ஒரு மீனவன் பாடுகின்றான்.
யவ்வனப் பெருங்கடல்
யாருமே அருகிலில்லை
தாவிடும் அலைகளிலே-நான்
தனிமையில் பாடிங்கதை!
துணையெனத் துடுப்பெடுத்துத்
துணிவுடன் அலைகிழிப்பேன்
நிலத்தினில் வாழ்ந்திடவே
நீரினில் வலைவிரிப்பேன்!
கரையினில் நானிருந்தால்-என்
கன்றுகள் பசித்திருக்கும்
கடலினில் இறங்கிவிட்டால்-அந்தக்
கலங்கரை துணையிருக்கும்!
எல்லா ராத்திரிக்கும்
கடுங்குளிர் காத்திருக்கும்-நீரில்
வரும்மீன் மறைந்திருக்க-நூறு
விண்மீன் பூத்திருக்கும்!
நம்பிக்கை மீதுகொண்டு
நானொரு வலவிரிச்சேன்
கடலுல மீன்களத்தான்
கடவுளா நான்நெனச்சேன்!
நண்டுகளே! ஓ நண்டுகளே-தண்ணீர்க்
கூலின் வண்டுகளே!
பாறையில் இருந்தபடி-என்
பாடலைக் கேளுங்கள்!
வேகப் பெருங்கடலில்
வெறித்துத் தவமிருக்கும்
சோகப் பாறைகளே-நான்
சொல்லும்கதை கேளுங்கள்!!
ஒவ்வொரு அலையிலும்-என்
ஊமை உயிர்த்துடிக்கும்
மகனென எனைவைத்து-இந்த
மாகடல் தாலாட்டும்!
ராத்திரி கடல் வானம்
ரம்மியக் காட்சியடா
ரசித்தவன் பாடலின்று
ரகசிய சாட்சியடா!
கடலினில் பாடுவது-தூரக்
கரைதனில் கேட்காது!
கடலினில் மறைத்தாலும்-கரை
காரணம் கேட்காது!
இதுதான் எனது கதை_இதில்
என்றும் முடிவில்லை!
நாளும் நாளும் விடிந்தபின்னும்-அந்த
வானம் எனக்கு விடியவில்லை!
ஈ.விஜய், எம்.ஏ கொட்டாரம் த மு எ க ச கிளைச் செயலாளர்
No comments:
Post a Comment