Wednesday, June 17, 2015

தலித்துகளும் தண்ணீரும் நூலை முன்வைத்து

              தண்ணீரும்- பண்பாடும் –பாகுபாடும்  முனைவர் கோ.ரெகுபதியின்
                    தலித்துகளும் தண்ணீரும் ஆய்வுநூலை முன்வைத்து.

    உலகில் தண்ணீர் 10சதமான அளவுதான் உள்ளது.அதில் குடிதண்ணீராக பயன்படும் அளவு வெறும்5 சதவீதமானதுதான். மனித உடலில் 71 சதமான அளவு இருக்கிறது. மனிதன் ,தாவரம்,விலங்கினம் பறவையினம் ஆகிய அனைத்துக்கும் நீராதாரம் இன்றியமையாதது.இது அறிவியில் உண்மை.
    தண்ணீர் என்பது மனித இனத்துக்கு இயற்கை தந்த கொடை என்று கூறி வந்த நிலை மாறி, உலகமயமாதல் சூழலில், உள்நாட்டுக் கம்பெனிகளும்,பன்னாட்டுக் கம்பெனிகளும் ஆற்றுப்படுகைகளிலும்,சமவெளி நிலப்பகுதிகளிலும் நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளிலும்,கேன்களிலும் நிரப்பி விற்க முற்பட்டபோதே பொருளாதார அறிஞர்கள் சொன்ன ‘இயற்கையின் கொடை’ என்ற் விலையில்லா பண்டம் என்பது மாறி விலையிள்ள பண்டம் என்று மாறி பொருளாதார பயன்பாட்டு விலையுள்ள பண்டமாக ஆகிவிட்டது.
    இன்னும் புராணங்களிலும் ,இலக்கியங்களிலும் தண்ணீர் பற்றியே ஏராளம் கருத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தண்ணீர்  என்ற கோமல்சுவாமிநாதன் நாடகம் பாலச்சந்தரின் இயக்கத்தில் திரைப்படமாக பார்த்தபோது,தண்ணீருக்குள் கிராமங்கள் படும் அவஸ்தைகளும் அதன் அரசியலும்,ஆளும்வர்க்க போக்கும் எப்படி உள்ளது என்பதை சிந்தனையை கிளப்புகிறது.
    மாநிலத்துக்கு மாநிலம் நதிநீர்ப்பங்கீடும் ,அணைகள் கட்டுவதும்,குளங்கள் , ஏரிகள், காணாமல் போவதும்,மிகவும் சிக்கலான பிரச்னைகளாகி, உலகம் முழுவதும் மூன்றாம் உலக யுத்தம் வருமானால் அது தண்ணீர்ப் பிரச்னைக்காகத்தான் இருக்கமுடியும் என்பது அரசியல் பிரச்னையாக உள்ளதை நாமறிவோம்.
   இவையெல்லாவற்றையும் விட, இந்த சமூகம் கண்டுகொள்ளாத, பண்பாட்டுப் பிரச்னை ஒன்று நீண்ட நெடிய காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் சாதிய பிரச்னையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.
    தீட்டு.தீண்டாமை, நெருங்காமை போன்ற கருவிகளை வைத்து எப்படி மனிதரில் ஒரு பகுதியாகி தலித் மக்களை அந்நியப் படுத்தினார்களோ, இவைகளோடும் தண்ணீரை இணைத்து அம்மக்களை ஜீவாதார அத்தியவசியமான பொருளிலிருந்து விலகவும் வைத்தனர் என்பதே அது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம் .1967 எனக்கு அப்போது பத்து வயது. எங்கள் கீழத்தெரு ஆம்! தலித்துகளின் தெரு பெரும்பாலும் கிழக்கில்தான் அமைந்திருக்கும். அதன் அருகில் சாதி இந்து ஒருவரின்  தோட்டம். மோட்டார் பம்புசெட் இணைக்கப்பட்டு தண்ணீர் தொட்டி  அமைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் மேலத்தெரு வாலிபர்கள் தொட்டியில் இறங்கி குளித்து சென்றவுடன். நானும எனது சித்தப்பா மகனும் தொட்டியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தோம். தோட்டத்துக்காரர் பார்த்துவிட்டார் ,ஒரு நீளமான புளிச்சக்கீரை கம்பை ஒடித்தார் ஒடி வந்து இறங்குங்கடா ன்னு சொல்லி புளிச்சக்கீரை கம்பால் சாத்திவிட்டார்,நாங்கள் அழுதுகொண்டே எங்க தெருவிலிருந்த அக்கா,தாத்தா ஆகியோரிடம் காரணத்தச சொன்னோம்..உடனே அவர்கள் சொன்னது; ஆமா நீங்க அங்கே போயிக் குளிச்சா விடுவாங்களா? அங்க நாமெல்லாம் குளிக்கக்கூடாதுப்பா நாம குளிக்கிறது அதோ அந்த வாய்க்கால் பகுதி இருக்குதுல்ல அங்கதான் குளிக்கனு’  ன்னு ஆறுதல் எங்களுக்குத்தான் சொன்னாங்க. எங்க சித்தப்பா பெரியப்பா மேலத்தெரு பண்ணையார் தோட்டத்தில வேல செஞ்சிகிட்டிருக்கம்போது தண்ணீர் தாகமெடுத்தால் பண்ணையாட்டிகிட்ட தண்ணீர் கேடப்பார்கள் அப்பதோது சொம்புல கோரி அவங்களோடு ரெண்டு கையையும் குவிக்கவைத்து தண்ணீர் ஊத்துவார்கள் அவர்களும் சொட்டுத்தண்ணி கீழே விடாமல் குடித்துவிடுவார்கள். அப்பத்தான் தெரிஞ்சது நாம ஏதோ தீட்டுப்பட்ட சாதின்னு.நானும் என் சித்தப்பா மகனும் அடி பட்டதைச் சொன்னதும் அந்த சேரி மக்களும் அடிச்சது தப்புன்னு நினைக்காத படிக்கு தாங்கள் அடிமைகள்தான்.தீண்டப்படாதவர்கள்தான் என்பது ஒத்துக்கொண்டே வாழ்ந்திருந்தார்கள் இன்னும் அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் சொல்றேன்னு நீங்கள் கேட்பது புரிகிறது.நான் சமீபத்தில் படித்த ஒரு அருமையான உழைப்பில் ‘தலித்துகளும் தண்ணீரும்’ என்ற  பேராசிரியர் கோ.ரெகுபதி எழுதி நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வு நூல் எனது சிந்தனையை அப்படியே கலங்கடித்து புரட்டிப்போட்டுவிட்டது. தண்ணீருக்குள் இப்படியொரு பண்பாட்டு ஒடுக்குமுறையா? அறிவியல் ரீதியாகவும், இன்றைய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் அடிப்படையில் உலகளாவிய அளவில் பொருளாதார ரிதியாக தண்ணீர் பற்றி ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் கருத்துகளையும் புள்ளிவிபரங்களையும் கொட்டி வைத்தவை முக்கியம்தான் என்றாலும் இந்த ‘தலித்துகளும் தண்ணீரும்’ நூல் அதி முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.
  சமீப காலத்தில் சிவகங்கை பெரியார் சமத்துவபுரம் காலனியில்
இருசாதிப் பெண்கள் பொதுக்குளாயில் தண்ணீர் பிடிக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணின் பானை ஆதிக்கசாதி பெண்ணின் குடம் மீது பட்டுவிட்டது என்பதற்காக எழுந்த வாய்ச்சண்டை முற்றி கன்னியம்மாள் என்ற தலித் பெண்ணின் காதை ஆதிக்கசாதி பெண் கடித்துவிட புகார் காவல்நிலையம் செல்ல, அவர்களும் கண்டுகொள்ளாமல் இருக்க,பின்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலையிட்டு புகார்மீது வழக்குபோடப்பட்டது என்பதையும் அறிந்திருக்கிறேன்.
   மங்கள்யான் விண்வெளியில் சாதிக்கும் காலத்தில் உலகமே கைக்குள் வந்து விட்ட வினோத காலத்தில் இன்னும் இந்த நிலை இந்தியா முழுக்க தொடரும்போது, காலங்காலமாக இந்த பண்பாட்டு தீண்டாமைக்கு எதிராகவும், இந்த தண்ணீர்கூட நிலமற்ற ஆற்றோரம் குளத்தோரம் அதுவம் மாடு குளிப்பாட்டும் பகுதிகளிலோ அல்லது சமவெளிப்பகுதிகளிலோ வாழுகின்ற தலித் மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலையை, இதற்காக நடைபெற்ற போராட்டங்கள், சட்டசபையில் நடந்த வாக்குவாதங்கள்,தலித் மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள். 1881 முதல் இன்றைய காலகட்டம் வரை தமிழகத்தின் ஏராளமான ஊர்களில் நடைபெற்ற வன்முறைகள் ஆகியன ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது.
வாழ்வினைத் தீர்மானிக்கும் படிநிலை தரவரிசை என்னும் முன்னுரை அத்தியாயத்தில் பல ஆய்வாளர்களின் ஆய்வு வெளிப்பாட்டின்  சுருக்கங்களை முன்வைக்கிறார். ‘சடங்கியல் தாழ்நிலை,வறுமை,அதிகாரமின்மை ஆகிய மூன்றும் தலித்துகளின் ஏதுமற்ற நிலைக்கு காரணமென ‘ டி கே உம்மன் விளக்குவதாகவும், ‘ஒருநபரின் தகுதி அவருடைய உடைமையைச் சார்ந்திருக்கவில்லை. அது பிறப்பின் அடிப்படையில் இருக்கிறது’ என சமூகவியலாளர் ஜி எஸ்.குரே கூறுகிறார். ‘ இந்த அமத்துவ படிநிலையில் சமூக மத உரிமைகள் பலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன’ என இந்தியாவில் சாதிகள் என்ற  அம்பேத்கரின் நூல் ஆய்வு செய்கிறது. அந்தரே பெத்தேல் என்ற ஆய்வாளர் ‘ தமழ்ச் சமூகம், பிராமணர், பிராமணரல்லாத இடைநிலைச் சாதிகள், தலித்துகள் என மூன்றாக பிரிந்திருக்கிறார்கள்’ இம்மூன்று பிரிவிற்குள்ளும் பல படிநிலை அசமத்துவம் இருக்கிறது என விவரிக்கிறார்.
     சடங்கியல், பொருளியலில் பிராமணர்களுக்கு இருந்த அதே உரிமைகள் பிராமணரல்லாத உயர்சாதி இந்துகளுக்கோ அல்லது பிராமணரல்லாத இடைநிலை சாதிகளுக்கோ இருக்கவில்லை. பின்னவர் இருவருக்கும் இருக்கின்ற உரிமைகள் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன. தலித்துகளுக்கு இருந்த உரிமைகள் அவர்களுக்கு சேவை செய்த சாதிகளுக்கு இருந்ததில்லை. எனவே சடங்கியில் பொருளியல் உரிமைகளில் சாதியமைப்பின் மேலிருந்து கடைநிலைவரை படிநிலை அசமத்துவம் இருப்பது தெளிவு.
இயறகை பொருளான நீராதாரங்களை அணுகுவதிலும அனுபவப்பதிலும் படிநிலை அசமத்துவம் செயல்படுவதைக் காணலாம். தண்ணீர் இயற்கையின் கொடை. ஆனால் அது சாதிய அசமத்துவ படிநிலை சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. சாதித் தரவரிசை காரணமாக பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்ற உரிமை தலித்துகளுக்கு மறுக்கப்படுகிறது என்ற புரிதல் இடதுசாரிகளிடம் 1930களில் இருந்தது. என்ற கருத்தாக்கங்களோடு ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் தலித்துகள் தண்ணீருக்காக படும் துன்ப துயரங்களை ஏராளமான அறிஞர்களின கட்டுரைகளிலிருந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். தமிழகத்திலும் ஆய்வாளர்கள், தண்ணீர் பாகுபாடினை அனுபவத்தவர்கள் ஆகியோரின் கட்டுரைகளின் சாராம்சத்தை குறிப்பிட்டுள்ளார். ‘தண்ணீர் தண்ணீர்’ எனத் தலைப்பிட்ட தினமணியின் கட்டுரை, அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவலும், கோமல் சுவாமிநாதனில் ‘தண்ணீர் தண்ணீர் ‘ நாடகம் ஆகியவற்றின் சாராம்சத்தை குறிப்பிட்டு இம்மூன்றும் எப்படி வேறுபடுகின்றன என்பதையும் காட்டுகிறார்.
    தலித்துகள் தண்ணீரை அணுகுவதற்கும் அனுபவிப்பதறகுமான உரிமையினைப் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது கவனிக்கப் படவில்லை. தண்ணீர் மாசுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பான குடிநீர் தேவை என்பதையும் வலியுறுத்துகின்ற ஆயவாளர்கள் சாதிய சமூகத்தில் தலித்துகள்  எப்போதும் பாதுகாப்பற்ற தண்ணீரை குடித்து வாழவேண்டிய சூழல் இருப்பதை கவனத்தில் கொண்டிருக்கவில்லை
   பெரும்பாலான ஆய்வாளர்கள் சமூக ஆர்வலர்கள் இயக்கச் செயல்பாட்டாளர்கள் தண்ணீர் இயற்கையின் கொடை என்பதிலிருந்து மாறி வாணிப பொருளாகி விட்டது குறித்தும், தண்ணீரும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு, அதன் ஆபத்து குறித்தும் விவரிக்கிறார்களே தவிர அதே தண்ணீர் என்ற பொருள்மீது ஆதிக்கச் சாதியினர் செலுத்திவருகிற ஏகபோகம் குறித்து விவாதிக்கவில்லை என்ற கூர்மையான விமர்சனத்தை முன்வைத்து
இயற்கையான தண்ணீர் செயற்கையான சமூகம்  எனும் முதல் அத்தியாயத்தில் 1.நீரின்று அமையாது உலகு ,தலித் உயிர்களுக்கும்தான் 2.புலன் அறியாத தீட்டும் பாவம் நீக்கும் சவர்க்காரமும் 3. நீராதார உரிமையில்  புனிதமும் தீட்டும் 4.தண்ணீர் இருந்தும் தலித்துகளுக்கு இல்லாமை, 5.தலித்துகளுக்கு நிலமின்மையால் நீரின்மை 6.மாறுகின்ற வர்க்க நிலையும் மாறாத சாதியும் 7.தலித்துகளுக்கு தண்ணீரைத் தேடி ஒடும் தூரம் தரும் துன்பம் 8.தலித்துகளுக்கு அசுத்தமான நீரால் ஏற்படும் நோய் நொடிகள் 9.தண்ணீர் ஒடுக்குமுறைக்கான ஆயுதம் 10.தலித் பெண்களுக்கு வன்புணர்ச்சிக்கான ஆயுதம்,11.நீராதாரங்களில் சுயசார்பு ஒரு குற்றம்,12.நீராதாரம் பொதுச் சொத்தல்ல 1950 லிருந்து 1990 களில் தலித்துகள் நீர் பெறுவதில் தீண்டாமை கொடூரங்கள். 13.இன்றையநிலைமை தலித்துகள் புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்ட கிணறுகள் எண்ணிக்கை ஆகிய துணைத் தலைப்புகளில் கடினமான களப்பணியின் அடிப்படையில் ஆய்வுக் கருத்துகளை தொகுத்திருக்கிறார்.
    குடிநீருக்காகத் தலித்துகளின் போராட்டம் என்ற இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளூர் போராட்டம், பொதுப்போராட்டம் என இரண்டாக பகுத்திருக்கிறார். காலனியாதிக்க காலத்தில் நடைபெற்ற போராட்டங்களை விளக்கும்போது 1881ல் அயோத்தியதாசர் நிறுவிய திராவிட மகாஜன சங்கத்தின் முதல் மாநாட்தில் ‘ ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வித தடையுமின்றி பொதுக்கிணறு குளத்தைப் பயன்படுத்துவதற்கு உரிமையளிக்க வேண்டும்’ என கோரிக்கைய விடுத்ததோடு, அயோத்திய தாசர் தான் நடத்திய ‘தமிழன் ‘ என்ற பத்திரிக்கையில்1909ல் மார்ச் 3ல் ‘அந்தோ விருதப்பட்டியில் வாசஞ்செய்யும் பெரிய சாதிகளென்போர்களே இன்னும் உங்களுக்கு இரக்கம் வரவில்லையா? வன்னெஞ்சம் மாறவில்லையா? பறையர்கள் என்போர் உங்களை ஒத்த மக்களல்லவா? பொதுவாக கூட்டி வைத்துள்ள திருக்குளங்களிலும், கிணறுகளிலும் அவர்களை தண்ணீர் மொண்டு குடிக்க விடாமல் உப்புத் தண்ணீரையும், குட்டைகளிலுள்ள அசுத்த நீரையும் விஷபேதி கண்டு வெகு ஏழைக் குடி மக்கள் மடிகின்றார்களாமே. மிருகங்களுக்கு ஜலம் மொண்டு கொடுத்துக் காப்பவர்கள் இந்த மக்களை ஆதரிக்க மனமில்லையா? இத்தகைய மனிதர்களை மனிதர்களாக பாவிக்காத இந்துக்கள் வசம் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் பறையர்கள் என்னும் இப்பரதேசிகளின் இவ்வகை கொடூரச் செயல்களையறியா,கனம் லார்டு மார்லியவர்கள் இந்தியர்களின் ஒருவருக்கு எக்சிகூட்டி மெம்பர் உத்தியோகமளிக்க வழிபார்க்கின்றார்.இதுவும் ஏழைகளின் துர்பாக்கியமே’ என்று அறைகூவல் விட்டதை எடுத்துக் காட்டியுள்ளார்.
சென்னை மாகாண பேரவையில் 1919 , 1921 ஆண்டுகளில் பொதுக்கிணறுகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றைத் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என விவாதம் நடந்திருக்கிறது.  தலித்துகள் விடுதலைக்கு பாடுபட்ட எம் சி ராஜா  அழுத்தமாக தீர்மானத்தை முன்மொழிய அத்தீர்மானத்தின் மீது அந்த காலகட்டத்தில் பலர் எதிர்த்து விவாதம் புரிந்ததோடு அந்த தீர்மானத்தை வாபஸ் வாங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர் என்ற விபரங்களையும் தந்துள்ளார்.


  தண்ணீர் என்பது மனித, தாவர, விலங்கினத்தின் ஜீவாதார காரணி மட்டுமல்ல, மனித இனத்தின் ஒரு பகுதிக்கு தன்மானத்தையும், சுயமரியாதையையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிப்போனது.
    1881ல் அயோத்தியதாசப் பண்டிதர் நிறுவிய ஆதி திராவிட மகாஜன சங்க முதல் மாநாட்டில் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வித தடையுமின்றி பொதுக்கிணறு,குளத்தைப் பயன்படுத்துவதற்கு உரிமையளிக்கவேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றியது.
   1860களில் வட ஆற்காடு மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தினைச் சேர்ந்த தலித்துகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய காரணத்தால்,பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சாதி இந்துக்கள் அனுமதி மறுத்தனர்.
    1919 செப்டம்பரில் சென்னை மாகாணப் பேரவையில் பித்தாபுரம் அரசர் ‘பொதுச் சாலைகள், கிணறுகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்வதற்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.முதல் சட்டமுன்வரைவான இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை.
    தலித் பிரதிநிதியாக இருந்த எம் சி ராஜா இதே ஆண்டில்’பொதுக்கிணறு, சத்திரம் போன்ற பொது ஆதாரங்களைத் தலித் மக்கள் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து வருகின்ற அனைத்து தடைகளையும் அகற்றுதல், தலித்துகள் வசிப்பிடத்தின் அருகில் கிணறு அமைத்தல் ஆகியன செய்யப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்தை சென்னை மாகாண ஆட்சிப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
   ஆந்திர மாநில தலித் மக்கள் செயல்பாட்டாளர் என்.சுப்பாராவ் ‘ தலித் மக்கள் பெருந்தொகயாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இறைக்குடி செலுத்துகின்றனர். எனவே கிணறு சத்திரம் போன்றவற்றினை பயன்படுத்திக் கொள்வதற்கு சட்டரீதியான எவ்வித தடையும் இருக்கக்கூடாது. இத்தீர்மானத்தினை பிராமணப் பழைமைப் பற்றாளர்கள் மட்டுமின்றி பிராமணரல்லாத பழைமைப் பற்றாளர்களும் வலுவாக எதிர்ப்பர். எனவே தலித் மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அரசாங்கத்தின் செயல்பாட்டினைப் பொறுத்த மட்டில் பாகுபாடற்றதாக இருக்கலாம்’ என்று பேசி வழிமொழிந்தார்.
   ஜே.எச்.முத்தையா செட்டியார் ,டி அருமைநாதபிள்ளை ஆகியோர் பல காரணங்களைக் கூறி இத்தீர்மானத்தை எதிர்த்தனர்.
   இ எம் மக்பெயில், தோடன்டெர், எம் டி தேவதாஸ் ஆகியோர் எம் சி ராஜாவின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
   மரபு மற்றும் சாதியினால்தான் சிக்கல் இருக்கின்றது என்பதை அனைத்து உறுப்பினர்களும் ஒத்துக்கொள்ளவேண்டும். மரபி, சாதி இவை இரண்டும் ஒழிக்கப்படாமல் சமத்துவம் அடைய முடியாது.அவருடைய சமூகம் (தலித்துகள்) தனது சொந்தக்காலில் நிற்கும்வரை பாடுபடவேண்டும். அரசாங்கத்தின் நிலைபாட்டினைப் பொறுத்த மட்டிலும் இத்தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ள இயலாது. எந்தச் சமூகத்திலும் மதம் தொடர்பான நிகழ்வுகளில்  அரசாங்கம் தலையிடுவது இயலாது’ என்று பேரவைத் தலைவர் பேசினார்.
   எம் சி ராஜா அத்தீர்மாத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டார். பின்னர் ‘பொது ஆதராங்களான சாலை,கிணறு போன்றவற்றினை தலித்துகள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றி தீர்மானம் நிறைவேற்றப் படவேண்டும். மேலும் இத்தீர்மானம்  சென்னை மாகாணத்திலுள்ள அக்ரஹாரம் உட்பட அனைத்து கிராமங்களிலும் கிராமத் தலையாரி மூலம் தண்டோரா அடித்து அறிவிக்கப்படவேண்டும்’ என்ற தீர்மானத்தை தலித் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெட்டைமலை சீனிவாசன் முன்மொழிந்தார். எஸ். சத்தியமூர்த்தி,தலித் பிரதிநிதி எல்.சி குருசாமி ,தலித் பிரதிநிதி ஆர்.வீரையன், ரெட்டைமலை சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானத்தோடு,ஆறு ஏரியும் சேர்க்கப்படவேண்டும் என்பதற்காக துணைத் தீர்மானம் கொண்டுவந்தார். இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு ஆர்.வீரையனின் முன்மொழிவு ஆதரவு பெறவில்லை.ரெட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. ‘பொது அலுவலகம், கிணறு, குளம் பொது கோடைவாசஸ்தலம், பரிவர்த்தனை நடைபெறும் கட்டிடம் ஆகியவற்றினை அணுகுவதற்கு தலித்துகளுக்கு எவ்வித தடையும் எதிர்ப்பும் இல்லை’ என்று சென்னை மாகாண சபை முடிவு செய்தது.இவ்வாறு ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் தீர்மானம் அரசாணையாக மாறிய பின்னரும், நடைமுறையாகாததால் 1925ல் நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் தண்ணீருக்காக தலித் மக்கள் பட்ட அவதி, பொதுகிணற்றில் நீர் எடுக்க முடியாமல் நடத்திய போரட்டம் தோல்வியடைந்தது.
     
 1921ல் அம்பாசமுத்திர வட்ட ஆதிதிராவிடர்கள் குடியிருக்கின்ற அநேக கிராமங்களில் குடிதண்ணீருக்குக் கிணறுகளில்லாதபடி கஷ்டமடைகிறார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்குப் பூராத் தொகையையும் கவர்ண்மெண்டாரவர்களே போட்டு வெட்டிக்கொடுத்து குடிதண்ணீர் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய காருண்ணிய கவர்ண்மெண்டாரவர்களை தயதவாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்ற கோரிக்கையை வைத்தது.
 1926ல் ஜோலார்பேட்டையில் தலித்துகள் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் ஆகஸ்ட் 26ல்
பெருமளவு மனித மலத்தை கிணற்றில் கலந்தனர். மேலும் அக்கிணற்றில் விஷத்தினைக் கலப்பதற்கு திட்டமிட்டனர். மாகாண சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
   பம்பாயில் மகத் நகராட்சியில் 1927ல், சவுதார் குளத்தில் தீண்டத்தகாதோர் பயன்படுத்தலாம் என தீர்மானம் போட்டும், உயர்சாதி இந்துக்கள் இவர்களை நீரெடுக்க, அதைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 1927 ஏப்ரல் 20 அன்று அம்பேத்கர் தலைமையில் பத்தாயிரம்பேர் திரண்டு சவுதார் குளத்தில் இறங்கி நீரைப் பயன்படுத்தினர். ஆனால் அடுத்த நாள்,உயர்சாதி பிராமணர்கள் குளத்தில் தீட்டுப்பட்டதென்று மாட்டுச் சாணியையும்,மாட்டு மூத்திரத்தையும் குளத்தில் கரைத்து பூஜை செய்தார்கள்.

1932 செங்கற்பட்டு மாவட்டத்தில் ஏனாத்தூர் என்ற ஊரில் தலித் பெண்கள் 16ஜூன் 1932ல் புறம்போக்கு இடத்தில் கிராமப் பொதுநிதியின் பராமரிப்பில் பயன்படுத்திய கிணற்றில் நீரெடுக்கச் சென்றபோது தாக்குதலுக்கு உட்பட்டு வன்முறையாக வெடித்து, தலித்துகள் நீரெடுப்பதை தடுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. துணைநீதிபதி தலித்துகள் தண்ணீர் எடுப்பதற்கு காவல் ஆயவாளர் அறிக்கைப்படி 3 .7 . 1932ல் தடை உத்தரவு பிறப்பித்தார். தடைஉத்தரவை எதிர்த்து நீதிபதியிடம் மனு கொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி துணைநீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தார்.
    1933ல் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேஅரசூர் பொதுக்குளத்தில் தலித்துகள் எடுக்க ஆரம்பித்த போரட்டம், 1934ல் மகாத்மா காந்தி திருச்சி வந்தபோது அவரின் கவனத்திற்கு போயுங்கூட தலித்துகளை ஊர்விலக்கம் செய்து, பொருளாதார, வாழ்வாதார சிக்கலெல்லாம் ஆதிக்க சாதியினர் கொடுத்து 1938-39 ஆண்டுகளில் தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் இயக்கம்;
    1917 டிசம்பர் 28ல் சென்னையில் நடைபெற்ற பிராணரல்லாதோர் மாநாட்டிலும், 1929ல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டிலும்,1930ஆம் ஆண்டில் மே 10ல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாம் சுயமரியாதை மாநாட்டிலும், மனித நாகரிகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமையை ஒழித்து ரஸ்தாக்கள்,குளங்கள்,கிணறுகள்,பாடசாலைகள், சத்திங்கள் தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபளங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும்’என்ற தீர்மானம் நிறைவேற்றியதோடு,இந்த தண்ணீர் தீண்டாமைக்கெதிராக தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
  1952ல் மதுரை மேலூர்  அருகில் கீளவளவு என்ற கிராமத்தில் தலித்துகள் பொது ஊருணியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டனர். காவல்நிலையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதே ஆண்டில் திருவாரூரில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்டார்.குற்றவாளிக்கு ரூ 15 தண்டம் விதிக்கப்பட்டது.
  1970ல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள தேரிப்பனை என்ற ஊரில் தண்ணீருக்கு அவதிப்பட்ட தலித்துகள் நீண்ட தூரம் நடந்து ,நாடார்கள் கிணற்றுக்கு சென்று குடத்தை சற்று தொலைவில் வைத்தால்,நீர் இரைத்து நாடார் இனத்தவர் ஊற்றுவர்.தலித்துகள் கிணற்றின் அருகே செல்லக்கூடாது. இக்கொடுமையைக் கண்ட ஐந்து தலித் பெண்கள் கிணற்றில் யாருக்கும் தெரியாமல் மனித மலத்தினைப் போட்டதால்,அவர்களை கண்டுபிடித்து பஞ்சாயத்துக் கூட்டி ரூ 11 அபராதம் விதிக்கப்பட்டது.

  2009ல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தல்புளியில் கோயில்நுழைவுப் போராட்டம் நடித்தி உரிமையைப் பெற்றதால், அக்கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆதிக்கசாதியினர் தலித்துகளுக்கு தண்ணீர் தருவதற்கு மறுத்த காரணத்தால் நீண்ட நாட்கள் அவதிக்குள்ளாகினர்.
    தலித் மக்கள் தண்ணீருக்காக பொதுக் குளத்திலும் பொதுக்கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க நடத்திய போராட்டங்களின் வரலாறு இன்னும் அந்த மக்கள் தண்ணீருக்காக படக்கூடிய அவமானங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற ஆழமான வரலாற்றை ஆய்வு செய்து தலித்துகளும் தண்ணீரும் என்ற நூல் வெளிவந்திருப்பது பயனுள்ள ஒன்று.

        

No comments:

Post a Comment