் தந்தையருக்கு
தகவல் தெரிவிக்கவே தாயும் தந்தையும் சந்திரகுமாரை அழைத்துச் செல்கிறார்கள். இதுதான்
விகதகுமாரன் வாய்மொழியில்லாத திரைப்படத்தின்
கதை.
இந்தக் கதையில் சாதியின் துவேச வாடை எங்கே
வீசுகிறது. ஒரே குற்றம் தலித் சமூகப் பெண் நாயர்சாதிப் பெண்ணாக நடித்துவிட்டாள் என்பதுதான்
குற்றம்.இப்படத்தில் ஜே சி டேனியல் ஜெயச்சந்திரன் கதாபாத்திரத்திலும்,தனது மகன் சுந்தரம்
குழந்தை நட்சித்தரமாகவும் மனைவி ஜெனட்டை தன்னிடம் தள்ளிவிட்ட வில்சன்சிங் ஒரு பாத்திரத்திலும்,
வில்லன் பூதநாதனாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜான்சன், இப்படத்தின் துணை நடிகையாக
வந்த கமலம் என்ற பெண்ணும் சமூகத்தில் ஏளனமாக மதிக்கப்பட்டாள்.
படப்பிடிப்பு நிலையம் ஆரம்பம்
நெய்யாற்றின்கரை அருகிலுள்ள பனச்சமூட்டில் தனது
பரம்பரை சொத்தின் பங்காகக் கிடைத்த108 ஏக்கர் மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் இருந்த நிலத்தையும்
விற்பனை செய்து திருவனந்தபுரத்தில் மும்பையில் இருப்பதுபோல 1928ல் திருவாங்கூர் நேஷனல்
பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ உருவாக்கினார்.
அந்தக் காலத்தில் மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியான மௌனப்படங்கள் ஆங்கிலப் பெயர்களை
கொண்டிருந்தமையால் அந்த சாயலில் தனது கதைக்கு ‘The lost child” என தனது கதைக்கு தலைப்பு
தேர்வு செய்தார்.
பெண் கதாநாயகி தேடுதல்;
மிகவும் பிற்போக்கு சிந்தனை மண்டிக்கிடந்த காலத்தில்
பெண்கள் நடிக்க வருவது மிகவும் அபூர்வம். பெண் கதாநாயகிக்கு அனைத்து பத்திரிக்கைகளிலும்
விளம்பரம் கொடுத்தார். மும்பையிலிருந்து மிஸ்.லானா என்ற ஆங்கிலோ இந்தியன் பெண் சம்மதம்
தெரிவித்து நேரில் வரச்சொல்லி கடிதம் போட்டாள். டேனியலும் நேரில் சென்று கதைபற்றி சொல்லி
பணம் விபரம் பேசும்போது ரூ 10000 இல்லாமல் வரமுடியாது என கறாராக சொல்லிவிட்டார்.டேனியல்
குறைக்க கெஞ்சிப் பார்த்தும் சற்றும் மனம் தளராதது மட்டுமல்ல தன்னோடு ரயிலில் முதல்
வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட்டும் போடச் சொன்னார்.முன்பணம் 5000 கேட்க அதையும்
கொடுத்துவிட்டு வந்தார்.திருவனந்தபுரம் வந்தவுடன் தங்குமிடத்தைப் பார்த்த அப்பெண்மணி
தங்கும் வசதி சரியில்லை எனக்கு ஒத்துவராது நடிக்க முடியாது என அடம்பிடிக்கவே முன்பணத்தைக்
கூட திரும்பக் கொடுக்காமல் மும்பைக்கு சென்றுவிட்டனர். மனம் நொந்து விரக்தியடைந்த டேனியலுக்கு
தனது நண்பன் ஜான்சன் மூலம் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜம்மாள் என்ற தலித்
கத்தோலிக்க மதம்மாறி ரோசி(ரோசம்மாள்) என்ற பெயரில் பெண் இருப்பதாகச் சொல்ல, அவரையும்
சென்று பார்த்து அப்பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது. தயங்கியே சம்மதம் தந்தனர்.ரூ
500 சம்பளம் தருவதாக சொன்னதை அப்பெண் ஏற்றுக்கொண்டார்.அப்பெண் படப்பிடிப்புக்கு வரும்போது
ஒரு கூலிவேலைக்காரிபோல தினமும் ஒரு பாத்திரத்தில் சோறு கொண்டுவந்தாள்.டேனியல் சொன்னதுபோல
அத்தனையும் உள்வாங்கிக் கொண்டு கதையின் படி சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடித்தார் ரோசி.
விகதகுமாரன் ‘The Lost Child” படம் தயாரானது.
படம் திரையிடலும் சாதிவெறிப் புயலும்;
திருவனந்தபுரத்தில் நாடகங்களை அரங்கேற்றும் கேபிட்டல் திரையரங்கம் இருந்தது. அத்திரையரங்கத்தில் 1928
நவம்பர் 7ஆம் தேதி திரையிட முடிவெடுத்தார். திரையிடப்படும் நாளன்று ஆவலோடு கதாநாயகி
ரோசி தனது குடும்பத்துடன் வந்திருந்தார். படம் பார்க்க வந்திருந்த ஆதிக்க சாதியினர்
திரையரங்கில் அமர்ந்திருக்கும் பெண் புலையர் சாதியைச்சேர்ந்தவர் என தெரிந்தவர்கள் கடும்
கோபமுற்று ரகளையில் ஈடுபட்டனர். இவள் உள்ளே வந்தது தங்களுக்கு அவமானம் என சத்தம் போட்டனர்.
ரோசியையும் அவரின் குடும்பத்தாரை வெளியே அனுப்பிவிட்டு பார்வையாளர்களை பார்க்கவைக்க
சமரசப்படுத்தினர். கதாநாயகி தனது நடிப்பைப் பார்க்க முடியாமல் திரையரங்கின் வெளியே
இருக்க, உள்ளே படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தில் கதாநாயகி ரோசியைக் கண்டதும்’ஒரு
தலித் பெண் திரைப்படத்தில் நடிப்பதே தவறு அதிலும் நாயர் பெண்ணாக நடித்து அனைவரையும்
அசிங்கப் படுத்திவிட்டாளே’ என்று கூச்சலிட்டு திரையை கிழித்தனர் கொட்டகையை சாய்த்தனர்.
வெறி கொண்ட கும்பலிலிருந்து டேனியல் தப்பி ஒடினார் .நாகர்கோவில்,கொல்லம்,ஆலப்புழா,திருச்சூர்,
தலச்சேரி போன்ற இடங்களிலெல்லாம் விகதகுமாரன் திரையிடப்பட்டது. ஆனால் செலவான பணத்தில்
பாதிகூட வரவாகவில்லை டேனியலின் கடன்சுமை கூடியது. கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுக்கு
உள்ளானார்.தனது மனைவியின் சொத்துகளை விற்று கடனைத்தீர்த்தார். தான் உருவாக்கிய திருவாங்கூர்
பிக்சர்ஸ் என்ற பெயரில் வாங்கிய இரண்டரை ஏக்கர் இடத்தை விற்றுவிட்டு பல்மருத்துவம்
படிக்க சென்னைக்கு சென்றுவிட்டார்.டேனியல் படிப்பு முடிந்தபின்னர் அகஸ்தீஸ்வரத்தில்
ஒரு பல்மருத்துவராக தனது வாழ்க்கையை கழித்தார்.பின்பு பல்லெடுக்க வந்த திரைப் பட நடிகர்
பி யூ சின்னப்பா டேனியலுக்கு சினிமா ஆசையினை விதைக்க, தான் சம்பாதித்த பணத்தையெல்லாம்
மீண்டுமொரு முறை சென்னைக்கு கொண்டு சென்று சிலாரால் ஏமாற்றப்பட்டு திரும்பினார்.
ரோசியின் சங்கடங்கள் முடியவில்லை.திருவனந்தபுரத்தில்
சில அரசு உயர் அதிகாரிகள் தூண்டிவிட்ட ரௌடிகள், வீட்டை வளைத்து தீ வைக்க முயற்சித்தனர்.போலீசார்
விரைந்துவந்து தடுத்தனர். சில நாட்களுக்குப்பின் ஒருநாள் ரோசி சந்தைக்கு சென்று திரும்புகையில்
ரௌடிகள் கெட்டவார்த்தையால் பேசியும் அவமானப்படுத்தும் அத்தனை வேலைகளையும் செய்தார்கள். திரையில் நடித்தார் என்பதற்காகவே வந்த வரண்களெல்லாம் ஒடிவிட்டன. இரண்டரை ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே
வரமுடியாமல் தவித்த அந்தப் பெண் இறுதியில் ஒரு லாரி ஓட்டுனருடன் தப்பி ஊரைவிட்டே விலகி
நாகர்கோவிலில் சிறிது காலம் வாழ்ந்து இறந்திருக்கிறாள்
.படுத்த படுக்கையோடு அவதிப்பட்ட lதன் கணவரை இறுதிவரை
அன்போடு கவனித்த துணைவியார் ஜெனட் கேரள அரசிற்கு மனு எழுதி உதவிக்கு காத்திருந்தார்.
அரசு கண்டுகொள்ளவில்லை.அகஸ்தீஸ்வரம் புத்தம் வீட்டில் மரணத்திற்காக காத்துக் கிடந்த
மலையாள சினிமாவின் தந்தை 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.
காலம் கடந்தாகிலும் இந்த தேசப்பற்றாளரை,கலையுலக நாயகனை
இந்த கலையுலகமும் கேரள அரசும் அங்கீகரித்திருக்கிறது. இவர் பட்ட பாடுகளையும் கதாநாயகி
ரோசிக்கு நேர்ந்த சமூக வரலாற்று அவக்கேடுகளையும் புரிந்து, ஜீரணித்துக்கொண்டே இளைய
சமூகம் தங்களின் நெஞ்சில் ஒரு மரியாதையான இடத்தில் இவர்களுக்கு சிம்மாசனம் தரவேண்டும்..
No comments:
Post a Comment